THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

பெண்களை சுதந்திரப் பறவைகளாக உலா வர வைக்கும் இன்டிபெண் (indePenn) நிறுவனம்

“இந்தியாவில் கல்விப் பயின்ற எல்லாப் பெண்களும் வேலைக்குச் சென்றால் நம் உள்நாட்டு உற்பத்தியானது (GDP – Gross Domestic Product) குறைந்தளவு 25% உயரும்!” என்று சமீபத்தில் தான் கண்ட அறிக்கையிலிருந்து ஒரு புள்ளிவிவரத்தை நினைவுக் கூறுகிறார் ராணி. “ஒரு சில மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் உயர்கல்வி சேரும் பெண்களின் சதவீதம் அதிகபட்சமாகவே உள்ளது. மேல்நிலைக் கல்வியில் சேரும் மாணவர்களுள் கிட்டத்தட்ட 50% பேர் பெண்களாகவே உள்ளனர்,” என குறிப்பிடுகிறார் ரஜனி. அப்படியானால் ஏன் இது நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிப்படுவது இல்லை?

பாலினச் சமத்துவத்தின் (Gender Parity) மூலம் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும் நோக்கத்தோடு ரஜனி சேஷாத்ரி (Rajani Seshadri) மற்றும் ராணி முரளிதரன் (Rani Muralidharan) ஆகிய இருவரும் இணைந்து டிசம்பர் 2019-ஆம் ஆண்டு இன்டிபெண் கனெக்ஷன்ஸ் (indePenn Connections) என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர். டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ரஜனி, ஐரோப்பாவில் பல லாபம் ஈட்டும் வணிகங்களை உருவாக்கியதன் மூலம் தன் பணிவாழ்வில் பல படிகள் முன்னேறி தற்பொழுது IWN-இல் (IWN – இந்தியன் விமென் நெட்வொர்க்) தலைமைப் பொறுப்பில் உள்ளார். ராணி பட்டயக் கணக்காளராக (Chartered Accountant) பணிப்புரிந்தப் பின்னர் தற்பொழுது தொழில் முனைவோராக உள்ளார். திருச்சியில் இருந்த அவர் ஆண்கள் அதிகம் வேலை செய்யும் உற்பத்தித் துறையிலேயே அதிக காலம் பணியாற்றினார். வெவ்வேறு துறைகள் எனினும் கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் நண்பர்களாக இருந்த ரஜனியும் ராணியும் ஒரு விஷயத்தை கவனிக்க ஆரம்பித்தனர். ஆண்டுகள் உருண்டோட தங்கள் பணிவாழ்க்கையில் அவர்கள் ஒருபுறம் வளர்ச்சிப்பெற மற்றொரு புறம் அவர்களுடன் வேலைப்பார்த்து வந்த சக பெண் ஊழியர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறையத் துவங்கினர். “பெரும்பாலான பெண்கள் இடைநிலை மேலாண்மையில் (Middle management) பணிபுரிகையில் வேலையை கைவிடுகின்றனர்,” என்று கூறும் ரஜனி, “திருமணம், கடினமான கர்ப்பக் காலம், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுவது அல்லது வயதானவர்களை கவனித்துக் கொள்ளுவது கூட இதற்கான காரணங்களாக இருக்கின்றன. நாங்களும் இவை அனைத்தையும் அனுபவித்திருக்கிறோம் என்பதனால் மற்ற பெண்களின் நிலைமைகளும் எங்களுக்கு நன்றாகவே புரிந்தது” என்கிறார். அவர்களின் நோக்கத்தில் ஆர்வம் கொண்டு இருந்த மற்றொரு நபரான கௌரி கைலாசம் (Gowri Kailasam) என்பவர் இந்த இளம் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அவர்கள் மூவரும் தங்களுக்குள்ளேயே இரு கேள்விகளைக் கேட்டுக் கொண்டனர்—வேலைக்குத் திரும்புவதற்கு பெண்களுக்கு என்னத் தேவைப்படுகின்றது? இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்கள், பெண்கள் வேலைக்குத் திரும்புவதற்கு ஏதுவாய் இல்லாத நடைமுறை விதிமுறைகளை மீறி, அவர்களின் திறன்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கத் தயாராக இருக்கின்றனவா?

“இது எல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி தான்,” என சிரிக்கிறார் ராணி. “அனுபவம் மிக்க, நன்கு படித்த, வேலைக்கு திரும்ப வேண்டும் என நினைக்கும் பெண்களை மீண்டும் வேலை செய்ய வைப்பது என்பது கடினமான காரியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்தப் பெண்களுக்குள்ளே பெரிதளவில் அதற்கான மனவலிமையும் தன்னம்பிக்கையும் ஏற்கனவே இருக்கும். வெறுமனே எங்கே தொடங்குவது என்று வழிகாட்ட ஒருவர் அவர்களுக்கு இருந்தால் போதும்” என்கிறார் ராணி.

இவ்வாறே ஒரு கட்டமைப்பு உருவானது. தன்னம்பிக்கை விதைப்பதே முதல் படி. “ஏன் நானும் கூட என் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின்னர் தான் முழு நேரப் பணியை மீண்டும் தொடர்ந்தேன். எனவே, அதற்கு எந்த அளவுக்கு மனவலிமை வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே புரியும்,” என விவரிக்கிறார் ராணி. அவர்களை அணுகும் பெண்களுக்கு கலந்துரையாட நான்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்த நான்கு வாய்ப்புகளில் அவர்கள் நினைப்பதை எல்லாம் சகஜமாக பேச அவர்கள் அனுமதிக்கப்படுவதால், அவர்களின் கஷ்டங்களையும் தெரிவிக்க இஹு அவர்களுக்கு உதவியாக உள்ளது. ஆரம்பக் கட்ட பயிற்சி வகுப்புகளுக்குப் பின்னர் இயல்விக்கும் பயிலரங்குகள் (Enabling Workshops) நடைப்பெறுகின்றன. இயல்விக்கும் பயிலரங்குகளில் 8 முதல் 12 பெண்கள் வரை ஒரு குழுவாக அமைக்கப்பட்டு, அவர்களுக்கும் அவர்கள் வேலைக்கும் நடுவே தடைகளாக இருக்கும் பிரச்சனைகளைப் பற்றியும் எவ்வாறு அவற்றைக் கையாளலாம் என்பது பற்றியும் கலந்துரையாட வைக்கப்படுகின்றனர்.

“இந்த தருணத்தில் தான் எங்களிடம் வரும் ஒரு பெண் ஆனவர் தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கும் அதிகாரம் பெறுகிறார்,” என்கிறார் ரஜனி. தங்களை அணுகும் பெண்கள் மீண்டும் வேலை செய்ய விரும்புகின்றனரா அல்லது தங்களுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு வேறு ஒரு பணித்துறைக்கு மாற விரும்புகின்றனரா என்பதைப் பொறுத்து தொழிற்துறையில் உள்ள துறைசார் வல்லுனர்களுடன் அவர்கள் இணைக்கப்படுகின்றனர். “தற்போது இணையவழி பயிற்சிமுறை எளிதாகவும் வெகுவாகவும் கிடைப்பது என்பது மேற்கூறிய செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது,” என்கிறார் ராணி. “எங்களிடம் வரும் பெண்கள் அவர்கள் வரும்போது பெற்று இருந்த தன்னம்பிக்கையைக் காட்டிலும் இந்த செயல்முறைக்குப் பின்னர் அதிக தன்னம்பிக்கையைப் பெறுகின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னரே பணிவாழ்க்கைக்குத் திரும்ப முயல்கின்றனர். எனவே தான் நாங்கள் மீள் பயிற்சி (Returnship) என்பதனை கொண்டு வந்தோம்!” என சிரிக்கிறார் அவர். இந்த மீள் பயிற்சியானது இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை, ஒரு பெண் தான் பணியில் சேரும் நிறுவனத்தை பதம் பார்க்க இயல்விக்கிறது. அதே சமயம் வேலை வழங்குபவரும் பணிக்கு சேர்ந்து இருப்பவர் அந்த பதவிக்கு ஏற்றவரா என்பதை புரிந்துக் கொள்ளவும் வழிவகுக்கிறது. “இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்துக் கொள்ளத் தவறிய எல்லா தகவல்களையும் தெரிந்துக் கொண்டு அண்மைக் காலத்தோடு ஒன்றுவது என்பது சாத்தியமில்லை எனினும் அந்தத் தகவல்களை கற்றுக்கொள்வது எவ்வாறு என்பதை பெண்கள் கற்றுக்கொள்வதே அவர்கள் மீண்டும் தங்கள் பணிவாழ்க்கையைத் துவங்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது,” என விளக்கம் அளிக்கிறார் ரஜனி.

பெரும்பாலான மீள் பயிற்சிகள் வெற்றி அடையவே செய்கின்றன. இதன் விளைவாக பெண்கள் முழு நேரப் பணியில் மீண்டும் சேர்கின்றனர். அத்தோடு அது முடிவதில்லை. “ஒரு முழு நேரப் பணி என்பது அதிலும் குறிப்பாக இவ்வளவு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் என்பது அதற்கே உரிய சவால்களுடன் இருக்கின்றன. இந்த சவால்கள் பெரும்பாலான நேரங்களில் எளிதான தீர்வுகள் உடையதாகவே இருந்தாலும் கூட பணியில் இருக்கும் பெண்களை அவர்களின் பாதையில் இருந்து எளிதாக தடம்புரளவும் வைக்கின்றன”, என விவரிக்கிறார் அவர். “எனவே ஒரு முழு நேரப் பணியில் மீண்டும் சேர்ந்து அதில் பணியாற்ற ஒரு பெண் எடுக்கும் முயற்சியானது வீணாகமல் போவதை உறுதிப்படுத்த அவர் பணியில் சேர்வதிலிருந்து இரண்டு மாதங்கள் வரை நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.”

பிப்ரவரி மாதம் 2020-ஆம் ஆண்டு இன்டிபெண் அதன் முதல் பயிலரங்குக்கான விதையை கெளரியின் வீட்டில் விதைத்தது. “நாங்கள் வாழ்வறையில் (Living room) இருந்த அறைகலன் உட்பட எல்லாவற்றையும் ஒழுங்கே அமைத்து பயிலரங்குக்கான ஒரு அமைப்பினை ஏற்பாடு செய்தோம்,” என உற்சாகத்துடன் நினைவுக் கூறுகிறார் ராணி. “மார்ச் மாதம் பெருந்தொற்று (Pandemic) பரவ ஆரம்பித்ததால் நாங்கள் எங்கள் செயல்களில் பின்வாங்க நேர்ந்தது.” இன்டிபெண் நிறுவனர்களை கலக்கம் அடைய செய்யும் வகையில் அந்த மாதம் முழுக்க செயல்கள் அனைத்தும் மெதுவாகவே நகர்ந்தன. “நாங்கள் துவங்கும்போது பெரும் உற்சாகத்துடன் ஒரு விரைவு ரயிலைப் போல வேகமாக செயல்பட்டு கொண்டு இருந்தோம். ஆனால் இந்த பெருந்தொற்று ஆனது எங்களை ஒரு சரக்கு ரயிலைப் போல மெதுவாக செயல்படும் நிலைக்குத் தள்ளியது!” என அவர்கள் நகைச்சுவையாகக் கூறுகின்றனர். பெருந்தொற்று ஆனது என்னதான் நமக்கு ஒரு கஷ்டக் காலத்தை தந்தாலும், ஒரு வகையில் அதனால் ஏற்பட்ட ஒரு சில மாற்றங்கள் எங்களுக்கு வரமாகவே அமைந்தன. இணையவழியில் பயிற்சி பெறுவதில் நிறைய தளர்வுகள் உள்ளதால் மிகுதியான பெண்கள் அதில் பங்குபெற ஆர்வம் காட்டத் துவங்கினர். நிறுவனங்கள் பணிகளை தொலைதூர பணிகள் (Remote jobs) ஆக்க வலியுறுத்தப்பட்டதால் பெண்கள் பலருக்கு வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலையும் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிறுவனர்கள் வெறும் சொல்லளவில் இல்லாமல் சொன்னதை செய்தும் காட்டினர். “நானும் ராணியும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டணியாக செயல்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்!” என புன்னகைப் பூக்கிறார் ரஜனி. “எங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எங்களுக்கு எந்தவொரு வெட்கமோ அவமானமோ எப்பொழுதும் கிடையாது. பெரும்பாலான நேரங்களில் எங்களை விட வயதில் சிறியவர்களிடம் சென்று கூட எங்களுக்குத் தெரியாத விஷயங்களை நாங்கள் கற்றுக் கொள்வோம்.” ஒருபுறம் இன்டிபெண் நிறுவனமானது பெருந்தொற்றுக்கு ஏற்றவாறு தன் செயலமைப்பை மாற்றிக் கொண்டு இருக்க, மற்றொரு புறம் இதற்கு முன்னர் அவரவர் தொழிற்துறையில் முன்னணி பொறுப்புகளை வகித்து வந்த இந்நிறுவனத்தின் நிறுவனர்கள், அதனை இடைவிடாமல் இயக்க, காலத்துக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற வேண்டி இருந்தது. “நான் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும்போதோ வரையறுக்கப்பட்ட நேரத்தினுள் ஏன் ஒரு வேலை செய்து முடிக்கப்படவில்லை என ஊழியர்களிடம் தினந்தோறும் கேட்டுக் கொண்டு இருப்பேன்,” என சிரித்துக் கொண்டே நினைவுக்கூறுகிறார் ரஜனி. “ஆனால் இங்கோ நிறுவனத்தின் பெயரில் ஒரு முத்திரை அச்சு வடிவமைக்க வெவ்வேறு வகையான அச்சுகளை அலசி ஆராய்ந்து அவற்றில் இருந்து ஒரு அச்சினை தேர்ந்தெடுக்கவும் அதனை எங்கேக் கொடுத்து செய்யலாம் என்பதனை முடிவு செய்யவுமே நாங்கள் நாட்கள் கணக்கில் நேரம் செலவு செய்துக் கொண்டிருந்தோம்!” என ராணி கூறுகிறார். “இதனாலேயே வெளி உதவிகள் எதுவும் பெறாமல், எங்களுடைய சொந்த நேரத்தையும் பணத்தையுமே அதிக அளவில் முதலீடு செய்யும் நிறுவனமாக நாங்கள் இருக்கிறோம் என நினைக்கிறேன்” என ரஜனி நிறைவு செய்ய, இருவரும் நிறுவனம் துவங்கிய ஆரம்பக் கால நினைவுகளையும் சிறு சம்பவங்களையும் சிரித்துக் கொண்டே நினைவுக்கூறுகின்றனர்.

“நாங்கள் இருவருமே வணிகங்களுக்கு இடையேயான (B2B – Business-to-Business service) சேவைகள் பரிமாற்றம் நடைபெறும் தொழிற்துறைகளில் இருந்து வந்தமையால் வணிகங்களுக்கும் நுகர்வோர்களுக்கும் (B2C – Business-to-Consumer service) இடையேயான சேவைகள் பரிமாற்றம் பற்றி கற்றுக் கொள்வது எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சவாலாக இருந்தது,” எனக் கூறுகிறார் ரஜனி. “அவ்வப்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பதிவுகளைப் பகிர நான் முகநூலை (Facebook) மட்டுமே பயன்படுத்தி இருக்கிறேன். இன்டிபெண் நிறுவனத்துக்கு என ஒரு பக்கம் துவங்கிய போது அதற்கான பதிவுகளை வடிவமைக்கும் செயல்முறையில் கலையின் மீது இருந்த எனக்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதில் பல மணி நேரம் செலவிடத் துவங்கினேன்,” என ராணி விவரிக்க, ரஜனியோ எவ்வாறு ஒவ்வொரு பதிவின் கண்ணுகேத் தெரியாத நுணுக்கங்களுக்கும் ராணி பல மணி நேரம் மெனக்கிடுவார் என்பதனை நினைவுக்கூறி அவரை அதற்காக கேலி செய்கிறார். இந்நிறுவனத்தில் தற்போது 30 மற்றும் 40 வயதுக்கு இடைப்பட்ட வயது உடைய ஆறு முதன்மை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் பொது நலன் கருதி இலவசமாக இந்நிறுவனத்துக்கு பணியாற்றுவது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துதல் (Social Media Marketing) போன்ற செயல்களில் இருந்து நிதி மேலாண்மை (Finance) வரை அனைத்திலும் தனித்திறன் பெற்று விளங்குகின்றனர். “நாங்கள் அணுக நினைக்கும் பயனர்களின் வயது வரம்பில் எங்கள் குழு உறுப்பினர்களும் இருப்பதால் எம்மாதிரியான செயல்திட்டங்கள் பயனர்கள் மத்தியில் செயல்பெறும் என்றும் எவை செயல்பெறாது என்பதைப் பற்றியும் ஒரு சிறப்பான உள்நோக்குப் பார்வையை அவர்கள் எங்களுக்கு அளிக்கின்றனர்,” என விவரிக்கின்றனர் இன்டிபெண் நிறுவனத்தின் சிங்கப் பெண்மணிகள்.

“இன்டிபெண் என்ற எங்கள் நிறுவனத்தின் பெயர் சுட்டிக்காட்டுவதைப் போல நாங்கள் தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட துளிர் நிறுவனம் (Startup Company) என்பதில் பெருமைக் கொள்கிறோம்,” என பூரிப்புடன் கூறுகிறார் ராணி. இன்டிபெண் நிறுவனம் ஆனது அண்மையில் தென் இந்தியா எங்கிலும் உள்ள பெண்களை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. பணத்திற்காக அந்தப் பெண்கள் எவரையும் சார்ந்து இல்லாமல், ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ இன்டிபெண் வழிவகுக்கிறது. “அங்கு தான் முக்கியமான சிக்கலே உள்ளது. பெண்கள் வீட்டில் அவ்வளவு வேலை செய்வர். இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் தங்களுக்கென பணம் செலவு செய்துக் கொள்ளுவதற்கு தங்களுக்கு தகுதி இல்லை என்றே நினைக்கின்றனர்,” என்று பெண்களிடம் வெகுவாக காணப்படும் மனத்தடையினை விவரிக்கும் ரஜனி, “இதில் வருத்தம் தரக் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் பணத்துக்கு எவரையும் சார்ந்து இல்லாதவாறு இவர்களுக்கு அதிகாரம் அளித்து சொந்தக் காலில் நிற்கச் செய்வதே ஒரே வழியாகும்” என்கிறார்.

ராணியும் ரஜனியும் அவர்களின் கட்டமைப்பின் மூலம் பல பெண்களுக்கு வெற்றிகரமாக வழிக்காட்டியும் உதவியும் வந்து உள்ளனர். இன்டிபெண் மென்மேலும் வளர வளர இவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையில் தினந்தோறும் சந்திக்கும் பெண்மணிகளான தங்களின் குடும்பத்தில் உள்ள தாய்கள், பாட்டிமார்கள் மற்றும் அவர்களின் பயிலரங்குகளில் பங்கேற்கும் பெண்கள்—இவர்களால் தொடர்ந்து ஊக்கம் அடைந்தும் இவர்களை மேற்கோள்களாக எடுத்துக் கொண்டும் செயல்பட்டு வருகின்றனர். உங்கள் கனவுகளைப் பின்தொடர நினைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் அவற்றைப் பின்தொடரலாம். அதற்கு வயது வரம்பு என்று எதுவும் இல்லை என்பதனை தங்களின் வாழ்க்கையின் மூலமே வாழ்ந்து காட்டி நிரூபித்து வருகினறனர் இந்த சிங்கப் பெண்களான இன்டிபெண்கள்.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

142/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.