THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

துணியாலான கலைநயமிக்க குறிப்பேடுகள்

மஸ் மெர்டன் (Thomas Merton) எனும் அமெரிக்க டிராப்பிஸ்ட்  துறவியின் (Trappist – கிறித்துவ மதத்தின் கதோலிக பிரிவின் ஓர் ஒழுங்குமுறை) புகழ்மிக்க வாசகம் இது – “கலை என்பது நம்மை அடையாளம் காண்பதற்கும் அதே நேரம் நம்மையே நாம் தொலைத்து விடுவதற்கும் வித்தாக இருக்கும்.” இவ்வாசகம், தற்செயலாக கலை ஆர்வலர் ஆனவரும், துணியாலான குறிப்பேடுகளை (journal notebook) கையால் செய்யும் சிட்டா ஹேன்ட்மேட் (Citta Handmade) நிறுவனத்தின் நிறுவனருமான நிரஞ்சனா கிருஷ்ணகுமாருக்கு (Niranjana Krishnakumar) சீராக பொருந்தும் எனலாம்.

நிரஞ்சனா ஓவியங்களிலும் வரைகலையிலும் எந்நேரமும் ஊறிப் போய் இருந்தவர் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் புது விஷயங்களை செய்துப் பார்ப்பதை விரும்புவோர் பட்டியலுக்கு இவர் நிச்சயமாக தேர்ச்சி பெறுபவர் தான். அவருடைய ஆர்வமும், கற்றலுக்கான தீரா பற்றும், களத்தில் இறங்கி செயல்படும் தன்மையும் அவரைப் பல பாதைகளில் இட்டுச் சென்றன. நிரஞ்சனா அல்டிமேட் ஃபிரிஸ்பீ (Ultimate Frisbee) எனப்படும் விளையாட்டை நெறிவாக விளையாடியவர்; மின்னணு தொடர்புத்துறையில் (electronic media) பட்டம் பெற்றவர்; மேலும் அரசு சாரா அமைப்பான (NGO) இந்திய சூழலியலாளர் அமைப்பின் (EFI – Environmentalist Foundation of India) நிறுவன தன்னார்வலர்களுள் ஒருவரும் ஆவார்.

தான் தேர்வு செய்த பட்டப்படிப்பு தனக்கு ஒரு முழுமையான உணர்வினை தர தவறியதால் அதிருப்தியின் விளிம்பில் இருந்த நிரஞ்சனா, அசோகா பல்கலைக்கழகம் வழங்கும் இளைய பாரதம் ஆதரவூதியத் திட்டத்தினைப் (YFI – Young India Fellowship) பற்றி அறியலானார். ஓராண்டில் இருபத்து நான்கு பாடங்களை வழங்கும் பல்துறை திறன் (liberal arts) வளர்க்கும் ஓர் திட்டமாக அது இருந்தது. நிரஞ்சனா போல பல்துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது ஒரு வரப்பிராசதம் என்றே சொல்லலாம். “பெரும்பாலானோர் தங்கள் பணிவாழ்க்கையில் ஒரு மாற்றுப் பாதையினை எதிர்பார்த்தே YIF திட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் எனக்கோ அதுவே என் வாழ்க்கைப் பணியின் துவக்க இடமாக இருந்தது.”

வழங்கப்பட்ட இருபத்து நான்கு பாடங்களில் கலைகளைப் பாராட்டும் (art appreciation) பாடத்தில் தான் நிரஞ்சனா ஒரு வித தெளிவினைப் பெற்றார். “என்னுடைய பேராசிரியர் வகுப்பு ஒன்றில் யான் வன் ஐக் (Jan Van Eyck) என்ற ஓவியர் வரைந்த ‘தி மேரேஜ் ஆப் அர்னால்ஃபினி (The Marriage of Arnolfini)’ என்ற எண்ணெய் வண்ண ஓவியத்தைப் (oil painting) பற்றி பேசினார். அப்படிப்பட்ட ஓர் தலைசிறந்த படைப்பானது எவ்வாறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது என்பதை நினைத்து நான் வியப்புற்றேன்” என நினைவுக்கூறுகிறார் அவர். தன் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்த இந்த வகுப்பில், தான் முன்னர் பெற்றிராத ஓர் திறனான கவின்கலைகளைப் பாராட்டும் திறனை அவர் முழுமையாகப் பெற்றார். அந்த வகுப்பில் துவங்கி, YIF திட்டம் முடிவு பெறுவதற்குள் முடிந்தவரை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், தனது தினசரி வகுப்புகளுடன் கவுரவ விரிவுரைகளிலும் (guest lecture) ஆர்வத்துடன் அவர் பங்கேற்றார்.

மிக விரைவிலேயே கலையானது அவரின் வாழ்க்கையில் இரண்டற கலந்தது. “YIF திட்டத்திற்கு முன்னர் நான் புறவய ஆளுமை (extrovert personality) மிகுந்த ஒரு நபராக இருந்தேன். எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வேன். ஆனால் கலை என் வாழ்வில் வந்த பிறகு நான் என் தனிமையை ரசிக்கக் கற்றுக் கொண்டேன்.” தனது விடுதி அறையின் நான்குச் சுவர்களின் அரவணைப்பில், ஒருவித மகிழ்வான தனிமையிலேயே அவரின் பெரும்பாலான பொழுதுகள் கழிந்தன. அவர் யாருடனும் பழகவில்லை. எந்த வகையான கொண்டாட்டங்களிலும் கலந்துக் கொள்ளவில்லை. கடந்துச் செல்லும் ஒவ்வொரு நிமிடத்தையும் தன்னையும், தான் புதிதாக கண்டெடுத்துள்ள தன்னுடைய தீரா பற்றையும் புரிந்துக் கொள்வதிலேயே அவர் செலவழித்தார்.

அவரின் படிப்பானது அடுத்த இரண்டு மாதங்களிலேயே முடிவு பெற்றாலும் அவரோ ஓவியங்களும், வரைகலையும் உருவாக்கும் பழக்கத்தை தொடர்ந்து செய்யலானார். பின்னர் கையால் செய்யப்பட்ட குறிப்பேடுகளில் அவற்றை ஒட்டி வந்தார். அவரின் இந்தப் பழக்கமானது கடுந்தவம் போல மாற அந்த தவம் போன்ற பயணமே பின்னர் அவரின் நிறுவனத்தின் பெயரான சிட்டா ஹேன்ட்மேட் என்ற பெயருக்கு விதையாக மாறியது. சமஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட இந்தப் பெயருக்கு மனம் தெளிநிலை (mindfulness) என்பது பொருளாகும்.

பரிசு பொருட்கள் வழங்குவதில் இருந்த விருப்பத்தைத் தாண்டி தனது பல்கலைக்கழகத்தில், முன்னாள் மாணவர்கள் கூட்டத்தின் போது நடந்த கண்காட்சியில் தன்னுடைய சிற்றங்காடிக்குக் கிடைத்த பெரும் வரவேற்பே, நிரஞ்சனா தன் பொழுதுபோக்கு செயலை ஒரு வணிகமாக மாற்றுவதற்கு இருந்த முதல்நிலை வெற்றிப் படிகளுள் ஒன்று எனலாம். “என்னுடைய முதன்முதல் விற்பனையில் நான் பதினைந்து குறிப்பேடுகளை விற்பனை செய்தேன்,” என சிரித்துக் கொண்டே தனது கடந்தக் கால நினைவுகளை நினைவுக் கூறுகையில் சிறு தொலைவு தூரத்தை ஆழ்ந்து நோக்குகிறார். “YIF மாணவர்கள் பெரும்பாலானோர் கலைஞர்களாகவோ அல்லது கலை ஆர்வலர்களாகவோ இருப்பர். எனவே, அவர்கள் தான் என் வணிகத்திற்கான இலக்குச் சந்தை என நான் கண்டறிந்தேன்.”

சென்னைக்கு மீண்டும் புலம் பெயர்ந்த பின்னரே ஒரு கசப்பான உண்மையை அவர் உணர்ந்தார். தன் சூழல் மாற்றத்தினால் தன்னால் குறிப்பேடுகள் செய்வதை தொடர முடியாது என அவர் கலங்கி நின்றார். அப்பொழுது ஒரு தற்காலிக விரைவு நிகழ்வு (pop-up event) ஒன்று தன் கவனத்தை ஈர்த்தது. உடனடியாக அவர் சேமித்து வைத்திருந்த சில பணத்தை அந்த நிகழ்வில் ஒரு சிற்றங்காடியை பதிவு செய்வதற்கென ஒதுக்கி வைத்தார். தன் அங்காடிக்கென அவர் முன்பணம் செலுத்தி இருந்தமையால் அதில் ஊக்கம் பெற்ற அவர், தானே தன் விலைப் பொருட்களுக்கு விற்பனையாளராக மாறி, அந்த நிகழ்வில் தன்னை நோக்கி வந்த ஒவ்வொருவரிடமும் நட்பு பாராட்டினார். அவரே வியக்கும் அளவுக்கு மற்ற அங்காடிகளுக்கெல்லாம் முன்னரே தன் அங்காடியில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. “என்னை நம்புங்கள், ஒரு தற்காலிக நிகழ்வில் இருக்கும் உங்கள் சிற்றங்காடியில் நிற்பதற்கு சிறந்த இடம் என்பது-அந்த அங்காடிக்கு முன்புறத்தில் வாடிக்கையாளர் நிற்கும் இடத்துக்கு அருகாமையில் தான். தயவு செய்து உங்கள் மேசையை இடையே வர விடாதீர்கள்!” என புன்முறுவல் செய்கிறார். சிட்டா ஹேன்மேட் ஆனது அதன் பின்னர் பல்வேறு தற்காலிக நிகழ்வுகளில் பங்கேற்று அபாரமான வெற்றி பெறும் நிறுவனங்களில் ஒன்றாக நிரூபணம் ஆனது.

காகிதமானது உலோக உருளிகளால் குளிர்ச்சியான வெப்பநிலையில் அழுத்தப்பட்டும் (cold-pressed with metal rollers), அமிலங்கள் அற்ற காகிதமாகவும் இருந்தது. துணியானது உள்ளூரில் இருந்தே பெறப்பட்டது. இறுதியாக குறிப்பேடுகளின் தாள்கள் பித்தளை வளையங்களைப் பயன்படுத்தி ஒன்றாகப் பிணைக்கப்பட்டன. மூலப் பொருட்களைப் பெறுவதிலிருந்து குறிப்பேட்டை உருவாக்கும் வரை, அவர் ஒருவரே தனியாக அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். “முன்னதாக, காகிதம், சணல் கயிறு, துணி மற்றும் அட்டை போன்ற எல்லா வகையானப் பொருட்களையும் நான் பயன்படுத்தி வந்தேன். நான் செய்யும் குறிப்பேடுகளை அட்டைகளைக் கொண்டு இணைப்பேன் அல்லது சணல் கயிற்றினைக் கொண்டு ஒன்றாகச் சேர்த்துக் கட்டுவேன். எனது அங்காடிகளில் நான் விற்பனைச் செய்த முதல் சில குறிப்பேடுகளுக்கு இவ்வாறு செய்தேன்,” என கூறுகிறார் நிரஞ்சனா. கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal Tunnel Syndrome) என்ற ஒரு வகை நோயானது அவரின் கைகளின் இயக்கத்தைப் பெரிதளவில் பாதிக்க துவங்கியதனால் தன் குழுவில் நான்கு சாரா வினைஞர்களைப் (freelancer) பணியமர்த்தினார்.

YTF திட்டத்தில் பயிற்சி பெற்று வெளியேறிய மாணவர்களில் பணியமர்த்ததிற்கு (placement) விண்ணப்பிக்காத ஒரு சில மாணவர்களுள் இவரும் ஒருவர். தனது வணிகத்தை நிர்வகித்து வருவது மட்டுமல்லாமல் அதே நேரத்தில் அரசு சாரா அமைப்பான (NGO) EFI-யிலும் தன்னார்வலராக செயலாற்றி வந்தார். எனினும் ஒரு கட்டத்தில் பணம் ஈட்டுவது மற்றும் அவரின் தற்போதைய விருப்பங்கள் இவை இரண்டுக்கும் இடையே ஒன்றை மட்டும் அவர் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. ஃபிரெஷ்வொர்க்ஸ் (Freshworks) எனப்படும் ஒரு பெருநிருவனத்தில் பணியில் சேர்வதற்காக தன்னுடைய தன்னார்வ வேலையை அவர் தியாகம் செய்ய வேண்டி இருந்தது. “என்னுடைய விற்பனைத் திறனை மேம்படுத்த ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தில் ஒரு முழு நேரப் பணியென்பது மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன்,” என நேர்மறையாக கூறுகிறார் அவர். “தற்போது ஒரு கையில் சிட்டா ஹேன்ட்மேட் இருக்க இன்னொரு கையில் ஃபிரெஷ்வொர்க்ஸ் பணி இருக்க நானோ ஒரே சமயத்தில் இரு முழுநேரப் பணிகளை செய்வது போல உணர்கிறேன்.” பெருநிறுவன உலகமானது அவரின் கையால் செய்யப்படும் குறிப்பேடு நிறுவனத்துக்கு ஒரு புதிய வாய்ப்புப் பாதையினை ஏற்படுத்திக் கொடுத்தது. பேரளவு தருவிப்புகளுக்காக (bulk order) பெருநிறுவன துறையில் இருப்பவர்களையும் நிகழ்ச்சி திட்டமிடுபவர்களையும் தொடர்புக் கொள்ள ஆரம்பித்தார் நிரஞ்சனா.

பெருந்தொற்று காலத்தின் விளைவால் பெருவாரியான நிறுவனங்களைப் போலவே சிட்டா ஹேன்ட்மேட் நிறுவனமும் மின் வணிக (e-commerce) முறையையே தேர்வு செய்தது. வலுவான சமூக வலைத்தள அமைப்பும் இணையத்தில் ஓர் அங்காடியும் இணைந்து சென்னை, பெங்களூர், மும்பை, தில்லி மற்றும் பல்வேறு தருவாயில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து எல்லாம் வாடிக்கையாளர்களை இந்நிறுவனத்திடம் கொண்டு வந்து சேர்த்தன. ஒவ்வொரு வெளியீட்டிலும் பத்தில் இருந்து பன்னிரெண்டு புதிய வடிவமைப்புகள் இடம்பெறும். நானூறு குறிப்பேடுகள் இருப்பில் (inventory) உள்ளவாறு திட்டமிடுவோம். பேரளவு தருவிப்புகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பார்த்தால் நானூறு குறிப்பேடுகள் கொண்ட இருப்பானது ஒரு மாதத்தில் விற்பனை ஆகி விடும்.

சென்னையில் தற்காலிக நிகழ்வுகள் பெரும் வரவேற்பிற்கு உரியதாக இருப்பதால் ஒரு தொழில்முனைவோராக இந்நகரத்தில் தனக்கு ஒரு மனநிறைவான அனுபவம் கிடைத்ததாக நிரஞ்சனா கூறுகிறார். “முன்னெல்லாம் மக்கள் அங்காடிகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவர். ஆனால் இப்பொழுதெல்லாம், நிறைய மக்கள் இதுபோன்ற தற்காலிக நிகழ்வுகளுக்கு செல்கின்றனர். முப்பது முதல் நாற்பது நிறுவனங்கள் பங்கேற்கும் ஒரு கண்காட்சியில் எப்படியும் ஒரு நிறுவனத்தின் நண்பர்கள் வட்டத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நண்பர்களோ அல்லது நிறுவனத்தைப் பின்தொடர்பவர்களோ நிச்சயமாக பங்கேற்பர். இதன் மூலம் அனைத்து விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்கள் வருகையின் எண்ணிக்கை அதிகரிக்கும்.”

நிறுவனத்தின் இந்த மூன்று ஆண்டு பயணத்தில் தொழில்முனைவோராகவும் ஓர் கலைஞராகவும் நிரஞ்சனா இருந்து வருகையில் இரண்டுக்கும் இடையே ஓர் நிலையினை அடைவது நிரஞ்சனாவிற்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது. “ஆரம்பக் காலக் கட்டத்தில் குறிப்பேடுகளின் வடிவமைப்பிலேயே என் முழு கவனத்தையும் நான் செலுத்தி வந்தேன்,” என நினைவுக்கூறும் அவர், “ஆனால் தற்பொழுதோ, நான் எவ்வாறு விற்பனையை கூட்டுவது என்றும் எவ்வாறு நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது என்றும் சிந்திக்க துவங்கியுள்ளேன். இந்தத் தொழிலில் அனைத்து கூறுகளையும் சமன் செய்வது என்பது மிகவும் முக்கியமாகும். பயணம் முழுவதும் நீங்கள் ஒரே சமயத்தில் பல பணிகளை கையாள வேண்டி இருக்கும்.”

பெரும்பாலான விற்பனை தற்பொழுது படவரியின் (Instagram) மூலமும் இணையத்தளம் மூலமும் இருப்பதால் கூடிய விரைவில் சமூக வலைத்தள விளம்பரப்படுத்துதலில் (social media marketing) கவனம் செலுத்தி தனது குழுவை விரிவாக்கம் செய்யவுள்ளார் நிரஞ்சனா. செல்வாக்கு மிகுந்த வாடிக்கையாளர்கள் மூலம் கிடைத்த விளம்பரம் ஆனது சிட்டா ஹேன்மேட் நிறுவனத்தின் விளம்பரப்படுத்துதலுக்கு இதுநாள் வரை பெருமளவில் உதவி இருந்தாலும், படவரியில் ரீல்ஸ் (reels) எனப்படும் காணொளி துணுக்குகள் பிரபலமாகி வருவதும், மாறிவரும் படவரியின் பதிவு நெறிமுறைகளும் இந்நிறுவனமானது ஒரு புதிய வணிக உத்தியை கையாள வேண்டிய தேவையை உருவாக்குகின்றன. வெகு விரைவிலேயே இந்நிறுவனமானது துணியாலான மற்ற எழுதுபொருட்களின் உருவாக்கத்திலும் ஈடுபடும். ஆரம்பக் காலக் கட்டத்தில் நேரில் விற்பனை செய்வதில் இந்நிறுவனத்துக்கு இருந்த சவால்கள் அதன் நிறுவனரை இணையவழி விறபனையில் அதிகம் கவனம் செலுத்தத் தூண்டி உள்ளன. “பெருந்தொற்றுக்கு முன்னர் எழுதுபொருளகங்களிலும் சிற்றுண்டியகங்களிலும் (stationery & cafe) நான் விற்பனை செய்துள்ளேன். அது ஒரு நிலையற்ற விற்பனை முறையாகவே நிரூபணம் ஆனது. ஏனெனில் பெருந்தொற்று தாக்கிய உடனேயே விற்பனைக்கு இருந்த எனது விலைப் பொருட்களின் எல்லா இருப்புகளையும் நான் திரும்ப எடுத்துச் செல்ல நேர்ந்தது. நான் அப்படியொரு சூழ்நிலையை மீண்டும் சந்திக்க விரும்பவில்லை.”

கலைஞராக இருந்து பின்னர் தொழில்முனைவோரான நிரஞ்சனா ‘கலைத் (துறையில்) தொழில்முனைவை (artpreneurship)’ ஊக்குவிக்கும் ஒரு நிறுவனத்தை கட்டமைக்க விரும்பும் தனது பயணத்தில், கலை சமூகத்துடன் உரையாடி செயலாற்றுவதை எதிர்நோக்கி உள்ளார். தற்காலிக நிகழ்வுகள் பலவற்றில் தன்னை தானே முன்னிறுத்திக் கொண்டதே இன்று அவர் ஓர் வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது என்று நம்புகிறார் நிரஞ்சனா. “முப்பது முதல் நாற்பது சிற்றங்காடிகள் உள்ள ஓர் அரங்கில் மக்கள் உங்கள் அங்காடியை கவனிக்காமல் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், நீங்கள் அவர்கள் கவனத்தை ஈர்த்து உங்களின் கதையைக் கொண்டு அவர்களின் நம்பிக்கையைப் பெற்றால் எப்படியும் பத்தில் ஏழு நபர்கள் ஆவது உங்களின் பொருட்களை வாங்குவர். அவ்வாறே பத்தில் ஏழு நபர்கள் என் குறிப்பேடுகளில் ஆர்வம் காட்டினர்,” என விவரிக்கிறார். “நீங்கள் ஒன்று மட்டும் செய்தாலே போதும்-உங்கள் விலைப்பொருளின் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக களத்தில் அதனை விற்பனைச் செய்ய வேண்டும்,” என நிறைவு செய்யும் அவர், மேலும் பல கலைஞர்கள் தங்களின் படைப்புகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு தனது அனுபவமானது ஒரு மேற்கோளாக இருக்கும் என நம்புகிறார்.

 

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

205/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.