THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

தமிழ்நாட்டின் கிராமப்புற ஆங்கில வழிக் கல்வி அங்கன்வாடிகள்

“ஆசிரியர்களுக்கு மின்சார வண்டிகள் தருகின்ற பள்ளிக்கூடம் என்றே அனைவரும் எங்களை குறிப்பிடுவதுண்டு!” என சிரித்துக் கொண்டே நம்முடன் உரையாடத் துவங்குகிறார் அமீகா அகாடமியின் (Amyga Academy) நிறுவனர் லக்ஷ்மி ராமமூர்த்தி (Lakshmi Ramamurthy). இந்தியா எங்கிலும் இருக்கும் குக்கிராமங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை எடுத்து செல்வதோடு அங்குள்ள அங்கன்வாடிகள் எனப்படும் பள்ளிக்கூடங்கள் இயங்குவதற்கு பங்களித்து வரும் கிராமப்புற மகளிரை தற்சார்பாக மாற்றியும் வருகிறது இந்த பயிற்சி நிறுவனம்.

பெங்களூரில் பட்டயக் கணக்கர் (Chartered Accountant) ஆக துவங்கியது லக்ஷ்மியின் பணி வாழ்க்கை. அவர் பணியின் முதல் பத்து ஆண்டுகள் முழுவதும் நிதியை சம்பந்தப்படுத்தியே இருந்ததே தவிர கல்வியை சார்ந்து ஒன்றுமே இருக்கவில்லை. “இன்றளவும் அது ஓர் விந்தையாகவே இருக்கிறது,” என தொலைவில் பார்த்தவாறே நினைவுக்கூறும் அவர் தொடர்ந்து, “எவ்வாறு நான் நிதித் துறையில் இருந்து கல்வித் துறைக்கு மாறினேன் என்பது,” என சிரிப்புடன் கூறுகிறார்.

கேப்ஜெமினி (Capgemni) எனும் நிறுவனத்தில் நிதி மற்றும் கணக்கு வைப்பு பிரிவில் இயக்கப்பணி ஒன்றுக்கு விண்ணப்பித்து இருந்தார் நமது பட்டயக் கணக்கரான லக்ஷ்மி. வேலைக்கான நேர்காணலில் தனது தற்குறிப்பால் (resume) பெரிதும் கவரப்பட்ட மனிதவளத் துறை அதிகாரி (HR) ஒருவரால் வரவேற்கப்பட்டார் லக்ஷ்மி. எனினும் இவருக்கான தகுந்த வேலையிடம் இல்லை என்பதை அந்த அதிகாரி இவரிடம் தெரிவித்தார்.

“நான் விடைபெறுவதற்காக எழுந்து நின்று அவரோடு கை குலுக்கும்போது அந்த அதிகாரி ஏதோ சொல்லிக் கொண்டே திடீரென பாதிலேயே அதனை நிறுத்தினார்,” என நினைவுக் கூறும் லக்ஷ்மி, “நிதி மற்றும் கணக்கு வைப்பு பயிற்சி துறையை முன்னெடுத்து இயக்குவதற்கு தீவிரமாக அவர்கள் ஒருவரை தேடி வருவதாக தெரிவித்தார் அந்த அதிகாரி.” அந்த வேலையின் விவரங்கள் அவரின் ஆர்வத்தைத் தூண்டின. தானாகவே ஓர் குழுவை உருவாக்கி அதனை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது அவருக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எனவே, அங்கேயே அந்த வேலை வாய்ப்புக்கு ஒப்புதல் அளித்தார்.

“புதிதாக ஒன்றினை கட்டமைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. குறிப்பாக நீங்கள் ஓர் நிறுவனத்தில் புதிதாக இணைந்து இருக்கும்போது அது அதைவிட சிரமமானதே,” என விவரிக்கும் அவர் சவாலான வாய்ப்புகளின் மீது தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். தனி ஒரு பெண்ணால் ஆன குழுவில் இருந்து ஓரிரு ஆண்டுகளிலேயே இருபது நபர்கள் கொண்ட குழுவாக அந்த குழு வளர்ந்தது. பயிற்சி பிரிவின் இந்த உடனடி வெற்றியானது மாற்றம் விதைக்கும் முயற்சி ஒன்றினை தாமே உருவாக்குவதற்கான சிந்தனைப் பாதையில் லக்ஷ்மியை ஊக்குவித்து வழிவகுத்தது.

“அதே நேரத்தில் உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் முன்பருவக் கல்விக் (early childhood education) குறித்த யுனிசெஃப் அமைப்பின் அறிக்கை ஒன்றினை நான் கண்டேன்,” எனக் கூறுகிறார் லக்ஷ்மி. அந்தத் தருணம் அவர் ஒன்றினை உணர்ந்தார். தனது பெருநிறுவன வேலையில் பணியாற்றுபவர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு இருந்தாலும் இளம்பருவ கல்வி அளிப்பதிலேயே உண்மையான மாற்றத்துக்கான விதை உள்ளது என்று.

2017-ஆம் ஆண்டு லக்ஷ்மியும் அவர் கணவரும் இணைந்து அமீக்டலா (Amygdala – நமது உணர்வுகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியே அமீக்டலா) என்றப் பெயரில் தனியார் பள்ளி ஒன்றினை துவங்கினர். தங்கள் பள்ளியை விரிவாக்குவதற்கென ஏதுவான வசதிகள் கொண்ட ஓர் இடத்தினை குத்தகை எடுப்பதற்காக தேடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் என்ற ஊரில் தங்களுக்கு ஏதுவான இடம் ஒன்றிருப்பதை கண்டறிந்தனர்.

எளிமையான உச்சரிப்புக்காக அமீக்டலா எனும் பெயரினை சுருக்கி தங்கள் பள்ளியை அமீகா என விளம்பரம் செய்யத் துவங்கினர். 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதமானது அந்த தொடக்கப் பள்ளியின் முதல் கல்வியாண்டின் துவக்கமாக இருந்தது. “செலவுகளுக்கு மட்டும் ஈடு கட்டும் வண்ணம் பள்ளிக் கட்டணம் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது,” எனக் கூறுகிறார் லக்ஷ்மி.

முதல் கல்வியாண்டின் இறுதியில் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை எட்டில் இருந்து பதினேழாக உயர்ந்தது. இது இன்னும் சற்று உயர்ந்து மொத்தம் இருபத்தி ஆறு மாணவர்கள் மாண்ட்டசரி (Montessori) பயிற்றுவிப்பு முறையில் அமீகா தொடக்கப் பள்ளியில் கல்விப் பெற்று வந்தனர். எனினும் பள்ளி வளர வளர அதிக நேரமும் பணமும் செலவாகும் பல்வேறு நிர்வாக செயல்முறைகள் வெளிச்சத்துக்கு வந்தன. எனவே உலகத் தர கல்விக்கான அணுகுமுறையை உயர்த்துவதற்கு நடைமுறையில் இருக்கும் அமைப்புமுறை சிறப்பாகவும் திறன்மிகு முறையாகவும் இருக்காது என்பதை அந்தத் தருணம் லக்ஷ்மி உணர்ந்தார்.

2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒட்டி அதாவது இரண்டாவது கல்வியாண்டின் பொழுது லக்ஷ்மி அமீகா அறக்கட்டளை (Amyga Foundation) என்றொரு அறக்கட்டளையை நிறுவினார். உள்ளூரில் இருக்கும் அரசு அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இலவச கல்வி தருவதற்கு உதவும் நோக்கத்துடனே இந்த அறக்கட்டளையானது துவங்கப்பட்டது. “குழந்தைகள் அரைக்குறையாக பாடம் கற்ற நிலையில் இருக்கக் கூடாது என்பதற்காக நாங்கள் எங்கள் பள்ளியில் அந்த கல்வியாண்டினை நிறைவு செய்தோம்,” எனக் கூறும் அவர் தனியார் பள்ளி ஒன்றினை நடத்திக் கொண்டே இடைப்பட்ட காலத்தில் அரசு சாரா அமைப்பு ஒன்றினை துவங்கிய அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார்.

ஒருங்கிணைந்த முனைவகத் (Integrated Enterprises) திட்டத்தின் கீழ் அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையினால் அங்கன்வாடிகள் நிறுவப்பட்டன. இந்த அங்கன்வாடிகள் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றின் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது. அங்கன்வாடி ஊழியர்களின் உழைப்புக்கு வலு சேர்க்கும் விதமாக உலகத் தரம் வாய்ந்த முன்பருவக் கல்வியை அமீகா அகாடமி என்றப் பெயரின் கீழ் அமீகா அறக்கட்டளையானது இந்த அங்கன்வாடிகளுக்கு கொண்டு சேர்க்கிறது. குழந்தைகளுக்கு மாண்ட்டசரி பயிற்றுவிப்பு கருவிகளைக் வழங்கி வரும் அமீகா ஆசரியர்களுக்கு ஆங்கில பயிற்சியையும் மாண்ட்டசரி பயிற்சியையும் வழங்கி வருகிறது. அங்கன்வாடி குழந்தைகளுக்கென அரசு பரிந்துரைத்துள்ள கல்வித்திட்டத்துடன் ஒன்றிப் போகும் வகையில் அமீகாவின் இலவச கல்வித் திட்டமும் வடிவமைக்கப்பட்டது.

இந்தியாவின் கிராமங்களில் மாற்றத்தை விதைக்க முளைக்கும் முயற்சிகள் யாவும் எப்பொழுதுமே அவற்றிற்கே உரிய தனித்துவமான சவால்களை சந்திக்கின்றன. லக்ஷ்மியின் அனுபவமும் இதற்கு விதிவிலக்கல்ல. கிராமங்களில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டி வீடு வீடாக செல்லும் பொழுது மூட நம்பிக்கையும் கலாச்சார வேறுபாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. “நான் சுடிதார் அணிந்து பொட்டு ஒன்றினை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி குழந்தைகளின் பெற்றோர்களிடமும் தாத்தா பாட்டிகளிடமும் எங்களின் முயற்சியினைப் பற்றியும் குறிக்கோளைப் பற்றியும் விவரிப்பேன்,” என நினைவுக்கூறும் அவர் எவ்வாறு கிராம மக்கள் அனைவரும் ஆரம்பக்காலத்தில் அவரின் எண்ணங்களை சந்தேகப்பார்வையுடனே அணுகினர் என விவரிக்கிறார். இந்த பயணத்தில் சில எதிர்பாராத அனுபவங்கள் ஏற்பட்டதையும் நம்முடன் சிரித்துக் கொண்டே பகிர்கிறார் லக்ஷ்மி. “இந்த கிராம மக்கள் நான் சொல்வது எல்லாம் உண்மை தான் என்பதை உறுதி செய்ய எனது காரின் எண்ணை வைத்து எனது பின்புலத்தை விசாரித்து உள்ளனர்!”

எனினும் லக்ஷ்மி உறுதியாக இருந்தார். அவர் தொடர்ந்து அந்த கிராமம் எங்கிலும் சுவரொட்டிகள் ஒட்டியதோடு அங்குள்ள அங்கன்வாடியின் ஆசிரியர்களுடன் உரையாடல்கள் நிகழ்த்தினார். விரைவில் கிராம மக்களும் அவரின் விடாமுயற்சியை உணர்ந்ததோடு தங்களின் குழந்தைகளின் நலனுக்காக அவர் முன்னெடுக்கும் முயற்சிகளை கண்டுக்கொண்டனர். மெதுவாக தங்கள் சந்தேகப் பார்வையை விடுத்து அவரையும் அவரின் அமைப்பும் வரவேற்று அரவணைத்தனர்.

பெருந்தொற்றினால் அமீகாவின் செயல்முறைகள் சிறிது காலம் தடைப்பட்டது. 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பத் துவங்கியவுடன் காவேரிப்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் ஐந்து அங்கன்வாடிகளில் உள்ள நூறு மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் அளவுக்கு அமீகா அகாடமி வளர்ச்சி பெற்றது. “ஓர் குழந்தை படிப்பதற்கு அதன் சூழலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சமீபத்தில் நாங்கள் உணர்ந்தோம்,” என விவரிக்கிறார் லக்ஷ்மி. எனவே இந்த அமைப்பானது அங்கன்வாடிகளை மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான கற்பிக்கும் இடங்களாக மாற்ற அவற்றைப் பழுது பார்த்து மறுசீரமைக்கும் பணிகளை தன் கையில் எடுத்தது. “ஜூலை மாதத்திற்குள் மேலும் இரண்டு அங்கன்வாடி மையங்கள் அமீகா அகாடமியின் கீழே கொண்டு வரப்படும். கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் எங்கள் அரவணைப்பிற்குள் ஒட்டுமொத்தமாக இருநூறு குழந்தைகளை நாங்கள் கொண்டு வந்திருப்போம்,” எனக் கூறுகிறார் அவர்.

அனைவரும் அணுகும் வண்ணம் உலகத் தரம் வாய்ந்த கல்வி—இதுவே அமீகா அகாடமியின் தாரக மந்திரமாக உள்ளது. கிராம  மக்கள் அணுகும் வண்ணம் அருகாமையில் பள்ளிக்கூடங்கள் துவங்கியும் அவர்களுக்கு இருக்கும் பொருளாதார சுமையைக் கருத்தில் கொண்டு குறைவான கட்டணத்தின் மூலமும் கல்வியை அவர்களிடம் எளிதில் கொண்டு சேர்ப்பதிலேயே அமீகா கவனம் செலுத்தி வருகிறது. “மாண்ட்டசரி பயிற்றுவிப்பு முறையானது இளம் வயது குழந்தைகள் மத்தியில் வெற்றிகரமாக செயல்படுகிறது,” எனக் கூறுகிறார் அமீகாவின் நிறுவனர். இதன் மூலம் குழந்தைகளின் அறிவாற்றலும் எட்டக் கூடிய அளவில் அமீகா அவர்களுக்கும் கல்வியை எளிமையாக கொண்டு சேர்க்கிறது.

வாய்வழி தகவல் பரிமாற்றத்தின் மூலமே ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் இந்த அமைப்பின் ஓர் இன்றியமையாத அங்கம் ஆவர். “அவர்களின் தேவைகளை நாங்கள் பார்த்துக் கொள்வதாக அவர்களிடம் நாங்கள் கூறிவிடுவோம். அப்பொழுது தான் குழந்தைகளின் தேவைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்.” அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் எங்களின் இந்த கொள்கையே அவர்களுக்கு மின்சார வண்டிகள் வழங்கி அவர்களை தற்சார்பாக மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அவர்கள் பணிக்கு செல்ல கணவர்களை சார்ந்து இருக்கும் சூழ்நிலையை இந்த வண்டிகள் மாற்றியது மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்கள் அவர்களின் பணிவாழ்க்கையை மென்மேலும் ஊக்குவிப்பதற்கு தூண்டுகோலாகவும் இருந்தது.

இந்தியா எங்கிலும் இருக்கும் அமீகாவின் தன்னார்வலர்கள் இணையவழியில் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கின்றனர். “ஆண்டு முழுவதும் எங்களது ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிக்கும் எங்களின் அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் குழுவினாலேயே இன்று அமீகா அகாடமி இத்தகைய நிலையை அடைந்திருக்கிறது,” எனக் கூறுகிறார் லக்ஷ்மி. ஆசிரியர்களுக்கு மாண்ட்டசரி பயிற்சி அளிப்பதற்கென பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் க்ரீடோ (Kreedo) எனும் முன்பருவக் கல்விக்கான கருவிகளும் தீர்வுகளும் அளிக்கும் நிறுவனத்துடன் அமீகா ஒன்றிணைந்து செயல்படத் துவங்கியது. “ஒவ்வொரு ஆசிரியர் வீட்டிற்கும் சென்று அவர்களை ஒரு வாரக் காலம் பெங்களூருவுக்கு மாண்ட்டசரி பயிற்சி பயிலரங்கிற்கு அழைத்து செல்வதற்கு அனுமதி பெற நான் சென்றது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது,” என புன்முறுவல் செய்யும் அவர் ஆரம்பத்தில் அவர்களின் குடும்பங்கள் யாவும் இதனை வரவேற்கவில்லை என்பதையும் நினைவுக் கூறுகிறார். எனவே, அமீகா அகாடமியானது மாண்ட்டசரி பயிற்சிக்கும் ஆங்கில வகுப்புகளுக்கும் ஓர் நிலையான இணையவழி அமைப்புமுறையை வடிவமைக்கத் திட்டமிட்டு வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் தான் விதைக்கும் மாற்றத்தை மாணவர்களுடன் உரையாடுவதன் மூலமும் பெற்றோர்களின் பின்னூட்டத்தில் இருந்தும் உணர்ந்து வருகிறார் லக்ஷ்மி. தனது திட்டங்களை கர்நாடகாவில் இருக்கும் பிலிகிரி ரங்கன் மலைப்பகுதியில் (B.R. Hills) வாழும் ஓர் பழங்குடி குழுவினருக்கு எடுத்துச் சென்றுள்ள நமது லட்சியவாதியான தொழில்முனைவோர் இதனை தனது புதிய சவாலாக கருதி செயல்பட்டு வருகிறார். “நாம் எளிதாக தினமும் பார்க்கும் விஷயங்களை அங்குள்ள குழந்தைகள் மிகவும் அரிதாகவே கண்டிருப்பர்,” எனக் கூறும் அவர் ரயில் வண்டி நிலையத்தைப் பற்றிய ஓர் வகுப்பில் நிகழ்ந்த ஓர் சம்பவத்தை நமக்கு விவரிக்கிறார். எனினும் இந்த பழங்குடிகள் வாழும் குக்கிராமங்களில் ஓர் மிகப்பெரிய சவால் ஊடுருவி வருகிறது. பட்டதாரி பட்டம் பெற்ற ஆசிரியர்கள் இவர்கள் சமூகத்திற்குள் மிகவும் அரிதாகவே இருக்கின்றனர்.

“எனது இருபது ஆண்டு கால பெருநிறுவன பணிவாழக்கையைக் காட்டிலும் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் இம்முயற்சியானது எனக்கு அதிக உற்சாகத்தையும் மனநிறைவினையும் அளித்துள்ளது,” என சிரிக்கும் அவர் வகுப்பறைகளில் நடந்த நெகிழ வைக்கும் சில குட்டிக் கதைகளை நமக்கு பகிரத் துவங்கி உரையாடலை நிறைவு செய்கிறார்.

நீங்கள் பங்களிக்க ஆர்வமாக இருந்தால், பின்வரும் இணைப்பின் மூலம் நிறுவனத்தை அணுகலாம்: https://www.amyga.org/get-involved

 

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

256/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.