அடுத்த தலைமுறை மாணவர்களுக்கான சிறந்த பயிற்சியாளர்களை கண்டறிய உதவும் சிறந்த தளம் ஒன்றை இரண்டு கட்டடக்கலை (Architecture) பட்டதாரிகள் தோற்றுவிப்பர் என்று எவரும் யூகித்து இருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளை கற்க வைப்பதற்கான ரகசியத்தை ரோஹித் ரஹேஜா (Rohit Raheja ) மற்றும் சச்சித் துகர் (Sachit Dugar) ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர். மென்டார் மேட்ச் (Mentor Match) எனப்படும் அவர்களின் கல்விதொழில்நுட்ப (Edtech) இணையத்தளத்தின் வழியாக இக்குழு, இந்தியா முழுவதிலும் உள்ள மூன்றாம் வகுப்பில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு இடைப்பட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளை, ஐஐடி (IIT – இந்திய தொழில்நுட்ப கழகம்), பிட்ஸ் (BITS – பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம்), க்ரைஸ்ட் கல்லூரி (Christ College), என்ஐஐடி (NIIT – தேசிய தகவல் தொழில்நுட்ப கழகம்) போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் கல்லூரி மாணவ மாணவிகளுடன் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர் (Matched). “இதன் கருத்துக்கோள் (Concept) என்பது மிகவும் எளிமையானதே. ஒரு மாணவர் சமூக வலைதளங்களில் தனது ஆசிரியரை பின்தொடரவோ, முந்தைய இரவு தான் சென்ற கொண்டாட்ட நிகழ்வைப் பற்றி அவர்களிடம் வெளிப்படையாக பேசவோ முன்வரமாட்டார்” என்று சொல்லும் ரோஹித், இந்த ஆசிரியர் – மாணவர் இடைவெளியை சரி செய்யும் நோக்கத்திலே, அமெரிக்காவின் பிக் பிரதர்ஸ் பிக் சிஸ்டர்ஸ் (Big Brothers Big Sisters) வழிகாட்டி அமைப்பினைப் போலவே தங்களது இளம் தொடக்கநிலை நிறுவனம் (Start-up) செயலாற்றி வருவதாக கூறுகிறார்.
“கட்டடக்கலை பட்டதாரிகள் இருவர் எவ்வாறு ஒரு கல்விதொழில்நுட்பத் துறையில் செயல்புரிகின்றனர் என பலரும் ஆச்சரியப்படுவதுண்டு.” தன் கட்டடக்கலைக் கல்வியே இந்த தனித்துவமான முயற்சியை உருவாக்க தனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ரோஹித் கூறுகிறார். சொல்லப் போனால் மென்டார் மேட்ச் (Mentor Match) முயற்சிக்கு அடித்தளமாக இருக்கும் ஒட்டுமொத்த யோசனையுமே அவர் தன் நண்பரின் வீட்டில் கட்டடக்கலை செயல் திட்டத்துக்காக (Architecture project) அவருடன் இணைந்து செயல் புரிகையில் உதித்ததே. அவர் நண்பரின் அம்மா தன் மகளின் பத்தாம் வகுப்புக்கான தனிப்பயிற்சிக்காக (Tuition) அதிக பணம் செலவு செய்வதாகவும் அவ்வாறு செலவு செய்தும் அவளின் மதிப்பெண்கள் முன்னேறவில்லை என்றும் அவளின் தேர்வுகளுக்கு குறைந்த நாட்களே உள்ளதாகவும் புலம்பினார். “நான் அன்று தான் தற்செயலாக ஐஐடி (IIT – இந்திய தொழில்நுட்ப கழகம்) மெட்ராஸில் படிக்கும் என் நண்பர் ஒருவரை சந்தித்தேன். தான் எப்படியேனும் ஏதாவது கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அவர் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்” என ரோஹித் நினைவுக் கூறுகிறார். “நான் அவரைத் தொடர்புக் கொண்டு என் கல்லூரி நண்பரின் தங்கைக்கு ஆசிரியராய் பாடம் கற்றுக் கொடுக்க இயலுமா?” எனக் கேட்டேன். அவர் ஒப்புக் கொள்ள தேர்வுகளில் 60% மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருந்த அவள் அவரின் வழிக்காட்டுதலுக்குப் பின்னர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் 94% மதிப்பெண்கள் பெற்றாள். என் நண்பரான ஐஐடி மாணவரும் அவருக்கு கற்றுத் தந்ததன் மூலம் தன் கைசெலவுக்கென போதுமானளவு பணமும் சம்பாதித்தார்.
“நான் உடனடியாக இந்தியாவில் ஏதேனும், மாணவர்கள் சக நண்பர்களுடன் ஒருகிணைந்து பயிலும் தளங்கள் (study buddy platforms) உள்ளதா எனத் தேடத் தொடங்கினேன்.” ஆனால் அதைப் போன்ற தளங்கள் எதுவுமே இல்லை. வணிகச் சந்தையில் இருக்கும் இந்த இடைவெளியை உணர்ந்த ரோஹித் தன்னுடன் கல்லூரியில் பயிலும் சச்சித் துகரை தொடர்புக் கொண்டு தன் வசம் இருந்த யோசனையைப் பகிர்ந்தார். “சச்சித்தும், நானும் எங்கள் கல்லூரி நாட்களில் இருந்தே தொழில்முனைவை (Entrepreneurship) மேற்கொள்ளும் எண்ணத்திலேயே இருந்தோம். எங்கள் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் கூட பிரௌனி (Brownie) எனப்படும் ஒரு வகை தின்பண்டத்தை விற்கும் வியாபாரம் செய்து வந்தோம்.” மியாசி கட்டடக்கலைக் கல்லூரியில் (Measi Academy of Architecture) இருந்து சமீபத்தில் பட்டம் பெற்ற இருவரும் பொதுவாக நடப்பு வாழ்க்கையின் மிகப் பெரிய சவால்களையும், இயல்நிலைகளையும் நன்கு அறிந்திருந்தனர். “ஒரு கல்லூரி மாணவராக இந்தியாவில் பகுதி நேர வேலையில் (Part-time job) சேர்வது என்பது மிகவும் கடினமானது. ஸ்விக்கி (Swiggy) எனப்படும் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் உணவு வழங்கும் ஒரு ஊழியனாக வேலை செய்வது மட்டுமே எனக்கு இருந்த ஒரே வாய்ப்பாக இருந்தது. ஆனால் அதில் வேலை செய்திருந்தாலும் கூட என் பெற்றோர் விருப்பம் தெரிவிக்காமல் வருத்தமே கொண்டிருந்திருப்பர்.”
“பெரும்பாலான கட்டடக்கலைப் பட்டதாரிகள் ஒரு புகழ்பெற்ற கட்டடக்கலை நிறுவனத்தில் வேலைப் பெற்று, அதன் மூலம் அனுபவம் பெற்று இறுதியில் அவர்களாகவே ஒரு நிறுவனம் தொடங்குவதையே விரும்புவர். நாங்களோ அதை ஓரிரு ஆண்டுகளில் செய்துக் கொள்ளலாம் என்றும், தற்பொழுது மாணவர்கள் குழுக்களாக பயிலும் செயல் திட்டமான இதில் (Study Buddy Project) முழு முயற்சியுடன் செயல்படலாம் என்றும் முடிவு செய்தோம்.” என்று விவரிக்கின்றனர். கட்டடக்கலைஞர்களாக பணிபுரிந்துக் கொண்டே கல்லூரி நண்பர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு இவர்கள் இருவரும் மென்டார் மேட்சை (Mentor Match) பகுதி நேரத்தில் கட்டமைக்கத் தொடங்கினர். சில மாதங்களில், கிட்டத்தட்ட நானூறு மாணவர்களை (Mentees) அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப பயில்விப்பர்களுடன் (Mentors) பொருத்தியப் பின்னர் இந்த பயில் திட்டத்துக்கான அதிகளவு தேவையைக் கருத்தில் கொண்டு இவர்கள் இருவரும் இம்முயற்சியிலேயே முழு முனைப்புடன், முழு நேரமும் இறங்கினர். “எங்கள் யோசனைக்கு கூடுதல் மதிப்பளித்தது என்னவென்றால், வகுப்புகளுக்கும், தனிப்பயிற்சிகளுக்கும் தங்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி அனுப்பும் பெற்றோர்கள் பெரும்பாலும் காணப்படும் வெளியில் வழிக்காட்டுதலுக்காக (Mentorship) பள்ளி மாணவர்கள் எங்களை அணுகியதே!”
ஆனால் பெற்றோர்களிடம் இந்த யோசனையைப் பற்றி விவரிப்பதும் அவர்களை இதற்கு ஒப்புக் கொள்ள வைப்பதுமே பெரிய சவாலாக இருந்தது. எனினும், நம் இளம் நிறுவனர்கள் தங்கள் வசம் அதற்கு ஒரு திட்டம் வைத்திருந்தனர். ஆசரியராக விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் (Aptitude tests) வைத்து பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் இடம்பெறும் உள்ளடக்கத்தில் அவர்களை சோதனை செய்தனர். நிலையான ஒரு தரவரிசை முறைப்படி (Standardized grading system) ஒரு பள்ளி மாணவருக்கு, ஒரு ஆலோசகர் அல்லது ஆசிரியர் ஒதுக்கப்படுவார். தேர்ச்சிப்பெறும் ஆலோசகர்கள், தளத்தில் ஏற்கனவே உள்ள முன்னோடி (Pioneer) ஆலோசகர்களிடம் பயிற்சி மேற்கொள்வர். இந்த காலத்தில் கற்பித்தல் மற்றும் மனப்பாடம் செய்யும் உத்திகள் (Teaching & Memorization techniques) அவர்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மென்டார் மேட்ச் ஆசிரியர், மாணவர் ஆகிய இருவரின் கற்கும் பாணிகளையுமே ( Learning styles) கருத்தில் எடுத்துக் கொள்கின்றது. “ஒரு சிலர் பார்வை சார் (Visual) பயில் முறையை விரும்பினால் மற்ற சிலர் மொழி (Linguistics) , செவி (Auditory) அல்லது கலந்துரையாடல் சார் முறைகளை விரும்புகின்றனர், “ என இம்முயற்சியின் முதுகெலும்பாக இருந்த ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம் (R&D – Research & Development) பற்றி விவரிக்கிறார் இணை நிறுவனரான ஒருவர்.
எவ்வாறு மென்டார் மேட்ச் (Mentor Match) பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் இவ்வளவு பிரபலம் அடைந்தது? இந்த கல்விதொழில்நுட்ப (EdTech) இணையத்தளமானது பயிற்சி நாடும் மாணவரின் பொழுதுபோக்கு செயல்கள் மற்றும் கனவுகளை கருத்தில் எடுத்துக் கொள்கிறது. “ஒரு குழந்தைக்கு ஐஐடியிலும் படிக்க வேண்டும் அதே சமயம் கால்பந்து ஆடவும் பிடிக்கும் என்றால் அந்த குழந்தையை, கால்பந்து ஆடப் பிடித்த ஐஐடியில் பயிலும் ஒரு மாணவ ஆலோசகருடன் பொருத்த முயல்வோம்.” இந்த வகையான ஒன்றுக்கொன்றான ஆலோசனை (1:1 mentorship) வழங்கும் முறையே மென்டார் மேட்சை (Mentor Match) மற்ற கல்விதொழில்நுட்ப இணையத்தளங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. நம்பகமற்ற விளைவுகளுக்காக பெற்றோர்களிடம் ஒரு பெரிய கட்டணத்தொகையை வசூலிப்பது அல்லாமல் கல்வி கற்கும் முறையை ஒவ்வொரு மாணவருக்கு ஏற்றவாறு தனித்துவமாக வடிவமைப்பதே எங்கள் நோக்கமாகும். புகழ்பெற்ற கருப்பொருள் உருவாக்குபவரும் (Content creator) இவர்களுடன் ஒன்றாக கட்டடக்கலை பயின்றவரும் ஆன ரெய்ஹான் ஷைக் (Rayhaan Shaik) மற்றும் ஓரிரு கலைஞர்களை இவர்கள் உள்ளேக் கொண்டுவர இவர்களின் நிறுவனமானது ஒரு வலுவான இணையத்தள இருப்பை (Online Presence) வரைகதைகள் (Comics), படவரி ரீல்கள் ( Instagram reels) மற்றும் போன்மிகள் (Memes) மூலமாக நிலைநாட்டியது.
“கட்டடக்கலை பள்ளியானது எங்களுக்கு தொழில்முனைவோர்கள் ஆக கற்றுத் தரவில்லை. எனவே, இந்த பயணம் ஒரு மிகப்பெரிய கற்றல் செயல்முறையாக அமைந்துள்ளது.” எனினும் கட்டடக்கலை பின்புலமே மென்டார் மேட்சை (Mentor Match) தனித்துவமாக்குவது. “எங்கள் அலுவலக வடிவமைப்பில் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம். ஆலோசகர்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வேண்டுமென ஒரு உல்லாசம் நிறைந்த பணியாற்றும் சூழலை உருவாக்க முயன்றோம்.” என்கிறார் ரோஹித். இது மட்டுமல்லாமல் ஒரு நிம்மதியான வேலைச் சூழல் உருவாகவும், பணியாற்றும் திறன் உயரவும் நம் இளம் தொழில்முனைவோர்கள் மிகத் தீவிரமாக பல முறைகள் கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றன.
அதன் விளைவாக, ‘தி மென்டார் மேட்ச் ஆரம்பப் பெட்டி (The Mentor Match Starter Kit)’ எனப்படும் பலவிதமான சுவாரஸ்யமான கற்றல் கருவிகளைக் கொண்ட ஒரு கற்றல் தொகுதியை வடிவமைத்து உள்ளனர். இதில் – விளையாடும் சீட்டுக் கட்டுகளில் ஒரு வகையான உரையாடலை மேம்படுத்தும் கான்வோ கார்ட்ஸ் (Convo Cards ), ஆஃபிஸ் (The Office) எனப்படும் தொடரில் வரும் ஸ்டீவ் கேரல் (Steve Carell) படம் இடம்பெற்ற ஒரு கதவு மாட்டியும் (Door hanger) அடங்கியுள்ளது. மேலும், ஆலோசகர் மட்டுமே நுழைவுரிமை கொண்ட பொருத்தும் கையேட்டினை உடைய (Assembly Manual) உங்களின் சொந்த பொம்மையை கட்டுங்கள் (build-your-own-toy) மூலம் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர் அதை பொருத்தக் கற்று கொள்வர். இவையல்லாமல் அமர்வு வரைவுகள் (Session planners), தேர்வு தடமிகள் (Test trackers) மற்றும் பணி ஆலோசனை முன்வடிவங்களையும் (Career Guidance Templates) கொண்டுள்ளது. மன வரைபடம் (Mind Mapping) மற்றும் ஃபென்மேன்ஸ் தொழில்நுட்பமான (Feynman’s Technique) பொருளடக்கத்தை கதை வடிவில் சுருக்கும் ஆறு படிநிலைகள் கொண்ட செயல்முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த பொருட்கள் முறையாக வடிவமைக்கப்பட்டன.
கற்றல் செயல்முறையானது முற்றிலும் பரிசுகள் அடிப்படையிலேயே (Rewards – based) இயங்குகிறது – ஒவ்வொரு முறை ஒரு செயலை முடிக்கும்போதும், ஆசிரியரும், மாணவரும் ஒரு விளையாட்டு விளையாடுவது, வலையொலி அல்லது நெட்ஃபிளிக்சில் (Netflix) படங்கள் அல்லது தொடர்கள் காண்பது என ஏற்கனவே இருக்கும் ஒரு செயல் பட்டியலில் இருந்து ஒன்றை இருவரும் சேர்ந்து தேர்வு செய்வர். அவ்வாறு செய்கையில் அவர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பு (Bond) வலுவடைகிறது. பள்ளிகளும் ஆசிரியர்களும் கூட இணையர் கற்றல் (Peer Learning) யோசனையைப் பின்பற்ற முன்வந்துள்ளனர். “ சில பள்ளிகள் பயில்வதற்கு கஷ்டப்படும் மாணவர்களிடம் கூட எங்கள் தளத்தை பரிந்துரை செய்கின்றனர்.” என்கிறார்கள் இவர்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் பதிமூன்றுக்கும் மேற்பட்ட பாடங்களை உள்ளடக்கும் வண்ணம் இத்தளத்தில் ஆசிரியர்களாக இணைந்திருக்க இந்த இணை நிறுவனர்கள் ‘முதலீடுகள்’ எனப்படும் அடுத்த பெரிய நிலைக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கின்றனர். “நாங்கள் இருவருமே எங்களுக்கென பெருமளவு ஆலோசனைகளைப் பெற்று உள்ளோம்.” என புன்முறுவலுடன் கூறுகிறார் அவர்களில் ஒருவர். “சென்னையை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடக்க நிறுவனமாக இருப்பதில் நன்மை என்னவென்றால் இங்கு நிறைய திறமை உள்ளது அதே சமயம் மும்பை போன்ற நகரங்களை ஒப்பிடுகையில் முன்னேற்ற அளவும் (Pace) மெதுவாகவே உள்ளது. தொழில்முனைவில் எங்களைப் போன்ற புதிதாய் காலெடுத்து வைப்பவர்களுக்கு இது எளிதாக இருக்கிறது.” எனினும் என்னதான் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்கா இருப்பினும் (IIT Madras Research Park) பெங்களூரில் காணப்படும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான ஒரு சூழலமைப்புக்கு (Start-up Ecosystem) நிகராக ஒரு அமைப்பு சென்னையில் அமைய இன்னும் நெடுநாட்கள் உள்ளது எனவும் சுட்டிக் காட்டுகிறார்.
அண்மையில், மென்டார் மேட்ச் (Mentor Match), கணினிப்பொறி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் இரு மாணவர்களின் உதவியுடன் ஒரு செயலியை (App) உருவாக்கி வருகிறது. தன் செயல்களை விரிவாக்கம் செய்ய, போட்டித் தேர்வுகளான ஜெஇஇ – ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE – Joint Entrance Examination ) மற்றும் நீட் – தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – National Eligibility cum Entrance Test) போன்றவற்றிற்கு மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சிகளுள் ஈடுபட இந்நிறுவனம் திட்டமிடுகிறது. இறுதியில் கல்வி – சாரா (Non – Academic) ஆலோசனை வழங்கல்களிலும் ஈடுபட இவ்விருவர் குழுஆசைப்படுகின்றது. “சிறுவயதிலிருந்தே ஒரு விமானி ( Pilot ) ஆக வேண்டும் என்பது என் கனவு. என்னை அந்த பாதையில் வழிநடத்திச் செல்ல எனக்கு ஒருவர் உடனிருந்திருந்தால்” என பெருமூச்சி விடுகிறார் ரோஹித்.
கல்வித்துறையில் புதிய வழி அமைக்க வேண்டும் என்ற வேட்கை மற்றும் சார்பியலால் (Relatability) உந்தப்படும் மென்டார் மேட்சில் (Mentor Match) இருக்கும் இவ்விருவரும், கற்றலுக்கு உகந்த ஒரு மிகச் சிறந்த மாணவர்கள் சூழலமைப்பினை (Student Ecosystem) உருவாக்குவதற்கான ஒரு நெடுங்கால இலக்குத்திட்டதின் துவக்கத்திலேயே உள்ளனர். இந்தப் பாதையில் இன்னும் நிறைய வெற்றிகளும், சாதனைகளும் இவர்களைத் தழுவ காத்திருக்கின்றன என்றால் ஐயமில்லை.