க்கி சானின் தீவிர பின்பற்றாளர் ஆன பதினாறு வயது விஷால் குமார் (Vishal Kumar) மணிக்கணக்கில் ஜாக்கி சானின் இசைவான நகர்வுகளை வலையொளியில் (Youtube) கண்டு அவற்றை பகுத்தாய்ந்து வந்தார். அவ்வாறு காண்கையில், வலையொளியின் பரிந்துரைக்கப்படும் காணொளிகள் (Videos) பகுதியில் தாண்டோட்டம் (பார்க்கூர் – Parkour) பற்றிய காணொளி ஒன்றை அவர் தற்செயலாக கண்டார். “நான் தீவிரமாக செய்து வரும் ஒரு செயலுக்கு உண்மையிலேயே ஒரு பெயர் இருப்பது எனக்கு அப்பொழுது தான் தெரிந்தது!” என நினைவு கூறுகிறார். தாண்டோட்டம் (Parkour) என ஒரு பயிற்சி வகை இருப்பதை கண்டுபிடித்த அந்த உற்சாகமான தருணத்தில் இணையத்தில் அதைப் பற்றிய தன்னால் முடிந்த எல்லா விவரங்களையும் தேடிப் பிடித்து படித்தறிந்தார் விஷால். அப்பொழுது தான் அவரைப் போன்று தாண்டோட்டத்தில் (Parkour) ஆர்வம் உள்ள பலர் இருப்பது அவருக்குத் தெரிய வந்தது. ஆர்க்குட் (Orkut) என்ற சமூக வலைத்தளத்தில் (2009-ல் முகநூலுக்கு (Facebook) முன்னோடியாக இருந்த ஒரு தளம்) தாண்டோட்டத்தில் ஆர்வமுள்ள ஐம்பது நபர்கள் கொண்ட ஒரு குழு இருந்தது. அதில் சென்னையின் தாண்டோட்ட ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்தனர். வார இறுதிகளில் திறந்தவெளிகளான பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் அண்ணா நகர் டவர் பூங்காவில் சந்தித்தும், பயிற்சி செய்தும், ஒருவருக்கொருவர் நகர்வுகளை (Movements) கற்றுக் கொடுத்தும் வந்தனர். “ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் அக்குழுவில் இருந்த நபர்களின் எண்ணிக்கை வெறும் நான்காக குறைந்தது. அனைவராலும் கடுமையான பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியவில்லை.”
தாண்டோட்டம் என்றால் சரியாக என்ன என நீங்கள் கேட்கிறீர்களா? கலை வடிவமா அல்லது விளையாட்டு வகையா? இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்க முடியாத இடத்திலேயே தாண்டோட்டம் தற்பொழுது உள்ளது. இராணுவத்தில் தடை தாண்டும் பயிற்சி வகை (military obstacle course training) மற்றும் தற்காப்புக் கலையில் (martial arts) இருந்து துளிர்விட்டு வந்த கிளையான தாண்டோட்டம் அவற்றில் இருக்கும் நகர்வு பாணிகளையும் (movement styles), நுட்பங்களையும் (techniques) தன்வசம் கொண்டு நகர்புற சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை வடிவமைத்துள்ளது. என்னதான் பார்ப்பதற்கு கடினமாக தெரிந்தாலும் ஒரு பயிற்சிபெற்ற தாண்டோட்ட விளையாட்டாளருக்கு இவ்வுலகமே ஒரு மைதானம் தான்.
“தாண்டோட்ட சமூகம் என்பது உலகெங்கும் நெருக்கமாக இருக்கும் சிறு சிறு குழுக்களாகும். இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் (ஃபிரான்ஸ் நாட்டில் தான் தாண்டோட்ட பயிற்சி உருவானது. அங்கு இது மிகவும் பிரபலமாகும்) நாடுகளில் இருந்து எல்லாம் பயிற்சியாளர்கள் எங்களை தொடர்புக் கொண்டு எங்களுடன் கூட்டிணைந்து பயிற்சிகள் மேற்கொண்டுள்ளனர்,” என விஷால் பெருமிதத்துடன் விவரிக்கிறார். “ஆரம்பக் காலக் கட்டத்தில் பயிற்சி செய்வதாக எண்ணி கவனக்குறைவாக நாங்கள் அனைவரும் கட்டடங்களில் இருந்து குதித்து எங்களையே நாங்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி அளித்து வரும் ஃபிரான்ஸ் நாட்டின் திறன்கொண்ட பயிற்சியாளர்களுடனான ஒருங்கிணைந்த பயிற்சிகள் எங்களுக்கு இந்த விளையாட்டினைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தது. 2011-ல் புதிதாக பயிற்சிப் பெற்று வந்திருந்த இந்த தாண்டோட்ட ஆர்வலர் குழு வலையொளியில் பகிரும் வண்ணம் தாங்களே காணொளிகள் செய்யலாம் என முடிவு செய்தனர். இதற்காக தாண்டோட்டத்திற்கான சென்னை படலத்தை (chapter) தழுவி வலையொளியில் சென்னை பார்க்கூர் (Chennai Parkour) என்ற அலைவரிசையினை (channel) தொடங்கினர். அப்பொழுது தான் தாண்டோட்டத்திற்கான ஒரு புது ஆர்வலர் கூட்டம் நம் மாநிலத்தில் அலைபோல மீண்டும் மேலெழும்பியது. “பயிற்சி வகுப்புகள் எடுக்குமாறு எங்களுக்கு பல கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.”
கல்லூரியில் படிக்கும்போதே விஷால் குமார் (Vishal Kumar), விஷ்வா தயாகரன் (Vishwa Dayakaran) மற்றும் விக்னேஷ் ராகவன் (Vignesh Raghavan) ஆகிய மூவரும் உள்ளூரில் இருந்த தாண்டோட்ட ஆர்வலர் சமூகத்தை உயிர்ப்பிக்கும் யோசனையால் ஈர்க்கப்பட்டனர். “ஆரம்பத்தில் இது பற்றால் தொடங்கப்படவில்லை எனினும் மெதுவாக ஒரு பொழுதுபோக்கு செயலில் இருந்து வாழ்க்கைத் தொழிலாக இதுவே மாறிற்று,” என சிரித்துக் கொண்டே கூறும் விஷால், “நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன். கல்லூரியின் மொத்த நான்கு ஆண்டுகளையுமே குறைந்தபட்ச அளவான 75 சதவீத வருகை (attendance) அளவினைக் கொண்டே கழித்தேன். கல்லூரி நாட்களில் தாண்டோட்டத்தை பயிற்சி செய்யவும் அதற்கு பயிற்சி அளிப்பதிலும் நிறைய நேரம் முதலீடு செய்தேன். சில நேரங்களில் பயிற்சி வகுப்பு அளிப்பதற்காகவே கல்லூரி வகுப்பில் இருந்து அரை நாள் விடுப்பு (leave) எடுப்பேன். தாண்டோட்டத்தில் இவ்வளவு முயற்சிக்கும், முதலீட்டுக்கும் பின்னர் வேறொரு தொழிலை பணியாக செய்வது என்பது எனக்கு பயனற்றதாக தோன்றியது.”
இந்த தொழில் அதற்கே உரிய இடர்களை கொண்டது. தாண்டோட்டம் என்பது வழக்கமாக ஒரு ஆபத்து நிறைந்த விளையாட்டாக பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி மேற்கொண்டு முதலீடுகளை இதனுள் கொண்டு வர இதன் நிறுவனர்களுக்கு எட்டு மாதங்கள் ஆகின. “பெரும்பாலான நபர்கள் கட்டடங்களில் இருந்து குதிப்பதே பயிற்சியாக வழங்கப்படும் என்றே அவர்களின் பயிற்சியின் முதல் நாளில் எண்ணுவர். இந்த தவறான கருத்து ஆரம்பக் காலத்தில் எங்கள் வகுப்புகளை விளம்பரம் செய்வதற்கு சவாலாக இருந்தது.” அவ்வாறு சேரும் நபர்களுக்கு விளையாட்டின் சாராம்சத்தையும், அடிப்படைகளையும் கற்றுக்கொடுத்து மூன்று மாதக் கால அளவு அவர்களை ஊக்கப்படுத்தி தாக்குப்பிடிக்க வைப்பது என்பது அடுத்த சவாலாக இருந்தது. விரைவிலேயே இரண்டு கட்டழகுப் பயிற்சியாளர்கள் (Calisthenics – தாண்டோட்டம் பழகுவதற்கான ஒரு அடிப்படைத் தேவை) சென்னைக்கு புலம்பெயர்ந்து இந்த இளம் பயிற்சியாளர்களுடன் பயிற்சியாளர்களாக இணைந்தனர்.
பெரும்பாலான பயிற்சி, உலோக கம்பிகள் (metal bars) மற்றும் திண்டுகள் இடப்பட்ட தளவமைப்பு (padded flooring) கொண்ட இடத்திலேயே நடைபெறும். இந்த வகையான வசதிகள் பழகுநர்களுக்கு (beginners) பாதுகாப்பாக இருக்கும். “வழக்கமாக தாண்டோட்ட பயிற்சி இடங்கள் பெரிய கிடங்குகளில் வெவ்வேறு வகையான தடை உபகரணங்கள் (obstacles) கொண்டு இருக்கும். ஆனால் எங்களிடம் போதிய வசதி வாய்ப்புகள் அப்பொழுது இல்லாததால் என்ன இருந்ததோ அதை வைத்தே நாங்கள் ஒரு இடம் அமைத்தோம்,” என கூறுகிறார் நம் இளம் விளையாட்டாளர். பயிற்சி பெறும் நபர் ஒருவர் எப்பொழுது வலிமை பெற்று நகர்வுகளுக்கு பழகிப் போகிறாரோ அப்பொழுது அவரால் அதே நகர்வுகளை ஒரு வெளிப்புற சூழலிலும் (சென்னையில் அது பெரும்பாலும் ஒரு பூங்காவாக இருக்கலாம்) செயற்படுத்த முடியும். முறையான அடிப்படை பயிற்சி மற்றும் பழக்கம் இருந்தால் இந்த நகர்வுகள் உள்ளகமயமாகும் (internalised). அப்பொழுதே இவ்வுலகம் தாண்டோட்ட விளையாட்டளருக்கு ஒரு மைதானம் ஆகும். “தாண்டோட்ட விளையாட்டாளர்களான நாங்கள் எப்பொழுதெல்லாம் குழுவாக வெளியே சுற்றிப் பார்க்க சென்றாலும் அப்பொழுதெல்லாம் எங்கள் சுற்றுச்சூழலை கண்டறிந்து பயன்படுத்த அனுமதி கிடைக்காத வளாகங்களில் உள்ள கட்டமைப்புகளில் மேற்கொள்ள முடியும் எல்லா நகர்வுகளையும் கணித்து, கற்பனை செய்வோம்,” என்கிறார் விஷால் புன்முறுவலுடன்.
அதே அளவு கணிப்பு தொழிலை உருவாக்குவதிலும் சென்றது. பார்க்கூர் பாட் (Parkour Pod) எனும் தாண்டோட்ட பயில் களத்தை முழுவதுமாக உருவாக்க கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகின. ஆனால் பெருந்தொற்று ஆனது எதிர்பாராத அடியாக இருந்தது. தொழில் பெரிதாக முன்னேற்றம் அடையா விட்டாலும் குழு முன்னேற்றம் கண்டது. ஒரு நாளுக்கு நூற்றைம்பது வாடிக்கையாளர்கள் வீதம் (இதுவே அதிகமான எண்ணிக்கையே ஏனெனில் தாண்டோட்ட பயிற்சியாளர்களை கண்டறிவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல) அவர்களின் வகுப்புப் பிரிவுகளை நாளுக்கு ஏழிலிருந்து ஐந்தாக குறைக்க நேர்ந்தது. சாதாரணமாக வீட்டில் பயிற்சிக்காக பயன்படும் தடை உபகரணங்களையே அவர்கள் பயன்படுத்தினர்.
இக்குழுவிற்கு இரண்டு பயிற்சி இடங்கள் உள்ளன. ஒன்று ஆலந்தூரிலும் மற்றொன்று ஃபிட்ராக் செயற்களம் (Fitrock Arena) (ஏனெனில் தாண்டோட்டம் மற்றும் பாறை ஏறுதல் ஆகிய இரண்டிற்கும் பொதுவான அம்சங்கள் நிறைய உள்ளன) உடனான ஒப்பந்தம் வழியாக சேத்துபட்டில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவிலும் (Ecopark) உள்ளன. “தாண்டோட்ட பயில் களம் அமைத்ததில் எங்கள் அணுகுமுறையில் ஏதேனும் ஒரு மற்றம் ஏற்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமானால் ஆரம்பத்திலேயே பெரிய செயற்களம் ஒன்றில் முதலீடு செய்வதாக அது இருந்திருக்கும்.” குறிப்பாக சென்னை போன்ற நகரில் இந்த விளையாட்டின் புதுமையினை கருத்தில் கொள்கையில் இவர்கள் மூவருக்கும் அப்படிப்பட்ட முதலீடு இன்னல்மிகுந்ததாக இருந்திருக்கும். எனினும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்த விளையாட்டிற்கான வரவேற்பு மக்களிடையே பன்மடங்கு உயர்ந்துள்ளதால் வகுப்புகளுக்கான தேவைகள் ஏற்கனவே இருக்கும் இடம் மற்றும் சாதனங்களை விட மிகுதியாகி விட்டன.
இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய காலங்களில் தோற்றுவித்த ஒரு சமீப கால புது விளையாட்டு தாண்டோட்டம் ஆகும். என்னதான் தாண்டோட்ட சமூகம் அந்த விளையாட்டின் நகர்வுகளில் இருக்கும் படைப்பாற்றல் தொலைந்துவிடும் என்ற அச்சத்தில் அதை ஒரு போட்டிக்கான விளையாட்டாக மாற்ற மாட்டார்கள் என ஒப்புக் கொண்டாலும் கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த விளையாட்டின் படைப்பாற்றலை பாதிக்காமலேயே அதனை போட்டிக்காக பழகும் வகையில் போட்டி வடிவம் ஒன்று உருவாகி வருகிறது. “அப்பொழுதிலிருந்தே ஒலிம்பிக் போட்டிகளில் தாண்டோட்டம் சேர்க்கப்படலாம் என்ற பேச்சுகள் வளம் வரத் தொடங்கிவிட்டன!” சீருடற்பயிற்சியுடன் (Gymnastics – தாண்டோட்டத்துடன் சில அம்சங்களை பகிரும், வலுவிழந்து வரும் ஓர் விளையாட்டு) ஒரு பகுதியாக அல்லாமல் தாண்டோட்ட சமூகம் ஆனது இன்னமும் அதற்கான ஒரு தனித்த இடத்தை சர்வதேச விளையாட்டுத் தளத்தில் பெறுவதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றது. அதே நேரம், பெரிதாக கொண்டாடப்படும் சர்வதேச விளையாட்டுத் தளத்தில் போட்டியிட இந்தியாவில் உள்ள அணிகள் ஒரு குறிக்கோளுடன் தொடர்ந்து பயிற்சி பெற்றும் அவர்களுக்குள்ளே போட்டிப் போட்டுக் கொண்டும் வருகிறார்கள்.
தாண்டோட்ட பயில் களம் ஆனது சென்னையை மும்பை நகரைப் போலவே, இந்தியாவிலேயே பழமை வாய்ந்த மற்றும் மிகப்பெரிய தாண்டோட்ட சமூகங்கள் கொண்ட ஒரு நகரமாக மாற்றியுள்ளது. இந்த விளையாட்டானது உள்ளூர் திரைப்பட தொழிற்துறையில் இடம்பெற்று, பெரும் வரவேற்ப்பை பெற்றும் வருகிறது. இதில் வரும் நடிகர்கள் அவர்களின் பயிற்சியாளர்களை விளம்பரம் செய்து வரத் தொடங்கியுள்ளனர். ஒரு அற்புதமான சமூகமாக மட்டுமல்லாமல் தாண்டோட்ட பயில் களமானது எட்டு முதல் எழுபது வயது வரம்பு வரையுள்ள ஆண்கள், பெண்கள், சிறுமியர் மற்றும் சிறுவர்களை பயிற்சிகளுக்கு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் அவர்களின் ஒட்டுமொத்த உடல்நிலைத் தகுதியையும் (fitness), வலிமையையும் மேம்படுத்த உதவியுள்ளது. மேலும், விடாமுயற்சி இருந்தால் எவரும் ஒரு மீமானிடரின்(superhuman) தகுதிகளைப் பெறலாம் என்றும் நிரூபித்துள்ளது.
“ஒரு தாண்டோட்ட போக்கினைப் (Parkour flow) பின்பற்றுவதற்கு முன்னர் உங்கள் அடிகளை திட்டமிட்டு, அதனை பகுத்து ஒவ்வொரு நகர்வையும் கணிப்பீர்கள். அதுவே தொழில் அமைப்பதற்கும் பொருந்தும்,”என விஷால் ஒரு புன்னைகையுடன் நிறைவு செய்கிறார்.


