“புதுசா கல்யாணம் ஆன ஜோடி ஒன்னு அவங்க கல்யாண மாலை-ல இருந்த பூக்கள அனுப்பி, அவங்க நினைவுப் பெட்டில அதையும் சேர்க்க சொன்னாங்க!” என பூரிப்புப் பொங்கக் கூறுகிறார் அம்ருதா கிரிராஜ் (Amrita Giriraj). அலன்காரா (Alankaara) நிறுவனத்தின் தயாரிப்புகளை செதுக்குவது வாடிக்கையாளர்களின் தனித்துவமான வாழ்க்கைக் கதைகளே. அணிகலன்கள் மற்றும் வாழ்முறை பொருட்களைத் தயாரிக்கும் அலன்காரா, பிசின் கலையின் மூலம் நினைவுகளைப் பொக்கிஷமாக்கி காலச்சுவடுகளை பத்திரப்படுத்தும் செயலில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது.
தனது பதினைந்து வயதில், விலங்கியல் மற்றும் தாவரவியலை உள்ளடக்கிய அறிவியல் பாடப்பிரிவான தூய அறிவியலில் தனக்கு பெரிதும் ஆர்வம் இருப்பதை கண்டறிந்தார் அம்ருதா. தனது உயிரியல் பதிவு குறிப்பேட்டில் பூக்களின் பாகங்களை வரைவதானாலும் சரி, பூக்களை கூராய்வு செய்வதானாலும் சரி—செடிகளின் உலகத்தில் தான் இருக்கும் பொழுது தன்னைச் சுற்றி நேரம் உறைவதுப் போல உணர்ந்தார் அம்ருதா.
பெரும்பாலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அறியாமையால் தங்களின் விருப்பப் பாடப்பிரிவை தேர்வு செய்யாமல், எது படித்தால் வேலை கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்தி தடம் மாறி செல்வதுண்டு. அவர்களைப் போலவே அம்ருதாவும் தனது தனித்துவமான ஆர்வங்களில் பெரிதளவில் கவனம் செலுத்தவில்லை. தனது பதினோறாம் வகுப்பில், மானுடவியல் (Humanities) பாடப் பிரிவை தேர்வு செய்த அவர், வரலாறு, உளவியல் போன்ற பாடங்களைப் படிக்கத் துவங்கினார். “பள்ளியில் படிக்கும் பொழுது நம்மளோட பெரிய குறிக்கோளே தேர்வுல தேர்ச்சி பெறனும்னு தான் இருந்துச்சு,” என தன் நினைவலைகளில் இருந்து மீண்டவாறு சிரித்துக் கொண்டே கூறுகிறார் அவர். “என்ன இருந்தாலும் நான் கடந்து வந்த பாதையையும் நான் எடுத்த முடிவுகளையும் இப்போ யோசிச்சு பாத்தா, இது எல்லாமே ஏதோ ஒரு வகையில் நான் அலன்காரா துவங்குறதுக்கு தூண்டுகோலா இருந்துருக்குனு தெரியுது.”
காட்சிக் கலையில் (visual arts) நான்கு ஆண்டுகள் தனது இளங்கலைப் படிப்பை முடித்த அம்ருதா, பெங்களூருவில் இருக்கும் ஸ்ருஷ்டி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பயிலகத்தில் (Srishti Institute of Art, Design and Technology), ஆடை வடிவமைப்பில் முதுகலைப் படிப்பை மேற்கொண்டார். “ஆடை வடிவமைப்பு ரொம்ப சுலபமா இருந்துச்சு. பரப்புகளில் எப்படி வடிவமைப்புகளை செயல்முறைபடுத்தனும்னு (surface design) எனக்கு சுலபமா புரிஞ்சுது.”
அம்ருதாவின் கல்லூரி வாழ்வில் இரண்டாம் ஆண்டு தான், தனது வாழ்க்கையை புரட்டி போடும் விதமாக அமைந்தது. தனது இறுதி பருவத்தில் உலோக மற்றும் மரவேலைப்பாடுகளின் உலகத்துக்கு அம்ருதா அறிமுகமானார். “எனக்குத் திடீர்னு செய்பொருள் வடிவமைப்பு (product design) மேல அதிக ஆர்வம் வந்துச்சு. அந்தத் துறையில பணி செய்யலாம்னு முடிவு பண்ணேன்,” எனும் அவர், எவ்வாறு தனது கல்லூரி படிப்பானது, வடிவமைப்புத் துறையில் இருக்கும் எண்ணற்ற புது புது வாய்ப்புகளை தனக்கு அடையாளம் காட்டியது என்று நினைவுக் கூறுகிறார்.
2004-ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய மோசமான சுனாமி ஏற்பட்ட பொழுது, நம் இளம் வடிவமைப்பாளரான அம்ருதா கல்லூரியில் பயின்று கொண்டு இருந்தார். சென்னையை அடிப்படையாகக் கொண்டு உருவான, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலைத்த வாழ்வாதார திட்டமானது (Post-Tsunami Sustainable Livelihood Program), கடல் சிப்பிகள் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் கன்னியாகுமரியின் கைவினைக் கலைஞர்களுக்கு, ஓர் வர்த்தக முறை அமைப்பதற்காக, ஸ்ருஷ்டி கல்லூரியுடன் இணைந்து செயல்படத் துவங்கியது.
சுனாமி பேரிடரானது கடலோர மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் புரட்டி போட்டது. அதன் பின்விளைவுகளை பல ஆண்டுகள் அவர்கள் சந்திக்க நேர்ந்தது. கடலோர கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் முக்கியமாக கடல் சிப்பிகளையும் சுற்றுலாத் துறையையும் நம்பி இருந்தது. சுனாமி பேரிடரினால் இரண்டுமே பாதிக்கப்பட்டது. சுனாமியின் கோரத் தாண்டவத்தை கண்ட கன்னியாகுமரியில் வாழும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை, மீட்டெடுக்கும் வழிமுறைகளை கண்டறியுமாறு, ஸ்ருஷ்டி கல்லூரி மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அடுத்த மூன்று மாதங்கள் அங்கிருந்த கலைஞர்களுடன் தங்கி, அவர்களின் வாழ்க்கை முறையையும் வணிகத்தையும் ஆராயந்தறிந்தார் அம்ருதா. வடிவமைப்பாளராக தான் கடந்து வந்தப் பயணத்தைப் பற்றி அம்ருதா நம்முடன் பகிர்கையில், அதில் தான் கற்ற பாடங்களையும் முன்னெடுத்து வைக்கிறார். “நமது சூழலமப்பை பாதிக்காத வகையில் நமது வடிவமைப்புகள் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும்.” காலங்காலமாக கடல் சிப்பிகளைக் கொண்டு பொருட்கள் செய்து வந்த கைவினைக் கலைஞர்கள், ஓர் சிலையினை செய்ய குறைந்தது ஐம்பது சிப்பிகளைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் அதிகளவு சிப்பிகள் தேவைப்பட்டதால், கடற்படுகையில் அவர்கள் தொடர்ந்து கடல்சிப்பிகளை தேடியெடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆராய்ச்சியின் பொழுது தற்செயலாக படிவமாதல் (fossilisation) பற்றி அறியலானார் அம்ருதா. தனக்கு ஓர் எளிமையான யோசனைத் தோன்றியது. ஓர் கடல்சிப்பியை எடுத்து பிசினுள் இட வேண்டும். பின்னர் அந்த பிசினானது படர்ந்து, ஓர் தெளிவான படலமாக அந்த சிப்பியை சுற்றி உருவாகும். சாதாரணமாக ஒருவரின் கண்களுக்குப் புலப்படாத சிப்பியின் மீதிருக்கும் சுவாரஸ்யமான வடிவங்களை, இவ்வாறு உருவாகும் படலமானது, மிகைப்படுத்திக் காட்டும். இவ்வாறு பிசினுள் இருக்கும் கடல்சிப்பிகள், அணிகலன்களாகவோ அல்லது வாழ்முறை பொருட்களாகவோ பின்னர் விற்கப்படலாம். இது அனைத்திற்கும் மேலாக முன்பு இருந்ததை போல் அல்லாமல் மிகக் குறைந்த வளங்களை கொண்டு, முன்னர் உருவாக்கப்பட்ட பொருட்களை விடவும் ஓர் மகத்தான பொருளை உருவாக்க முடிவதே இந்த யோசனையின் சிறப்பாகும். இந்த யோசனையை அங்குள்ள கைவினைக் கலைஞர்கள் பெரிதும் வரவேற்று உடனடியாக அதனை செயல்முறைப்படுத்தத் துவங்கினர்.
“இந்த யோசனை நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதை சோதனை செய்யும் விதமாக சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள கடைகளில் இந்த யோசனையைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களை விற்பனைக்கு அனுப்பினோம்,” எனும் அம்ருதா, “ஒரே வாரத்தில் அவை யாவும் விற்பனை ஆகின” என உற்சாகம் பொங்க நினைவுக் கூறுகிறார். முன்னர் ஓர் சிலையானது குறைந்தது ஐம்பது கடல்சிப்பிகளைக் கொண்டு செய்யப்பட்டு இருந்ததோடு, கிட்டத்தட்ட எழுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது பிசினுள் இடப்பட்டிருக்கும் ஓர் கடல்சிப்பி மட்டுமே, கிட்டத்தட்ட முன்னூறு ரூபாய் வரை விற்பனை ஆகிறது. “சமூகத்தில் ஓர் மாற்றத்தை விதைப்பதற்கான திறன் வடிவமைப்புக்கு உள்ளது என நான் நம்பத் துவங்கினேன்,” என முகம் மிளிரக் கூறுகிறார் அம்ருதா.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலைத்த வாழ்வாதார திட்டமானது, நாளடைவில் இந்த முயற்சிக்கு நிதி வழங்குவதை நிறுத்தியது. தனது இறுதியாண்டு செயல்திட்டமான இந்த முயற்சியை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்று தெரியாமல் இருந்த அம்ருதா, அடுத்த சில ஆண்டுகள் ஓர் கடையில் விற்பனையாளர் ஆக வேலை செய்யத் துவங்கினார். விற்பனையாளர் வேலை என்பது, சூழ்நிலையால் அவருக்குக் கிடைத்த வாய்ப்பே ஒழிய அவரின் விருப்பப்பணியாக அது இருக்கவில்லை. எனினும் அவருக்குக் கிடைத்த இந்த அனுபவமானது, அலன்காரா எனும் துளிர் நிறுவனத்தைத் துவங்குவதற்குத் தேவையான திறன்களை கட்டமைக்க அவருக்குப் பெரிதும் உதவியாக இருந்தது.
2015-இல் பேரிடரால் சென்னை பாதிப்புக்குள்ளானது. தனது பொழுபோக்கு வேலை வளர்ச்சிப் பெற இந்நிகழ்வானது தூண்டுகோலாக அமைந்தது. “என் அம்மாவுக்கு தோட்டக்கலை ரொம்ப பிடிக்கும். அதுனால எங்க வீட சுத்தி நிறைய பூக்கள் வெச்சிருப்போம்,” எனும் அம்ருதா, ஒவ்வொரு பூ வகையையும், அதன் வண்ணத்தை வைத்தும் வடிவத்தை வைத்தும் வர்ணிக்கிறார். 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாரம் முழுவதும் பெய்த கனமழையாலும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் பூக்கள் மொத்தமும் பாழாகின. “நானும் என் அம்மாவும் எஞ்சி இருந்த பூக்கள எடுக்கப் போனோம்,” எனக் கூறுகிறார் அவர். நீல நிற சங்குப்பூவில் எஞ்சியவற்றை இருவரும் பாதுகாக்க முயன்றபோது, அம்ருதாவிற்கு திடீரென பிரகாசமான ஓர் யோசனைத் தோன்றியது. சங்குப்பூ செடியில் இருந்து உதிர்ந்திருந்த பூக்களை சேகரித்து, அவற்றை ஓர் புத்தகத்தின் பக்கங்களின் நடுவே வைத்து அழுத்தி, பின்னர் அவற்றை பிசினுள் இட்டார். “புதுசா ஏதும் கண்டுபிடிச்சுட்டேனோ அப்படின்னு நான் அன்னைக்கு ஆச்சரியத்துல என்னை நானே கேட்டுக்கிட்டேன்” என புன்முறுவல் செய்கிறார் அம்ருதா.
விற்பனையாளர் ஆக பணியாற்றி வந்த அவர், தனக்குக் கிடைத்த ஓய்வு நேரம் முழுவதையும் கலைவினைக் கூடமாக மாற்றப்பட்ட தனது கார் கொட்டகையில் செலவிட்டார். பூக்களை சேகரித்து அங்கே எடுத்து வந்து உலர வைத்து பின்னர் அவற்றை பிசினுள் இட்டார். தனது இறுதியாண்டு திட்டப்பணியின் பொழுது தான் கண்டறிந்த படிவமாதல் கலையானது இவ்வளவு ஆண்டுகளாகியும் தனக்குள் ஊறிப் போய் இருந்ததோடு மட்டுமல்லாமல், தனது அலுப்பூட்டும் வேலையில் தனக்குக் கிடைக்காத நிறைவையும் தனக்கு அளித்தது.
2017-ஆம் ஆண்டு ஹனு ரெட்டி ரெசிடென்செஸ் (Hanu Reddy Residences) எனும் நட்சத்திர விடுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், படிவமாக்கப்பட்ட பொருட்கள் யாவும் அலன்காரா எனும் முத்திரையின் கீழ் முதல் முறையாக விற்பனைக்கு வந்தன. இவை அந்நிகழ்வில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நம் இளம் வடிவமைப்பாளரை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வதற்கு பெரிதும் ஊக்குவித்தன.
அம்ருதா தனது வேலையை விட்டு விட்டு, தனது குடும்பத்தினரிடம் இருந்து கடனாக பணத்தைப் பெற்று, தனது துளிர் நிறுவனத்தை பதிவு செய்ய முற்பட்டார். “உண்மையா சொல்லணும்னா நான் அலன்காரா நிருவனத்த பதிவு செய்ய போன அப்போ சொந்தமா தொழில் நடத்துறது எப்படின்னு எனக்கு அவ்வளவா தெரியாது,” என மென்மையாகக் கூறுகிறார் அவர். தனது நிறுவனத்தை தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக (private limited company) பதிவு செய்வதற்கென, அரசு அலுவலகம் ஒன்றில் ஓர் மேசையின் முன்னே அமர்ந்து விண்ணப்பங்களை அம்ருதா நிரப்பிக் கொண்டிருக்க, மேசையின் மறுபுறத்தில் அமர்ந்து இருந்த அதிகாரி ஒருவர், ஓர் நிறுவனத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனமாக (MSME) பதிவு செய்வதில் இருக்கும் பயன்களை விளக்கினார். அதிலும் குறிப்பாக மகளிர் சொந்தமாக நடத்தும் தொழில் எனில் அதற்கென சலுகைகள் இருப்பதையும் குறிப்பிட்டார்.
அப்பொழுதில் இருந்து அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னரே அம்ருதா எழுந்து, ஓர் பெரிய பையுடன், கோயம்பேடு பூ சந்தைக்கு விரைவார். “என் தொழிலுக்குப் பூக்கள் வாங்குற முறை நிலையானது இல்லங்கறது எனக்குத் தோனுச்சு,” எனும் அவர், பேரளவில் பூக்கள் வாங்கிய பொழுது நிறைய பூக்கள் வீணாகியது என்கிறார். நாளடைவில் உள்ளூர் பூ வகைகளை, மலை வாழிட (hill station) தோட்டங்களில் இருந்தும், அயல்நாட்டு பூ வகைகளை, உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக் கற்றுக் கொண்டார் அம்ருதா.
சராசரியாக மூன்று நாட்களில், இருபத்து ஐந்து பிசின் கலைவினைப் பொருட்கள் செய்யப்படுகின்றன. முதலில் புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையிலோ அல்லது நுண்ணலையைப் (microwave) பயன்படுத்தியோ பூவானது உலர்த்தப்படுகின்றது. பின்னர் படலம் போல பிசின் அதன் மேலே ஊற்றப்படுகின்றது. ஊற்றப்பட்டப் பின் எட்டு மணி நேரம் அது உலர்த்தப்படுகின்றது. பின்னர் பூவினை உறைப் போல சூழ, பிசின் ஆனது மீண்டும் அதன் மேல் ஊற்றப்படுகின்றது. இந்த செயல்முறையானது முடிவடைய கிட்டத்தட்ட முப்பத்தி இரண்டு மணி நேரம் ஆகிறது. “திங்கட்கிழமை ஒரு தொகுதிய (batch) செய்ய ஆரம்பிச்சோம்னா அதை புதன்கிழமை அனுப்ப ஆரம்பிப்போம். அப்புறம் அடுத்த தொகுதிக்கான ஏற்பாடுகள செய்ய ஆரம்பிப்போம்,” என விவரிக்கிறார் அம்ருதா.
இந்தியா எங்கிலும் நடக்கும் கண்காட்சிகளில் அலன்காரா தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தத் துவங்கியது. தனித்துவமான அதன் தயாரிப்புகளை, சுவாரஸ்யமான நினைவுப் பொருட்களாக எண்ணி, மக்கள் ஆரவாரமாக வாங்கினர். குறிப்பாக பரிசுப் பொருட்களாக தருவதற்கென பலரும் அவற்றை வாங்கினர். எனினும், சில வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகளை ஆங்காங்கே அம்ருதா சந்திக்கவே செய்தார்.
மும்பையில் நிகழும் காலா கோடா திருவிழாவில் (Kala Ghoda festival), அலன்காராவின் அரங்கினை கடந்து செல்கையில், பெண் ஒருவர், அதன் தயாரிப்புகளை வெறித்துப் பார்த்த வண்ணம் திகைப்பில் ஆழ்ந்தார். “கொஞ்சம் கூட கருணை இல்லாதவங்களா நீங்க!” என அம்ருதாவைப் பார்த்து அவர் கத்தினார். பின்னர் பூக்களை பிசினிக்குள் போட்டு கொடுமைப்படுத்துவதாக அம்ருதாவை குற்றம் சாட்டினார். “அடுத்த முப்பது நொடிகளுக்கு நான் வாய் அடைச்சு போயிட்டேன்,” என சிரிக்கும் அம்ருதா, அதன் பின்னர் நடந்தவற்றை தொடர்ந்து நினைவுக் கூறுகிறார். இது மாதிரியான ஓர் விமர்சனத்தை அவர் இதன் முன்னர் சந்தித்ததில்லை. “இந்தப் பூக்கள் யாவும் உதிர்ந்த பூக்கள். இவற்றிற்கு வலி தெரியாது,” என பொறுமையாக அந்தப் பெண்ணுக்குப் பதிலளித்த அவர், அதனை உறுதி செய்யும் விதமாக அதற்கான அறிவியல் ஆதாரத்தையும் விவரித்தார். “நாங்க ரெண்டு பேரும் பொருட்கள் செய்ற செயல்முறையைப் பற்றி விரிவா பேசினோம். கடைசியா, அவங்க பேரப் பசங்களுக்குக் கொடுக்கணும்னு நிறையா நினைவுப் பொருட்கள எங்கக் கிட்ட இருந்து வாங்கிட்டு போனாங்க!”
2020-ஆம் ஆண்டு, எப்பொழுதையும் விட அலன்காரா அதிகளவு வரவேற்பினைப் பெற்றது. புதிய கட்டடம் ஒன்றினை தங்கள் முழு நேர விற்பனையகம் ஆக மாற்றிய அலன்காரா குழு, ஏழு நபர்கள் கொண்ட குழுவாக விரிவடைந்தது. இதில் நிறுவனத்திற்குள்ளேயே நியமிக்கப்பட்ட ஓர் உலோகக் கொல்லரும் (metalsmith), ஓர் தொலைநிலை விற்பனைக் குழுவும் தொலைநிலை தொழில்நுட்பக் குழுவும் உள்ளனர். ஒருபுறம் இவர்கள் பொருட்கள் பிரபலமடையை, மறுபுறம் மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் இருக்க, படிவக் கலைக் களமானது வளரத் துவங்கியது. இன்ஸ்டகிராம் தளத்தில் துவங்கப்பட்ட பல்வேறு தொழில்களும், அலன்காராவின் கைவினைப் பொருட்களைப் போன்ற பொருட்களை விற்பனை செய்யத் துவங்கினர்.
போட்டிகள் இல்லாத இடம் ஏது? போட்டியாக வளர்ந்து வரும் இந்த புதிய தொழில்களை எண்ணி அம்ருதா தளரவில்லை. அலன்காராவின் தயாரிப்புகள் வெறுமனே படிவமாக்கப்பட்டப் பொருட்கள் அல்ல. மாறாக அவை நினைவூட்டப்பட வேண்டிய வாழ்க்கைக் கதைகள். எனவே, அலன்காரா பூக்களை மட்டும் கலைப் பொருட்களாக மாற்றவில்லை. “சிலர் பழங்கள், காய்கறிகள, சுவாரஸ்யமான பொருட்களாக படிவமாக்கித் தர சொல்வாங்க. உலகத்தோட வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் வேறு சிலர் அங்க இருக்க குறிப்பிட்ட செடிகளை படிவமாக்கச் சொல்லி கேட்பாங்க. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய தொப்புள் கொடிய படிவமாக்கச் சொல்லி கேட்டாங்க,” என நெகிழ்ச்சியாகக் கூறும் அவர், தன்னை அணுகுபவர்களின் கதைகளை கேட்பதில் இருக்கும் சுவாரஸ்யத்தை நம்முடன் பகிர்கிறார். தனது செயல்முறையில் இதுவே முக்கியமான கட்டம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
தன்னை அணுகும் ஒவ்வொரு புதிய வாடிக்கையாளரிடமிருந்தும், படிவமாக்கும் கலையின் மூலம் நினைவுகளை சேகரிப்பதன் மகத்துவத்தை புரிந்துக் கொண்டார் அம்ருதா. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அலன்காரா கலைக் கூடத்தில், அனைவரும் வந்து பார்வையிடும் வண்ணம் நடக்கவிருக்கும் கண்காட்சிப் போன்ற நிகழ்வுக்குப் (open house) பிறகு, அம்ருதா விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ஆபரண கற்கள் கொண்டு புதிய ரக கைவினைப் பொருட்களைத் தயாரிக்க உள்ளார். “இந்த புதிய வகைத் தயாரிப்பானது நிறைய ஆண்டுகள் நீடிக்குற தன்மை கொண்டு இருக்கும்,” என விவரிக்கிறார் அவர்.
வெகு விரைவிலேயே உலக நாடுகளில் தடம் பதிக்க இருக்கிறது அலன்காரா. தற்பொழுது, சந்தை ஆராய்ச்சியின் மூலம் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்நிறுவனமானது, தனது வேர்களை நிலைநாட்டி வருகிறது. “என்னதான் நிறுவனத்துல இருந்து கிடைக்குற வருவாயை தொழில நடத்துறதுக்கு பயன்படுத்துறது நல்லதுனாலும், அதிகரிச்சுட்டு வர போட்டியைக் கடந்து நம்ம வளர்வதும் ரொம்பவே முக்கியம் தான்.” வடிவமைப்பாளராகப் பணிவாழ்வைத் துவங்கி, தொழில்முனைவோராக மாறிய அம்ருதா, எங்கே முதலீடுகள் செய்யலாம் என யோசிக்கும் வேளையில், நிலையான வளர்ச்சிப் பற்றி சிந்திப்பதும் மிக முக்கியமென நம்புகிறார். “நீங்க மனமார ஒன்னு நடக்கணும்னு நினைச்சீங்கனா, அதை செய்து முடிக்குறத்துக்கான வழிய கண்டிப்பா நீங்களே கண்டுப்பிடிப்பீங்க,” எனும் அவர், தனது பணி வாழ்க்கையில், போற போக்கில் தான் கையில் எடுத்த வேலைகள் எல்லாம், அலன்காராவின் பெரும் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வழியில் உதவி உள்ளன என நிறைவு செய்கிறார்.