“நான் பால் விற்பனை சந்தையை இரண்டு விதங்களாக பார்க்கிறேன்—ஒன்று ஜல்லிக்கட்டுக்கு முன் மற்றொன்று ஜல்லிக்கட்டு பின்,” எனக் கூறுகிறார் உழவர் பூமியின் (UzhavarBumi) நிறுவனர் வெற்றிவேல் பழனி (Vetrivel Palani). 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெரினா கடற்கரையில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றிவேலும் பங்கேற்றிருக்கிறார். “போராட்டத்தின் பொழுது விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளும் பேசப்பட்டன,” எனக் கூறுகிறார் அவர். உழவுத் தொழிலிலோ அல்லது பயிரிடுவதிலோ வெற்றிவேலுக்கு எவ்வித பின்புலமும் இல்லை. ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டமானது உழவுத் தொழிலுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை இவரைப் போன்ற பலருக்கும் எடுத்துணர்த்தியது.
இந்தக் கடுமையான நிதர்சனம் வெற்றிவேலை பெரிதும் பாதித்தது. உழவர் சமூகத்திற்கு உணவும் கல்வியும் கொடுத்து ஆதரிக்கும் வகையில் தனது நண்பர்களை ஒன்றிக் கூட்டி ஓர் அரசு சாரா நிறுவனத்தைத் துவங்கினார் வெற்றிவேல். “அப்பொழுது தமிழ்நாடெங்கும் இருக்கும் பல்வேறு கிராமங்களுக்கும் நாங்கள் சென்றோம்,” என நினைவுக் கூறுகிறார் வெற்றிவேல். அங்குச் சென்று உழவர்களுடன் அவர்கள் நடத்திய நேரடி உரையாடல்கள், உழவுத் தொழிலுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிப்படுத்தின. உழவர்களின் உழைப்புக்கு நியாயமான விலையை ஏற்கனவே இருந்த இடைத்தரகர்கள் கொடுக்கவில்லை.
திடீரென பல இடங்களிலும் புதிய துளிர் நிறுவனங்கள் புரட்சிகரமாக துளிர ஆரம்பித்தன. சில நிறுவனங்கள் உழவர்கள் உற்பத்தி செய்தப் பொருட்களை சந்தைப்படுத்துவதெற்கென அவர்களுடன் இணைந்து செயலாற்றினார். வேறு சில நிறுவனங்கள் உழவு செயல்முறைகளில் புத்தாக்கங்கள் கொண்டு வந்தன. இயற்கை வழி வேளாண்மை செயல்முறைகளும் அவை சார்ந்த விளைபொருட்களும் மக்களின் கவனத்தை ஈர்க்கத் துவங்கின. எனினும் பால் பண்ணை வைத்திருந்த விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை போராட்டமாகவே இருந்தது. பழம், காய்கறிகள் மற்றும் தானியங்களைப் போல் அல்லாமல் பால் என்பது விரைவில் கெட்டுப்போகும் தன்மைக் கொண்டது. ஓர் விவசாயி, தான் கறந்த பாலை 2-மணி நேரத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும். தேவையைப் பொறுத்து பால் பண்ணைகள் இந்த விவசாயிகளிடமிருந்து பாலினை விலைக்கு வாங்கிக் கொள்கின்றன. “தேவை இருந்தால் விவசாயிகள் நியாயமான விலையைப் பெறுவர். இல்லையேல் அவர்களுக்கு போதிய பணம் தரப்படுவதில்லை,” என கூறுகிறார் வெற்றிவேல்.
கால்நடை வைத்து பராமரிக்கும் விவசாயிக்கு நிலையான வருவாயும் வாடிக்கையாளர்களும் இல்லாததாலும், கலப்படம் செய்த பாலினை பெரும்பாலானோர் பருகுவதாலும் வெற்றிவேல் முனைப்போடு உழவர்பூமியை நிறுவினார். “பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பால் என்பது ஊட்டச்சத்துகள் கிடைப்பதற்கான ஓர் மூலாதாரம் ஆகும்,” எனக் கூறும் அதன் நிறுவனர், “மக்கள் அதிலும் குறிப்பாக கிராமங்களில் இருந்து வெகு தொலைவில்—அதாவது நகரங்களில்—வாழ்பவர்கள் தாங்கள் அன்றாடம் என்ன உட்கொள்கிறார்கள் என்பதை தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.”
பால் பண்ணையைப் பற்றி ஒரு விவரமும் அறிந்திடாத வெற்றிவேல், சோஹோ நிறுவனத்தில் தனக்கு இருந்த வேலையை கைவிட்டு விட்டார். மாதத் தவணையில், வாங்கி ஆறே மாதங்கள் ஆகிய தனது மகிழுந்தை (கார்) விற்பனை செய்தார். அதில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயை துவக்க முதலீடாக பயன்படுத்தி, கால்நடை விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, அருகாமையில் இருந்த கிராமங்களுக்கு தனது நண்பர்களுடன் சென்றார். “நிறுவனம் துவங்கிய ஆரம்பக் காலக்கட்டமானது சிரமமாகவும் கடினமாகவும் இருந்தது,” என கூறுகிறார் வெற்றிவேல்.
ஏதேனும் மாற்றத்தை விதைக்க விரும்பிய நம் இளம் தொழில்முனைவோர், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தான் சந்திக்க நேரிட்ட ஒவ்வொரு கால்நடை விவசாயிடமும் தன் முயற்சியைப் பற்றி விளக்குவதற்கு பல மணி நேரம் செலவிட்டார். எனினும் அந்த விவசாயிகள் பேசுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில், நகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த பல்வேறு நிறுவனங்களால் அவர்கள் ஏற்கனவே ஏமாற்றப்பட்டு இருந்தனர். மீண்டும் ஒருமுறை நுகர்வியத்துக்கு (consumerism) அவர்கள் இரையாக விரும்பவில்லை.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கிணங்க கிட்டத்தட்ட பத்து நாட்கள், விவசாயிகளை ஒப்புக் கொள்ள வைப்பதற்கென தளராமல் முயன்றார் வெற்றிவேல். இறுதியில் தனது முயற்சியை அவர் கைவிடத் தயாராகியப் பொழுது, ஒரு விவசாயி அவரை அணுகினார். “நான் எங்க கிராமத்துல உன்ன கடந்த பத்து நாளா பாத்துட்டு இருக்கேன். உன்னோட நோக்கம் சரியானதா கூட இருக்கலாம்,” என்று அவர் கூறினார். உழவர்பூமியின் பயணத்தில் இவர் சொன்ன வார்த்தைகள் விடிவெள்ளியாய் வந்து அமைந்தன. பத்து வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கத் துவங்கியது உழவர்பூமி. “ஆரம்பிச்ச அப்போவும் எல்லாமே கைக் கூடி வரல. பால் ஓட பக்குவம் எப்போவும் ஒரே மாறி இல்லன்னு ஆரம்பத்துல வாடிக்கையாளர்கள் குறை சொன்னாங்க,” என புன்முறுவலுடன் நினைவுக் கூறுகிறார் வெற்றிவேல். இயற்கைப் பொருட்கள் (அதாவது எந்த வித செயற்கை செயல்முறைகளுக்கும் உட்படாத பொருட்கள்) எப்பொழுதும் ஒரே மாதிரியான தரம் கொண்டு இருக்காது என்பதை இந்நேரத்தில் புரிந்துக் கொள்வது அவசியமாகும்.
சென்னையின் புறநகரில் இருக்கும் தனது சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு சென்ற வெற்றிவேல், பால் பொருட்களினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏற்படும் நெகிழி மாசுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக, மறுபயன்படுத்தக்கூடிய கண்ணாடி புட்டிகளில் பாலை விற்பனைச் செய்யத் துவங்கினார். ஓராண்டுக்குப் பின்னர், 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தை ஒட்டி, வெற்றிவேலும் அவர் சகோதரர் பன்னீர்செல்வமும் (Paneerselvam) இணைந்து தங்கள் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தனர்.
இயற்கை பால் மற்றும் நாட்டுபசும்பால் தொழிற்துறைகள் அப்பொழுது தான் பிரபலம் அடைந்து வந்தன. பல்வேறு நிறுவனங்களும் இந்த நுகர்பொருட்களை உயர்தர முத்திரைகள் கொண்டு சந்தைப்படுத்தி வந்தன. நகரமயமாக்கலுக்கு முன்னர் அன்றாடம் எளிதாகக் கிடைத்துக் கொண்டிருந்த பால் போன்ற நுகர்பொருட்கள், நகரமயமாக்கலுக்கு பின்னர் சிறப்புரிமை போல ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய வகையில் மாறின.
மறைந்த இயற்கை அறிவியலாளரான கோ.நம்மாழ்வாரைப் பின்பற்றி வந்த வெற்றிவேல், திருச்சியில் இருக்கும் வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம் நடத்தும் இயற்கை வழி வேளாண்மை பயிலரங்குகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். சாதாரண மக்களுக்கு நாட்டுபசும்பாலினை மலிவான விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணினார் அவர். பால் விற்பனைத் துறைக்குள் வந்தப் பிறகே இந்தியாவில் தற்பொழுது நாட்டு மாடுகள் அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தார் வெற்றிவேல். “ஐம்பதில் இருந்து அறுபது லிட்டர் நாட்டுப்பசும்பாலினை மட்டுமே எங்களால் கொள்முதல் செய்ய முடிந்தது,” எனும் அவர், “நாட்டு மாடுகள் எண்ணிக்கையை உயர்த்த குறைந்தது முப்பது ஆண்டுகளாவது ஆகும்” எனவும் கூறுகிறார்.
உழவர்பூமியில் இருந்து விவசாயிகளுக்கு வாடிக்கையாக சரியான நேரத்தில் பணம் போய் சேர்ந்தது. ‘கண்ணாடி புட்டிகளில் வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கப்பட்ட உழவர்பூமியின் மலிவான நாட்டுப்பசும்பால்’, சென்னை மக்களை பெரிதும் கவர்ந்தது. ஒரு லிட்டர் பால் ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் நிரப்புவதற்கு ஏதுவாய், கண்ணாடி புட்டிகளைக் கழுவி, சுத்தம் செய்து வீடுகளுக்கு வெளியில் வைக்கும் வேலையை, பெரிதாகப் பொருட்படுத்தாமல் வாடிக்கையாளர்கள் செய்து வந்தனர்.
மற்ற நிறுவனங்கள் யாவும் எவ்வாறு பெருமளவில் பாலினை உற்பத்தி செய்கின்றன என்பதை வெற்றிவேலும் அவர் சகோதரரும் இணைந்து ஆராயத் துவங்கினர். இயற்கை பால் அல்லது நாட்டுப்பசும்பால் விற்பனைத் தொழிலில் இருந்த மற்ற நிறுவனங்கள் யாவும், விதிகளுக்கு உட்பட்டவாறு சொந்தமாக ஓர் பண்ணையை வைத்திருந்தனர். ஒட்டுமொத்த கொள்முதல் அளவினை உயர்த்துவதற்காக, உற்பத்தியின் பொழுது பண்ணையில் இருந்து பெறப்படும் இயற்கை பாலையும், நாட்டுப்பசும்பாலையும் கலப்பினப் பாலுடன் கலக்கின்றனர்.
பால் விற்பனைத் துறையில் இருக்கும் ஒளிவு மறைவுகளைக் கண்டு திகைத்த இருவரும், தொழில் நெறியுடனும் அதே சமயம் வெளிப்படையாகவும் இருக்க முடிவு செய்தனர். எனவே, வாடிக்கையாளர்களிடம் வெளிப்படையாக இருக்கவும், பண்ணை விவசாயிகளிடம் தொழில் நெறியை கடைப்பிடிக்கவும் அதே சமயம் நிறுவனத்தின் கொள்முதல் அளவை உயர்த்தவும் தங்கள் நிறுவனத்தின் விளம்பரங்களில், ‘நாட்டுப்பசும்பால்’ என்றிருக்கும் முத்திரையை நீக்க முடிவு செய்தனர். அதற்கு பதிலாக தங்களது பாலினை, ‘சுத்தமான கலப்படம் இல்லாத பசும்பால்’ என விளம்பரப்படுத்தத் துவங்கினர்.
இந்நிறுவனத்தின் குழுவினர் தங்களிடம் இருக்கும் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஓர் செயலியை உருவாக்கினர். தமிழ்நாட்டில் உள்ள நாற்பது கிராமங்களும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் இந்த செயலியின் மூலம் இவர்களுடன் இணைக்கப்பட்டனர். கிராமங்களில் இருந்து பெறப்படும் பால் ஆனது, முழுவதும் மின்சார வாகனங்களில் போக்குவரத்து செய்யப்பட்டது. விளம்பரப்படுத்துதல் என்பது, எழுபது சதவீதம் வாய்வழி விளம்பரமாகவே இருந்தது. அதாவது, ஏற்கனவே இருந்த வாடிக்கையாளர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் நிறுவனத்தைப் பற்றிக் கூற, இதுவே உழவர்பூமிக்கு புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று தந்தது.
இன்று கிட்டத்தட்ட ஐநூறு விவசாயிகள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். “நாங்கள் கறந்த பாலை தூய நிலையில், பதப்படுத்தாமல் விற்பனை செய்வதால், தேவைக்கேற்ப சங்கங்களில் இருக்கும் விவசாயிகளை நாங்கள் தொடர்பு கொள்வோம்,” எனக் கூறுகிறார் வெற்றிவேல். தற்பொழுது இவர்களிடம், ஒரு லிட்டர் பாலின் விலை அறுபத்து ஐந்து ரூபாயாக உள்ளது. (விலைவாசி உயர்வு ஒருபுறம் இருக்க, மறுபுறம் மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது)
கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட துளிர் நிறுவனமான உழவர்பூமி, உள்ளூர் விவசாயிகளை ஆதரிக்கவே துவங்கப்பட்டது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனமானது, சென்னைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே தனது நுகர்பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மாறாக தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு விற்பனை செய்வதில்லை. ஏனெனில், அங்கு இருக்கும் உள்ளூர் விற்பனையாளர்களுடன் போட்டி போடுவது இந்நிறுவனத்தின் நோக்கம் அல்ல என்று தெளிவாக இதன் கோட்பாடை வரையறுத்து உள்ளனர் இதன் நிறுவனர்கள்.
“நாங்கள் ஆரோக்கியமான போட்டியை வரவேற்போம்,” எனும் உழவர்பூமியின் நிறுவனர், “மற்ற விற்பனையாளர்கள் எங்கள் குறிக்கோள்களை அடைய, கரம் கோர்த்து உதவிப் புரிய வேண்டி அழைக்கிறோம்” என்கிறார். சமூகத்தில் ஓர் மாற்றத்தை விதைக்கும் நோக்கத்தின் விளைவாக துளிர்விட்டதே உழவர்பூமி என்பதை நாம் உரையாடலின் துவக்கத்திலேயே அறிந்தோம் அல்லவா? இன்றளவும் அதன் குறிக்கோள் நிலையாகவே இருக்கின்றது—ஒவ்வொரு குழந்தைக்கும் கலப்படம் இல்லாத பால் கிடைக்க வேண்டும். ஊரகத்தில் வேலைவாய்ப்புகள் உயர வேண்டும். “இதுல வேடிக்கையான விஷயம் என்ன அப்படினா, உழவர்பூமி ஆரம்பிச்சு இரண்டு ஆண்டுகள் வரைக்கும் எனக்கு ஸ்டார்ட்அப் (startup – துளிர் நிறுவனம்) அப்படினா என்ன என்றே தெரியாது” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் வெற்றிவேல். தனது நிறுவனத்தைத் துவங்கி ஆறு ஆண்டுகள் முடிவடைந்து இருக்கும் வேளையில், மாற்றத்தை விதைப்பதற்கான சிறந்த வழி, களத்தில் நேரடியாக இறங்கி கடுமையாக உழைப்பது தான் என நம்பிக்கைப் பொங்க கூறுகிறார், தொழில்முனைவோரான வெற்றிவேல்.