றந்தது தில்லியில, உற்பத்தியானது (வளர்ந்தது) சென்னைல (எனப் பெருமையாக தங்களைத் தாங்களே இவ்வாறு அறிமுகம் செய்யும்)—ஹர்திக் மற்றும் கௌதம் நருளா (Hardik and Gautam Narula), பெரும்பாலும் தங்கள் சட்டைக்கைகளை சுருட்டிவிட்டுக் கொண்டு இயந்திரங்களில் மறைவாக இருக்கும் இயந்திரப் பாகங்களை அகற்றுவது அல்லது ஓர் மேசையின் மேலே பரப்பிக் கிடக்கும் பலதரப்பட்ட மின் பொருட்களில் இருந்து உருவப்பட்ட, பழைய மற்றும் புதிய வன்பொருட்களின் (hardware) குவியலைக் கொண்டு ஏதோ செய்வது போன்ற ஒரு சிலரே ஈடுபடும் (esoteric) பொழுதுபோக்குகளில் தங்கள் நேரத்தை செலவு செய்யும் அரிதான முனைப்பான பொறியாளர்கள். “ரொம்ப சின்ன வயசுல இருந்தே இயற்பியல், இயந்திரவியல் (mechanics) மற்றும் மின்னணுவியல் (electronics) விதிகள வெவ்வேறு முறைகள்ல பயன்படுத்தி பாக்குறது எங்களுக்கு உற்சாகமான செயலா இருந்துச்சு,” என ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு சிரிக்கத் துவங்கும் சகோதரர்கள், “நாங்க இந்த உலகத்துக்கு உதவுற தொழில்நுட்பத்த உருவாக்கணும்னு நினைச்சோம்.”
இருவரும் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்று இருக்க, ஹர்திக்கோ கலப்பு மின்சார வாகனத் துறையைச் (hybrid electric scooter) சார்ந்த, புனேவில் இருந்த ஓர் துளிர் நிறுவனத்தில் பணியாற்றி அனுபவம் பெற்று இருந்தார். சகோதரர்கள் இருவரும் தங்களின் சொந்த நிறுவனம் துவங்குவதற்கு 2019-ஆம் ஆண்டே (மின்சார வாகனச் சந்தை ஒருபுறம் உயர்ந்து கொண்டிருக்க) சரியான ஆண்டு என முடிவு செய்தனர். சென்னைக்கு புலம் பெயர்ந்த இருவரும், ஆற்றல் சேமிப்பிற்கு தீர்வு (energy storage solution) வழங்கும் துறையில் தங்களின் சொந்த துளிர் நிறுவனத்தை எக்லெக்டிக் பவர் பேக்ஸ் (Eclectech Power Packs LLP) என்றப் பெயரில் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமமாக (LLP) நிறுவினர்.
சகோதரர்கள் இருவரும் தாங்கள் வளர்ந்த நகரத்துக்கு மீண்டும் வந்துள்ளனர்—இம்முறை தொழில்முனைவோர்களாக. திருவான்மியூரில் கடை ஒன்றை அமைத்த இருவரும், கூறுகளாக பிறக்கக் கூடிய வண்ணம் ஓர் லித்தியம் அயனி மின்கல (lithium-ion battery) தொழில்நுட்பத்தை வடிவமைத்து மருத்துவத் துறை துவங்கி கட்டுமானத் துறை வரை கிட்டத்தட்ட எல்லாத் துறைகளைச் சார்ந்த வெவ்வேறு பங்குதாரர்களை தொடர்புக் கொள்ளத் துவங்கினர்.
“ரொம்ப எளிமையான துரிதமான வழில ஆரம்பிக்கணும் அப்படிங்கறதுதான் குறிக்கோளா இருந்துச்சு,” என விவரிக்கிறார் ஹர்திக். எனவே, ஒடுங்குநிலை உற்பத்தி (lean manufacturing) இயல்விக்கப்பட்ட ஓர் சிறிய அமைவை துவங்கியது எக்லெக்டிக் நிறுவனம். வெவ்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்களும் இந்நிறுவனத்தை தங்களின் ஆற்றல் சேமிப்பு தேவைகளுக்காக அணுகினர். நிறுவனர்கள் இருவரும் ஒவ்வொரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பயன்பாட்டு சூழ்நிலைக்கு ஏற்ப ஓர் தீர்வினை வடிவமைத்து தயாரிப்பர். “வேற வேற பங்குதாரர்கள்ட கலந்துரையாடியது மற்ற தொழிற்துறைகள புரிஞ்சுக்குறதுக்கு உதவியா இருந்தது மட்டுமல்லாமல் எங்கலாம் லித்தியம் அயனி சேமிப்பு தீர்வுகள் அதிகம் பயன்படும்ங்கற புரிதலையும் எங்களுக்கு கொடுத்துச்சு,” எனக் கூறுகிறார்.
வெகு விரைவிலேயே எக்லெக்டிக் நிறுவனமானது, தொழில்களுக்கிடையேயான வணிகத்தில் (B2B) பலதரப்பட்ட ஓர் வாடிக்கையாளர் குழுமத்தை—தனியார் மற்றும் அரசு துறைகள் இரண்டிலும்—ஏற்படுத்தியது. ஸ்மார்ட்பைக் (SmartBike) எனப்படும் இந்தியாவின் மிகப்பெரிய மிதிவண்டிப் பகிர்வுத் திட்டத்தோடும் (PBS – Public Bicycle Sharing) குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்நிறுவனம் பணிபுரிந்து வருகிறது. இதனை அடுத்து தொழில்களுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான வணிகப் பிரிவில் (B2C), வளங்குன்றாமையை மையமாகக் கொண்ட தயாரிப்புகள் வரிசையுடன் கால் பதிக்க அதுவே சரியான நேரம் என முடிவு செய்தனர் அதன் நிறுவனர்கள். தூக்கமில்லா பல இரவுகளுக்குப் பின்னர் புதிய தயாரிப்புகள் வரிசைக்கு யூஜென் (Yougen) எனப் பெயர் சூட்டினர். இந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் காரணத்தையும் அதன் பின்னிருக்கும் கனவையும் நிறுவனர்கள் இருவரும் நம்மிடம் பகிர்கின்றனர்—ஜப்பானிய மொழி வார்த்தையான ‘யூகென்’ என்றால் பிரபஞ்சத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவுக் கொண்டு இருத்தல் என்று அர்த்தம் (இந்நிறுவனத்தின் பெயராக இருக்கையில் இது மறைமுகமாக வளங்குன்றா வாழ்முறையைப் பின்பற்றும்போது ஏற்படும் விழிப்புணர்வை சுட்டிக் காட்டுகிறது). ஆங்கிலத்தில் ‘Yugen’ எனும் வார்த்தையில் Yu என்பதை You-வாக மாற்றி ‘Yougen’ என வைத்துக் கொண்டதற்கு காரணம்—ஒன்று, தங்களின் தயாரிப்பின் முக்கிய வாடிக்கையாளர்கள் இளம் வயதினர் (அதாவது ஆங்கிலத்தில் இவ்வயதினரை ‘You’th என்பர்) என்பதும் மற்றொன்று இந்நிறுவனமானது ‘வாடிக்கையாளர்கள் ஆகிய உங்களைப் போன்ற ஒவ்வொருவரும் (அதாவது ஆங்கிலத்தில் ‘You’) எதிர்காலத்திற்கான யோசனைகளைப் பரிந்துரைக்கலாம்’ என்பதை வரவேற்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கும் ஆகும்.
தானியங்கி மின்னியலில் (automobile engineering) ஹர்திக்குக்கு இருந்த அனுபவத்தால் யூஜென் நிறுவனமானது, மின்சார வாகனங்களுடன் தனது பயணத்தைத் துவங்கியது. என்னதான் இந்தியாவில் மின்சார வாகனங்கள் அதிகளவில் பிரபலமடைந்து வந்தாலும், அவற்றின் தயாரிப்புக்கு இன்றளவும் அதிகளவு நேரமும் நிதியும் தேவைப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். வெறுமனே ஓர் தயாரிப்பை அதன் வடிவமைப்பு நிலையில் இருந்து விற்பனை நிலைக்குக் கொண்டு வருவதற்கே கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் வரை ஆகலாம்—இந்தியாவெங்கிலும் அதிகரித்து வரும் சீனப் பொருட்களின் தடையினால் இன்னும் அதிகளவு காலம் கூட எடுக்கலாம். தொழில்முனைவோர்களாக மாறிய யூகெனின் பொறியாள நிறுவனர்கள் துவக்கத்தில் எளிமையான தீர்வுடன் துறையினுள் நுழைந்து பின்னர் அந்தப் பயணத்தில் படிப்படியாக வளர்ச்சியடைலாம் என முடிவு செய்தனர். “கலப்பு மின்சார வாகனங்களில் இருப்பதிலேயே அடிப்படை வடிவத்துல இருந்து ஆரம்பிச்சோம்,” எனக் கூறும் நம் இளம் பொறியாளர், “மின்சார-சைக்கிள்கள் தான் அவை.” என நிறைவு செய்கிறார்.
சென்னை நகரத்தில் குறிப்பாக கடந்த ஓரிரு ஆண்டுகளில்—பொழுதுபோக்குக்காகவும், உடற்பயிற்சிக்காகவும் அல்லது எரிபொருளுக்கு ஆகும் செலவையும் போக்குவரத்து நெரிசலில் வீணாகும் நேரத்தைக் குறைக்கவும்—சைக்கிள்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நெடுநெடுவென உயர்ந்துள்ளது. இருபத்து நான்கு வயது முதல் நாற்பது வயது வரையுள்ள கல்லூரி மாணவர்கள், இளம் பெருநிறுவன ஊழியர்கள் மற்றும் சொல்லப்போனால் புதுமண தம்பதியருக்கு மத்தியில் கூட யூஜென் மின்சார சைக்கிளானது தனக்கான ஓர் இடத்தை பிடித்துள்ளது. வட இந்தியாவில் இருக்கும் நுகர்வோர் மனநிலையைக் காட்டிலும் புதுமையான யோசனைகளையும் தயாரிப்புகளையும் உடைய புதிய தொழில் அடையாளங்களை அதிகளவு வரவேற்கும் மனநிலையைக் கொண்ட ஓர் நுகர்வோர் குழுமம் தென்னிந்தியாவில் இருப்பதாக நம் தொழில்முனைவோர்கள் நம்புகின்றனர்.
யூகெனின் முதல் மின்சார சைக்கிள் வகையான மேக்-I (Mach-I), வால்டர் வைட் மற்றும் சோனிக் ப்ளூ (Walter White and Sonic Blue) என இரண்டு மென்மையான வடிவமைப்புகளில், ஐந்து நிலை மிதியுதவி உணரியையும் (five-level pedal assist sensor), அகற்றக்கூடிய வகையில் ஓர் மின்னூக்கியையும் (charger) முழுமையாக மின்சாரத்தில் ஓடும்போதும், முழுமையாக மின்னூட்டம் பெற்றப் பின்னரும் 45 கிலோமீட்டர் மைலேஜையும் கொண்டு வருகிறது. தென்னிந்தய சந்தையில் இந்த தயாரிப்புக்கு நல்லதொரு வாய்ப்பிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒட்டுமொத்த சைக்கிள்களும் விற்பனை ஆகின. அதன் இரண்டாம் பதிப்பான மேக்-II ஆனது, அதிகளவில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டும் முந்தைய பதிப்பை விட குறைந்த விலையிலும் கிடைக்கும். “கடைசில உற்பத்தி அளவ அதிகப்படுத்துறது தான் ஒட்டுமொத்த செலவுகள் குறைக்க உதவியா இருக்கு,” எனக் கூறும் ஹர்திக், “இந்தியாவுல குறிப்பிட்ட பொருட்களுக்கான பிரத்யேக சந்தை (niche market) இன்னமும் பெரியளவு சந்தையா இருக்குறது என்னமோ நல்ல விஷயம் தான்!” என நிறைவு செய்ய, இருவரும் சிரிக்கின்றனர்.
ஓர் விளைவை ஏற்படுத்த வேண்டும் எனும்போது செயல்கள் விரைவாக நகர்வது முக்கியமாகும். யூகெனின் செயற்பாடுகளுக்கு இடையூறாக பெருந்தொற்று வந்தது. “இயற்பொருள் (physical product) ஒன்ன தயாரிக்குற அப்போ வீட்ல இருந்து வேலை செய்றது ஒரு மிகப் பெரிய சவால் அப்படினே சொல்லலாம். அதுலயும் குறிப்பா விநியோகச் சங்கிலிய (supply chain) இடைவிடாம இயக்குறது கஷ்டமா இருந்துச்சு,” எனக் கூறும் கௌதம், பொதுமுடகத்தின் போது நேரத்திற்குள் பணிகளை செய்து முடிப்பதில் இருந்த தடைகளை விவரிக்கிறார். “இது எல்லாத்துக்கும் மத்தியில நடந்த ஒரு நல்ல விஷயம் என்ன அப்படினா, நிறைய மக்கள் வளங்குன்றா வாழ்க்கை முறையோட முக்கியத்துவத்தை வீடுகள்ல முடங்கி இருந்த அப்போ உணர ஆரம்பிச்சுடாங்க,” என்கிறார் ஹர்திக்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட எக்லெக்டிக் நிறுவனமானது, அப்பொழுதில் இருந்து வெளி உதவிகள் ஏதும் இன்றி நிறுவனர்களின் சொந்த வளங்கள் மற்றும் நிதியைப் பயன்படுத்தி (bootstrap) நடத்தப்பட்டு வருகிறது. ஓர் நிறுவனத்தில் முதலீட்டாளர்களை இணைப்பதை ஓர் காரில் எரிபொருள் நிரப்புவதுடன் அவர்கள் இருவரும் ஒப்பிடுகின்றனர். உடனடியாக சிந்தித்துவிட்டு பலத்த சிரிப்புக்கு இடையில் யூகெனின் துணை நிறுவனர் தனது உவமை வாக்கியத்தை சற்றே மாற்றிக் கூறுகிறார். “வண்டி பிரச்சனை இல்லாம மென்மையாவும் திறனாவும் இயங்குறதுக்கு, சரியான அளவு மின்சார ஆற்றல செலுத்துறதுக்கான சரியான நேரத்தை நீங்க கண்டறியணும்,” எனும் அவர், “தானியங்கி பொறியாளர்களா நாங்க இருக்குறதுனால பொறி இயத்திரத்தை (engine) கைவிடறது எங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு,” என காலம் கடந்து நின்ற இந்த கண்டுபிடிப்பைப் பற்றி பூரிப்பாக சொல்லும் அவர், “ஆனா மின்சார வாகனங்களே சூழலுக்கு ஏத்த எதிர்காலத்துக்கான ஒரு நல்ல தீர்வு.”
தற்பொழுது தனது தயாரிப்புகளில் லித்தியம் அயனி மின்கலத்தை சேர்ப்பதன் மூலம் தனது தயாரிப்பு வரிசையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது யூஜென். குறைந்த காலமே அதாவது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும் ஈய அமில மின்கலத்தில் (lead-acid battery) இயங்கும் மின்சார வாகனங்களில், அவற்றிற்கு பதிலாக லித்தியம் அயனி மின்கலம் பயன்படுத்தப்படும். இந்த இளம் தொழில்முனைவோர்கள் பயணிக்கத் துவங்கி இருக்கும் இந்தப் பாதையில், அவர்களுக்கு முடிவில்லா வாய்ப்புகளும் சூரியவொளியால் இயங்கும் ஐஸ்கிரீம் விற்கும் கடைகள் முதல் மின்சார சக்கரநாற்காலிகள் வரை எதிர்காலத்தில் தங்கள் தயாரிப்புக்கான உற்சாகமான பயன்பாட்டு சூழல்களும் நிரம்பி இருக்கின்றன.
இந்தியாவின் இளம் தலைமுறையினரின் பார்வைக்கு முன்னுதாரணமாகவும் சிறப்பானதாகவும் இருக்கும் வண்ணம் வளங்குன்றா தீர்வுகள் வடிவமைத்து, அவற்றின் மூலம் ஓர் மாற்றத்தை விதைக்க முயல்கின்றது யூஜென். “எங்களுக்கு வேணும்ங்கறதுலாம், பெரிய பெரிய கார்கள் வெச்சி இருக்குற இளைஞர்கள், அந்த கார்களை விட்டுட்டு தங்களோட மின்சார சைக்கிள்கள பயன்படுத்தி அவங்களோட மனசுக்குப் பிடிச்சவங்களோட மனச கவரணும்!” என இருவரும் சிரித்துக் கொண்டே நம்முடனான உரையாடலை நிறைவு செய்கின்றனர்.