றிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு முந்தைய மாலை பொதிகை தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக மறைந்த பிரபல தமிழ் பேச்சாளர் மற்றும் எழுத்தாளருமான வலம்புரி ஜான் (Valampuri John) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தார். அது ஒரு அடுதல் (Baking) நிகழ்ச்சியாகும். “கேக் (Cake) என்பதை எதனால் கேக் என்று அழைக்கிறோம் தெரியுமா? ஏனென்றால் அது அவ்வளவு சுவையாக இருப்பதால் அனைவரும் அதனை திரும்பி திரும்பி ‘கேக்’கணும் (Cake’kanum) என்பதற்காகத் தான்” என நகைச்சுவையாகக் கூறினார். அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வாய்விட்டு சிரிக்கத் துவங்கினர். பொதிகையில் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தவாறு தன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த ஆவடியில் வசித்து வந்த ஒரு சிறுமிக்கு வலம்புரி ஜானின் இந்த சொல்விளையாட்டு (Pun) பெருமளவில் அவளுக்குள் ஒரு ஆர்வத்தைத் தூண்டியது.
அந்த சிறுமியே நம் அணிச்சல் கலைஞரான (Cake Artist) பிந்து ஹெப்ஸிபா (Bindhu Hephzibah) ஆவார். பிந்து தன் பள்ளிப்பருவத்துக்குப் பின்னர் முதுகலை வணிக மேலாண்மையில் (MBA – Master of Business Administration) பட்டம் பெற்று பெருநிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார். பெருநிறுவன பணியில் இருந்தமையால் வாழ்க்கை சீர்மையாக இருப்பது போல் இருந்தாலும் கூட அவருக்கு கலைகளின் மீது ஒரு தீரா ஆர்வம் இருப்பதை உணர்ந்தார். கலைப் புத்தகங்களைப் பதுக்கி தன்னுடன் எடுத்துச் செல்லும் பிந்து, தன் ஓய்வு நேரங்களில் தானாகவே ஓவியம் வரையும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வார். 2008-ஆம் ஆண்டை ஒட்டி உலகப் பொருளாதார நெருக்கடியோடு (Economic Recession) திறன்பேசியின் அதிவிரைவு வளர்ச்சியும் (Smartphone Boom) ஒன்றிற்று. “முன்பு எப்பொழுதும் இல்லாத வண்ணம் பல தகவல்களையும் சாதனங்களையும் அடையும் வாய்ப்பு எனக்கு இப்பொழுது கிட்டியது,” என திறன்பேசியின் வருகை எவ்வாறு அவர் தன் வாழ்க்கையை மாற்றியது எனப் பூரிப்புடன் விவரிக்கிறார் பிந்து.
தன் பெருநிறுவன வேலையை கைவிட்ட பிந்து, ஈரோட்டில் வருவாய்த் துறையில் (Revenue Department) தன் தந்தை நியமிக்கப் பட்டதால் அவரோடு அங்கு புலம்பெயர முடிவு செய்தார். அப்பொழுது தான், பிந்து தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு கலைக் கூடத்திற்கு சென்றார். “அங்கு ஒரு கலை ஆசிரியர் இருந்தமையால் உடனடியாக அவரிடம் கலைப் பயிற்சிக்கு சேர வேண்டுமென முடிவு செய்தேன்,” என நினைவுக் கூறும் அவர், “மிக விரைவிலேயே நானாக ஓவியங்கள் வரைந்து அவற்றை விற்கத் துவங்கிவிட்டேன்” என்றார். திருமணம் அவரை சென்னை நகருக்கு இட்டுச் செல்ல கலைகளுக்கான தனது பேரார்வத்தை விரிவுப்படுத்தியது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கென கைவினைப் பயிலரங்குகளை (Craft workshops) நடத்தவும் துவங்கினார். தன் பணியில் ஒரு உச்சக்கட்ட வளர்ச்சியினை எட்டும் போது அவர் கர்ப்பமுற்று இருந்ததால் அனைத்துப் பணிகளையும் அவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நேர்ந்தது.
அவர் கர்ப்பமுற்று இருந்த காலமானது அவரின் வாழ்க்கையின் வளர்ச்சிப் பாதைக்கு ஒரு விதையாகவும் பலவகைகளில் அவருக்கு ஒரு பொற்காலமாகவும் அமைந்தது. “என் மகள் பிறந்த பொழுது தான் நான் முகநூலில் (Facebook) இணைந்தேன். திடீரென்று உலகெங்கும் இருக்கும் பல ஓவியர்களுடன் நான் தொடர்பில் இணைவது என்பது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.” இவ்வாறு மக்களுடன் தொடர்புக் கொண்டு இணைப்புகள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போதே அணிச்சல் குழு (Cake group) ஒன்று தற்செயலாக அவர் கண்ணில் தென்பட்டது. அக்குழுவின் பதிவுகளைப் பார்த்துக் கொண்டவாறே “என்னால் இதனை விட சீரான அணிச்சல்களை வடிவமைக்க முடியும்” என தனக்குள் வினவிக் கொண்டார் பிந்து.
அதுவரை அடுதல் (Baking) பணியில் பிந்து ஈடுபடுவார் என அவர் சிறிதளவும் எண்ணியதே இல்லை. “நான் என் எடையைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததால் நான் அணிச்சல்களிடம் இருந்து விலகியே இருந்தேன்,” என சிரிக்கும் பிந்து, “ஆழம் பார்க்காமல் காலை விடாதே என்ற பழமொழிக்கு ஏற்ப மிகவும் பொறுமையாகவும் மெதுவாகவும் அணிச்சல் அலங்கரிப்பில் (Cake Decoration) நான் ஈடுபட துவங்கினேன்” என்கிறார். அதுவே தன் வாழ்க்கைத் தேடல் நிறைவேறிய தருணம் என்கிறார். இந்த புதிய கலை வடிவமானது தன் வாழ்வில் பெருமளவில் மாற்றங்களை கொண்டுவரத் துவங்கியது. தன் ஓவியங்களை விற்க அவர் இனியும் போராட வேண்டாம். ஏனெனில் தன் ஓவியங்களுக்காக செலவு செய்வதைக் காட்டிலும் படைப்பற்றல் உடன் தனி நபரின் விருப்பங்களுக்கு ஏதுவாய் (Customised) அவர் வடிவமைக்கும் அணிச்சலில் மக்கள் இயல்பாகவே அதிகம் ஆர்வம் கொண்டு அதற்காக செலவு செய்ய முன்வருவர். தன் இளம் வயதில் அவர் கேட்டு வியந்த வலம்புரி ஜானின் சொல்விளையாட்டு தனக்குள் எதிரொலிக்க முகநூல் மற்றும் படவரியில் (Instagram) ஒரு பக்கம் துவங்கி அதற்கு ‘கேக்’கணும் (Cake’kanum)’ எனப் பெயரிட்டார் பிந்து.
“அவ்வப்போது கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதெல்லாம் நாங்கள் அணிச்சலை அடுவோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நுண்ணலை அடுப்புகள் (Microwave oven) அவ்வளவு பிரபலம் அடையவில்லை என்பதால் சமையலறையில் என்ன உபகரணங்கள் இருந்தனவோ அவற்றையே நாங்கள் அடுதலுக்கு பயன்படுத்தினோம்—தயிர் கடையும் மத்தை (curd churner) மாவினை கலக்குவதற்கும் இட்லி தட்டுகளை அடுதலுக்கும் பயன்படுத்தினோம்.” 2018-இல் அவர் தோற்றுவித்த கேக்’கணும் (Cake’kanum) என்ற அடையாளத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இணையவழி அடுதல் பயிற்சி வகுப்பு ஒன்றில் அவர் சேர்ந்தார். அதில் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் வெவ்வேறு வகையான அணிச்சல்களை எவ்வாறு அடுவது எனக் கற்றுக் கொண்டார் பிந்து. “அந்நாளில் இருந்து இந்நாள் வரை பரிசோதனைகள் மூலமாகவும் (experimenting) ஒரே வழியில் அல்லாமல் விதிகள் ஏதும் இன்றி பல வழிகளில் முயற்ச்சித்துமே (freewheeling) இக்கலையை நான் கற்றுக் கொண்டு இருக்கிறேன்,” என சிரித்துக் கொண்டே கூறுகிறார்.
மிகக் குறைவான கால அவகாசத்தில் தன் மெய்நிகர் அடுமனைக்கான (Cloud Kitchen) இணையவழி பதிவை நிறைவு செய்த பிந்து, உடனடியாகவே நட்பு பாராட்டும், வரவேற்கும் ஒரு வாடிக்கையாளர் குழுமத்தை பெற்றார். சமூக வலைத்தளங்களில் அவரின் அணிச்சல்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தைத் தாண்டி அடுத்தடுத்த நிலை வாடிக்கையாளர்களைக் குவிக்க அதிலிருந்து கிடைத்த இலாபங்களை கேக்’கணும் அடையாளத்தின் கனவுத் திட்டமான ‘கருப்பொருள் உடன் வடிவமைக்கப்படும் பல்லடுக்குகள் கொண்ட அணிச்சல்களில் (Themed tier cakes)’ மீண்டும் முதலீடு செய்தார்.
“என் முதல் முதல் கருப்பொருளானது (Theme) தமிழ்நாடு ஆகும்.” உலகச் சாதனைகளை முறியடித்த 17 அடுக்குகள் கொண்ட அந்த அணிச்சல் உருவாக மூன்று மாதங்கள் ஆராய்ச்சியும் வடிவமைப்பும் அதற்கு முதுகெலும்பாக இருந்தன. “தமிழ் சமூகம், பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் ஒரு உருவகிப்பாக (Representation) அந்த அணிச்சல் இருந்தது எனலாம்.” சுமேரு (Sumeru) காண்டம் (நீரில் மூழ்கிய ஒரு கற்பனை காண்டம்) துவங்கி ஆசியா முழுவதும் ராஜேந்திர சோழன் பயணித்த இடங்கள் வரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி தன் வடிவமைப்பில் உள்ளடக்க வேண்டும் என பிந்து உறுதி செய்துக் கொண்டார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் (Tamil Diaspora) மற்றும் தமிழர்களின் வம்சாவளியினரை சித்தரிக்கும் ஒரு நிலப்படத்தையும் அதில் காண முடிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வடிவமைப்பின் மிகச் சிறந்த அம்சத்தை அணிச்சலின் மிக உயரிய அடுக்கானது பெற்று இருந்தது. அன்பு மற்றும் சமூக ஒற்றுமையை (Love and Brotherhood) கொண்டாடும் வகையில் புறநானூற்றில் இடம்பெற்று இருக்கும் கணியன் பூன்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ (To us, all towns are our own, everyone is our kin) என்ற புகழ்பெற்ற வரிகள் அதில் எழுதப்பட்டு அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. “மக்கள் தங்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்க வேண்டும். அத்துடன் நாம் அனைவரும் அன்பு மற்றும் ஏற்பு ஆகிய இரண்டும் உள்ள நிலத்திலிருந்தே தோற்றுவிக்கிறோம் என்ற கருத்தினை அவர்கள் உணர வேண்டும் என்பதே இந்த அணிச்சலை நான் வடிவமைத்ததன் நோக்கம் ஆகும்” எனக் கூறுகிறார் பிந்து.
வாழ்நாள் முழுக்க ஒரு புத்துணர்வும் குதூகலமும் தனக்குக் கிடைக்க வேண்டுமென்று ஏங்கிய பிந்துவுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் அது கிடைக்க நேர்ந்தது. அனைவரும் ஆர்வம் கொண்ட ஒரு வடிவத்தில் அர்த்தமுள்ள கலையை அவர் செய்து வந்தது மட்டுமல்லாமல் அதன் வாயிலாக கதைகளை சொல்லியும், சமூகக் கருத்துகளை நிலைநாட்டியும் வந்தார்.
அடுத்த நான்கு ஆண்டுகள் முழுவதும் சில கருப்பொருட்களான ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ (மெட்ராஸ் நகரின் 380-ஆவது பிறந்தநாளை ஒட்டி) மற்றும் ‘ஆடிப்பெருக்கு’ எனும் தமிழர் பருவமழை திருவிழாவினை சார்ந்த இயற்கை வளங்கள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டாடும் வகையில் கருப்பொருட்களைக் கொண்டு அணிச்சல்களை வடிவமைத்தார். பஞ்சுப் போன்ற மென்மையான ஒவ்வொரு அடுக்கும் கதைகளையும், கருப்பொருளின் கூறுகளையும் சித்தரிப்பதோடு மட்டுமல்லாமல் கருப்பொருளுக்கான பல்லடுக்கு அர்த்தத்தையும் தன்வசம் கொண்டிருக்கும்.
பிந்துவின் கருப்பொருள் கொண்ட அணிச்சல்கள் (Themed cakes) மக்களின் மத்தியில் வெகு நேர்த்தியாக சென்றடைந்து ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கின. மெட்ராஸ் நகரம் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றிய மக்கள் மனங்களில் இருந்த தவறான கருத்துகளை கேக்’கணும் உடைத்தெறிய ஆரம்பித்தது. “நிறைய நபர்கள் என்னை தொடர்புக் கொண்டு நான் வடிவமைத்த மெட்ராஸ் அணிச்சலில் சித்தரிக்கப்பட்டுள்ள கதைகள், மெட்ராஸ் நகரமானது திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போல பண்பாடற்றதாக இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைத்ததாக கூறியுள்ளனர்.” சொல்லப் போனால் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரனின் இசையமைப்பில் உருவாகிய சென்னை கீதமான “Chancey Illa Chennai – சான்சே இல்ல சென்னை’ பாடலின் ஒவ்வொரு வரியையும் இந்த மெட்ராஸ் அணிச்சல் ஆனது மேலும் வலுவூட்டுவதாகவும் மெய்ப்பிப்பதாகவுமே இருந்தது.
2020-ஆம் ஆண்டின் இறுதியில், ரஷ்யா-இந்தியா நாடுகளுக்கு இடையே ஆன நட்புறவினை வளர்க்கும் வகையில் டீனா ஸ்காட் பரஷர் மற்றும் தட்யனா நசரோவா (Tina Scot Parashar and Tatyana Nazarova) ஆகிய இருவரால் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் கலைப் போட்டியில் நம் அடுமனையாளரான (baker) பிந்து பங்கேற்றார். “இந்தியக் கலைஞர்கள் ரஷ்ய கலாச்சாரத்தையும் ரஷ்ய கலைஞர்கள் இந்தியக் கலாச்சாரத்தையும் ஒரு அணிச்சல் மீது சித்தரிக்க வேண்டும் என போட்டியில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது மிகவும் குதூகலம் அளிக்கும் ஒரு அனுபவமாக இருந்தது,” என பூரிப்புடன் விவரிக்கிறார் பிந்து. ரஷ்ய நாட்டின் உடைகள் அல்லது கட்டடக்கலையைக் குறிக்கும் கூறுகளை பெரும்பாலான மற்ற போட்டியாளர்கள் சித்தரிக்க முற்படுகையில் விரிவாக வடிவமைக்கப்பட்ட தன் அணிச்சலினால் (முன்னர் தான் வடிவமைத்த தமிழ்நாடு அணிச்சலைப் போல) பிந்து கூட்டத்தில் இருந்து தனித்து நின்றார். செவ்வியல் கலைகள் மற்றும் பொது உடைமைத் தத்துவத்தால் (Classical arts and Communism) ரஷ்ய மக்கள் உலகில் ஏற்படுத்திய நற்பயன்களை மையமாகக் கொண்டே தன் அணிச்சலை வடிவமைத்தார் பிந்து. வொர்கர் மற்றும் கோல்கோஸ் வுமன் (Worker and Kolkhoz Woman) என்ற சிலையின் தத்ரூப மாதிரியே அவர் அணிச்சலுக்கு மணிமகுடமாகத் திகழ்ந்தது எனலாம். அந்நாட்டின் முன்னேற்றத்தில் பாலினச் சம உரிமை (Gender Equality) என்பது எவ்வளவு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை அது சித்தரிப்பதாகவும் பறைசாற்றுவதாகவும் இருந்தது.
“கருப்பொருள் கொண்ட அணிச்சல்கள் வெகு நேர்த்தியான கவனத்தைப் பெற்றன. ‘சம உரிமைக்கு போராடி இன்றைய மகளிருக்கு வாழ்க்கையை எளிமையாக்கிய புரட்சி செய்த இந்திய பெண்மணிகள்’ மற்றும் ‘வடசென்னைப் பற்றிய தவறான கருத்துகளை உடைத்தெறிவது’ போன்ற மென்மேலும் தீவிரமான சமூகக் கருத்துகளை கருப்பொருட்களாக எடுக்க வேண்டுமென நான் சிந்தித்து வருகிறேன்” என்கிறார் பிந்து.
மேலும் கேக்’கணும் என்பதன் நோக்கம் ஆனது அதன் சுவையில் சிறந்த அடுக்குகள் மூலம் மனதில் பதியும் கதைகள் சொல்வது மட்டுமல்லாமல் பொருளாதார பிரிவினையை (Economic divide) உடைத்தெறிவதும் ஆகும். “அடுதல் என்பது அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கியவாறு இருக்க வேண்டுமென நான் நம்புகிறேன். எனவே, அதற்கு முதல் படியாக அடுத்து இரு வாரங்களில் நான் அடுதலுக்கான பயிற்சி வகுப்புகளைத் துவங்குகிறேன். அதில் நுண்ணலை அடுப்போ அல்லது எவ்வித சிறப்பு வகையான மூலப் பொருட்களோ இல்லாமலேயே அடுதலின் அடிப்படை செய்முறைகளை நான் கற்பிக்க போகிறேன்” என்கிறார் ஆர்வத்துடன் பிந்து.
நம் அணிச்சல் கலைஞர் இன்றளவும் நாம் பலவகைகளில் ஒரு ஆணாதிக்க உலகிலேயே (Patriarchal world) வாழ்கிறோம் என்று நம்புகிறார். பெண்கள் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் கைவிட்டு விடக் கூடாது என வலியுறுத்திகிறார். “உங்களை நீங்கள் நம்பக் கற்றுக் கொண்டாலே இவ்வுலகமானது தானாகவே உங்களையும் உங்கள் நோக்கத்தையும் நம்பக் கற்றுக் கொள்ளும்,” என்று சுவையான ஒரு கருத்துடன் நிறைவு செய்கிறார் பிந்து.