THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

வாசிப்பை மீட்டெடுக்க மீண்டெழுந்து வரும் வரைகதைப் புத்தகங்கள்

ரோனா பெருந்தொற்று காலம். எங்கும் பொது முடக்கம். பள்ளிகள் இணையத்தில் இயங்கத் துவங்குகின்றன. பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித்ததிற்கான (STEM –science, technology, engineering and mathematics) ஒருங்கிணைந்த ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் சென்னையில் வசிக்கும் இரண்டு பொறியாளர்கள், வீடுகளில் முடங்கிப் போக அதன் பின்னர் நடந்தது என்ன? வாருங்கள் மேலும் வாசிக்கலாம். தங்கள் துளிர் நிறுவனத்தின் அங்கமாக பள்ளிக் குழந்தைகளுக்குக் குறியீடிடல் (coding) கற்பித்து வந்த அபிஷேக் RK (Abishek RK)  நந்தினி சில்கம் (Nandini Chilkam) ஆகிய இருவரும் வீட்டில் அனைவரும் முடங்கி இருக்கும் இந்தச் சமயமே வரைகதை (comic) புத்தக வாசிப்பை மீட்டெடுப்பதற்கான தக்கச் சமயம் எனக் கருதினர்.

நினைவுப் பாதையில் பின்னோக்கி பயணிக்கையில் பள்ளி முடிந்தப் பின்னர் அமர்சித்ர கதைகள், ஆஸ்டரிஸ்க் மற்றும் ஆப்ளிக்ஸ் அல்லது டின்டின் (Amarchitra Kathas, Asterisk & Oblix or TinTin) போன்ற வரைகதைப் புத்தகங்களின் பக்கங்களில் தொலைந்தப் போன மாலைகளும், செய்தித்தாளின் வரைகதைக்கான பக்கத்தில் வந்திருக்கும் கார்ஃபீல்ட் அல்லது கால்வின் அண்ட் ஹாப்ஸ் (Garfield or Calvin and Hobbes) போன்ற வரைகதைகளைக் கண்டு ஆர்பரித்த சனிக்கிழமை காலைகளும் இமி அளவுக் கூட மாறாமல் கண்கள் முன் வந்து நிற்கின்றன. இந்த வரைகதைகளுக்கு என்ன நேர்ந்தது? “இந்தக் காலக்கட்டத்தில் எங்கும் நிறைந்து இருக்கும் காணொளிகளால் இளம் தலைமுறையினர் நாளடைவில் வாசிப்புப் பழக்கத்தையே மறந்து விட்டனர்,” எனக் கூறுகிறார் அபிஷேக்.

அதுவே லேர்ன் வித் காமிக்ஸ் (Learn with Comics/வரைகதைகளுடன் கற்றல்) எனும் துளிர் நிறுவனம் துவங்குவதற்கான ஆணிவேராக அவர்களுக்கு இருந்தது. தாங்கள் முன்னர் துவங்கிய துளிர் நிறுவனத்தில் இருந்த சில பொறியாளர்களும் இவர்கள் இருவரும் இணைந்து தொலைபேசியின் கண்டுபிடிப்பு போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தலைப்புகளையும் எளிதான அறிவியல் கருத்துருக்களையும் (concept) மையமாக வைத்து சில வரைகதைகளை உருவாக்கத் துவங்கினர். “நாங்கள் இவற்றைத் திருத்துவதற்காக பதிப்புத் துறையில் இருக்கும் எங்களின் சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்தோம்,” என விவரிக்கிறார் இந்நிறுவனத்தின் துணை நிறுவனர். “இந்த வரைகதைகளை இணையத்தில் பதிவிட எளிமையான அடிப்படைக் கூறுகளைக் கொண்ட ஒரு இணையத்தளத்தையும் நாங்கள் உருவாக்கினோம்,” என்று எவ்வாறு இதற்கான செயல்முறை என்பது ஒரு தொடர்ச்சியான கற்றல் பயணமாக இருந்தது என்பதை உற்சாகம் பொங்க கூறுகிறார். வெகு விரைவிலேயே அந்த இணையத்தளத்தை கையாள சில நபர்கள் கொண்ட ஒரு மையக் குழுவினையும் நியமித்தனர். மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள். அதற்கிணங்க துவங்கப்பட்ட சமயத்தில் இருந்து இந்த இணையத்தளமானது நான்கு முறை மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

அப்பொழுது மும்பையில் இருந்த அனிருத்தா மால்பானி (Dr Aniruddha Malpani) என்ற ஆரம்ப நிலை முதலீட்டாளரான (angel investor) ஒரு மருத்துவரிடம் இருந்து வந்த ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி ஆனது இந்த துளிர் நிறுவனத்துக்கு பெரும் ஆதரவாக இருந்தது. “நிதியுதவியில் பாதி பணத்தை எங்களின் இணையத்தளத்தின் மறுவடிவமைப்பு பணிக்கும், எங்கள் குழுவின் விரிவாக்கத்திற்கும் செலவிட்டு கிட்டத்தட்ட பத்து வரைகதைகளை வெளியிட்டோம். பணத்தை எவ்வாறு திரும்ப செலுத்துவது என்பதைப் பற்றி கேட்க மருத்துவரான மால்பானியை தொடர்பு கொண்டோம்.” அவரின் பதில் அவர்களைப் பெரிதும் வியப்படைய செய்தது. இளம் தொழில்முனைவோர்களான அவர்களை பெரிதாக கனவுக் காணச் சொல்லிய அவர் அத்துடன் அவர் அளித்த நிதியுதவியில் மீதம் இருந்தப் பணத்தை தங்களுக்குப் பயனுள்ள வழியில் செலவு செய்துக் கொள்ளுமாறும் கூறினார். மேலும், தங்களின் சொந்த கால்களில் நிற்பதற்கான நிலை வரும் வரை தங்களின் நிறுவனத்திற்கு நிதியுதவி அளித்து ஆதரிக்க அவராகவே முன்வந்தார்.

நவீன தொழில்நுட்பத்துடனும், ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட ஒரு மையக் குழுவுடனும் இந்த துளிர் நிறுவனமானது முனைப்புடன் செயல்படத் துவங்கியது. அடுத்தக் கட்டமாக உள்ளூரில் இருக்கும் நபர்களின் திறன்களை அடையாளம் கண்டு அவற்றைத் திறம்பட கையாள வேண்டுமென முடிவு செய்தனர். சென்னையில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரியே (Government College of Fine Arts) அவர்களின் முதல் தேடல் களமாக இருந்தது. லேர்ன் வித் காமிக்ஸின் வரைகலைஞர்கள் (illustrators) ஆக அந்த கல்லூரியில் இருந்து சில மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டதோடு தங்கள் திறன்களைக் கொண்டு எண்ணிமக் கலை வேலைப்பாடுகள் (digital artwork) உருவாக்குவதற்கான கருவிகளும் வழங்கப்பட்டனர். “தட்டி எழுப்பபடாத திறன்கள் நிறையவே இருந்தன! இந்த மாணவர்களுக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்துவது என்பதே எங்களுக்கு முக்கிய குறிக்கோளாக இருந்ததால், அவர்களின் பங்களிப்பு எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அவர்களின் பெயர்களை நாங்கள் தவறாமல் குறிப்பிட்டு விடுவோம்.”

தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களில் (tier-2 cities) தடம் பதிப்பதில் கவனம் செலுத்துவதே அடுத்த கட்ட திட்டமாக இருந்தது. இந்த தொழில்முனைவோர்கள், திருநெல்வேலி மற்றும் நாமக்கலில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்களை உள்ளுறை பணியாளர்களாக (intern) பணியமர்த்தினர். ஒருபுறம் அவர்கள் புதிய தகவல்களை பதிவிடுவதில் கவனம் செலுத்தி வர, மறுபுறம் இந்த மாவட்டங்களில் இருந்த பள்ளி மற்றும் தனிப்பயிற்சி ஆசிரியர்கள்—தற்போது யூடியூப் போன்ற தளங்கள் மூலம் பல தகவல் மூலங்களுக்கு பரிச்சயம் ஆனவர்கள்—வரவழைக்கப்பட்டு உள்ளுறை பணியாளர்கள் பதிவிடும் தகவல்கள் அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு பொருத்தமாகவும், தொடர்புபடுத்திக் கொள்ள கூடியதாகவும் இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு ஒரு ஆலோசனைக் குழுவாக நியமிக்கப்பட்டனர்.

என்னதான் ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டும் தகவலை பதிவிடுவதில் லேர்ன் வித் காமிக்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வந்தாலும் அதன் பின்னர் பல்வேறு தன்னார்வ குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் கூட்டாண்மை வகித்து அவற்றின் உதவியுடன் தகவல்களை தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடத்தில் அந்தந்த உள்ளூர் தன்மைகளுக்கு ஏற்ப மொழிபெயர்த்து அவற்றிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

வரைகதைப் புத்தகங்களை மீட்டு எடுக்கும் இந்த முயற்சியானது இளம் தலைமுறையினர் இடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்திய ஒரு மிகச் சிறந்த வழியாக மட்டும் இல்லாமல் நிறுவனத்துடன் பணியாற்றிய மாணவ உள்ளுறையாளர்கள் தங்கள் ஆக்கத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு சுய வெளிப்பாட்டு (self-expression) கருவியாகவும் மாறியது.

லேர்ன் வித் காமிக்ஸ் நிறுவனத்தின் எல்லா தகவல்களும் தற்பொழுது அவர்களின் இணையத்தளத்தில் அனைவரும் இலவசமாக வாசித்து பயன்பெறும் விதமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஒரு சமோசா அல்லது ஒரு பப்ஸ்-இன் விலையில் ‘பைட் சைஸ்ட் லேர்னிங் (Bite Sized Learning)’ என்ற தலைப்பில் ஒரு சிறிய கற்றல் பயிற்சி வகுப்பினை அறிமுகம் செய்ய இருக்கிறது இந்த நிறுவனம். “ஒரு பதினேழு வயது மாணவரால் ஒரு பயிற்சி வகுப்பிற்காக ஐநூறு ரூபாய் வரை செலவு செய்ய முடியாது. மேலும் மற்ற வழக்கமான பயிற்சி வகுப்புகளைப் போல் பெற்றோர்களுக்கு ஒரு சுமையாகவும் இது இருந்து விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இந்த பயிற்சி வகுப்பு குழந்தைகளுக்கு தினந்தோறும் செய்யும் ஒரு அலுத்துப் போகும் செயலாக இல்லாமல் உற்சாகமான ஒரு செயலாக இருக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்தோம்.”

கூடுதலாக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லேர்ன் வித் காமிக்ஸ் நிறுவனமானது ‘படே பாரத் (Pade Bharat)’ மற்றும் ‘தமிழில் படிப்போம் (Thamizhil Padipom)’ ஆகிய இரண்டு பரப்புரைகளையும் (campaign) நிறுவி உள்ளது. இந்த நூறு நாட்கள் வாசிப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்கள், தினமும் லேர்ன் வித் காமிக்ஸ் இணையத்தளத்தில் இரண்டு புதிய காமிக்ஸ்களை, மொழியாக்கம் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் படிப்பதற்கான நுழைவுரிமையைப் பெறுவர்.

என்னதான் பெருந்தொற்று காலத்தில் லேர்ன் வித் காமிக்ஸ் ஆனது உரு பெற்றாலும் துவங்கி பதிநான்கு மாதங்களே ஆன இந்த துளிர் நிறுவனத்துக்கு கூட்டாண்மை வகித்து செயலாற்றுவதற்கென பள்ளிகளை அணுகுவதே மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. “பள்ளிகளை அணுகுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. ஏனெனில் அவை திறந்து இருப்பதே ஒரு சில நாட்களில் மட்டுமே என்பதால் பலரும் பள்ளி நிர்வாகத்தை அணுகுவதற்கு அந்த ஒரு சில நாட்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பர்,” என ஏக்கப் பெருமூச்சி விடுகிறார். “இது ஒரு புதிய கருத்துரு என்பதால் ஒரு சிலர் ஆர்வம் காண்பித்தார்கள்; ஒரு சிலர் இது நடைமுறைக்கு ஒத்துப் போகுமா என்று சந்தேகப் பார்வை விடுத்தார்கள்.” எனினும் இந்த தொழில்முனைவோர்கள் துன்பம் வரும் வேளையிலும் மனம் தளரவில்லை. அவர்களின் விடாமுயற்சியால் இரண்டாம் நிலை நகரங்களை மையமாகக் கொண்டு இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட பதினைந்து பள்ளிகளுடன் கூட்டாண்மையில் இணைந்துள்ளனர்.

ஆறாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்புகளுக்குத் தேவையான தகவல்களை மையப்படுத்தி வரைகதைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஆண்டு பிரத்தியேகமாக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கென சில புதிய வரைகதைகள் உருவாக்கப்படும். “குழந்தைகள் அவரவர் தாய் மொழிகளின் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்வதற்கு உதவும் வகையிலும் வரைகதைகள் உருவாக்கும் பணியில் நாங்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகிறோம்.” எந்த மாதிரியான தகவல்களை நாம் அவற்றில் எதிர்பார்க்கலாம் என அபிஷேக் அவற்றைப் பற்றி ஓர் கண்ணோட்டம் அளிக்கிறார்.

பீட்சா எப்படி செய்வது என்பதிலிருந்து பதின்ம எண்களை (decimal) கற்றுக் கொள்வது வரை பலத்தரப்பட்ட தலைப்புகளில் லேர்ன் வித் காமிக்ஸ் நிறுவனம் தற்பொழுது (மொழியாக்கம் செய்யப்பட்ட எல்லா தகவல்களும் உட்பட) 1005 காமிக்ஸ்களை உருவாக்கி உள்ளன. “இந்தியாவில் மொத்தம் 25 கோடி மாணவர்களும் ஐந்து கல்வி வாரியங்களும் உள்ளன,” என கூறும் தொழிமுனைவோரான அபிஷேக், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் பின்னர் உலகளவில் இருக்கும் மாணவர் சமூகத்தையும் அடுத்த மூன்று ஆண்டுகளில் அணுகுவதே தங்கள் நிறுவனத்தின் குறிக்கோள் எனத் தெரிவிக்கிறார். அரசு பள்ளிகளுக்கு லேர்ன் வித் காமிக்ஸை எடுத்துச் செல்வதற்கென தமிழ்நாட்டின் கல்வி அமைச்சருடன் இணைந்து பணியாற்றுவதே இந்நிறுவனத்தின் உடனடி இலக்காக உள்ளது.

அறுபது நொடி பல்லூடக (multimedia) தகவல்களும் சிந்தனையற்ற வகையில் தகவல்களை அலசி செல்வதும் கடல் போல எங்கும் படர்ந்து இருப்பதற்கு மத்தியில் வாசிப்பில் தீரா ஆர்வம் கொண்டவர்கள் அருகிவரும் உயிரினங்களைப் போல் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றனர் என்பதே நிதர்சனம். “அதனால் தான் முப்பது நொடி வாசிப்புகளான வரைகதைகளே ஆகச் சிறந்தவை ஆகும்,” என சிரிக்கும் அவர், “நிறைய நபர்கள் கழிப்பறைகளில் சிறிது நேரம் செலவிடுவது உண்டு. எங்களின் வரைகதைகள் பயனர்களிடம் சென்றடைவதும் அப்பொழுது தான்!” என்கிறார்.

 

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

216/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.