2018-ஆம் ஆண்டு. ஓர் சனிக்கிழமை மாலை. மான்செஸ்டர் உனைடெட் அணிக்கும் ஆர்சீனல் அணிக்கும் இடையேயான போட்டி திரையிடப்படுகிறது. கூட்டத்தினர் கூச்சல் எழுப்புகின்றனர். அறையில் இருந்து உற்சாக கூக்குரல்கள் கேட்கின்றன. கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. “பகுதி நேர வேலையாம்!” என அவர்கள் கூச்சல்களுக்கு மத்தியில் கத்த ஆர்சீனல் அணி அடுத்த கோல் போடுகின்றனர்.
பெர்னாட் தாம்சன் (Bernaud Thomson) மற்றும் ஹாரி எனப்படும் ஹாரிசன் ஜேம்ஸ் நெல்சன் (Harrison James Nelson) ஆகிய இருவரும் பள்ளிப்பருவத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். கால்பந்து மீதும் மான்செஸ்டர் உனைடட் (Manchester United) அணி மீதும் இருவருக்கும் இருந்த தீரா ஆர்வமானது அவர்களை நண்பர்களாக்கியது. “பெர்னி எங்கள் பள்ளி கால்பந்து அணியின் தலைவனாக இருந்து வந்தான்!” என பெர்னாடை சுட்டிக் காண்பிக்கிறார் ஹாரிசன். பெர்னாட் தனது கல்லூரி படிப்புக்கு பின்னர் வங்கித் துறையில் ஓர் பணியில் சேர்ந்தார். மாறாக ஹாரிசன் விளையாட்டில் கவனம் செலுத்தி ராயபுரத்தில் பல்வேறு விளையாட்டுகளுக்கென ஆடுகளம் என்ற ஓர் சேவையைத் துவங்கினார்
என்னதான் இருவரும் தங்கள் பள்ளி படிப்புக்கு பின்னர் வெவ்வேறு பாதைகளில் சென்றாலும் கால்பந்துக்கான அவர்களின் ஆர்வம் அவர்களை எப்பொழுதும் ஒன்று சேரவே வைத்தது. மான்செஸ்டர் உனைடட் அணியின் தீவர ரசிகர்களான இவர்கள் இருவருக்கும் தற்பொழுது வயது முப்பதை தாண்டி உள்ளது. இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பொறுப்புகள் அதிகமாக கால்பந்து போட்டிகளை விடாமல் காண்பது என்பது கடினமாகவே இருந்தது. “எங்கள் இருவரது மனைவிகளும் வார நாட்களில் பணிக்கு செல்வதால் வார இறுதி நாட்களில் குடும்பமாக நேரம் செலவிட்டு சற்று இளைப்பாறவே நேரம் சரியாக இருக்கும்,” என விளக்குகிறார் ஹாரி. “சரியாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் தான் போட்டிகளும் ஒளிபரப்பப்படும்,” என கூறுகிறார் பெர்னாட்.
கால்பந்து போட்டிகள் காண்பது என்பதே ஓர் அரிய வரம் போல மாறியது. “இனியாவது இதனை வெறும் பொழுதுபோக்காக கருதாமல் இதையும் ஓர் வேலையென நினைத்து இதற்கென ஏதேனும் செய்ய வேண்டும்,” என நினைத்த இருவரும் குழுமமாக பலர் ஒரே நேரத்தில் போட்டியை கண்டுகளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றினை துவங்க முடிவு செய்தனர். ஐரோப்பாவில் கால்பந்தை மதத்தை போல வழிபடுவர் மக்கள். அது ஓர் தனி உலகம். ஒவ்வொரு அணி ரசிகர்களும் தங்களுக்கென ஓர் வாட்ஸ்ஆப் குழுமத்தை வைத்திருப்பர். போட்டி நடைபெறும் வேளையில் குறைந்தளவு 3000 குறுஞ்செய்திகள் ஆவது அந்த குழுமத்தில் வந்து குவிந்த வண்ணம் இருக்கும்.
தங்களின் அறிவுபூர்வமான யோசனையை எண்ணி இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நொறுக்கு தீனிகளையும், குளிர்பாணங்களையும் எடுத்துக் கொண்டு தங்களின் நண்பரது படமனைக்கு (studio) சென்று விடுவர். அந்த அறையில் கால்பந்து சார்ந்த சுவரொட்டிகளையும் ஒரு மேசையையும் கொண்ட ஓர் மூலையில் இருவரும் அமர்ந்து தங்கள் முன் இருக்கும் திரையில் போட்டியைப் பார்த்துக் கொண்டே அதற்கான அவர்களின் விரிவுரையை புகைப்படக் கருவியை கொண்டு பதிவு செய்வர். ‘ஃபுட்பால் மக்கள்’ (Football Makkal – முதன்முதலில் தங்களை இவ்வாறே இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டனர்) என்ற பெயரில் யூடியூபில் இருவரும் ஒன்றிணைந்து போட்டியை கண்டு விரிவுரை அளிப்பதை நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
கூடிய விரைவில் இவர்களின் யூடியூப் பக்கமானது முப்பது நபர்கள் கொண்ட குழுமமாக மாறியது. இந்த குழுமத்தில் இவர்களை பின்தொடர்பவர்கள் போட்டி நடக்கும் நாளில் மட்டுமல்லாமல் சில சமயங்களில் போட்டிகளை இவர்கள் இருவரும் தவற விடும் நாட்களில் கூட இவர்களை உரிமையாக கேள்விகளும் கேட்பதுண்டு. நாளடைவில் ‘ஃபுட்பால் மக்கள்’ என்பதில் இருக்கும் மக்கள் என்பது மருவி நண்பர் என்ற பொருளில் நெல்லை பகுதி மக்கள் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக தினசரி பயன்படுத்தும் மக்கா என்ற சொல்லாகி ‘ஃபுட்பால் மக்கா’ (Football Makka) என்றாகியது (மக்கா என்பது ஆங்கிலத்தில் dude என்ற சொல்லைப் போன்றும், தமிழில் மச்சான் என்ற சொல்லைப் போன்றும் செல்லமாக அழைப்பதற்கான சொல்லாகும்)
ஒரு நாள் அவர்கள் ஒரு போட்டிக்கு விரிவுரை அளித்து கொண்டிருக்கும் போது அவர்களின் நண்பர் சென்னையில் நடக்கும் உள்ளூர் கால்பந்து போட்டிகளுக்கு விரிவுரை அளிக்குமாறு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை கருத்தில் கொண்டு நிதானமாக அவர்கள் இருவரும் இந்த களத்தில் இறங்கினர். முதலில் ராயபுரத்தில் இருக்கும் ஹாரியின் இடத்தில் ஒரு சிறிய திறனறி கால்பந்து (exhibition match) போட்டியை நடத்தினர். “பெர்னாட் அவர் சுற்றுப்புறத்தில் இருந்து ஓர் அணியைத் திரட்டி கூட்டி வர, நானோ எனக்குத் தெரிந்த ஓர் அணியை வரவழைத்தேன்,” என ஹாரி நினைவுக் கூறி முடிக்க எவ்வாறு தொழில்முறை ஏற்பாடு ஏதும் இன்றி அவர்கள் இப்போட்டியை நடத்தினர் என்பதை நினைத்து பலமாக இருவரும் சிரிக்கத் துவங்கினர். “ஒலிவாங்கிகள் களத்தை எதிர்நோக்கி இருக்க விரிவுரை அறையில் நாங்கள் இருவரும் விரிவுரை வழங்க கைபேசியின் புகைப்படக் கருவியே போட்டியினை நேரடி ஒளிபரப்பு செய்தது.”
தாங்கள் எதிர்பார்த்ததை விட அவர்களின் இந்த முயற்சிக்கு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. போட்டியில் பங்குபெற்ற இருபது போட்டியாளர்களும் உலகமெங்கும் இருந்த தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வட்டாரங்களுக்கு இந்நிகழ்வினைப் பற்றி பகிர்ந்தனர். “இதுவரை நான் புதையடிகளை (boots) எடுத்துக் கொண்டு விளையாட செல்வதை மட்டுமே எனது குடும்பத்தினரும் எனது நண்பர்களும் கண்டுள்ளனர். இந்தப் போட்டியிலேயே நான் விளையாடுவதை அவர்கள் முதன்முதலில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது,” என போட்டி நிறைவுற்ற பின்னர் ஒரு போட்டியாளர் கூறுகிறார். அப்பொழுது தான் ஒன்றை பெர்னாடும் ஹாரியும் உணர்ந்தனர். என்னதான் கால்பந்து அவர்களின் சிறுவயதின் ஓர் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து இருந்தாலும் அவர்கள் விளையாடியதையும் இதுவரை யாருமே கண்டதில்லை என்று.
அந்த தருணத்தில் தான் ஹாரியும் பெர்னாடும் தாங்கள் முன்னெடுத்து இருக்கும் இந்த மாபெரும் முயற்சியின் மகத்துவத்தை உணர்ந்தனர். இதனால் ஓர் சமூகமே பயனடைய போவதை அவர்கள் அப்பொழுது உணர்ந்தனர். கால்பந்தில் ஆர்வமுள்ள, உள்ளூர் அணிகள் மற்றும் அவற்றின் வீரர்களை நன்கு அறிந்த இளைஞர்களால் ஆன ஒரு குழுவினை அவர்கள் அமைத்தனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் இளம் கால்பந்து வீரர்களை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஓர் தளமாக மாற ஃபுட்பால் மக்கா ஆயத்தமாகியது. இந்த அமைப்பானது மென்மேலும் நிறைய திறனறி போட்டிகளை நடத்தி அந்த போட்டிகளை கைபேசியின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்தது. அவ்வாறு செய்யும்போது ஒரு கோணத்தில் இருந்து மட்டுமல்லாமல் கைபேசியைக் கொண்டு போட்டியை வெவ்வேறு கோணங்களில் இருந்தும் நேரடி ஒளிபரப்பு செய்து காட்டியது.
அவர்களின் நண்பர் இந்த திறனறி போட்டிகள் பெறும் பேரளவு வரவேற்பினை கண்டறிந்து போட்டி ஆட்டங்களை நடத்தும் யோசனையை அவர்களுக்குள் விதைத்தார். கால்பந்தே தொழிலென இருக்கும் உலகத்திற்குள் இவர்கள் இருவரும் செல்ல, தமிழகத்தில் கால்பந்தை தொழிலாகப் பார்க்கும் ஓர் உலகமே இல்லை என்பதை அப்பொழுது உணர்ந்தனர். “நம் மாநிலத்தில் இருக்கும் மிகச் சிறந்த தொழில்முறை கால்பந்து வீரர்கள் இந்தியன் சூப்பர் லீக் என்ற தொடராட்டதிற்கு பயிற்சி பெறுவர். ஆனால் அந்த ஆட்டங்களும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே நடைபெறும்,” என அதிருப்தியுடன் கூறும் அவர்கள் அதிலும் பெரும்பாலான வீரர்கள் பகுதி நேர தொழிலாகவே இதனை மேற்கொள்கின்றனர் என்கின்றனர். கால்பந்தை மேம்படுத்த போதுமான லீக் ஆட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த விளையாட்டின் மூலம் நிரந்தர வாழ்வாதாரம் என்பது கேள்விக்குறியாகவே இருப்பதால் இந்த கால்பந்து வீரர்கள் வேறு வழியின்றி பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் ஓர் முழு நேரப் பணியை நம்பி இருக்க வேண்டியுள்ளது.
ஆனால் ஆச்சரியமாக கால்பந்து என்பது தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஓர் பாரம்பரிய விளையாட்டாக இருந்துள்ளது. இன்று சென்னையில் இருந்து மட்டும் சுமார் 93 பதிவு செய்யப்பட்ட அணிகள் (amateur அதாவது புதிதாய் வளர்ந்து வரும் அணிகளை சேர்த்து மொத்தம் 500 அணிகள்) உள்ளன. எனினும் 1983-இல் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியால் கிரிக்கெட் பலரின் பார்வைக்கு வர மற்ற உள்ளூர் விளையாட்டுகள் யாவும் மக்களால் மறக்கப்பட்ட விளையாட்டுகள் ஆகின.
“செவென்ஸ் ஃபுட்பால் காரைக்குடி கோவில் திருவிழாவின் புகழ்பெற்ற ஓர் அங்கமாகும்,” என கூறும் பெர்னாட் கொஞ்ச காலம் கால்பந்து போட்டியானது தமிழ் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக இருந்து வந்தது என்கிறார். உள்ளூரில் கால்பந்து எவ்வாறு வேரூன்றி இருக்கும் என்பதைக் குறித்த துணுக்குகளை இவர்கள் கலந்துரையாடுகின்றனர். இந்த செய்திகள் மற்றும் துணுக்குகள் அனைத்தையும் ஃபுட்பால் மக்கா துவங்கியபோதில் இருந்தே இவர்கள் சேகரித்து வைத்துள்ளனர். “ஐரோப்பிய கால்பந்து உலகம் மீது இருந்த மோகத்தால் எங்களை சுற்றி இருந்த திறமைகளை நாங்கள் கவனிக்க தவறிவிட்டோம்,” என இருவரும் வெகுளியாக கூறுகின்றனர்.
ஹாரியும் பெர்னாடும் புதிய ஓர் மாற்றத்தை நிகழ்த்த தயாராகி போர்க்களம் என்றொரு லீக் போட்டியினை நடத்த முடிவு செய்து அதன் முதல் பதிப்புக்கு ஏற்பாடு செய்தனர். இம்முறை சற்று தீவிரமாக இப்போட்டிகளை நடத்த நினைத்த அவர்கள் நடக்கவிருக்கும் போட்டிகளில் கால்பந்து போட்டிகளுக்கான சர்வதேச தொழில்முறை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தனர்.
“போட்டி ஆட்டங்களை நடத்துவதற்கென நுழைவு கட்டணம், புல் தரைக்கான கட்டணம், பரிசு தொகை போன்றவற்றை உள்ளடக்கிய முன்வரையறுக்கப்பட்ட வணிக முன்வடிவுகள் ஏற்கனவே இருக்கின்றன. ஆனால் நாங்கள் அதனை நோக்கி செல்ல விரும்பவில்லை” என விவரிக்கிறார் ஹாரி. போர்க்களம் தமிழகத்தில் கால்பந்தை ஓர் விளையாட்டாக மேம்படுத்த துவங்கப்பட்ட ஓர் முயற்சி ஆகும். இதன் விளைவாக இந்த முயற்சியை ஆதரிக்க போட்டி ஆட்டங்களுக்கென புல் தரை சேவை வழங்கிய இடங்களும் அதனை நிர்வகித்து வந்த நபர்களும் தாங்களாகவே முன்வந்து கட்டணமின்றி தங்கள் சேவைகளை வழங்கினர். இதனால் போட்டிகளுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் நுழைவு கட்டணத்தை தகர்த்தெறிய ஃபுட்பால் மக்கா குழுவினர் முடிவு செய்தனர்.
ஆறு மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டு இருந்த போட்டிகள் யாவும் கோவிட் பெருந்தொற்றினால் இரண்டு மாதங்களுக்குள்ளாகவே திடீரென முடிவுக்கு வர நேர்ந்தது. எனினும் லீக் போட்டிகள் யாவும் பெரும் வரவேற்பினை பெற்று அமோக வெற்றியடைந்தன.
பெருந்தொற்றினால் ஏற்பட்ட இந்த இடைவெளியில் ஹாரியும் பெர்னாடும் போர்க்களத்தின் இரண்டாம் பதிப்பை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான வழிகளையும் யோசனைகளையும் சிந்தித்து அவற்றைப் பற்றி கலந்துரையாடினர். ஃபுட்பால் மக்கா கால்பந்துக்கான ஓர் ஊடக நிறுவனமாகவே நிறுவப்பட்டதால் அந்த குழுவினர் கால்பந்து பயிற்சியாளர்களை கண்டறிந்து அவர்களை பேட்டிகள் எடுத்தனர். அந்த பேட்டிகளை எவ்வாறு ஓர் தொழில்முறை கால்பந்து வீரர் ஆவது என்ற தலைப்பில் பத்து பகுதிகளாக தொகுத்து வெளியிட்டனர்.
இந்த தொடரின் மூலம் ஓர் மகத்தான வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. மகளிருக்கான தமிழ்நாடு கால்பந்து லீக் போட்டித் தொடரை ஒளிபரப்புவதற்கான முதன்முதல் ஊடக நிறுவனமாக ஃபுட்பால் மக்கா தேர்வாகியது.
“நாங்கள் உடனடியாக அதற்கான ஒப்பந்த ஆவணங்களில் கையொப்பமிட்டோம். ஆனால் எங்களிடம் போதுமானளவு உபகரணங்கள் இல்லை. நேரு அரங்கத்தில் நாங்கள் முன்னர் கைபேசியைக் கொண்டு போட்டிகளை ஒளிபரப்பியதை போன்று தற்பொழுது இந்த போட்டிகளை ஒளிபரப்ப முடியாது,” என சிரித்துக் கொண்டே கூறும் இவர்கள் போட்டிகளை ஒளிபரப்புவதற்கென எவ்வாறு சென்னையை அடிப்படையாகக் கொண்டு செயல்புரிந்து வந்த திருமண புகைப்பட நிறுவனமான ஸ்டூடியோ சிகியுடன் (Studio Sigi) இணைந்து பணியாற்றினர் என்பதை நினைவுக் கூறுகின்றனர். என்னதான் தமிழ்நாட்டின் மகளிர் அணியானது இந்தியாவின் முன்னணி நான்கு அணிகளில் ஒன்றாக இருந்தாலும் இந்த ஒளிபரப்புக்கு முன்னர் முற்றிலும் அறியப்படாத பெரிதாக பேசப்படாத அணியாகவே அந்த அணி இருந்தது என்பது குறிபிடத்தக்கது.
தற்பொழுது கிட்டத்தட்ட ஆறாயிரம் பின்பற்றாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது ஃபுட்பால் மக்காவின் யூடியூப் பக்கம். பல தலைமுறைகளாக வெளி உலகம் அறிந்திடாத வண்ணம் இந்த கால்பந்து வீரர்கள் வெளிப்படுத்தி வந்த திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் இன்றியமையாத ஓர் பக்கபலமாக ஃபுட்பால் மக்கா இருந்து வருகிறது. குறிக்கோள் ஒன்று தான். கால்பந்தை ஓர் தொழிலாக உருவாக்க கால்பந்துக்கென ஓர் பெரிய வணிகச் சந்தை இருக்கிறது என்பதை பெருநிருவனங்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை அதில் முதலீடு செய்ய ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.
“ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளுக்கு நிதியுதவி அளிக்கின்றது. துவக்கத்தில் அவ்வளவு தொகை எங்களிடம் இல்லை என்பது என்னவோ உண்மை தான்,” எனக் கூறுகின்றனர் ஃபுட்பால் மக்காவின் நிறுவனர்கள். இதற்கு ஈடு செய்ய கலைஞர்கள், படைப்பாளிகள், இசைக் கலைஞர்கள் மற்றும் மற்ற துறைகளின் படைப்பாளிகளை வரவழைத்து அவர்களை வெவ்வேறு அணிகளோடு நியமித்து போர்க்களத்தின் இரண்டாம் பதிப்பை ஒரு படி மேலே இவர்கள் எடுத்துச் சென்றனர். “பண்டமாற்றம் போன்ற ஓர் உத்தியை நாங்கள் உருவாக்கினோம். அந்த கலைஞர்கள் யாவரும் தங்கள் கலையின் வழியே இந்த லீக் தொடரை ஆதரித்து வழிநடத்துவர். அதற்கு கைமாறாக இப்போட்டிகள் வழியே தங்களின் ஆதரவாளர்களை பெருக்கிக் கொள்வர்,” என விவரிக்கிறார் ஹாரி. இந்த முயற்சியானது கலையும் கால்பந்தும் ஒரு சேர வளர்ச்சி பெற வித்தாக இருக்கும்.
சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் அங்கி ஆடை நிறுவனம் இவர்களுடன் இணைந்து எட்டு அணிகளுக்குமான மேற்சட்டை வடிவமைப்பில் ஈடுபட்டனர். ஸ்டூடியோ சிகியானது ஒளிபரப்புக்கு ஆகும் தயாரிப்பு செலவுகளை குறைத்தது. விளையாட்டுப் பொருட்களின் உலகின் முன்னணி விற்பனை நிறுவனமான டெகத்லான் போட்டிகளுக்குத் தேவையான நாற்பது கால்பந்துகளை இவர்களுக்கு வழங்கினர். போட்டிகள் நடத்துவதற்கென நேரு அரங்கத்தை தமிழ்நாட்டின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT – Sports Development Authority of Tamilnadu) இவர்களுக்கு மானிய விலையில் அளித்தது. எட்டு முதன்மை நல்கர்கள் (sponsor), இருபத்தி ஐந்து அணி நல்கர்கள் மற்றும் ஐந்து தொடராட்ட நல்கர்கள் என நல்கர்களின் பெயர்களால் போர்க்களத்தின் விளம்பர பதாகையானது நிறைந்து காணப்பட்டது. கால்பந்து எனும் ஓர் விளையாட்டு முன்னேற வேண்டுமென்ற ஓர் பொதுவான நல்லெண்ணத்தில் அனைவரும் இணைந்து உதவ முன்வந்ததாக தெரிந்தது.
தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் லீக் போட்டிகளின் இரண்டாவது பதிப்பானது தமிழ்நாட்டில் கால்பந்தினை அனைவரது கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமென்ற ஃபுட்பால் மக்காவின் பயணத்தில் ஓர் புதிய வெற்றிப்படியாகவே மாறியுள்ளது எனலாம். “நாங்கள் மூன்று தூண்களில் கவனம் செலுத்துகிறோம். அவை: வீரரின் நலம், ஊழியர்களின் நலம் மற்றும் அணியின் நலம் ஆகியவையே,” என பட்டியலிடுகிறார் பெர்னாட். வீரர்களுக்கு காப்பீடு எடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்பட ஊழியர்களுக்கென ஓர் தரமதிப்பீடும் வழங்கப்படுகிறது. இதனை அவர்கள் தங்களின் தற்குறிப்பில் (resume) குறிப்பிட்டுக் கொள்ளலாம்.
“நாங்கள் இதுவரை பன்னிரெண்டு அணிகளை மட்டுமே வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்,” என கூறும் இந்த நிறுவனர்கள் இன்னும் எவ்வளவோ கால்பந்து வீரர்கள் அப்படியொரு அடையாளத்தை நோக்கி ஓர் சமூகமாக உழைத்துக் கொண்டிருப்பதை கூற முற்படுகின்றனர். பகுதி நேர வேலையாகத் துவங்கிய தங்களின் பணியானது தற்பொழுது எவ்வாறு தங்களின் வாழ்க்கைக் கனவாக உருவெடுத்து நிற்கிறது என்பதைப் பற்றி நம்மிடம் சிரித்துக் கொண்டே பகிர்கின்றனர் ஹாரியும் பெர்னாடும். யாருக்குத் தெரியும், வளர்ந்து வரும் தமிழ்நாட்டின் இந்த கால்பந்து சமூகத்தில் இருந்து ஓர் லியோனெல் மெஸ்ஸியோ அல்லது மான்செஸ்டர் உனைடட் போன்ற ஓர் அணியோ கூட உருவாகலாம். அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்போம்.