பள்ளிக்கரணையில் ஆங்காங்கே படர்ந்து இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நடுவே உள்ளது பழமை சாயல் கொண்ட ஓர் கலைக்கூடம். பழமையான பொருட்களாலும், அரிய புத்தகங்களாலும், அரசியல் மற்றும் வரலாற்று தலைவர்களின் ஒளிரும் சிலைகளாலும் நிறைந்த “சிலை” (Silaii) என்ற பெயர் கொண்ட சிலைகள் செய்யும் கலைக்கூடம் இதுவாகும். இங்கே பத்து அங்குலம் உயரம் கொண்ட சிலையையும் நீங்கள் காணலாம். தோல் உயரத்திற்கு மேல் இருக்கும் ஏழு அடி உயர சிலையையும் காணலாம். “சிலை என்ற பெயரின் அழகே அதன் எளிமையான உச்சரிப்பு தான். உலகத்தின் எந்த பகுதியில் இருந்து வருபவரும் சிலை என்ற சொல்லை கிட்டத்தட்ட அதன் உச்சரிப்பு மாறாமலேயே உச்சரிப்பர்” என தனது கனவு திட்டமான “சிலை” பற்றி விவரிக்கிறார் அருண் டைட்டன். 2019-இல் தோன்றிய சிலை கலைக்கூடம் உலகளவிலான சிலைகள் செய்யும் ஓர் கலைக்கூடமாக உருமாறும் வண்ணமே தோற்றுவிக்கப்பட்டது.
பள்ளிக்கூடத்தில் மந்தமான மாணவராகவே அருண் பார்க்கப்பட்டார். “தாரே சமீன் பர் என்ற இந்தி படத்தில் வரும் சிறுவனைப் போலவே நானும் பள்ளியில் மற்ற மாணவர்களுக்கு மத்தியில் எழுதவும் படிக்கவும் சிரமப்பட்டேன். சொல்லப் போனால் நான் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தேன். சென்னையில் உள்ள கவின்கலைக் கல்லூரியில் (Government College of Fine Arts) சேர்வதற்காகவே மீண்டும் அந்த தேர்வினை எதிர்கொண்டேன். ஏனெனில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் மட்டுமே அந்த கல்லூரியில் இடம்பெற முடியும் என்று இருந்தது.”
கல்லூரி வாழ்க்கை ஒரு புது அத்தியாயமாக இருந்தது. கட்புல வடிவமைப்பில் (Visual Design) தனக்கு ஆர்வம் இருப்பதை கண்டறிந்த அருண் அதில் கைத்தேர்ந்தவராக விளங்க முடிவு செய்தார். தனக்கு தகுந்த இடத்தை ஒருவழியாக கண்டறிந்தார் அருண். “கவின்கலைக் கல்லூரியானது வெவ்வேறு படிப்புகளை உள்ளடக்கியவாறு இருந்தது. சிலைகள் மற்றும் சிற்பங்கள் செதுக்குதல், அச்சுக்கலை, கட்புல வடிவமைப்பு, பீங்கான் கலை மற்றும் ஓவியம் போன்ற துறைகளில் படிப்புகளை அது வழங்கியது. என்னதான் கட்புல வடிவமைப்பில் நான் பட்டம் பெற்று இருந்தாலும் மற்ற கலைகளிலும் ஆர்வம் கொண்டு அவற்றை ஓரளவுக்கு கற்றுக் கொள்ளவே செய்தேன்.” இதுவே சிலைகள் மீதான அருணின் ஆர்வத்தின் துவக்கம் ஆகும்.
இளம் கலைஞரான அருண் 2012-இல் சோஹோவில் தனக்கு இருந்த முழு நேரப் பணியை கைவிட்டுவிட்டு ஆவணப் புகைப்படக் கலையில் தனக்கு இருந்த தீரா ஆர்வத்தினால் முழுமையாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். “பிழைப்புக்காக பகுதி நேர வேலையாக திருமண நிகழ்வுகளில் நான் புகைப்படங்கள் எடுத்து வந்தேன்,” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் அருண். புகைப்படக்கலையில் மெதுவாக வளர்ச்சி பெற துவங்கிய அருணுக்கு திரைப்படத் துறையில் சில முக்கியமான அரிய வாய்ப்புகள் கிடைத்தன. குக்கூ, ஜிப்ஸி ஆகிய திரைப்படங்களின் முன்னோட்டக்காட்சிகளுக்கான புகைப்படங்களை அருணே எடுத்தார். அத்துடன் விஜய் விருதுகள், ஸீ விருதுகள் மற்றும் பிஹைன்ட்வுட்ஸ் கோல்ட் விருதுகள் போன்ற விருதுகள் வழங்கும் விழாக்களில் புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்த பயணத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானின் நம்பகமான புகைப்படக்கலைஞர் என்ற தகுதியையும் பெற்றார் அருண்.
இதற்கிடையில் விதை கலை களம் (Vidhai Art Space) என்ற அமைப்பையும் நடத்தி வந்தார் அருண். இந்த அமைப்பின் மூலம் புகைப்படக்கலைஞர்களையும், சிற்பக் கலைஞர், பறையிசைக் கலைஞர் போன்ற கலைஞர்களையும் அழைத்து தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்தும் அவர்களின் கொள்கைகள் குறித்தும் உரையாடச் சொல்வார். “2019-ஆம் ஆண்டில் தனது படைப்புகளைக் குறித்து உரையாட, சென்னை கவின்கலைக் கல்லூரியின் தலைமை ஆசிரியரும் தலைசிறந்த சிற்பக் கலைஞருமான திரு. சந்துரு குருசுவாமி என்பவரை நான் அழைத்து இருந்தேன்,” என நினைவுக் கூறுகிறார் அருண். இந்த நிகழ்வுக்கு பிறகு பேராசிரியர் சந்துருவுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஆரம்பித்தார்.
“அம்பையில் இருக்கும் தனது கலைக்கூடத்திற்கு என்னை அழைத்து இருந்தார் அவர்” என தொடர்கிறார் அருண். ஜனவரி மாதம் துவக்கம் அது. அவருடனான பயணங்களின் போது அருண் அவரது வீட்டில் தங்குவது வழக்கம். “அது ஒரு மிகப்பெரிய வீடு. அந்த வீட்டில் ஆங்காங்கே சிலை செய்யும் பொருட்கள் சிதறிக் கிடந்தன. அவை பழமை கலந்த அழகினை அந்த வீட்டுக்குக் கொடுத்தன,” என அவர் பூரிப்புடன் விவரிக்கிறார். அருண் விடைபெறும் வேளையில் சிற்பக் கலைஞரான சந்துரு தனது வீட்டிற்குள் சென்று தனது கைகளில் சிறிதான பொருள் ஒன்றுடன் திரும்பினார். பத்து அங்குல உயரம் கொண்ட பெரியார் சிலை அது. அதன் பக்கத்தில் ‘அருணுக்காக’ எனும் வார்த்தை பொறிக்கப்பட்டு இருந்தது. “நான் அப்பொழுது தான் பெரியாரைப் படிக்கத் துவங்கி இருந்தேன். அச்சமயத்தில் அவர் தந்த பெரியார் சிலை ஆனது என்னுள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று கூறி நம்மிடம் அந்த சிலையை காட்டுவதற்கென அவரின் கலைக்கூடத்தில் இருக்கும் சிலைகளை கண்களால் அலசுகிறார் அருண்.
தனது பேராசிரியரின் இந்த செயலானது தனது வாழ்வின் பெரிய திருப்புமுனையாக இருந்ததோடு தனது வாழ்வின் அடுத்த அத்தியாயத்தின் விதையாகவும் இருந்தது. இந்நிகழ்வு சிலைகள் விற்பனை செய்யும் ஓர் யோசனையை அருணுக்குள் தூண்டியது. என்னதான் புகைப்படக்கலை தனக்கு மனதுக்கு பிடித்த பணியாக இருந்தாலும் ஒவ்வொரு நிகழ்விலும் தான் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டுமென்பதால் அதனை விரிவாக்குவது என்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் சிலைகளின் விற்பனையிலோ அப்படியில்லை. சிலைகள் செய்யும் கலையை அதில் கைத்தேர்ந்த வல்லுநர்கள் பார்த்துக் கொள்ள அருண் அவற்றின் விற்பனையில் கவனம் செலுத்த முடியும். “என்னுடைய இந்த புதிய பயணத்தில் என்னை வழிநடத்துவதற்கு சந்துரு ஐயா ஒப்புக் கொண்டார்,” என கூறுகிறார் இளம் தொழில்முனைவோரான அருண். அத்துடன், “நான் அம்பையில் இருந்து சென்னை திரும்பும் பயண நேரத்திலேயே சிலைகள் உற்பத்தி செய்யும் “சிலை” எனும் நிறுவனத்தின் கட்டமைப்பை எனது கற்பனையில் செதுக்கி முடித்தேன்” என்கிறார்.
ஒரு வாரத்திற்குள்ளாகவே சிலை எனும் நிறுவனம் பிறந்தது. அதற்கு தேவையான ஏற்றுமதி-இறக்குமதி சான்றிதழ் பெறப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி (GST) எண் பெறப்பட்டு, சிலை நிறுவனத்துக்கென ஓர் வங்கிக் கணக்கும் துவங்கப்பட்டது. அடுத்ததாக மேலும் பல சிற்பக் கலைஞர்களை கண்டறிந்து அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. உள்ளூரில் இருக்கும் கலைஞர்களை தேடியும் அவர்களை தொடர்பு கொள்ளும் செயல்முறையிலும் அருண் ஈடுபட்டார். அப்பொழுது தான் அவருக்கு ஒன்று புரிந்தது. தான் கட்டமைக்க நினைக்கும் கனவு திட்டத்தின் அளவினை தான் சந்தித்த எந்த சிற்பக் கலைஞராலும் கற்பனை செய்துக் கூட பார்க்க முடியவில்லை என்று.
இதன் விளைவாக கள ஆய்வுகள் மேற்கொள்வதற்காகவே இரண்டு நபர்களை அவர் முதலில் பணியமர்த்தினார். அவர்கள் அனைவரும் குழுவாக இணைந்து சிற்பக் கலையின் வரலாறு, சிற்பங்கள் செய்ய பயன்படும் பொருட்கள், அந்த செயல்முறையில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் சிலைகள் செய்யும் நுட்பங்களில் இருக்கும் வளர்ச்சிகள் பற்றி ஆய்வு செய்தனர். “எனது பயணத்தின் அடுத்த ஒன்பது மாதங்கள் உலகமெங்கும் இருக்கும் சிலை வடிவமைப்புத் துறையினைப் பற்றி ஆய்வு செய்வதில் நகர்ந்தது,” என சிரிக்கும் அவர் ஒவ்வொரு நாட்டிலும் சேகரிப்புகளாக (collectible) மக்கள் சேகரித்து வைக்கும் வெவ்வேறு வகையான பொருட்கள் பற்றி நம்மிடம் விவரிக்கிறார்.
இக்கட்டத்தில் அருண் ஒன்றினை நன்கு உணர்ந்தார். இரு பரிமாணங்கள் கொண்ட புகைப்படங்களைக் காட்டிலும் முப்பரிமாணங்கள் கொண்ட சிலைகள் வெகு நேர்த்தியாக நினைவுகளை எழுப்பும் திறன் கொண்டவையாக இருக்கின்றன என்பதை அவர் அறியலானார். “ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தின் அல்லது செல்லப் பிராணியின் அல்லது ஏதேனும் பிரமுகரின் புகைப்படங்களை தங்கள் வீட்டில் வைத்திருப்பர். இதுவே இவையனைத்தும் முப்பரிமாணம் கொண்ட சிலைகளாக இருந்தால்” என கண்களில் வியப்பு பொங்க கூறும் அவர் மேலும் தொடர்கிறார். “எடுத்துக்காட்டாக நமது முன்னோர் ஒருவரின் சிலை நம்மிடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அதனை தொட்டு உணர முடியும். அப்படி தொடுகையில் அவரின் காதுகள் எப்படி தொங்கிப் போய் இருந்தன என்றும் அவர் தலையில் அவர் எப்படி பூச் சூடி இருந்தார் போன்ற நுணுக்கங்களை உணர முடியும்,” என இந்த உணர்ச்சிகரமான தருணத்தை தனது கைகளில் சைகைகளால் செய்து காண்பிக்கிறார் அவர்.
சிலை நிறுவனத்திற்கு விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியமாக இருந்தது. சிலைகள் செய்து கொடுக்குமாறு சராசரியாக நூறு கோரிக்கைகளை இந்நிறுவனம் தினமும் பெறுகிறது. பாரம்பரிய முறையில் களிமண் மற்றும் கல் கொண்டு சிற்பம் செதுக்கும் நுட்பங்களானது பெருமளவில் ஒரே மாதிரியான தரமான சிலைகளை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக இருப்பதில்லை. இம்முறையில் சிலைகளில் சிறு மாற்றங்கள் செய்வதும் சாத்தியமில்லை. பேரளவு உற்பத்தி செய்ய வேண்டுமெனில் சிலை செய்யும் செயல்முறையை இயந்திரமயமாக்குவது இன்றியமையாத ஒன்றாக இருந்தது. எனவே தொழில்நுட்பத்தை சிலைகளின் உற்பத்தியினுள்ளே புகுத்த முடிவு செய்தார் அருண்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தரம் வாய்ந்த பொடியாக்கப் பட்ட கல்லினைக் கொண்டு சிலை செய்யப்படுகிறது. அவ்வாறு உருவாகும் சிலையானது கற்சிலைக்கு இருக்கும் வலுவை பெறவும் நூறு ஆண்டு காலம் நீடித்து நிலைக்கவும் இறுதியில் ஓர் திரவ செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறையானது இரண்டு மாத கால அளவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சிலைகளை வடிவமைக்கவும் உற்பத்தி செய்யவும் வழிவகுத்து இருக்கிறது. தற்பொழுது மடிப்பாக்கத்தில் இருக்கும் உற்பத்தி ஆலையில் முப்பத்து ஐந்து நபர்கள் கொண்டு செயல்படும் இந்த குழுவானது தாம்பரத்தில் புதிதாகவும் பெரிதாகவும் உருவாக்கப்படும் உற்பத்தி ஆலையின் கட்டுமானப் பணிகள் நிறைவேறியவுடன் இந்த ஆண்டு இறுதியில் மேலும் சில நபர்களை பெற்று கிட்டத்தட்ட எண்பத்து இரண்டு நபர்கள் கொண்ட குழுவாக மாற உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் துவங்கப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களுக்கு சமூக வலைத்தளம் பெரிய வரமாக விளங்கியது. சிலை நிறுவனத்திற்கும் அதன் துவக்கக் காலத்தில் சமூக வலைத்தளம் பெரிதும் உதவியாக இருந்தது. பிரபலங்களையும், பிரமுகர்களையும் சிலைகளாய் செய்து அவர்களுக்கு பொது மக்கள் மனங்களில் ஓர் நிலையான இடம் கொடுக்கும் சிலை நிறுவனத்தின் யோசனை அமோக வெற்றியடைந்தது. இருப்பினும் வெற்றிப்பாதையில் இடையூறுகள் இருக்குமல்லவா? அதே போல சிலை நிறுவனமும் ஓர் அடையாளமாக வளர்ச்சி பெற்று வந்த வேளையில் சில இணையத்தள ஒழுங்காற்று அமைப்புகளின் (regulatory body) பிடியில் அது சிக்கியது. தேர்தலுக்கு மறைமுகமாக இணையத்தளம் மூலம் பிரச்சாரம் செய்வதாக தவறாக கருதப்பட்டு சிலை நிறுவனத்தின் சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த தருணத்தில் எவ்வாறு சிலை நிறுவனம் நடுநிலையாக செயல்பட்டு வருகிறது என்றும் எவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் அவர் செய்யும் தொழிலில் பிரதிபலிக்கக் கூடாது என்பதை பற்றியும் விவரிக்கிறார் அருண். “என்ன விற்பனை ஆகிறதோ அதையே நான் விற்பனை செய்கிறேன். எனது கொள்கைகளுக்கும் நான் விற்பனை செய்யும் சிலைகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை,” என ஆணித்தரமாகக் கூறுகிறார் அருண். கணக்குகள் முடக்கப்பட்டதால் தன் தரவுகள் (data) அனைத்தையும் இழந்த சிலை நிறுவனமானது மீண்டும் முதலில் இருந்து சமூக வலைத்தள கணக்குகளை துவங்கியது. ஆனால் இம்முறை இந்நிறுவனத்தினர் முன்கூட்டியே அனைத்து தரவுகளையும் காப்புநகல் (backup) எடுத்து வைக்கத் துவங்கினர்.
இந்த நிகழ்வானது வெறுமனே இணையத்தளத்தில் மட்டுமல்லாமல் நேரடியாக சிலை நிறுவனத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற தூண்டுதலை அருணுக்குள் ஏற்படுத்தியது. எண்ணிம (digital) முறையில் அவர்கள் செய்த விளம்பரங்களின் அடிப்படையில் பெறப்பட்ட தரவானது வாசிப்பை விரும்பும் நபர்கள் பெரும்பாலும் சிலைகளை வாங்கவும் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தது. “சொல்லப்போனால் நாங்கள் சிலைகளாக செய்யும் வரலாற்று மற்றும் அரசியல் தலைவர்களின் முக்கியத்துவத்தை அவர்களைப் பற்றி வாசித்த பிறகே நான் புரிந்துக் கொண்டேன்,’ என கூறுகிறார் நிறுவனர் அருண். சில்லறை வணிகத்திற்குள் நுழைந்த சிலை நிறுவனமானது ஒடிசி, பூம்புகார் போன்ற கடைகளில் புத்தகங்களுக்கும் கைவினைப் பொருட்களுக்கும் மத்தியில் தனது சிலைகளை விற்பனை செய்ய துவங்கியதோடு சென்னை புத்தகக் கண்காட்சியிலும் அரங்கு ஒன்றமைத்து விற்பனையில் ஈடுபட்டது. “தமிழ்நாடு, கலாச்சாரத்தோடும், பாரம்பரியத்தோடும், வரலாறோடும் மிகவும் வேரூன்றிய மாநிலம் ஆகும். இங்கு இருப்பது போல பின்பற்றாளர்கள் கொண்ட பிரபலங்களையும் தலைவர்களையும் மற்ற மாநிலங்களில் கண்டறிவது மிகவும் அரிதான ஒன்றாகும்.”
சிலை நிறுவனமானது தனது பயணத்தில் சில முக்கியமான திட்டங்களையும் முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றியது. மாஸ்டர் திரைப்படத்திற்கு அதிகாரப்பூர்வ வணிக பங்குதாரராக (official merchandise partner) ஆன சிலை நிறுவனம் திரைப்படத்தின் கதாநாயகராகிய விஜயின் சிறிய அளவிலான சிலையை செய்து விற்பனை செய்தது. மேலும் தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு இணங்க அந்த அரசின் சட்டசபை வளாகத்தின் சிறிய ஒப்புருவை செய்தது சிலை நிறுவனம். இந்த ஒப்புருவானது ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சரால் பரிசாக வழங்கப்பட்டது.
“சிலை நிறுவனத்தால் வடிக்கப்பட்ட சிலைகள் இதுவரை கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து அஞ்சல் குறியீட்டு எண்களுக்கும் அனுப்பப்பட்டிருக்கும். மேலும் உலகளவில் இதுவரை முப்பத்தி எட்டு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும்,” என உற்சாகம் பொங்க கூறுகிறார் இளம் தொழில்முனைவோரான அருண். தங்கள் சில்லறை வணிகத்தை விரிவாக்குவதற்காக ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் வட அமேரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சிலரிடம் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறும் அவர் அமேசான் க்ளோபலிலும் தங்கள் விற்பனையை துவங்க உள்ளதாக கூறுகிறார். பள்ளிக்கரணையில் உள்ள இந்த பழமை சாயல் கொண்ட சிலை கலைக்கூடம் நிகழ்த்தப் போகும் விந்தைகள் இன்னும் பல உள்ளன. சிலைகள் செய்யும் செயல்முறையை கொண்டே பொம்மைகளை வடிவமைத்து உற்பத்தி செய்யப்போவதை தனது எதிர்கால திட்டங்களில் ஒன்றாக கூறுகிறார் நிறுவனர் அருண். நிஜ மனிதர்களைப் போல பார்ப்பதற்கு அச்சு அசல் இருக்கும் சிலைகளைக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் தனது கலைக்கூடத்தைப் போன்றே அருணும் பல யோசனைகளை தன்வசம் கொண்டு உயிர்ப்புடன் இருக்கிறார். அத்துடன் தனது படைப்பாற்றல் மிக்க முன்னெடுப்புகளுக்கும் அவற்றை வணிகப்படுத்துவதற்கும் இடையே ஓர் சமநிலையை உருவாக்கும் தனது இடைவிடா முயற்சிகளுக்கு மத்தியில் ஐயங்கள் எதுவுமின்றி புத்தாக்கங்களை புத்துணர்ச்சியுடன் அயராது மேற்கொண்டும் வருகிறார் அருண் டைட்டன்.