THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

நகர்சாரா தொழில்களின் முன்னேற்றத்திற்கான நான்கு படிமுறைகள் செயல்திட்டம்

2020-இல் கொரோனா பெருந்தொற்றின் முதலாவது அலையின் போது ஒரு ஆராய்ச்சி திட்டத்துக்காக ரஷ்யாவிற்கு சென்றார் தேன் (Thein). ஆனால், விதியின் விளையாட்டால் அவர் அங்கு சென்ற நேரம் பார்த்து நாடு முழுவதும் பெருந்தொற்றினால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஒரு சிறிய சமையல் இடம் கொண்ட சிறிய அறையில் சிக்கிக் கொண்டார் அவர். முடிவிலா மௌனத்தையும், நாட்களையும் கடக்க அவரின் மடிக்கணினி மட்டுமே அவரிடம் இருந்தது. அவருக்கு அந்த நாட்டின் மொழியும் தெரியாது; அங்கு வசித்த வந்த எந்த நபரையும் தெரியாது. எனவே, இணையத்தளம் ஒன்றினைத் துவங்கி இணையத்தில் இருக்கும் மக்களோடு உரையாடுவதன் மூலம் தன் நீண்ட பொழுதுகளை கழிக்க முடிவு செய்தார். அறையின் மூலையில் அமர்ந்து இருந்த தேனின் முகம், மடிக்கணினி திரையிலிருந்து வந்த பிரகாசமான ஒளியில் மிளிர ‘Nonurbanism (நகர்சாரா வளர்ச்சி இயக்கம் – நகர்மயமாக்கப் படாத இடங்களின் வளர்ச்சிக்கான யோசனைகளையும் தீர்வுகளையும் உருவாக்கும் ஒரு இயக்கம்)’ என்ற வார்த்தைகளை தட்டச்சு இட்டார்.

“நகரத்தில் இருக்கும் நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான பூர்வீகக் கதைகள் இருக்கும். உங்களுக்கு முந்தைய இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளை எடுத்துக் கொண்டால் உங்களின் தாத்தா – பாட்டி அல்லது கொள்ளு தாத்தா – கொள்ளு பாட்டி நிச்சயம் விவசாயம் போன்ற முதன்மைத் தொழிற்துறை (primary sector) தொழில்களில் ஏதேனும் ஒன்றினை செய்தும் கிராமத்தில் வசித்து வந்துமே இருந்திருப்பர். என் கதையும் இதைப் போன்றதே,” எனக் கூறுகிறார் கட்டடக்கலைஞரும் Nonurban Foundation (நகர்சாரா வளர்ச்சி) எனும் நிறுவனத்தின் நிறுவனரான தேன் சௌரிராஜன். “என் தாத்தா ஒரு விவசாயி. 1980-களின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சென்னைக்கு புலம்பெயர்ந்த அவர் சுயமாக தொழில் ஒன்றை துவங்கினார். எட்டாவது வகுப்பு வரை அடிப்படைக் கல்வி பெற்று எங்கள் கிராமத்தில் வசித்து வந்த பெரும்பாலானோருக்கு வேலை செய்வதற்கான திறன்களைப் பெறச் செய்து, அவர்களை அவரின் தொழிலில் பணியமர்த்தினார். இன்றளவும் என் குடும்பத்தில் பலரும் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். எனவே, என் உறவுக்கார சகோதர சகோதரிகள் வளர்ந்த முறையிலேயே என்னால் ஒரு வேறுபாட்டினை காண முடிகிறது.”

கட்டடக்கலை இளங்கலைப் படிப்பின் பணிக் கல்விப் (Internship) பருவத்தின் போதே ஊரக வளர்ச்சிக்கான தன் பயணத்தை துவங்கினார் தேன். “கட்டடக்கலைசார் திட்டப்படங்களை உருவாக்குவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்பதை புரிந்துக் கொண்டார் இளகிய மனம் கொண்ட என் மேலாளர் ஆன அபா நரேன் லம்பா (Abha Narain Lambah). பெருநகர மும்பை மாநகராட்சியோடு (BMC-Brihanmumbai Municipal Corporation) அவர் பணிப் புரிந்து வந்ததால் என்னை நோக்கர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (Observer Research Foundation) எனும் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை குழுமம் (Think Tank) ஒன்றின் பிரதிநிதியாக நியமித்தனர். என் பணிக் கல்வியின் கடைசி நான்கு மாதங்களில் மும்பை நகரின் கரையோரத்தில் வசித்து வந்த நானூறு சமூகங்களை ஆவணப்படுத்துவதும் அவர்களைப் புரிந்துக் கொள்வதுமே என் பணியாக இருந்தது.” இந்த அனுபவமே நம் இளம் கட்டடக்கலைஞருக்கு மிலன் நகரம் சென்று திட்டமிடல் மற்றும் கொள்கை உருவாக்கல் (Planning and Policymaking) எனும் பட்டப்படிப்பை மேற்கொள்ள உந்துதலாக இருந்தது.

சில மாதங்கள் செல்ல, தேன் தான் உருவாக்கிய நகர்சாரா வளர்ச்சி இயக்கத்துக்கான இணையத்தளத்தை மேம்படுத்த முடிவு செய்தார். அந்த சமயத்தில் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெகு சில மேற்கோள்களை வெறுமனே வாக்கியங்களாக மட்டுமே கொண்டிருந்த அந்த தளமானது மேலும் பயனுள்ளதாகவும் ஊக்கமூட்டுவதாகவும் மாற வேண்டுமென அவர் எண்ணினார். “லண்டனில் உள்ள கட்டடக்கலைசார் கல்வி கழகத்தில் (Architectural Association in London) சில காலம் நான் பயின்றபோது நேத்ரா கணேசன் (Nethra Ganesan) என்ற கட்டடக்கலைஞரை நான் சந்தித்தேன். அவர் எனக்குப் பிந்தைய ஆண்டில் கல்லூரியில் பயின்றவரும் கூட. அவரின் தாத்தா ஒரு நெசவாளர். துபாயில் நேத்ரா வசித்து வந்ததால் தன் பிறந்த ஊர் மற்றும் பூர்வீகத்தோடு மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கும் இருந்தது.”

இதுவே Nonurban Foundation (நகர்சாரா வளர்ச்சி நிறுவனம்) எனும் நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு வித்திட்டது. “நகர்சாரா பகுப்பில் அதாவது ஊரகம் முதல் நகர்ப்புற பகுதிகள் (Rural to peri-urban areas) வரை வசிக்கும் எவருக்கும் உதவும் நோக்கத்தோடு இந்த நிறுவனம் உருவானதால் இதனை நாங்கள் நகர்சாரா நிறுவனம் என அழைக்கிறோம்.” தேன் மற்றும் நேத்ரா ஆகிய இருவரும் சேர்ந்து ‘Calling for Nonurban Ideas – நகர்சாரா வளர்ச்சியின் யோசனைகளுக்கான தேடல்’ என்ற பெயரில் ஒரு போட்டியை நடத்த முடிவு செய்தனர். அவர்கள் பயின்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலிருந்து சில பேராசிரியர்களை அந்தப் போட்டியின் பதிவுகளை மதிப்பீடு செய்யக் கோரி வரவழைத்தனர். அதே சமயம் அவர்களுக்கு ஏற்கனவே இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி அவர்களைப் போல் ஒத்த ஆர்வம் உடைய மக்களை அவர்களோடு இணைத்துக் கொண்டனர். “நாங்கள் போட்டியை நினைத்து பீதியடைந்து இருந்தோம்,” எனக் கூறும் தேன், “எங்களிடம் இருந்த வளங்களை கொண்டே முடிந்த வரையில் முறையான வழியில் இப்போட்டியை நடத்த முற்பட்டோம். ஏனெனில் அப்பொழுது நாங்கள் ஒரு நிறுவனமாக பெரிதளவில் வளர்ச்சி பெறாமலே இருந்தோம். நாங்கள் பல காலங்களாக சேமித்து வைத்திருந்த பணத்தைப் பயன்படுத்தியே வெற்றிபெறும் போட்டியாளருக்கு ரூ.50,000-ஐ பரிசுத் தொகையாக அறிவித்து இருந்தோம்,” என சிரிக்கிறார் தேன். போட்டி நடத்தியதன் விளைவோ மிகப் பெரிதாக இருந்தது. நஷ்டமும் இல்லாமல் இலாபமும் இல்லாமல் போட்டியை நடத்தி முடித்தது மட்டுமல்லாமல் ஊரக சமூகங்களை முன்னேற்றுவதற்கு தங்களைப் போன்ற ஒத்தக் கருத்துடைய பலர் இருப்பதையும் அவர்களால் இயன்றதை அவர்கள் செய்வதற்கு ஆர்வமாக இருப்பதையும் தேனும் நேத்ராவும் உணர்ந்தனர். உடனடியாக அவர்கள் இருவரும் ஒரு சில பயிலரங்குகளையும் (Workshops) நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இறுதியாக நாற்பது உறுப்பினர்கள் கொண்ட ஒரு பன்னாட்டு பிணையமாக (International Network) வளர்ச்சிப் பெற்றனர்.

நேத்ரா மற்றும் தேன் ஆகிய இருவரும் இணைந்து செயல்படத் தொடங்கினர். பெரும்பாலான திட்டங்கள் தமிழகத்தையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்ததால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர்களின் அரசு சாரா நிறுவனத்தை (Non-Governmental Organisation – NGO) சென்னையில் பதிவு செய்தனர். வளமான தொழில்களை ஊரகத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதே அவர்களுக்கு குறிக்கோளாக இருந்தது. “நமக்குத் தேவையான மூலப்பொருட்கள் அனைத்துமே நம்மிடம் உள்ளன. சூழலுக்கு ஏற்றதாகவும், வளங்குன்றாமலும் ஊரகத் தொழில்கள் இருப்பது மட்டுமல்லாமல் அவற்றில் பெரும்பாலானவற்றைப் பெண்களே நடத்தி வருகின்றனர். வழக்கமாகவே ஊரகத்தில் இருக்கும் ஆண்கள் பணம் சம்பாதிப்பதற்காக நகரங்களுக்கு புலம்பெயர்வதால் பெண்களே தொழில்களை கையாள நேர்கிறது” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் தேன். அத்துடன், “நகரங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஊரகத்தில் உள்ள அமைப்புமுறைகள் யாவும் அளவுகோலின் அடிப்படையில் மிகவும் எளிமையானவையே. இங்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன!” என்கிறார் அவர்.

தேனும் நேத்ராவும் முதலில் முதன்மைத் தொழிற்துறையில் சாத்தியக்கூறுகள் கொண்ட தொழில்களை (potential primary sector jobs) பட்டியலிட துவங்கினர்—அதாவது விவசாயம், நெசவு, மீன்பிடித்தல் மற்றும் உள்ளூர் கைவினைகளைச் (indigenous crafts) சார்ந்த தொழில்கள். அத்துடன் அவர்களின் நிறுவனத்தை நான்கு கூறுகளின் கீழ் கட்டமைத்தனர்—ஆய்வுதவித் தொகைகள் வழங்கல் (Fellowships), ஆதரித்து செயல்படுதல் (Advocacy), களப்பணிகள் மேற்கொள்ளுதல் (Outreach) மற்றும் திறன்கள் உருவாக்குதல் (Skills).

தேனி மாவட்டத்தின் மக்களைப் பற்றிய ஒரு ஆழ்ந்த ஆய்வினை உள்ளடக்கிய “A Framework for Autonomous Investments to Rural Areas – ஊரகப் பகுதிகளுக்கான சார்பிலா முதலீடுகளுக்கான ஒரு கட்டமைப்பு” என்ற தலைப்பில் கொள்கை உருவாக்கல் மீதான ஒரு ஆய்வறிக்கையை (Thesis) தன் முதுகலைப் பட்டப்படிப்பில் உருவாக்கினார் தேன். அவர் இதனை உருவாக்கிய அதே காலக்கட்டத்திலேயே Nonurban Foundation (நகர்சாரா வளர்ச்சி) நிறுவனமும் உருவாகத் துவங்கியது. உள்ளூர் சமூகங்கள் உடனும் பெருந்தொற்று காலத்தின் போது நகரங்களில் இருந்து மீண்டும் தேனிக்கு புலம்பெயர்ந்த மக்கள் உடனும் ஆய்வறிக்கையின் செயல்முறையின் போது உரையாட நேர்ந்தது. “இந்த விரிவான ஆய்வே ஊரக மேம்பாட்டில் எவ்வாறு எங்கள் நிறுவனமானது தலையிட்டு அதற்கு உதவுவது என்பதைப் பற்றிய ஒரு யோசனையை எனக்கு அளித்தது.”

எவ்வாறு Nonurban Foundation (நகர்சாரா வளர்ச்சி) நிறுவனமானது ஊரக தொழில்கள் வளர்வதற்கும் விரிவடைவதற்கும் உதவுகிறது? “உருவாக்குதல், பொறுப்புகளை பகிர்ந்தளித்து முரண்களை விலக்குதல், நெறிமுறைகள் வகுத்தல் மற்றும் முழுமூச்சாக செயல்படுதல் (Forming, Storming, Norming and Performing) – இதுவே செயல்திட்டம் ஆகும்,” என தங்களது உத்தியை விவரிக்கும் நம் 28 வயதான நிறுவனர், “ஒவ்வொரு கிராமமும் முன்னேற்றத்திற்கான வெவ்வேறு நிலைகளில் உள்ளதால் நாங்கள் பயன்படுத்தும் செயல்திட்டமானது ஒவ்வொரு கிராமத்துக்கும் அவை இருக்கும் நிலைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.”

ஒரு கிராமத்தில் இருக்கும் பல குடும்பங்கள் ஒரே தொழிலை செய்து வந்தாலும் அதில் இருக்கும் பகுப்புகளுக்கு இடையில் சண்டைகள் இருந்தால் நகர்சாரா வளர்ச்சி நிறுவனமானது அங்கு ஒரு அமைப்பினை உருவாக்க உதவுகிறது. இவ்வாறு அமைப்பு ஒன்றினை உருவாக்குவது ஊரக முன்னேற்றத்தில் ஒரு நிலை ஆகும். ஊரக முன்னேற்றத்தில் இரண்டாவது நிலை என்பது தொழில்முனைவு நடவடிக்கைகளை (entrepreneurial operations) நிலை நாட்டும் ஒரு நபரைக் கொண்ட அமைப்பு ஒன்றினை உருவாக்குவது ஆகும். இந்த நிலையில் நகர்சாரா வளர்ச்சி நிறுவனமானது தொழில்முனைவு நடவடிக்கைகளை மேலும் திறனுள்ளதாக ஆக்குவதற்கான வழிகளைப் பெற மேற்கூறிய நபருடன் கருத்துரையாடலில் ஈடுபடும். இவ்வாறு செய்வதன் மூலம் மிகுதியான இலாபங்கள் கிடைக்கும். மூன்றாவது நிலையானது, அரசு உதவிப் பெற்ற ஏற்கனவே திறன்மிகு உற்பத்தி கொண்ட ஊரக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (MSMEs – Micro, Small and Medium Enterprises) உள்ளடக்கியது ஆகும். நகர்சாரா வளர்ச்சி நிறுவனமானது மேற்கூறிய ஊரக அமைப்பு/நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை தரநிலைப் படுத்துவதன் மூலம் அவற்றிற்கு உதவி செய்யும். மேலும் புதிய சந்தைகளை கண்டுபிடிப்பது மூலமும் எண்முறை விளம்பரப்படுத்துதல் வழியாக இந்த பொருட்கள் பரவலாக மக்களிடம் சென்றடைவதற்கு உதவுவதன் மூலமும் இந்நிறுவனமானது பொருட்களை தரப்படுத்தும். ‘செயல்படும் அமைப்பு (Performing Organisation)’ ஒன்றுக்கு ஒரு சார்பிலா முதலீட்டாளரை (Autonomous Investor) கண்டறிவதே இந்நிறுவனமானது இந்த அமைப்பு/நிறுவனங்களுக்கு அளிக்கும் இறுதி நிலை உதவி ஆகும். “எங்களின் செயல்திட்டத்தை மதிப்பீடு செய்து பார்ப்பதற்கென மேற்கூறிய நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் ஏதேனும் ஒரு கிராமத்துடன் நாங்கள் செயலாற்றி உள்ளோம்,” எனக் கூறும் தேன், “ஒவ்வொரு கிராமத்தையும் முதல் நிலையிலிருந்து நான்காவது நிலைக்கு எடுத்து செல்வதே எங்களின் குறிக்கோள் ஆகும்” என்கிறார்.

நகர்சாரா வளர்ச்சி நிறுவனமானது முற்றிலும் மாணவர்களால் இயக்கப்படுகிறது. இதில் இருக்கும் உறுப்பினர்களின் சராசரி வயது என்பது 24 ஆக உள்ளது. “ஒரு இளம் நிறுவனமாக இருக்கும் நாங்கள் கிராமங்களுக்கு செல்லும்போது தீர்வுகளுடன் செல்ல மாட்டோம். பெரும்பாலும் 90 சதவீத சமயங்களில் உள்ளூர் மக்களிடமிருந்தே எங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். அனுபவத்தால் எங்களால் தர இயலாததை எங்களின் நோக்கம், ஆற்றல் மற்றும் தொடர்புகளின் வழியாக பங்களித்து தொழில்நுட்பம் மற்றும் வளங்களை வசப்படுத்திக் கொள்ள தீவிரமாக செயல்படுகிறோம்,” என்கிறார் தேன்.

நல்லது செய்ய முற்படும் போதும் சவால்கள் இருக்கத் தான் செய்கின்றன. “ஊரக சமூகங்களுடன் செயலாற்றும் போது அவர்களின் கலாச்சாரத்தை நாம் புரிந்துக் கொள்வது என்பது இன்றியமையாத ஒன்றாகும்,” எனக் கூறும் தேன் இதனை ஒரு திட்டத்தில் தோல்வியுற்றப் பின்னரே அவர்கள் உணர்ந்தனர் என்றும் ஊரக மக்களுடன் செயலாற்றுவது ஒரு முடிவுறா கற்றல் செயல்முறை என்றும் கூறுகிறார். “சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது போல கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு அவர்கள் தலையில் வைத்துக் கொள்ள ஒரு முழம் (முழம் என்பது நீளத்தை அளக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஒரு அலகு ஆகும்) பூ வாங்கிக் கொடுப்பது போன்ற சிறு சிறு சமிக்ஞைகளே ஊரக மக்கள் உடனான கூட்டுமுயற்சி செயல்முறையில் (Collaborative process) அவர்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்கி வளர்ச்சி நோக்கியப் பாதையில் நெடுந்தூரம் செல்ல உதவும்” என விளக்குகிறார்.

ஆயிரம் விவசாயிகள், ஆயிரம் நெசவாளர்கள், ஆயிரம் மீனவர்கள் மற்றும் ஆயிரம் கைவினைஞர்களை குறிப்பாக தென்னை நார், தேன், கல் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு செயல்படும் கைவினைஞர்களை உள்ளடக்கிய நான்காயிரம் ஊரக பயனாளிகளுக்கு சார்பிலா முதலீடுகளைப் பெற்றுத் தரும் நோக்கத்தோடு அவர்களுக்கு Nonurban Foundation (நகர்சாரா வளர்ச்சி) நிறுவனமானது உதவி வருகிறது. “எங்களின் செயல்திட்டமானது சிறிய வெற்றிகளைத் தழுவியே செயல்படுவது ஆகும். அதுவே ஒட்டுமொத்த நிறுவனம் வளர்வதற்கும் ஊக்கம் பெற்று இருப்பதற்கும் சிறந்த வழி என நான் நம்புகிறேன்” என ஒரு புன்முறுவலுடன் நிறைவு செய்கிறார் நம் இளம் தொழில்முனைவோரான தேன்.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

240/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.