ரசன்னா தனது பெற்றோர்களுடன் புத்தகக் கடைக்கு வாரந்தோறும் செல்வதுண்டு. அப்படியொரு சமயம் அவர் புத்தகக் கடைக்கு சென்றார். ஃபெமினா, நேஷனல் ஜியோகிராபிக் மற்றும் இந்தியா டுடே போன்ற பிரபல இதழ்கள் வைக்கப்பட்டிருந்த அடுக்குகளைக் கடந்து அவர் ஓடினார். கடையின் பின்புறத்தில் குழந்தைகளுக்கான இதழ்கள் இருந்த பிரிவில் தேடித் துருவி டிடக்டிவ் (Detective) இதழின் சமீப பதிப்பை எடுத்தார்.
“நான் சிறுமியாக இருந்த பொழுது குற்றவியல் மற்றும் கொலைக் கதைகள் (crime and murder stories) படிப்பதை பெரிதும் விரும்பினேன்,” என புன்முறுவல் செய்கிறார் முனைவர் பிரசன்னா கெட்டு (Dr. Prasanna Gettu). இளம் பருவத்தில் அவருக்கு இருந்த அதிகமான புத்தகங்கள் படிக்கும் பழக்கமானது குற்றவியலுக்கான ஒரு தீரா ஆர்வத்தையும் குற்றத் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பிற்கான சர்வதேச அமைப்பு எனப்படும் PCVC (International Foundation for Crime Prevention and Victim Care) எனும் தனது அரசு சாரா அமைப்பிற்கான நோக்கத்தையும் தனக்குள் விதைத்தது.
“முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தடயவியல் உளவியலோ (forensic psychology) மற்ற தடயவியல் அறிவியல் (forensic sciences) படிப்புகளோ முதுநிலைப் பட்டப்படிப்பு பாடங்களாக இல்லை,” என நினைவுக் கூறும் அவர், “எனவே நான் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகமாகி இருந்த பாடமான குற்றவியலை பாடமாக எடுத்துப் படித்தேன்” என்கிறார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டப்படிப்பை நமது குற்றவியல் நிபுணர் நிறைவு செய்யப் போகும் வேளையில் ஜப்பானில் உள்ள டோக்கிவா பல்கலைக்கழகத்தில் (Tokiwa University) பாதிப்புக்குள்ளாக்குவதைப் (victimization) பற்றிய படிப்பான விக்டிமாலஜி (Victimology) என்பதில் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான வாய்ப்பினைப் பெற்றார். உஷாராணி மோகன் (Usharani Mohan) மற்றும் ஹேமா ராமச்சந்திரன் (Hema Ramachandran) என்பவர்களே பிரசன்னாவை தவிர ஜப்பானில் இந்தப் படிப்புக்கு தேர்வு செய்யப்பட்ட இரு இந்தியர்களாக இருந்தனர். சென்னையை சார்ந்த இவர்கள் மூவரும் நேரடியாக பாதிப்படைந்தவர்களுடன் (victim) பணியாற்றியதன் மூலமும் ஜப்பான் ஓர் நாடாகவும், அதன் மக்கள் ஓர் சமூகமாகவும் மற்ற அமைப்புகளும் இணைந்து பாதிப்படைந்தவர் மீண்டு வரும் செயல்முறையில் எவ்வாறு பங்களித்தனர் என்பதை கண்டறிந்ததன் மூலமும் பலவிதமான அனுபவங்களை பெற்றனர்.
2001-ஆம் ஆண்டு இந்தியாவிலும் ஜப்பானில் இருப்பதைப் போன்ற ஓர் அமைப்புமுறையை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் பிரசன்னா தாயகம் திரும்பினார். குற்றவியல் துறையில் கல்வியாளரான முனைவர் K. சொக்கலிங்கம் என்பவரின் வழிக்காட்டுதலில் ஆராய்ச்சியைக் குறிக்கோளாக கொண்ட ஓர் அறக்கட்டளை அமைப்பாக PCVC அமைப்பை அவர்கள் மூவரும் துவங்கினர்.
பாரி முனையில் ஹேமாவின் தந்தையின் அலுவலகத்தில் இருந்த ஓர் சிறிய அறையில் இருந்து அமைப்பின் பணிகளை அவர்கள் மூவரும் துவங்கினர். மெதுவாக வாய்வழி தகவல் பரிமாற்றத்தின் மூலம் ஒருவர் தங்கள் உரிமைகளைத் தெரிந்துக் கொள்வதற்கு தொடர்புக் கொள்ள வேண்டிய ஓர் தனித்துவமான அமைப்பாகவும் தாங்கள் பாதிப்புக்குள்ளாகும் தருணத்தில் ஆதரவு நாடும் ஓர் அமைப்பாகவும் PCVC அமைப்பானது மாறியது.
“நாங்கள் குற்றவியல் துறையில் ஓர் அங்கமாக இருந்ததால் காவல் துறையுடன் அவ்வப்போது பணியாற்றி வந்தோம்,” என விவரிக்கிறார் அவர். காவல் துறையுடன் இருந்த இந்த இணைப்பானது அவர்களின் முதல் நிதியளிக்கப்பட்ட திட்டத்துக்கு வழிவகுத்தது. தமிழ்நாட்டில் நிகழும் குற்றங்களின் புள்ளிவிவரத்தைக் கொண்ட ஓர் கட்டமைப்பையும் தொகுப்பையும் முதன்முதலில் PCVC அமைப்பானது வெளியிட்டது. “இத்திட்டத்துக்கு நாங்கள் பெற்ற நிதியே PCVC அமைப்புக்கான தொடக்க முதலீடாக மாறியது!” என சிரிக்கிறார் பிரசன்னா.
முதல் ஆண்டின் இறுதியில் தாங்கள் கையாண்டு வந்த பிரச்சனைகளுள் கிட்டத்தட்ட அனைத்துமே குடும்ப வன்முறை (domestic violence) சார்ந்ததாக இருக்கின்றன என்பதை இந்த அமைப்பினர் உணர்ந்தனர். “ஒரே ஒரு நபர் மட்டுமே கடனட்டை மோசடி என்ற குற்றச்சாட்டுடன் எங்களை அணுகினார்,” எனக் கூறும் அவர் குடும்பங்கள் மற்றும் நெருங்கிய உறவுகளால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறைகளின் மீது கவனம் செலுத்தும் விதம் எவ்வாறு PCVC அமைப்பானது தனது இயக்கங்களை மாற்றி அமைத்தது என்பதை விவரிக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அமைப்பானது தனது சேவைகளை ஒருபாலீர்ப்புடைய பெண்களுக்கும் (lesbian) திருநம்பிகளுக்கும் (trans men) வழங்கும் நோக்கத்தில் LGBTQ அதாவது மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான ஆதரவுக் குழுக்களான ஓரினம் (Orinam) போன்ற குழுக்களுடன் இணைந்துப் பணியாற்றத் துவங்கியது.
அரசு சாரா அமைப்புகள் என்றாலே சமூக பொருளாதார நிலைகளில் ஒரு சில நிலையினர் மட்டுமே பயனடைய முடியும் என்ற ஓர் பொதுவான தவறான கருத்து நிலவி வருகிறது. மக்களின் மத்தியில் இருக்கும் இந்தத் தவறான கருத்தினை PCVC அமைப்பானது அதன் துவக்கக் காலத்தில் இருந்தே நன்கு அறிந்து இருந்தது. குடும்ப வன்முறையானது அனைத்து தரப்பு மக்களிடையே நிலவி இருந்த ஓர் பொதுவான பிரச்சனையாக இருந்தது. ஏற்கனவே இருந்த அமைப்புகளில் நன்கு பராமரிக்கப்பட்டு வந்த ஆதரவு சேவைகள் இல்லை என்பதாலும் அவற்றிற்கு இடையே கூட்டு செயல்முறைகள் இல்லை என்பதாலும் PCVC முன்வந்து அதற்கே உரிய ஆதரவு சேவைகளை தானாகவே துவங்கியது. “எனினும் குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவருக்கு அனைவரின் ஒன்றுபட்ட முழுமையான ஆதரவு தேவை,” என பிரசன்னா விவரிக்கிறார். எனவே PCVC அமைப்பினர் தங்களின் திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் பல்வேறு தனித்திறன் வாய்ந்த அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் ஒருங்கிணைந்துப் பணியாற்றுவதன் மூலமும் பாதிக்கப்பட்ட பெண்களையும் குழந்தைகளையும் தன்னிறைவாக்கி அவர்களை சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் பயணத்தில் ஓர் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க இடத்தில் தாங்கள் இருக்குமாறு உறுதி செய்துக் கொண்டனர்.
“நாங்கள் துவங்கிய ஒவ்வொரு புதிய ஆதரவு சேவையும் எங்களை அணுகுபவர்களின் தேவைகளில் இருந்து பிறந்தவை ஆகும்,” என நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் இவ்வமைப்பின் நிறுவனர். 2006-ஆம் ஆண்டில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையுடன் இணைந்து PCVC அமைப்பானது அதன் தலைசிறந்த திட்டமான விடியல் (Vidiyal) எனும் திட்டத்தை துவங்கியது. குடும்ப வன்முறையினால் தீக்காயம் பெற்று மீண்டு வருபவர்களுடன் பணியாற்றுவது சவாலான ஓர் பணியாக இருந்தது. அது தனித்துவமாகவும் இருந்தது. மீண்டு வருபவர்கள் தங்கள் குடும்பங்களினால் வன்முறைக்கு ஆளாகியது மட்டுமல்லாமல் தீக்காயத்தினால் தங்கள் உடல்களில் நிகழும் மாற்றங்களையும் தழுவ வேண்டியிருக்கும். நெருக்கடியான சூழல்களில் இவர்கள் உருவாக்கிய த்வனி (Dhwani crisis hotline) எனப்படும் அவசர உதவி சேவையானது (24/7 இயங்கும் கட்டணமில்லா உதவி எண்) இந்தியா முழுவதிலும் இருந்து தொடர்புக் கொள்ளும் பாதிக்கப்பட்டவர்களை ஓர் மனநல ஆலோசகருடன் நேரடியாக இணைக்க வல்லதாக உள்ளது. மேலும் இந்த அமைப்பானது சென்னை அண்ணாநகரை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் உதவி நாடி வரும் பெண்களுக்கு மனநல ஆலோசனை சேவைகள் வழங்குவதற்கென உதயம் (Udhayam) எனும் ஆதரவு திட்டம் ஒன்றினை துவங்க அந்தப் பகுதியின் காவல் துறையுடன் கூட்டுமுயற்சியில் இறங்கியது.
ஒட்டுமொத்த பயணமும் ஓர் கற்றல் செயல்முறையாகவே இருந்தது. இன்றளவும் இருக்கிறது. எவ்வாறு அந்த அமைப்பினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உரையாடுகின்றனர் என்பதில் துவங்கி அவர்கள் குடும்பத்தை எவ்வாறு அவர்கள் கையாள்கின்றனர் என்பது வரை அவர்களின் ஒவ்வொரு செயலும் நீடித்த ஓர் தாக்கத்தை அந்த பெண்களினுள் ஏற்படுத்தியது. “நாங்கள் துவங்கியப் பொழுது பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர்கள் எங்களின் காப்பகத்தில் இருப்பதால் நாங்கள் அவர்களுக்கென அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக உறுதியளிப்போம்” என நினைவுக் கூறுகிறார் பிரசன்னா. “ஆனால் நெடு நாட்களுக்குப் பின்னரே இந்தப் பெண்களை ஓர் தீர்வினை நோக்கி வழிக்காட்டி செல்வது முக்கியமென்பதை நான் உணர்ந்தேன்” என்கிறார் அவர். ஒவ்வொரு முறை ஒருவருடன் இணைந்து பணியாற்றும் போதும் இந்த அமைப்பினர் புதிதாக ஏதேனும் ஒன்றினைக் கற்றனர். ஆண்டுகள் உருண்டோட சமூகத்திற்குள் பெண்களையும் குழந்தைகளையும் தன்னிறைவாக்கி மீண்டும் ஒருங்கிணைக்க ஓர் நிலைத்த அமைப்புமுறையை PCVC உருவாக்கியது.
தங்களை அணுகுவோர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியே வெளியிடப்படாத இரண்டு பகுதிகளில் இந்த அமைப்பானது இரண்டு காப்பகங்களை நடத்தி வருகிறது. அங்கிருக்கும் உரிமையாளர்கள் (இவ்வாறே முனைவர் பிரசன்னா தன்னை அணுகும் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிட விரும்புகிறார்) சமூகத்தோடு மீண்டும் ஒருங்கிணைய உதவும் வகையில் வெவ்வேறு வகையான திட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மூன்று பெண்களால் இயக்கப்பட்டு வந்த அமைப்பாக துளிர்விட்ட PCVC ஆனது இன்று நாற்பது ஐந்து நபர்கள் கொண்ட ஓர் குழுவாக வலுபெற்று ஆழமாக வேரூன்றி நிற்கிறது. இதில் இயன்முறை மருத்துவ குழுவினரும் (physiotherapist), புண்களின் சிகிச்சைக்கு செவிலியர் குழுவினரும், வீடுகளுக்குச் செல்லும் சமூக உளவியல்சார் வல்லுனர்கள் குழுவினரும் (psychosocial specialist), இயக்கங்களை நிர்வகிக்கும் நிர்வாகக் குழுவினரும், ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு குழுவினரும் அடங்குவர்.
வருகிற ஜூலை மாதம் PCVC பயன்படுத்தப்பட்ட பொருட்களைக் கொண்ட நூல் (Nool) எனப்படும் ஓர் அங்காடியை நிறுவ உள்ளது. “எல்லா அரசு சாரா அமைப்புகளும் நன்கொடைகளை ஆடைகள், பொம்மைகள் மற்றும் மற்ற வீட்டு உபயோகப் பொருட்களாகவே பெறுவர்,” என இத்திட்டத்தினைப் பற்றி நமக்கு மேலும் விவரிக்கத் துவங்குகிறார் பிரசன்னா. காப்பகத்தில் இருக்கும் பெண்களும் குழந்தைகளும் தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையே விட்டு விட்டு வருகின்றனர். நூல் அவர்களுக்கு புதியதாக ஓர் வாழ்வை அமைக்க உதவும். “ஒரு பெண் ஆனவர் வரவு செலவினைத் தாமாகவே திட்டமிட்டு தனக்குத் தேவையான பொருட்களைத் தாமாகவே பெற்றுக் கொள்வதில் ஒருவித தன்னம்பிக்கை உணர்வினைப் பெறுகிறார்,” என விவரிக்கிறார் பிரசன்னா. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக காப்பகத்தில் இருக்கும் அனைவரும் பணம் சார்ந்திராத முறையில் மதிப்புகள் (non-monetary credits) பெறுவர். வரவுகளாக இருக்கும் இந்த மதிப்புகளை சேகரித்து வைக்கக் கற்றுக் கொண்டு அவற்றை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தி அந்த அங்காடியில் இருந்து தங்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
சிறிய உரையாடல்கள் மூலம் உணர்ச்சிகரமான ஆதரவு தருவதில் துவங்கி ரைட்டர்ஸ் கஃபே (Writers Cafe) எனும் உணவகத்துடன் ஒன்றிணைந்து தீக்காயத்தில் இருந்து மீண்டு வருபவர்களுக்கென நடைமுறையில் சாத்தியமான ஓர் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தது வரை தென்னிந்தியா முழுவதிலும் இருக்கும் பல பெண்களும் குழந்தைகளும் சாம்பலில் இருந்து மீண்டு வரும் எரிப்பறவையைப் போல் குடும்ப வன்முறையை சுற்றியுள்ள மனத்தடைகளைத் தகர்த்தெறிந்து மீண்டு எழுவதற்கு வழிக்காட்டியாக PCVC இயங்கி வந்துள்ளது.
“இலாப நோக்கமற்ற ஓர் அமைப்பை இயக்குவதற்கு தீரா ஆர்வமும் விடாமுயற்சியும் மிகவும் அவசியம் ஆகும்,” என அறிவுரைக்கும் PCVC அமைப்பின் நிறுவனர் பிரசன்னா தொடர்ந்து, “நமது ஒவ்வொரு செயலும் யாரோ ஒருவரின் வாழ்வில் ஓர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுதல் மிகவும் முக்கியமாகும்” என கண்களில் நம்பிக்கைப் பொங்கக் கூறி உரையாடலை நிறைவு செய்கிறார்.