THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

பன்னாட்டு பயனர் கொண்ட உள்ளூர் அணியங்கள்

ன்னிந்தியர்கள் பெரும்பாலும் அவர்களின் பிறந்த ஊரின் பெயரைத் தங்களின்  புனைபெயராக வைத்துக் கொள்வது வழக்கம். ஸ்ரீரங் (Srirang) என்றழைக்கப்படும் ஸ்ரீத்தி சடகோபன் (Srithi Sadagopan), தன் திருமணம் வரை தன் இளம்பருவத்தை திருச்சியில் உள்ள கோயில் நகரான ஸ்ரீரங்கத்திலேயே (Srirangam) கழித்தார். தன் வாழ்க்கையை மொத்தமாக திருப்பிப் போடப் போகும் ஒரு வாழ்க்கை கட்டத்திற்குள், கனிவான இருபத்து மூன்று வயது சிறு ஊரில் வளர்ந்த பெண்ணான ஸ்ரீத்தி சடகோபன் நுழையப் போகிறார் என அவர் அறிந்திருக்கவில்லை. உலகின் மறுபாதியில் உள்ள அமெரிக்காவிற்கு (U.S.A) தன் கணவருடன் புலம்பெயர்ந்த அவர் கிட்டத்தட்ட பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்து ஒரு துணிவுள்ள, ஈகை மனம் (philanthropic) படைத்த தொழில்முனைவோராக (entrepreneur) இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

அணியங்களின் (accessories) சூழல்நல வர்த்தக நிறுவனம் (eco-friendly brand) தான்  ஸ்ரீரங் எனப்படும் ஸ்ரீத்தியின் அணியங்களின் நிறுவனமாகும். இப்பெயர் அவரின் சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கு மரியாதை செலுத்தும் விதம் சூட்டப்பட்ட பெயராகும். துணிகள் (fabrics) மீது ஸ்ரீத்தி வைத்திருந்த வாழ்நாள் கனவு மற்றும் அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரின் உள்ளார்ந்த விருபத்தின் அவதாரமே – ஸ்ரீரங். “என் வீட்டில் வேலை செய்யும் சாந்தி, அவரின் மகனின் படிப்பு செலவுக்கு என்னிடம் பண உதவி கேட்டார். எனவே, நான் அவருக்கு உதவுவது மட்டுமல்லாமல் அவரின் திறன்களை பணியாக மாற்றி அவரே அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.” தற்செயலாக சாந்தி தையல் கலையில் (stitching) கைத்தேர்ந்து இருந்தமையால் இருவரும் சேர்ந்து பைகளை வடிவமைக்கத் தொடங்கினர்.

ஒரு ஆண்டிலேயே அவர்களின் வர்த்தக நிறுவனம் வித விதமான வடிவமைப்பு வகைகள் கொண்ட கைப்பைகளை (clutches) வடிவமைக்கத் தொடங்கியது. இந்நாள் வரை இந்த விலைப்பொருளுக்கு அவர்கள் பெயர் போகியுள்ளனர். “நான் சிறுவயதில் எனது ஆடைக்கு ஒத்துப்போகும் வகையில் கைப்பைகள் வைத்திருப்பது  எனக்கு தெள்ளத் தெளிவாக நினைவு இருக்கிறது,” என பல்வேறு பாணியிலும் (style), இழையமைப்பிலும் (texture) தான் குவித்து வைத்திருந்த கைப்பைகளைப் பற்றி புன்னைகையுடன் விவரிக்கிறார் ஸ்ரீத்தி. உள்ளுணர்வு (instinct), கவனிப்பு மூலம் பிறந்த புரிதல் (observation) மற்றும் மணிக்கணக்காக வலையொளியில் (Youtube) பெருவிருப்பத்துடன் காணொளிகள் (videos) காணும் ஸ்ரீத்தியின் பழக்கம் – இவை யாவுமே அவரின் வடிவமைப்பு திறனுக்கு சரி சமமான பங்குகள் வகுக்கின்றன. “ஒரு நாள் நான் சாய் நாற்காலியில் (easychair) உட்கார்ந்து இருக்கும்போது அதன் பெரிய மர சட்டங்களுக்கு (frames) இடையே இருக்கும் நுணுக்கமான பின்னல்களை (weaves) கவனித்தேன். அவை மிகவும் சுவாரஸ்யம் ஊட்டுவதாக இருந்தன. நான் தற்பொழுது அதே பாணியை, கைப்பைகளின் சட்டங்களுக்கு பொருந்தச் செய்ய முனைகிறேன்.”

சென்னையில் (Chennai) உள்ள தி.நகரில் (T.Nagar) பன்மாடி குடியிருப்பு (apartment) வீடுகளில் ஒன்றினை பட்டறையாக (workshop) மாற்றி பணி செய்து வருகின்றது நான்கு பேர் கொண்ட சிறியக் குழுவான ஸ்ரீரங். “எங்களை சுற்றி கிடக்கும் பொருட்களையே தேடி பிடித்து குழுவாக இணைந்து நாங்கள் எங்கள் விலைப்பொருட்களுக்கான (products) எண்ணப்படிவங்களை (ideas & concepts) உருவாக்குவோம்,” என விவரிக்கும் அவர், “நாங்கள் சிறு துண்டு துணியினையும் வீணாக்காமல் பயன்படுத்துவோம். எஞ்சி இருக்கும் துணியைக் கொண்டு துணியாலான நகைகளை (fabric jewelry) செய்வோம்.” எனக் கூறுகிறார் பெருமிதத்துடன்.

கைப்பைகளை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதன் செயல்முறை பல சவால்களை உள்ளடக்கியுள்ளது. உலோகத்தால் (metal) ஆன கைப்பையின் சட்டத்தினுள் (frame of the clutch) சரியாக பொருந்த, விலையுயர்ந்த துணியினை மிக கவனமாக நறுக்க வேண்டும். நிறுவனத்தின் வளங்குன்றா கொள்கையைக் (sustainability policy) காப்பாற்ற, அவ்வாறு நறுக்கும்போது துணியும் சிறிதளவுக் கூட வீணாகாமல் இருக்க வேண்டும். பரவலாகக் கிடைக்கக்கூடிய நெகிழிச் (plastic) சட்டங்கள் எளிதில் உடையக்கூடியவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் ஸ்ரீத்தி அவர் வடிவமைக்கும் கைப்பைகளுக்கு அதைப் பயன்படுத்த விரும்பவில்லை. உலோகத்தால் ஆன சரியான வகை சட்டத்தை கொள்முதல் (procure) செய்வதில் நிறைய சவால்களை அவர் சந்தித்தார்.

காஞ்சிபுரத்தில் (Kanchipuram) உள்ள நெசவாளர்களுடன் (weavers) துணிக்காக ஒப்பந்தங்கள் இட ஆரம்பித்தார் ஸ்ரீத்தி. உள்ளூர் கைப்பைகளின் (indigenous clutch) முத்திரை (label) இணையம் மூலம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற, இந்தியா முழுவதிலும் இருந்த துணி உற்பத்தியாளர்கள் அவரவர்களின் துணியைப் பயன்படுத்தக் கோரி அவரை அணுகினர். வாடிக்கையாளர் அனைவருக்கும் ஒரு விருப்பத்தேர்வு (choice) உள்ளவாறு அவர் உறுதி செய்கிறார். என்னதான் அவர் தமிழ்நாட்டின் ஆடைவகைகளில் கவனம் செலுத்தினாலும் காஞ்சிபுரம் பட்டு (Kanchipuram silks) போன்ற சில துணிவகைகள் விலையுயர்ந்ததாகவே உள்ளன. எனவே, அவர் காஞ்சிபுரம் பட்டுக்கு இணையான பளபளப்பினை (lustre) உடைய மோடல் பட்டினை (Modal silk) குஜராத்தில் இருக்கும் கச் (Kutch) பகுதியில் உள்ள ஒரு நெசவாளரிடம் இருந்து கைப்பற்ற ஆரம்பித்தார். “இந்த விரிவாக்கம் புகழ்பெற்ற அஜ்ரக் (Ajrakh prints) எனப்படும் கச் பகுதியில் உள்ள கைவினைக் கலைஞர்களால் (craftsmen) உருவாக்கப்படும் அச்சு வடிவங்களையும் எங்கள் வடிவமைப்புக்குள் புகுத்தியது!”

கைவினைத் திறனும் (craftsmanship), குறைவான விலையுமே (affordability) ஸ்ரீரங் கைப்பைகளைத் தனித்துவமாக ஆக்குகின்றன. கைவினைக் கலைஞர்கள் கொண்டு செய்யப்படுவதால் ஸ்ரீரங் வடிவமைப்புகள் அத்தனையுமே வரையிட்டப் பதிப்புகளே (limited edition). ஒவ்வொரு வடிவமைப்பிலும் அதிகபட்சம் எண்ணிக்கையில் ஐந்து மட்டுமே செய்யப்படுகின்றன. தற்பொழுது தஞ்சாவூர் (Thanjavur) கலைஞர் ஒருவரைத் தன் குழுவில் கொண்டுள்ள ஸ்ரீத்தி, அந்த ஊரின் பழமை வாய்ந்த கலைவடிவத்தை வடிவமைப்பில் ஒருங்கிணைத்த வண்ணம் புது வகையான கைப்பைகளை வரிசையாக வெளியுட்டள்ளார். “எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு கைப்பை மட்டுமே வாங்க வந்துவிட்டு கையில் ஆறு அல்லது ஏழு கைப்பைகளுடன் திரும்ப செல்வர்,” என கூறும் அவர், “விற்பனையைக் காட்டிலும் எனக்கு முக்கியமாகப்படுவது என்னவென்றால், தயாரிப்பளர்களை (makers) என் வாடிக்கையாளர்கள் (customers) சந்திக்க நேரிடும் அந்தத் தருணங்களே. என் குழுவில் உள்ளவர்கள் ஊக்கமடையவும், சாதித்தவாறு எண்ணவும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிய அங்கீகாரம் (acknowledgement) கிடைக்கவேண்டும் என்பதை நான் உறுதி செய்து கொள்வேன்” என புன்முறுவலுடன் கூறுகிறார் ஸ்ரீத்தி.

ஸ்ரீத்தி எனும் சிறு ஊரில் வாழ்ந்து வந்த பெண், எவ்வாறு பன்னாட்டு (international) வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள ஒரு சிறு வணிகத்தின் நிறுவனரானார் (founder)? ஸ்ரீரங்கத்தில் இருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தது ஒரு மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒரு பெருங்கடலில் நீந்தித் தவிக்கும் ஒரு சிறிய மீன் போல,  சிறு ஊரில் இருந்து சென்ற அவருக்கு அந்த பெரிய நாட்டில் கலாச்சார மற்றும் மொழி வேறுபாடுகளை (culture & language differences) கடந்து வந்து, நீந்தி மேல் எழும்பியதே மிகப்பெரிய வாழ்க்கைப் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு அனுபவமும் அவரின் மன உறுதியினை உயர்த்தி, ஒரு துணிவான, பன்னாட்டு வாடிக்கையாளர்கள் கொண்ட சிறு வணிகம் ஒன்றின் புறமுகத் தன்மை உடைய (outgoing) தொழில்முனைவோராக இன்று அவர் இருக்கும் இந்நிலைமைக்கு அவரை வித்திட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

“முதல் ஒரு மாதம் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் என் வணிகத்தை நான் சமாளித்துவிட்டேன். என் அம்மாவே எனக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருந்தார். ஐம்பது பைகளை என்னிடம் இருந்து வாங்கி தீபாவளிக்கு அதை அனைவருக்கும் வழங்கினார்!” என ஸ்ரீத்தி புன்னகைக்கிறார். எப்பொழுது அவர் கைப்பைகளை வடிவமைக்கத் தொடங்கினாரோ அப்பொழுதே அவரின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் பெருக ஆரம்பித்தனர். “எல்லா இடங்களிலும் துணிப்பைகள் கிடைக்கக்கூடியதாக இருந்ததால் அவை அவ்வளவு பெரிதாக வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறவில்லை எனினும் கைப்பைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.” ஸ்ரீத்தி தொடங்கிய இணைய விற்பனையகமும் (online store), படவரி பக்கமும் (Instagram page) இணைந்து ஐயாயிரத்துக்கும் மேலான தொடர்ந்து வணிகம் செய்யும் பின்பற்றிகளை (active followers) அவரின் வணிக நிறுவனத்துக்கு குவித்தது. பெரும்பாலானோர் வழக்கமான வாடிக்கையாளர்கள் (regular customers). மதுலிகா கபிலவயி (Madhulika Kapilavayi) மற்றும் அவரின் நிறுவனமான மார்கழி (Margazhi) போன்ற  வாடிக்கையாளர் மத்தியில் செல்வாக்கு உடைய, இவரைப் போன்ற ஒத்த வணிக நிறுவனங்களுடன் இவர் தொடர்ந்து கூட்டு முயற்சியில் (collaborate) ஈடுபட்டு வணிகம் மேற்கொள்கிறார். இவைப் போன்ற கூட்டு முயற்சிகள் அவரின் நிறுவனத்தின் விளம்பரத்துக்கும், மக்களிடம் அது சென்றடைவதற்கும் (outreach) வழிவகுக்கிறது.

வழக்கமாகவே பெரும்பாலான விலைப்பொருட்களைப் போலவே நம் விலைப்பொருட்களையும் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு முன்னர் முதலில் காண விரும்புவர். ஸ்ரீத்தி அவர்களை பட்டறைக்கு (workshop) வரவழைத்து அவற்றைக் காண்பிப்பார். இவ்வாறு வாடிக்கையாளர்கள் பொருட்கள் உருவாகுவதையும் காண்பர்; செய்து முடிக்கப்பட்ட விலைப்பொருட்களையும் காண்பர். ஆண்டுகள் நகர காட்சியகமும் (display) சேகரமும் (storage) மந்தைவெளியில் (Mandaveli) இருக்கும் மற்றொரு இடத்துக்கு இடம் மாற்றப்பட்டது. “மூன்று அறைகள், ஒரு வாழறை மற்றும் ஒரு சமையலறை கொண்ட (3BHK) பன்மாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் ஒரு அறையை வாடிக்கையாளர்களை உபசரிக்கும் ஒரு சிறிய கடையாக (boutique) மாற்றியுள்ளேன்” என ஆர்வம் பொங்க கூறுகிறார்.

இன்று ஸ்ரீத்தியின் சிறிய வணிகத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவில், குறிப்பாக ஆடை அலங்காரத் துறையில் (fashion) முக்கிய மையங்களான (hubs) மும்பை (Mumbai), கொல்கத்தா (Kolkata) மற்றும் அகமதாபாத்தில் (Ahmedabad) மட்டுமல்லாமல் வெளிநாடுகளான ஆஸ்திரேலியா (Australia), டென்மார்க் (Denmark) மற்றும் அமெரிக்கா (U.S.A) எங்கிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வழக்கமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு, கைப்பைகள் கப்பலேற்றி (shipped) அனுப்பி வைக்கப்படுகின்றன. “சில நேரங்களில் எங்களுக்கு ஒரே நாளில் எண்ணிக்கையில் ஐம்பது கைப்பைகளின் தேவைகள் (orders) ஏற்படுவது பேரளவு இன்பம் தருவதாக இருக்கும். எங்கள் குழுவினரே அவை அனைத்தையும் பொதியிட்டு (package), கப்பல் மூலம் அஞ்சலில் அனுப்பும் செயல்முறை மொத்தமும் சுவாரஸ்யமாக அமையும்.” என்கிறார் அவர்.

ஒரு சிறிய வணிகத்தை வழிநடத்தி செல்வது பார்ப்பவருக்கு எளிதாக தெரிந்தாலும் கூட, சரியான வகை மூலப்பொருட்களையும் (materials), சரியான வகை  உறுதுணையையும் கைப்பற்றுவதில் இருக்கும் சவால்கள் அனைத்தையும் ஸ்ரீத்தி நினைவுக் கூறுகிறார். அவை ஒருபுறம் இருப்பினும் அவற்றிற்கு நடுவே தனக்கான பாதையை அமைத்து அதில் தழைத்தோங்கி நிற்கிறார் ஸ்ரீத்தி. புது திறன்களையும், அதன் முகங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் முனைப்பில் அவர் தன் குழுவுடன் இணைந்து புதுமுறைகள் காண்பதற்காகவும், குழுவினரின் கைவினைத் திறனை அங்கீகாரப்படுத்துவதோடு நிறுவனத்தின் வளர்ந்து வரும் பெயரோடு அவர்களின் திறன்களின் வளர்ச்சிக்காகவும் ஓயாமல் உழைத்து வருகிறார் நம் கைப்பை வடிவமைப்பாளர் ஸ்ரீத்தி சடகோபன் என்கிற ஸ்ரீரங்.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

120/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.