“இந்தியாவில் மின்வாகனத் துறையில் கடந்த பத்து ஆண்டுகளில் இரு நிறுவனங்கள் கொடி கட்டிப் பறந்து வருகின்றன. எனினும் இந்தியாவில் மின்வாகனத் துறையின் சந்தை என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது,” என விளக்குகிறார் ராப்டீ எனர்ஜி (Raptee Energy) நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியான தினேஷ் அர்ஜுன். அத்துடன் “ஏன் போக்குவரத்தில் எந்த வித மாற்றமும் இதுவரை நிகழவில்லை?” என்ற முக்கியமான கேள்வியையும் நம் முன் வைக்கிறார்.
அதிவேகமாக வளர்ந்து வரும் மின்சார இரு சக்கர வாகனத் துறையில் இன்று இருக்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுள் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ராப்டீ துளிர் நிறுவனமும் ஒன்றாகும். ராப்டீ நிறுவனத்தின் தனித்துவம் என்ன? இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ஏற்றவாறு இந்நிறுவனம் மின் வாகனங்களைத் தயாரித்து வருவதே இதன் தனிச்சிறப்பாகும். அதாவது இந்தியாவில் ஒரு குடும்பத்தில் வாங்கப்படும் இரு சக்கர வாகனமானது பல தலைமுறைகள் கைமாறி குறைந்தபட்சம் பன்னிரெண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படும். இதனை மனதில் கொண்டு இந்நிறுவனம் தனது வாகனங்களை தயாரித்து வருகிறது.
பெரும்பாலான மின்வாகனத் துறையின் ஆரம்பக் காலக்கட்டத்தைப் போன்றே ராப்டீ நிறுவனமும் இரண்டு மேசைகள் கொண்ட ஓர் வண்டிக் கொட்டகையில் துவங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டு தினேஷ் அமெரிக்காவில் தனது பட்டப்படிப்பை கையாளவும் இந்தியாவில் தான் துவங்கிய வாகன உற்பத்தி வணிகத்தை கையாளவும் இரு நாடுகளுக்கும் இடையே ஒவ்வொரு மாதமும் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. வார இறுதிகளில் அவர் சென்னை வரும்போதெல்லாம் அவரும் தனது கல்லூரியில் தனக்கு பிந்தைய ஆண்டில் பயின்ற கீர்த்திவாசன் ரவி என்பவரும் இணைந்து புதிதாக ஓர் வணிகம் துவங்குவதற்கான யோசனைகளை கலந்துரையாடுவர். மேலும் உற்பத்தி செய்யப்போகும் விலை பொருளின் மாதிரிகளை செய்து அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்துவர்.
இரு சக்கர வாகனத் துறையின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவுகளில் தினேஷுக்கு அனுபவம் இருந்தது. “இரு சக்கர வாகனங்கள் பாதுகாப்பான போக்குவரத்து முறை இல்லை என்றாலும் அனைவராலும் நான்கு சக்கர வாகனமான காரினை வாங்க முடியாது,” என கூறும் துணை நிறுவனரான தினேஷ் எவ்வாறு போக்குவரத்தை அனைவருக்குமானதாக்கும் நோக்கத்தில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்றும் எவ்வாறு ஓர் பாதுகாப்பான மின்வாகன போக்குவரத்து சூழலை ஏற்படுத்த அவர்கள் செயல்புரிகின்றனர் என்றும் விவரிக்கிறார்.
மின்சார இரு சக்கர வாகன சந்தையில் தங்களுக்கான இடத்தை ஆராய்ந்து அறிந்து வரையறுத்துக் கொண்டனர் தினேஷும் கீர்த்திவாசனும். தங்கள் வணிகத்தை ஓர் நிறுவனமாக மாற்றுவதற்கான ஓர் கட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தி கொண்டு இருக்கையில் புனீத் குமார், கார்த்திகேயன் ஆதிகேசவன் ஆகிய இருவரையும் தாங்கள் கட்டமைக்கும் குழுவில் இணைத்தனர்.
“நாங்கள் முதன்முதலில் அமெரிக்காவிலேயே எங்கள் நிறுவனத்தை துவங்கினோம். ஆனால் கைவசம் எங்களின் வடிவமைப்பு தயாராக இல்லை என்பதால் முதலீட்டாளர்களை ஒன்று சேர்ப்பது என்பது கடினமாக இருந்தது,” எனும் தினேஷ், நிறுவனத்தை துவங்க சென்னைக்குத் திரும்பியதில் இருந்த நன்மைகளை தொடர்ந்து விவரிக்கிறார். “மொழியும், அன்றாட வாழ்க்கைச் செலவும், உடனிணைந்து செயலாற்ற தயாராக இருந்த கல்லூரி சூழலும் மறுயோசனைக்கு இடமின்றி எங்களை சென்னைக்கு வரவழைத்தது.”
என்னதான் இந்த நான்கு துணை நிறுவனர்களுமே உற்பத்தி பொறியியல் (production engineering) துறையில் பட்டப்படிப்புப் பெற்று இருந்தாலும் இந்நிறுவனத்தில் அவரவர்களுக்கான ஏற்ற திறனையும் பொறுப்பையும் அவர்கள் கண்டுக்கொண்டனர். உற்பத்தி செயல்முறைகளில் கவனம் செலுத்திய வண்ணம் குழுவின் இயந்திரப் பொறியாளராக கீர்த்திவாசன் பணியாற்ற, மென்பொருட் சோதனை மற்றும் மேகக் கணினியத்தை (cloud computing) விப்ரோ நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக அனுபவம் பெற்ற புனீத் பார்த்துக் கொண்டார். மின்னணுப் பிரிவை கார்த்திகேயன் கையாண்டார். “நானோ பெரும்பாலும் இதுப் போன்ற பேட்டிகளையே கொடுத்து வருவேன்,” என சிரித்துக் கொண்டே கூறும் தினேஷ் நம்மையும் சிரிப்பில் ஆழ்த்துகிறார்.
வாகன வடிவமைப்புத் துறையில் இவர்கள் நான்கு பேருக்கும் எந்தவித முந்தைய அனுபவமும் இல்லை. வேலை ஆட்களை பணியமர்த்துவது என்பது சவாலாக இருந்தது. “துளிர் நிறுவனங்கள், ஆரம்பநிலை முதலீட்டாளர்கள் மற்றும் துளிர் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் தேடுபவர்கள் போன்றவர்களுக்கான ஏன்ஜல்லிஸ்ட் (AngelList) எனும் அமெரிக்க இணையத்தளத்தையே ஆரம்ப நாட்களில் நாங்கள் பயன்படுத்தி வந்தோம். ஏனெனில் துளிர் நிறுவன அமைப்புமுறையில் ஆர்வமுள்ள ஓர் குறிப்பிட்ட குழுவினரே இந்த இணையத்தளம் வழியாக பணிகளுக்கு விண்ணப்பிப்பர்,” என கூறுகிறார் தினேஷ். “இன்று ராப்டீ நிறுவனமானது அறுபத்து ஆறு நபர்கள் கொண்ட ஓர் குழுவாக வளர்ந்துள்ளது. இது ஓர் துளிர் நிறுவனத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் பெரிது எனினும் ஓர் வாகன உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் சிறிதே ஆகும்,” என கூறும் அவர் தங்கள் நிறுவனத்தினுள் இருக்கும் பன்னிரெண்டு சிறப்பு குழுக்கள் பற்றி விவரிக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக்கத்தின் அடல் இன்குபேஷன் மையத்தில் (Atal Incubation Centre) முதன்முதலில் துவங்கப்பட்ட துளிர் நிறுவனங்களுள் ராப்டீ நிறுவனமும் ஒன்றாகும். இது அந்நிறுவனத்துக்கு தேவையான அடையாளத்தை கொடுத்தாலும் அடல் மையமானது அப்பொழுது தான் புதிதாக துவங்கப்பட்டு இருந்தமையால் இந்த மின் வாகன நிறுவனத்தை ஆதரிக்க அதனிடம் போதுமான சாதனங்களும் தொழில்நுட்ப வசதிகளும் இல்லை. ராப்டீ நிறுவனம் இந்த மையத்தில் இருந்து வெளியேறி வேறு இடத்தில் தனது இயக்கத்தை துவங்கியது. எனினும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெகுவாக மாணவர்களை வேலையில் பணியமர்த்தும் நோக்கத்தில் பல்கலைக்கழகத்திற்கு அருகிலேயே தனது இயக்கத்தை வேரூன்றியது. ஈக்காட்டுத்தாங்கலில் ஓர் வண்டி கொட்டகையை கண்டறிந்த இந்த குழுவினர், அதற்கு மேல் இருந்த இடத்தையும் சில நாட்களில் வாடகைக்கு எடுத்து 2000 சதுர அடியளவில் ஓர் நல்ல வசதியான பணியிடத்தை உருவாக்கினர்.
இந்தியாவில் மின் வாகனத் துறையானது அதிக போட்டிகள் நிறைந்ததாகும். இதில் இருக்கும் பெரிய சவால் என்பது இந்த போட்டியில் அனைவருக்கும் மத்தியில் தனித்துவமாய் விளங்குவதே. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை இங்கே மீண்டும் பொருத்துகின்றனர். “பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நிறுவனங்களின் மின்சார இரு சக்கர வாகனங்கள் யாவும் விலை குறைவே—அதாவது இவற்றின் விலை பத்தாயிரத்தில் இருந்து இருபதாயிரம் வரை இருக்கும். மேலும் இவை அதிகபட்சமாக மணிக்கு முப்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியவையாக இருக்கும்,” என கூறுகிறார் துணை நிறுவனர் தினேஷ். எனினும் இந்த வாகனங்கள் நெகிழியால் (plastic) செய்யப்பட்டவை என்பதால் இவை இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே நீடித்து இயங்கும். ஆனால் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தும் ஓர் சாரசரியான இந்தியர் 100cc-150cc கொண்டிருக்கும் ஸ்பெளன்டர் போன்ற பைக்குகளையே பயன்படுத்தி பழகி இருப்பர். ஏனெனில் அவை அதிக ஆண்டுகள் நீடித்து இயங்குவதோடு ஒரு மணி நேரத்தில் 100 கிலோமீட்டர் வேகம் வரை அவற்றால் செல்ல முடியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ராப்டீ நிறுவனமானது தங்களின் உயர் மின்னழுத்த (high voltage) மின்சார பைக்குகளின் வடிவமைப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அவை நெடுங்காலம் நீடித்து உழைக்க வேண்டும் என்பதற்காக அவற்றின் உடற்பகுதி உலோகத் தகடுகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. “மின் வாகனங்கள் என்பது வெறுமனே சுற்றுப்புற நலனுக்கான ஓர் மாற்று தேர்வாக கருதப்படக் கூடாது,” என கூறும் தினேஷ் இருநூறு மின்னழுத்தங்களுக்கு அதிகமான மின்னழுத்தங்கள் கொண்ட மின்கலத்தைக் கொண்டு உருவாக்கப்படும் ஓர் பைக்கின் நன்மைகளை பட்டியிலிடுகிறார். ஒரு புறம் உயர் மின்னழுத்த மின் பைக்குகள் மேம்பட்ட செயல்திறனும் அதிக நம்பகத்தன்மையும் கொண்டு இருக்க மறுபுறம் மற்ற நிறுவன மின் வாகனங்களைப் போல் அல்லாமல் ராப்டீ நிறுவனம் உருவாக்கும் மின் வாகனங்களை அடிக்கடி மின்னூட்ட (charge) வேண்டி இருக்காது. “சென்னையில் கிட்டத்தட்ட இருபத்து நான்கு மின்னூட்ட நிலையங்கள் இருக்கின்றன. எனவே எங்கள் இரு சக்கர வாகனம் அறிமுகமாகும் போது மேலும் மேலும் அதிகமான மின்னூட்ட நிலையங்கள் அமைப்பதற்கென நாங்கள் முதலீடு செய்ய வேண்டி இருக்காது.”
ராப்டீ தனது நிறுவனத்துக்குள்ளேயே பாகங்களை தயாரித்து அம்பத்தூர் மற்றும் திருமழிசையின் சிட்கோ தொழிற் பேட்டையில் இருக்கும் சிறு சிறு நிறுவனங்களிடம் தனது உற்பத்தி வேலைகளை புறமூலாக்கம் (outsource) செய்கிறது. பின்னர் உற்பத்தியான பாகங்களை கொண்டு வந்து அதனிடத்தில் வைத்து பொருத்துகின்றது. மேலும் இந்த துளிர் நிறுவனமானது தனது உற்பத்தியை விரிவாக்க முப்பத்து ஆறு ஏக்கர் அளவிலான நிலத்தினை கையகப்படுத்துவதற்கான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) தமிழ்நாடு அரசுடன் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சந்தையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் மாநில அரசின் பெருமளவு ஆதரவு பெற்றதோடு அதன் விளைவாக உதவித் தொகை பெறவும் துவங்கியுள்ளது இந்நிறுவனம். இந்த ஆண்டு இறுதியில் தங்களின் மின்சார இரு சக்கர வாகனத்தை சந்தைக்கு அறிமுகப்படுத்தப் போகும் ராப்டீ எனர்ஜி நிறுவனமானது இந்தியாவின் தானுந்து ஆராய்ச்சி கழகத்திடமிருந்தும் (ARAI – Automotive Research Association of India) மத்திய அரசிடமிருந்தும் உதவித் தொகையைப் பெற்றுள்ளது. “இரண்டாம் முறை உதவித் தொகை பெறுவதே எங்களுக்கு நெருக்கடியாக இருக்கிறது. நாங்கள் நினைத்தது போல வாகன உற்பத்தி என்பது அவ்வளவு எளிதாக இல்லை,” என அவர் மென்மையாகச் சிரிக்கிறார்.
வாகனம் வெளிவரப் போகும் நாளில் இருந்து மூன்று மாதங்கள் வரை தற்பொழுது எங்களுக்கு முன்பதிவுகள் இருக்கின்றன. வாகனம் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு இந்த பதிவுகள் அதிகரிக்கும் என நம்புகிறார் இந்த இளம் தொழில்முனைவோர். முதல் கட்டத்தில் ஓராண்டு கால அளவிற்கு குறைந்த அளவேயான பத்தாயிரம் இரு சக்கர வாகனங்களே உற்பத்தி செய்யப்படும். ஆரம்பத்தில் சென்னை, கோயம்பத்தூர், பெங்களூர் மற்றும் கொச்சி ஆகிய நகரங்களிலும் அதன் சுற்று வட்டரங்களிலுமே இந்த வண்டிகள் விநியோகம் செய்யப்படும். உற்பத்தி துவங்கி பதினெட்டு மாதங்கள் கழித்து ராப்டீ மின்சார இரு சக்கர வாகனங்கள் இந்தியா எங்கிலும் விற்பனை செய்யப்படும்.
மின்சார வாகனங்களை குறிப்பாக அண்மைக் காலத்தில் மின்சார வாகனங்களில் இருக்கும் மின்கலங்கள் தீப்பற்றி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகமாக வலம் வரும் வேளையில் இந்தியாவில் இன்றளவும் மக்கள் பயத்துடனும் சந்தேகத்துடனுமே அவற்றை காண்கின்றனர். “ஒரு சில வாகனங்கள் நடைமுறையில் ஏன் தோல்வியடைகின்றன என்பதை மக்கள் புரிந்துக் கொள்கின்றனர். என்னதான் இது போன்ற செய்திகள் வலம் வந்தாலும் ஒரு சில ஆலைகள் நம்பகமான தரம் வாய்ந்த வாகனங்களையே உற்பத்தி செய்யும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்,” என அவர் கூறுகிறார். “எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் நீங்கள் விலை பொருட்களை உற்பத்தி செய்யலாம். அதற்கென ஓர் வாடிக்கையாளர் கூட்டம் எப்பொழுதுமே இருக்கும் என்பதே இந்திய சந்தையின் சிறப்பம்சம் ஆகும். நீங்கள் தயாரிக்கும் பொருளை சந்தையில் நெடுங்காலம் தக்க வைப்பதே முக்கியமான ஒன்றாகும்” என நிறைவு செய்கிறார் தினேஷ்.
