THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

வாழ்க்கையின் விளையாட்டு: கோயம்புத்தூரின் பொம்மை வடிவமைப்பாளர்

பொம்மை வடிவமைப்புத் துறையில் கனகா ஆனந்த் அவர்களின் நியதி நம்மை அவரின் குழந்தைப்பருவக் காலத்துக்கு இட்டுச் செல்கிறது. இவர் இன்று மணியம்ஸ் (Maniams) என்றொரு தனித்துவமான வடிவமைப்பு நிறுவனம் வடிவம்பெற, தனக்கும் தன் மறைந்த சகோதரர் கார்த்திக் ஆனந்திற்கும் உதவியாக இருந்த சிறு சிறு நுணுக்கங்களை ஒருங்கிணைத்து தன் வாழ்க்கை சம்பவங்களை அழகாக நம் முன் விவரிக்கிறார்.

சிறு வயதிலிருந்து கனகாவை அறிந்தவர்கள் அவர் படைபாக்கத் தொழிற்துறையில் (Creative Industry) தடம் பதிப்பார் என்று கண்டறிந்தனர். மும்பையில் வளரும்போது தனக்குத் தெரிய வந்த ஒவ்வொரு ஓவியப் போட்டியிலும் பங்குபெற்றது மட்டுமல்லாமல் கேம்லின் (Camlin) மற்றும் யங் வேர்ல்ட் (Young World – தி ஹிந்து நாளிதழின் துணைப் பத்திரிக்கை) நடத்திய புகழ்பெற்ற போட்டிகளிலும் பரிசுகளை வென்று குவித்தார். தன் குழந்தைப் பருவத்தின் ஆரம்பக் காலத்திலேயே குடும்ப சூழலால் ஜெர்மனிக்கு அவர்கள் புலம்பெயர்ந்தது அவர் மீது ஒரு பெரிய விளைவினை ஏற்படுத்தியது. “பள்ளியில் அனைத்துமே செயல்முறை (Hands-on) சார்ந்ததாகவே இருந்தது. வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்கள் கூட செய்முறை வழியாகக் கற்றுத் தரப்பட்டது” என்று அவர் நினைவுக் கூறுகிறார்.

சில ஆண்டுகளிலேயே மும்பைக்குத் திரும்பிய அவரின் குடும்பம், தென்னிந்தியா உடனான அவர்களின் பிணைப்பை தொடர வேண்டுமென்ற முடிவை எடுத்தனர். சௌத் இந்தியா விஸ்கோஸ் பிரைவட் லிமிடெட் (  SIV – South India Viscose Pvt Ltd ) என்ற நிறுவனத்தில் அவரின் தந்தைக்குக் கிடைத்த தலைமை செயல் அதிகாரி (CEO) பொறுப்பு அவர்களை கோயம்புத்தூருக்கு இட்டுச் சென்றது. அங்கேயே அவர்கள் வீடு கட்டவும் முடிவெடுத்தனர். “அப்பொழுது தான் நான் ஒரு கட்டடக்கலைஞரை (Architect) சந்தித்தேன்” என்கிறார் கனகா. “எனது அப்பா, வீட்டில் என்ன நடந்தாலும் அதில் குடும்பத்தினரையும் ஈடுபடுத்தும் பழக்கம் உள்ளவர். எனவே, அந்தக் கட்டடக் கலைஞருடன் எங்களின் தேவைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்வோம்.” வெகு விரைவிலேயே அந்தக் கட்டடக்கலைஞர் உடனான கலந்துரையாடல்களும், வடிவமைப்பு உருபெற்று வருவதைக் காணும் அனுபவமும், சிறுமியான கனகாவினுள் கட்டடக்கலைக்கான அவரின் வேட்கையின், புதிதாய் கண்டெடுத்த உணர்தலைப் புகுத்தியது.

“அப்பொழுதெல்லாம் கோயம்புத்தூரில் கட்டடக்கலைக் (Architecture) கல்லூரிகள் எதுவுமே இல்லை. என் அம்மாவும், விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்ற அவசியம் கொண்ட, ஐந்து ஆண்டுக் காலப் பட்டப்படிப்பை படிக்க என்னை வெளியூர் அனுப்ப விரும்பவில்லை.” அது ஒரு போராட்டமாக இருந்தாலும் கூட கனகாவும் அவர் தந்தையும் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கலந்தாய்வுக்காகச் சென்றனர். “எனக்கு TCE யில் ஒரு இடம் கிடைத்தது. TCE என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்த நிலையில் அங்கிருந்த ஒருவர் எங்களிடம் சொன்னார்  “TCE என்றால் மதுரையில் உள்ள தியாகராஜர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் (தியாகராஜர் பொறியியல் கல்லூரி) என்று!”. “அது நல்ல தரமான கல்லூரியே, ஏன் யோசிக்கிறீர்கள்? உங்கள் மகளுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு” என்றார். அப்பாவும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அப்பாவோ, “கனகா, உன் அம்மாவை ஒப்புக் கொள்ள வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்றார்.

அனைத்து தடைகளையும் கடந்து வந்த கனகா இறுதியில் ஒரு வழியாக மதுரைக்கு வந்து தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் தன்னை ஒரு கட்டடக்கலை மாணவியாக பதிவுசெய்து கொண்டார். ”எனது முன்வைப்பை (Presentation) பார்க்கும் போதே எனது பேராசிரியர்கள் என் பாணியை அடையாளம் கண்டுக்கொள்வர். கொடுக்கப்பட்டுள்ள செயல்திட்ட சுருக்கத்தைக் (Brief) கொண்டு நான் எப்போதும் ஏதேனும் வித்தியாசமாக செய்யவே முயன்று உள்ளேன்.” ஆண்டுகள் உருண்டோட அவரும் அவரின் பேராசிரியர்களும் அவரை ஒரு ‘நடைமுறை கட்டடக்கலைஞர்’ என வகைப்படுத்த முடியாது என முடிவுக்கு வந்தனர். அவரின் சிந்தனை செயலாற்றல் (Thought Process) பெருமளவில் தனித்துவமாக உள்ளதை உணரத் தொடங்கினர். இறுதியாண்டில் அவரின் ஆய்வுரை (Thesis)  ஒரு பொழுதுப்போக்கு பூங்காவின் (Amusement Park) வடிவமைப்பை உள்ளடக்கியது. துரதிர்ஷ்டவசமாக சுய அறிதலுக்கான (Self – Discovery) இந்தக் காலம், தன் ஒரே சகோதரரின் சிறுநீரக கோளாறு ஆய்வுறுதியுடன் (Diagnosis) ஒத்திருக்க நேரிட்டது. “ என் அப்பா தனது ஒரு சிறுநீரகத்தை என் சகோதரரின் உயிரைக் காப்பாற்ற தானம் செய்ய நேரிட, நானோ ஒரு மருத்துவமனை அறையில் என் சகோதரரையும் என் அப்பாவையும் கவனித்துக் கொண்டே என் ஆய்வுரைக்கான தாள்களை வரைந்துக் கொண்டு இருந்தேன். என் வாய்மொழித் தேர்வுக்காக (Viva – Voice) மட்டும் கல்லூரி சென்றுவிட்டு மீண்டும் திரும்பிவிட்டேன்.

கனகாவிற்கு இது ஒரு சோதனைக் காலமாக மட்டுமல்லாமல் அவரின் தலையெழுத்தை முடிவு செய்த ஒரு சம்பவமாகவும் அமைந்தது. “கட்டடக்கலையில் முதுகலை மேற்கொள்வதற்கான கேட் (GATE) தேர்வை நான் தவறவிட்டேன். ஏனெனில் கேட் தேர்வு நாள் அன்றே என் சகோதரருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. எனவே, பெங்களூரில் நடைபெற்ற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் – NID) நுழைவுத்தேர்வை எதிர்கொண்டேன். ஏனெனில் அன்றைய நாட்களில் பெங்களூர் தேர்வு மையமே கோயம்புத்தூரின் அருகாமையில் இருந்த தேர்வு மையம் ஆகும். “முதுகலைப் படிப்பிற்கு அனுமதிக்கப்பட்ட ஆறு மாணவர்களுள்  நானும் ஒருவர். என் கட்டடக்கலை படிப்பை முடித்த பத்து நாட்களுக்குப் பின், தேசிய வடிவமைப்பு நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்காக சென்றேன். அங்கே இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பித்தேன் : ஒன்று உற்பத்திப்பொருள் வடிவமைப்பு (Product Design)  மற்றொன்று பொம்மை வடிவமைப்பு (Toy Design). பொம்மை வடிவமைப்பு என்ற பாடப் பிரிவு அந்த ஆண்டு தான் அங்கே தொடங்கப்பட்டது ,” என கனகா தனது மேற்படிப்பின் ஆரம்பக் காலத்தை நினைவுக் கூறுகிறார்.

முற்போக்கான “என்ஐடி கலாச்சாரம்” அப்பொழுது சிறு வியப்பினையும் மறுப்பினையும் வெளிபடுத்தவே செய்தது. எனினும், இந்தியாவிலேயே பொம்மை வடிவமைப்பில் பட்டம் பெறப்போகும் முதல் வெகு சில மாணவர்களுள் கனகாவும் ஒன்று என்ற போதும் கூட கனகாவின் தந்தையோ அவரின் இலட்சியங்களை எல்லா வழிகளிலும் ஆதரித்தே வந்தார். அவர்கள் இருவருக்குமே வருங்காலத்தில் அதன் வாய்ப்புகள் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் இல்லை.

என்ஐடி யில் படிக்கும் போதே ஃபன்ஸ்கூலில் (Funskool – இந்தியாவின் முன்னணி பொம்மை உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று) அவர்களின் முதல் பொம்மை வடிவமைப்பு உள்ளுறைவாளராக (Intern) சேர்ந்தார். “ஒரு பொம்மை வடிவமைப்பாளர் பற்றி யாரும் அதுவரை கேள்விப் பட்டதே இல்லை,” என்று அவர் விவரிக்கையில், அவருடன் வேலை செய்தவர்கள் பெரும்பாலானோர் அனைவரும் பொறியாளர்களாகவும், அதிலும் குறிப்பாக ஆண்களுமாகவே இருந்தனர் என்றும் கூறுகிறார். பல்வகைமைக்கான பற்றாக்குறை (Lack of Diversity) என்பது கடப்பதற்கு ஒரு கடினமான தடையாக இருந்தது. “பெரும்பாலான நேரங்களில் ஒரு பொம்மை வடிவமைப்பாளர் என்பவர் தொழிற்துறைக்கு என்ன செய்திட முடியும் என்பதை எனக்கு நானே விளக்கிக் கொள்வதை உணர்ந்துள்ளேன்.”

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பொம்மை தொழிற்துறையின் முன்னணி நிறுவனமான  தில்லியை அடிப்படையாகக் கொண்ட கிரியேடிவ் எஜிகேஷன் எய்ட்ஸ் (Creative Education Aids) உடன் அவரின் இறுதியாண்டு ஆய்வுத்திட்டத்தை மேற்கொண்டார். “வடிவமைப்பைப் பற்றிய விழிப்புணர்வு பற்றாக்குறையால் வடிவமைப்பு ஆராய்ச்சி (Design Research) மற்றும் பயனர் பகுப்பாய்வின் (User Analysis) பயன்களையும், உற்பத்திப்பொருள் விரிவாக்கத்தில் (Product Development) வடிவமைப்பாளரின் முக்கியத்துவத்தையும் தொழிற்துறைகள் முழுமையாக புரிந்துக்கொள்ளவே இல்லை” என கனகா அதிருப்தியில் பெருமூச்சு விடுகிறார்.

பந்தயக் கார்களை வைத்து விளையாடுகையில் எவ்வாறு எழுத்துக் கூட்டி வாசிப்பது என்று விளையாட்டு அனுபவம் மூலம் கற்றலை புகுத்த, ‘ஃபாஸ்ட் டிராக் (Fast-track)’ என்ற ஒரு விளையாட்டையும், பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான தொடர்பை மேம்படுத்துவதில் குறிக்கோள் கொண்ட ‘அமேசிங் மீ (Amazing Me)’ என்ற விளையாட்டையும் அவர் வடிவமைத்தார். விற்பனைக்காக சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவரின் ஒரு சில திட்டங்களில் இவையும் சேரும். அவரின் முதுகலைப் பட்டப்படிப்பினைத் தொடர்ந்து,  கிரியேடிவ் எஜிகேஷன் எய்ட்ஸ் (Creative Education Aids) என்ற நிறுவனத்துடன் தொடர்ந்து சார்பிலா வேலைகளை (Freelance) செய்தார். கூடவே என்ஐடி யின் பொம்மை வடிவமைப்புத் துறையில் இளம் வடிவமைப்பாளராக சேர்ந்தார்.

கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டை விட்டு கனகா வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. “எனது பெற்றோர் என்னை தென்னிந்தியா வர வற்புறுத்தினர் ஆனால் தென்னிந்தியாவோ வெகு குறைவாகவே பொம்மை தொழிற்துறைக்கான வாய்ப்புகளைப் பெற்று இருந்தது.” அப்பொழுது என்ஐடி பேராசிரியர் பலராம் சிங்கனபள்ளி அவர்கள் தென்னிந்தியாவில் தற்செயலாக கோயம்பத்தூரில் ஒரு புதிய வடிவமைப்புப் பள்ளி கட்டுவதற்கு தனக்கு உறுதுணையாய் இருக்க  நம் இளம் வடிவமைப்பாளரை அணுகினார். அதுவே டிஜே வடிவமைப்பு பயிற்சி நிறுவனத்தின் (DJ Academy of Design) முன்னோடி கல்வியாளர்களில் ஒருவரான கனகாவின் பதிமூன்று ஆண்டுகால நீண்ட வாழ்க்கைப் பணியின் துவக்கம் என சொல்லலாம்.

கனகாவின் சகோதரர் கார்த்திக் இரண்டாவது மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உள்ளாக வேண்டியிருந்தது. அவர் தனது நிறுவன வேலையை கைவிட்டு விட்டு அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து அவர்களின் தாயார் நடத்திக் கொண்டிருந்த மணியம்ஸ் (Maniams) நிறுவனத்தை கையிலெடுத்தார். அதை, ஒரு விநியோக நிறுவனத்திலிருந்து, அறிவுரை மொழிதல் (Consulting) மற்றும் உள்ளடக்க உருவாக்கம் (Content Creation) இவை இரண்டையும் நோக்கிய பெண்களை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பாக உருமாற்றினார் கார்த்திக்.

“பல பெண்கள் அவர்களின் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு காலத்திற்குப் பின்னர் தங்கள் பணிகளுக்கு திரும்புவதை சிரமமாகக் கருதுகின்றனர். எனவே, மணியம்ஸ் (Maniams), அவர்களை அவரவர் வீட்டில் இருந்தபடியே  பணி செய்யவும், திட்டப்பணி மேலாளர்களுடன் (Project Managers) ஒருங்கிணையவும் வழி வகுத்தது.” மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அறிவுரை கையேட்டினை (Instruction Manual) உருவாக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டதாக கனகா விவரிக்கிறார்.

சில ஆண்டுகள் கழித்து கார்த்திக், அவருடன் துவக்கக் காலத்தில் பணியாற்றியவர்களுடன் சேர்ந்து நோய் தணிப்புப் பேணல் (Palliative Care) மீது குவியம் (Focus) கொண்ட சுகினோ ஹெல்த்கேர் சொல்யூசன்ஸ் (Sukino Healthcare Solutions) என்ற நிறுவனத்தை நிறுவினார். “சிறுநீரகத் தூய்மிப்பை (Dialysis) தவறாமல் நாடிய ஒருவரான அவர் இந்தியாவில் நோய் தணிப்புப் பேணல் (Palliative Care) துறையை விரிவாக்க வேண்டுமென்ற மிகப் பெரிய தேவையை உணர்ந்தறிந்தார்,” என்கிறார் கனகா.

துரதிர்ஷ்டவசமாக நம் பொம்மை வடிவமைப்பாளர் கடந்த ஆண்டு இறுதியில் தன் குறும்புகளின் கூட்டாளி மற்றும் தொழில் நிறுவனத்தின் கூட்டாளியுமான தன் சகோதரர் கார்த்திக்கை இழந்தார். “அதிர்ஷடவசமாக தன் இறப்புக்கு சில நாட்கள் முன்னர் சுகினோ நிறுவனம் நிதி ஒதுக்கீடுப் பெறுவதை அவர் காண நேர்ந்தது. அவரின் தொடக்கநிலை நிறுவனங்களில் ஒன்று வளம் பெற்றுவிட்டதை கண்டு அவர் மகிழ்ச்சியுற்றார். மேலும் அந்த கணம், மணியம்ஸ் நிறுவனத்தை (Maniams) முன்னெடுத்துச் செல்ல என்னிடம் ஒப்படைத்தார் ” என வருத்தம் கலந்த வேதனையுடன் தெரிவித்தார் கனகா. நம் வடிவமைப்பாளர் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தன் சகோதரர் விட்டுச் சென்ற அத்தியாயத்தைத் துவங்கும்போது ஒரு நடைமுறையை உணர்ந்தார் – இரண்டாம் அடுக்கு நகரங்களில் (Tier-2 cities) வடிவமைப்பு சேவைகள் (Design Services) வழங்கப்படுவதென்பது சாதரணமாக காணக் கூடியதல்ல – ஏனெனில் பெரும்பாலானவர்கள் பெரிய நகரங்களிலேயே அதனை செய்ய முனைவர். வடிவமைப்புத் துறையே அவரின் கோட்டை என்பதாலும், அவரிடம் கிட்டத்தட்ட ஐந்நூறு மாணவர்களின் கூட்டமைவு இருந்ததாலும் ஒரு சில பட்டதாரிகளை தேர்ந்தெடுத்து சிறு நிறுவனங்களுக்கு வடிவமைப்பு சேவைகளை (Design Services) அளிக்கத் தொடங்கினார். கருத்தரங்குகளும் நடத்த தொடங்கினர் – ஏனெனில் அவர்கள் தொடர்புக் கொண்ட நிறைய நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வடிவமைப்புச் சிந்தனையில் (Design Thinking) பயிற்றுவிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.

என்னதான் மணியம்ஸ் (Maniyams) பலதரப்பட்ட வடிவமைப்பு செயல்முறை சுருக்கங்களில் அதாவது (Design Briefs) – பயனர் இடைமுகம்/ பயனர் அனுபவ வடிவமைப்பு (UI/UX  –  User Interface/User Experience ) முதல் உற்பத்திப்பொருள் வடிவமைப்பு வரை செயலாற்றினாலும் – எப்பொழுதுமே பொம்மை வடிவமைப்பின் மீது ஒரு தனியான குவியம் (Focus) இருந்துக் கொண்டே தான் இருந்திருக்கிறது.

“நான் மிகப்பெரிய ஒரு மறையிடரை (Risk) கையிலெடுக்கிறேன் என்று எனக்குத் தெரியும் – ஏனெனில் நான் அதில் முனைப்போடு முதலீடு செய்ய வேண்டும் எனினும் நான் அந்த சவாலை எடுத்துக் கொண்டேன். நன்கு சிந்தனைக்கு உட்பட்ட விளையாட்டுகளை (Well Thought Out Games) நான் வடிவமைத்தால் அது சந்தையில் நன்றாக செயல்படும் என்று நான் நம்பினேன்.”

சிந்தனை மற்றும் இலட்சியத்தினால் வழிவகுக்கப்பட்ட கனகா, இந்திய கலாச்சாரத்தின் கூறுகளால் (Elements) உயிர்ப்பூட்டப்பட்ட பொம்மைகளை வடிவமைக்கும் இலக்கில் (Mission) முழு மூச்சாக இறங்கினார். ஏனெனில் சந்தையில் இருக்கும் பெரும்பாலான புகழ்பெற்ற விளையாட்டுகள் எல்லாம் மிகவும் மேற்கத்தியமயமாகி (Westernised) இருந்தது. தனது சகோதரரின் வழித்தடத்தில் பின்தொடர்ந்த கனகா, இன்னொரு இடைவெளியை இணைவிப்பதற்கு இதை ஒரு கச்சிதமான வாய்ப்பாக கருதினார்.

அவர் கைவினைஞர்களை (Artisans) ஒருங்கிணைத்து அவர்களை இதன் செயல்முறைகளில் ஈடுபடுத்தினார். நிறைய முன்னும் பின்னுமான கற்றல், சோதித்தல் மற்றும் மாறுபட்ட செயல்முறைகளை ஒருங்கிணைத்தலுக்குப் பின்னர், கனகா வெறும் சூழல்நல (Eco-friendly) மற்றும் வளங்குன்றா (Sustainable) விளையாட்டுகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் டாய்கதான் (Toycathon) எனப்படும் இந்திய நடுவண் அரசின் பொம்மை வடிவமைப்புப் போட்டியில் மணியம்ஸ் நிறுவனத்துக்கு வெற்றிப் பட்டத்தை பெற்றுத் தந்தார்.

“தனது தகவல் தொழில்நுட்பப் பணியை எனது இந்தப் பயணத்திற்காக விட்டுவிட்டு எனக்கு ஆதரவளித்த என் கணவர் ராம் அவரை என் வாழ்க்கையில் பெற்றதற்கும், மேலும் என்னை இந்த முயற்சியின் வழியெங்கிலும் ஊக்குவித்து, ஆதரித்த என் கணவரின் தாய் தந்தையை பெற்றதற்கும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லலாம்” என்று கனகா ஒரு புன்முறுவலுடன் நிறைவு செய்கிறார்.

டாய்கதான் (Toycathon) எனப்படுவது இந்திய நடுவண் அரசின் கல்வித் துறையின் புத்தாக்கம் பிரிவு (Innovation Cell) அமைத்த அரசுத்துறைகளுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சி. கிரேஸி கோலம் (Krazy Kolam), ரங்கோலியோ (Rangolio), டிரிகோணா (Trikona) மற்றும் பஹேலி (Paheli) ஆகிய நான்கு உள்நாட்டு (Indigenous) விளையாட்டுகளும் 2021ல் நடந்த முதல் அனைத்திந்திய மெய்நிகர் பொம்மை கண்காட்சியில் (First All India Virtual Toy Exhibition) மணியம்ஸ் (Maniyams) நிறுவனத்தால் தொடங்கப்பட்டவை ஆகும். ராமாயணத்தைத் தழுவிய பஹேலி (Paheli) என்ற விளையாட்டு சின்னங்களையும், பண்டிகைகளையும் அவற்றின் பொருள்களையும் குழந்தைகள் புரிந்துக் கொள்ள உதவுகிறது.

நாம் ஏன் வளையல்கள் அணிகிறோம்? நாம் ஏன் ஓணம், பொங்கல் மற்றும் ரக்ஷ பந்தன் போன்ற  பண்டிகைகளை கொண்டாடுகிறோம்? திருவிழா நாட்களில் நாம் ஏன் மாவிலைகளைத் கட்டித் தொங்க விடுகிறோம்? குங்குமத்தின் முக்கியத்துவம் என்ன? நம் அழகான இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றிய முந்நூறுக்கும் மேற்பட்ட விடுகதைகளை இவ்விளையாட்டு தன்வசம் கொண்டுள்ளது. கிரேஸி கோலம் (Krazy Kolam), ரங்கோலியோ (Rangolio) மற்றும் டிரிகோணா (Trikona) ஆகிய விளையாட்டுகள் நம் அற்புதமான இந்திய அலங்கார வேலைப்பாடுகளாலும் (Motifs), உருப்படிவங்களாலும் (Patterns) உயிர்ப்பூட்டப்பட்டு உருவானவை. இவை இந்தியா முழுவதிலும் உள்ள கைவினைஞர்களால் உருவாக்கப்பட்டு, பின்னப்பட்ட மூங்கில் பேழைகளில் (Boxes) அடைக்கப்பட்ட, குழந்தைகள் நல மற்றும் வடிவமைப்பு  காப்புரிமை பெற்ற விளையாட்டுப் பொருட்கள் ஆகும்.

இந்தியாவின் பொம்மை தொழிற்துறை மெதுவாக உந்துதல் பெற்று வரும் வேளையில், கோயம்புத்தூரின் நம் பொம்மை வடிவமைப்பாளர் கனகாவிடமிருந்தும், மணியம்ஸ் நிறுவனத்தின் வழியே அவரின் சமூக விழிப்புடைய வடிவமைப்பு முயற்சிகளிடமிருந்தும் (Socially Conscious Design Initiatives ) இனி வரும் காலங்களில் நிறையவே நாம் எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

 

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

86/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.