“நீங்க முதன்முதல பயன்படுத்தின பல்துலக்கி இன்னும் இந்த பூமியில தான் இருக்கு,” என திவ்யா கூற அவரின் தற்காலிக விற்பனையகத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்த சிறியக் கூட்டமானது அவர் சொன்னதை உணர்ந்து வாயடைத்துப் போய் அதிர்ச்சியாக அவரை நோக்கினர். “நான் ரெண்டு மூங்கில் பல்துலக்கி வாங்கிக்குறேன். ஒன்னு எனக்கு அப்புறம் இன்னொன்னு என் நண்பருக்கு,” என கூட்டத்தில் இருந்து வந்த ஓர் குரல் நிலவிய அமைதியை உடைத்தது. அப்பொழுது பிரதீப்பும் திவ்யாவும் கையில் எடுத்துச் செல்லக் கூடிய வகையில் இருக்கும் தங்களின் பெயர் பொறிக்கும் இயந்திரத்தை இயக்குகின்றனர். ஓர் சிறிய இரைச்சல். அடுத்த நொடியே இரண்டு பல்துலக்கிகளில் இரண்டு பெயர்கள் பொறிக்கப்பட்டுவிட்டன.
“சென்னைங்கறது ஒரு ஊரு,” என பிரதீப் கூற, “மெட்ராஸ்ங்கறது ஒரு உணர்வு,” என அதனை நிறைவு செய்யுமாறு திவ்யா கூற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்முறுவல் செய்கின்றனர். கடற்கரைகளில் இருக்கும் நெகிழிக் குப்பைகளைப் பற்றி அனைவரும் ஒருபுறம் குறை சொல்லிக் கொண்டு இருக்க, பிரதீப் சேகர் என்பவரும், திவ்யா தக்ஷனா என்பவரும் 2018-ஆம் ஆண்டு பிளாஸ்டிக் ஃப்ரீ மெட்ராஸ் (Plastic Free Madras – நெகிழி இல்லா மெட்ராஸ்) என்றொரு ஆலோசனை நிறுவனத்தைத் துவங்கினர். சென்னைவாசிகளுக்குத் தங்கள் ஊருடன் இருக்கும் உணர்ச்சிகரமான பந்தத்தைப் பயன்படுத்தி ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழியின் தீய விளைவுகளை அவர்களிடம் எடுத்துரைக்க முடியுமென அவர்கள் நம்பினர்.
புகைப்படக் கலைஞர்களாக இருந்து சமூக தொழில்முனைவோர்களாக மாறிய இவர்களைப் போன்றவர்களே நகரத்துக்கு தற்பொழுது தேவையானவர்களாக உள்ளனர். மற்றவர்கள் குறைபாடுகள் காணும் இடங்களில் இவர்களைப் போன்றோர் வாய்ப்புகளைக் காண்கின்றனர். எடுத்துக்காட்டாக, நெகிழியால் ஆன பல்துலக்கிகள் விலைக் குறைவானது மட்டுமல்லாமல் மூங்கிலால் ஆன பல்துலக்கிகளைக் காட்டிலும் பொதுவாகப் பயன்பாட்டில் உள்ளவை. மூங்கிலால் ஆன பல்துலக்கிகளை தனிப்பட்ட நபருக்கு ஏற்றவாறு அவற்றில் பெயர் பொறித்து அவற்றைப் பிறருக்கு அன்பளிப்புகளாக வழங்கும் வண்ணம் பொருட்காட்சிகளில் விற்பனை செய்யும் எளிய யோசனை மக்களின் மத்தியில் இவற்றிற்கு பெரும் வரவேற்பினைப் பெற்றுத் தந்தது. அத்துடன் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழியின் தீய விளைவுகளைப் பற்றி மக்களிடையே இவர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிந்தது.
“கடந்த ஒன்பது வருஷமா நாங்க புகைப்படக்காரர்களா இருக்கோம். புகைப்படம் எடுக்கப் போற நேரங்களத் தவிர எங்களுக்கு நிறையவே ஓய்வு நேரம் இருக்கும்,” எனக் கூறுகிறார் பிரதீப். எனவே, கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அவர்களின் பழமை சாயல் கொண்ட புகைப்படக் கூடமானது தற்பொழுது தி ஆஃபர்டபிள் பிளேஸ் (The Affordable Place) சுருக்கமாக T.A.P எனும் பெயரில், மலிவு விலையில், வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள், பயணிப்பவர்கள் மற்றும் சாராவினைஞர்கள் மற்றவர்களுடன் இணைந்து பணிபுரியும் வகையில் ஓர் பணியகமாக செயல்பட்டு வருகிறது. மேலும் தி எக்சிஸ்டென்ஷியல் டிசைன் ஸ்டூடியோ (The Existential Design Studio) எனும் பெயரில் வலைத்தள வடிவமைப்பு நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. இன்று அந்தக் கட்டடத்தில் இருந்து இயங்கி வரும் அனைத்து தொழில்களும் ஒருசேர ஓர் அமைப்பாக இணைந்து பிளாஸ்டிக் ஃப்ரீ மெட்ராஸ் எனும் இவர்கள் இருவரின் கனவுத் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இயங்கி வருகின்றன.
இவர்களின் தற்போதைய மின் வணிக (e-commerce) நிறுவனமானது வளங்குன்றா வாழ்முறை (sustainable lifestyle) உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக துவக்கத்தில் இல்லை. தங்கள் தொழிலை முதன்முதலில் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறுவனமாகவே இவர்கள் இருவரும் துவங்கினர். பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்னர், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.
பிரதீப்பும் திவ்யாவும் மாற்றத்துக்குத் தயாராக இருக்கும் நபர்களை அடிக்கடி சந்தித்தனர். ஆனால் அவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருட்களுக்கான மாற்றுகளை எங்கே வாங்குவது எனத் தெரியவில்லை. எனவே, மக்களை மாற்றத்தை நோக்கி கைத்தேர்ந்த முறையில் நகர வைப்பதற்கு தாங்கள் வளங்குன்றா தீர்வுகளை வழங்க வேண்டி இருந்தது.
“நாங்க இந்த தொழில ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி, எங்களோட புகைப்பட வேலைகளுக்கு இடையில ஒன்னு ரெண்டு வருஷமா நிறைய இதப் பத்தி ஆராய்ச்சி செஞ்சோம்,” எனக் கூறுகிறார் திவ்யா. பெருமளவில் கழிவுகளை வெளியேற்றும் துறைகளில் உணவு துறையும் ஒன்றாகும். நெகிழியால் ஆன பாத்திரங்களுக்கு பதிலாக பாக்கு மட்டைத் தட்டு, பாக்கு மட்டைக் கிண்ணம் போன்றவற்றை பயன்படுத்துவது எளிதான மாற்றுத் தீர்வாக இருந்தது. “பாக்கு மட்டை வெச்சு தட்டு, கிண்ணம் செய்றதுக்கு எங்க நண்பர் ஒருவரோட சேர்ந்து அம்பத்தூர்ல உற்பத்தி அலகு ஒன்ன அமைச்சோம். அங்க வேலை செய்றவங்க எல்லாமே பெண்கள் தான்,” எனும் பிரதீப் எவ்வாறு அவர்களின் இந்த தொழில் முயற்சியானது உற்பத்தி அலகில் பணிபுரியும் பெண்களுக்கும் நன்மை தரும் விதமாக இருக்கிறது என விவரிக்கிறார்.
2018-ஆம் ஆண்டு நாடளவில் இரண்டாம் முறையாக நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை போடப்படுவதாக இருந்த நிலையில் இந்த தொழில்முனைவோர்கள் கிட்டத்தட்ட இருநூறு தொழில் நிறுவனங்களுடன் குறிப்பாக விநியோக சேவை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார். ஓரிரு ஆண்டுகள் கழித்து, தங்கள் நிறுவன அடையாளத்தின் கீழ் மேலும் சில உற்பத்திப் பொருட்களை இணைத்தனர். இறுதியாக ஓர் மின் வணிக தளத்தை உருவாக்கினர். தற்பொழுது பிளாஸ்டிக் ஃப்ரீ மெட்ராஸ் நிறுவனமானது வீடுகளிலும் தொழில் நிறுவனங்களிலும் தினந்தோறும் பயன்படும் நெகிழிப் பொருட்களுக்கு மாற்றாக கிட்டத்தட்ட நூறு வளங்குன்றா மாற்றுப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
“இப்போ நான் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய பற்பசை (toothpaste) செய்யுற முயற்சில இருக்கேன்,” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் பிரதீப். திவ்யாவும் சிரித்துக் கொண்டே, “இதுல சிறப்பான விஷயம் என்ன அப்படினா அத நீங்க சாப்பிடக் கூட முடியும்!” என்கிறார். இவர்கள் இருவரும் புது புது பொருட்களை கண்டறிந்து அல்லது தயாரித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வரும் செயல்முறையில் பேரானந்தம் கொள்கின்றனர். அதே சமயம் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்து வரும் வளங்குன்றா துறையைச் சார்ந்த தொழில்முனைவோர்களுடனும் தொடர்ந்து தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
“எங்க நண்பர்களுக்கு பக்கபலமா நாங்க இருக்க நெனைக்கிறோம். நாங்க நண்பர்கள்னு ஏன் சொல்றோம்னா அவங்க எல்லாம் உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களா ஆகிட்டாங்க!” எனும் பிரதீப், சென்னையில் வளர்ந்து வரும் பாப்-அப் (pop-up-விற்பனை பொருட்கள் கண்காட்சி) கலாச்சாரத்தின் வழியாக தானும் திவ்யாவும் ஏற்படுத்திக் கொண்ட பிற சமூக நல தொழில்முனைவோர்களை சுட்டிக் காட்டுகிறார். “அவங்கள்ல பெரும்பாலானோர் தனித்துவமான உற்பத்திப் பொருட்கள விற்பனை செய்றாங்க. ஆனா அவங்களுக்கு எங்கள மாதிரி இணைய அங்காடி இல்லை,” எனும் பிரதீப், தான் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஈக்கோ ட்ரை.பி (Eco Try.Be.) எனும் ஓர் புதிய திட்டத்தைப் பற்றி நம்மிடையே பகிர்கிறார். உற்பத்திப் பொருட்களில் கவனம் செலுத்தும் பெரும்பாலான மின் வணிகத் தளங்களைப் போல இது மற்றுமொரு மின் வணிகத் தளமாக இருக்காது. “உற்பத்திப் பொருட்கள் உருவாக்கத்தின் பின்னணியில் இருக்கும் மக்கள நாங்க முன்னிலைப்படுத்தணும்னு நெனைக்கிறோம்,” என்கிறார் பிரதீப்.
கொரோனா பெருந்தொற்றின் பொழுது நெகிழிப் பொருட்களைக் காட்டிலும் வளங்குன்றா பொருட்கள் விலை அதிகமாக இருப்பது போன்ற ஓர் நிலைமை நிலவ, இவர்களின் முயற்சியை மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய ஓர் நிலை வந்தது. இருப்பினும் இதன் நிறுவனர்கள் மனம் தளரவில்லை. பயிற்சியாளராக இவர்களிடம் பணிக்கு சேர்ந்த தருண் (விதியே இவரை தங்களிடம் கொண்டு வந்தது என இவர்கள் நம்புகின்றனர்) என்பவரின் உதவியுடன் தாங்கள் இதுநாள் வரைக் கற்றதை ஒருங்கிணைத்து கல்விப் பாடங்களுக்குள் புகுத்துவதற்கான வழிகளை ஆராய்ச்சி செய்தனர். ஏனெனில் இளம் தலைமுறையினர் தானே எதிர்காலத்தை கட்டமைப்பர்!
பொது முடக்கத்தின் போது பள்ளி மாணவர்களுடனான இணைய கூட்டத்தொடர்களுக்குப் பின்னர் இளம் தலைமுறையினருக்கென கழிவு மேலாண்மையைப் பற்றிய ஓர் பாடத்திட்டம் உருவாக்குவதில் முனைப்பாக உள்ளனர் இந்த குழுவினர். “நாங்க வளர்ற அப்போ நெகிழிக்கு மாற்றுகள் இருப்பதே எங்களுக்குத் தெரியல. ஆனா இப்போ இருக்க இளம் தலைமுறையினர் எங்கள விட விழிப்பா இருக்குறத பாக்குற அப்போ பெருமையாவும் மகிழ்ச்சியாவும் இருக்கு,” எனக் கூறுகிறார் திவ்யா.
அவ்வப்போது இந்நிறுவனமானது மக்களின் கவனத்தை ஈர்க்கும் விளம்பர யோசனைகள் உடைய படைப்புத் திற விளம்பரங்களைப் (creative campaigns) பயன்படுத்தியும் முன்னிறுத்தியும் வருகிறது. “டோன்ட் மெஸ் வித் மெட்ராஸ்!” (Don’t mess with Madras) என்றொரு வாக்கியம் மெட்ராஸ் நகரை குப்பைக்கூளம் ஆக்காதே என்றும் மெட்ராஸுடன் மோதாதே என்றும் இரு பொருள்பட சிலேடையாக இருக்கிறது. இதுவே பிளாஸ்டிக் ஃப்ரீ மெட்ராஸ் நிறுவனத்தின் சமீபத்திய முழக்கமாக உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ஓயாமல் எதிரொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் கோஷங்களை முன்மாதிரியாகக் கொண்டு உருவான இந்த மனதைக் கவரும் முழக்கமானது, சென்னைவாசியாக இருப்பதில் இருக்கும் ஓர் அலாதியான உணர்ச்சியை அதனை கேட்கும், வாசிக்கும் ஒவ்வொருவருள் விதைக்கிறது.
சென்னையை சுத்தம் செய்யும் பனியோ அல்லது ஓர் தொழிலை துவங்குவதோ எதுவாக இருப்பினும் அந்த செயல்முறையில் மிகவும் முக்கியமான முதல் படி என்பது முதல் அடியை எடுத்து வைப்பதே ஆகும் என பிரதீப்பும் திவ்யாவும் நம்புகின்றனர். “எதுவா இருந்தாலும் பரவாயில்லை முதல ஆரம்பிச்சுடுங்க,” எனக் கூறுகிறார் பிரதீப். கடற்கரையில் இருந்து வெறுமனே மூன்று துண்டுகள் நெகிழியை அகற்றுவதே மாற்றத்துக்கான மிகப்பெரிய வித்தாகும்.