யிலாப்பூரில் வளர்ந்த வந்த ஆறு வயதான ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன் (Sruti Harihara Subramanian) என்பவருக்கு, விலங்குகள் மீதும், திறந்தவெளிகள் மீதும் ஒரு தனிப்பட்ட பிரியம் இருந்தது. தன் விடுமுறை நாட்களில் பச்சை பசேல் என்று இருக்கும் கேரளாவின் பசுமை நிலவெளிகளின் மத்தியில், ஒரு சிறிய நகரத்தில் வசித்து வந்த தனது தாத்தா பாட்டி வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அந்த மந்தமான சிறிய நகரில் அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு செயல் என்னவென்றால், அங்கு இருக்கும் உள்ளூர் கடையின் படியில் அமர்ந்துக் கொண்டு அந்த கடைக்காரரோடு சேர்ந்து, அவரின் வாடிக்கையாளர்களுக்கு கோலி சோடா (Goli Soda) புட்டிகளைத் திறந்துக் கொடுப்பதே. ஒவ்வொரு முறை அது திறக்கப்படும் போதும் ‘பட்’ என்று கோலி விழும் சத்தத்தையும் ‘மடக் மடக்’ என்று சோடா குடிக்கப்படும் போது எழும் சத்தத்தையும் வைத்தே அந்த கண்ணாடி புட்டி மீண்டும் நிரப்பப்பட தயாராகிவிட்டது என்பதை கவனித்து கண்டறிந்து இருந்தார் அவர். தன் வாழ்வில் இந்த நிகழ்வானது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த சின்னஞ்சிறு சிறுமி ஒருபோதும் அப்பொழுது நினைத்துப் பார்க்கவில்லை.
ஸ்ருதி வளர வளர தன் அறிவார்வமும் கூடவே வளர்ந்தது. தான் மனதார விரும்பும் விலங்குகளைக் கொண்டு தோலும் பட்டும் உருவாக்கப் படுகின்றது என்ற உண்மையை அவர் அறிய நேர்ந்த நாள் முதல், அவர் இவற்றால் செய்யப்படும் பொருட்களை முற்றிலுமாக புறக்கணித்து நனிசைவ (vegan) உணவு உண்பவராகவும் மாறினார். “அப்பொழுது தான் நான் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புடன் ஒரு வளங்குன்றா (sustainable) வாழ்க்கை முறை வாழ ஆரம்பித்திருக்கக் கூடும்,” என அவர் நினைவுக் கூறுகிறார்.
காலங்கள் உருண்டோட 2012-ம் ஆண்டு, தென்னிந்திய திரைப்படத் துறையின் ஒரு வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளராக முன்னேறிக் கொண்டு இருந்தார் ஸ்ருதி. “பணி நிமித்தமாக நான் உலகெங்கும் செல்ல நேர்ந்தது. சில நேரங்களில் நாங்கள் குக்கிராமங்களிலும் (remote villages) அல்லது காடுகளிலும் படப்பிடிப்பு செய்வோம். அவற்றை எல்லாம் கண்டு விட்டு சென்னையில் உள்ள வீட்டுக்கு திரும்பி வருகையிலேயே, நெகிழியால் (plastic) நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகளுடன் இந்நகரமானது எவ்வளவு அழுக்காக உள்ளது என்பதை நான் கவனிப்பேன். “வெளி நாடுகளுடன் நம் நாட்டினை சரி நிகராய் எண்ணி பார்த்ததன் விளைவானது என்னை முழுமூச்சாக செயலில் இறங்கத் தூண்டியது. “குறைக்கூறுவதில் எந்தவித பலனும் இல்லை. நானும் இந்தக் குப்பை கூளத்துக்கு ஏதோ ஒரு வகையில் காரணம் ஆகிறேன்,” என தனக்குள்ளே எண்ணிக் கொண்ட அவர், தன் நெகிழிப் பயன்பாட்டினை குறைப்பதில் விழிப்புடன் கவனம் செலுத்தி வருகிறார்.
அதே ஆண்டின் இறுதியில், தன் உணவினை தானே உற்பத்தி செய்யப் போவதாக அவர் முடிவு செய்தார். “அப்பொழுது இந்த செயலானது அவ்வளவு பிரபலமாகவில்லை என்பதால் அதற்கான மூலப் பொருட்கள் மிகவும் குறைவாகவே கிடைத்தன,” என விவரிக்கும் அவர், “நான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் எவ்வாறு உரப்படுத்துவது (composting) என்பதை நான் கண்டறிய முற்பட்டேன். அப்பொழுது பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் இதற்கென வடிவமைக்கப்பட்ட பானை ஒன்றினைத் தற்செயலாக கண்டேன். உரப்படுத்துதல், நிலத்தில் அல்லாமல் ஒரு பானையில் நடைபெறலாம் என்பதைத் அறிந்த பின்னர் நான் மிகுந்த ஆச்சரியத்தில் உறைந்தேன்!” ஆராய்ச்சி செய்தும், ஒத்த கருத்துகள் உடைய மக்களை சந்த்தித்தும் வளங்குன்றா வாழ்வு நோக்கிய இந்த பயணத்தை அவர் மேற்கொள்கையில் அவர் உணர்ந்ததோ இந்த வாழக்கை முறையில் ஆர்வம் கொண்ட பல நபர்களுக்கு, மேம்பட்ட ஒரு வளங்குன்றா வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் உற்பத்தி பொருட்கள் (products) எவையும் கிடைப்பதாக இல்லை என்பதே.
இதுவே வளங்குன்றாமை மீது வினோதமான ஒரு அணுகுமுறை கொண்ட கோலி சோடா (தான் சிறுவயதில் பகுதி நேர வேலையாக கடையில் கோலி சோடா புட்டிகளுடன் வேலை செய்ததற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பெயர்) எனும் ஒரு அடையாளத்தின் (brand) துவக்கத்திற்கு வித்தாகியது. “வளங்குன்றாமை என்பது வெறும் காதி துணியினை உடுத்தி உங்கள் முன்னோர்களை போல் வாழ்வது மட்டுமல்ல. வளங்குன்றா வாழ்க்கை முறைக்கு இருக்கும் ஒரு சுவாரஸ்யமான முகத்தையும் நாங்கள் மக்களுக்கு காண்பிக்க விரும்பினோம்.” தோட்டக்கலை நிபுணர் ஒருவர் மண்ணை கலப்பதற்கும் விதைகளை தூவுவதற்குமான வழிமுறைகளை ஸ்ருதியின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் செய்து காண்பிக்கையில் அதை காண ஒரு ஆர்வமுள்ள நண்பர்கள் கூட்டம் சேர இவ்வாறே கோலி சோடாவின் பயணம் மிகவும் இயல்பான ஒரு முறையில் துவங்கியது. இதுவே தொடர்ச்சியாக, வளங்குன்றா முறையில் வாழ்வது பற்றிய கல்வி சார் கூட்டத் தொடர்களுக்கும் (educational sessions), பட்டறைகளுக்கும் (workshops) வழி வகுத்தது. “பெசன்ட் நகர் வாழ் மக்கள் வளங்குன்றா வாழ்க்கை முறை எண்ணத்தை மற்றவர்களைக் காட்டிலும் திறந்த கைகளோடு அரவணைத்தமையால் 2013-ல் அங்கு ஒரு அங்காடியை (store) திறந்தோம். நாங்களே அப்பகுதியில் புத்துருவாக்கம் (upcycled) செய்யப்பட்ட உற்பத்தி பொருட்களை முதன்முதலில் விற்கத் துவங்கினோம்,” என சிரிக்கும் ஸ்ருதி, “அப்பொழுதெல்லாம் புத்துருவாக்கம் மற்றும் மீள்சுழற்சி (recycle) ஆகிய இரண்டும் வெவ்வேறு என்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அது மாறியுள்ளது.”
2015-ல் இந்த அடையாளம் எண்ம (digital) வடிவம் எடுத்து இந்தியா எங்கிலும் இருக்கும் மக்களுக்கு சென்று அடைந்தது. இணையம் வழியாக பொருட்களை விற்பது மட்டுமல்லாமல் இந்த தொழில் நிறுவனம் ஆனது தனது உற்பத்தி பொருட்களை மிகுந்த பிரபலம் வாய்ந்த மற்றும் வளர்ந்து வரும் மின் வணிக (e-commerce) தளங்கள் ஆன அமேசான் (Amazon) மற்றும் ஃபிலிப்கார்ட்டில் (Flipkart) விற்கத் துவங்கியது. “அவர்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு அவர்களை தோற்கடிக்க முடியவில்லை எனில் அவர்களுடன் பந்தயத்தில் இணைந்தே ஓடலாம்,” என கூறுகிறார் ஸ்ருதி. வெகு சில நாட்களில் சுய உதவி குழுக்கள் (self-help groups) மாற்றும் ஊரக வாழ் குழுக்களால் (rural communities) செய்யப்படும் பொருட்களை இந்நிறுவனம் விற்கத் துவங்கியது. “இந்த கைதேர்ந்தப் பொருட்களை சந்தையில் விற்பனை செய்யும் ஆற்றல் எங்களிடம் உள்ளது என்பதையும் அவற்றிற்கு தகுந்த வரவேற்பை எங்களால் பெற்றுத் தர முடியும் என்பதையும் நாங்கள் உணர்ந்தோம்,” என்று கூறும் அவர், கோலி சோடா எனும் அடையாளத்தின் வளரும் பருவ ஆண்டுகள், எவ்வாறு அது பல இலச்சினைப் பொருட்களின் (multi-brand) அங்காடியாக இருந்தது என்பதனை விவரிக்கிறார்.
மிக விரைவிலேயே விற்பனை சூடுப் பிடிக்க, தங்களின் பாதையைப் பின்பற்றி, வளங்குன்றா பொருட்கள் நன்கு விலைபோகின்றன என்பதனை உணர்ந்த சக போட்டியாளர்களும் சந்தையில் சுற்றுச்சூழல் உகந்த பொருட்கள் என்று சாயம் பூசப்பட்ட பொருட்களைக் கொண்டுவரத் தொடங்கினர். ”நானே என் முதல் வாடிக்கையாளர்,” எனக் கூறும் ஸ்ருதி,”நான் எனது வாழ்க்கை முறையைத் தொடர்ந்து மறு மதிப்பீடு செய்து எவ்வாறு அதை மேலும் வளங்குன்றாமல் ஆக்குவது என ஆய்ந்து அறிவேன்” என்கிறார். அப்பொழுது தான் வளங்குன்றா பொருட்களின் சந்தையில் ஒரு இடைவெளி இருப்பதை கண்டறிந்தார். “என் பாத்திரங்களை தேய்ப்பதற்கு ஒரு சூழல்நல (eco-friendly) உற்பத்தி பொருளோ அல்லது என் தலைமுடியை அலசுவதற்கு நெகிழி அற்ற ஒரு நுரைமக் கழுவியோ (shampoo) சந்தையில் இன்றளவும் இல்லை!” என்பதை உணர்ந்த அவர், கோலி சோடா அடையாளத்திற்கு புதிய குறிக்கோள்களை நிர்ணயித்தார். ஒரு பலமான குழுவுடன் (தற்போது பத்து முக்கிய உறுப்பினர்கள் கொண்ட) இந்நிறுவனம் ஆனது, தங்கள் அடையாளத்தின் கீழ் பொருட்களை உற்பத்தி செய்யும் முனைப்பில், இருபது தேவைகள் கொண்ட சரிபார்ப்புப் பட்டியலுடன் (checklist) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் (நியாய வர்த்தகத்தின் அடிப்படையில் உள்ளூர், மூலப் பொருட்களை கையகப்படுத்தி, விலங்குகள் மற்றும் சூழல் நலனையும் கருத்தில் கொண்டு) கவனம் செலுத்தத் துவங்கியது. “வாழும் வாழ்க்கை முறையை பெரியளவில் மாற்றாமலேயே நீங்கள் ஒரு வளங்குன்றா வாழ்க்கையை வாழுமாறு கோலி சோடா நிறுவனம் வலியுறுத்துகிறது.”
கோலி சோடா நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களில், அவற்றை நிறைவு செய்யும்படியாக இருக்கும் உட்பொருள் (ingredient) ஒன்று அவற்றை சூழல்நல பொருட்களின் சந்தையில் ஒரு ஆட்ட நாயகர் போல ஆக்குகிறது. “நாங்கள் உற்பத்தி செய்யும் வழலைகள் (soap), நுரைமக் கழுவிகள் மற்றும் பாத்திரம் தேய்க்கும் வழலைகள் ஆகியவை இயற்கையாக மட்டுமல்லாமல் உயிர்ப்பொருட்களையும் (probiotics) கொண்டு உருவாக்கப்படுகின்றன. தோலுக்கும் உடல்நலனுக்கும் மிகச் சிறந்தவையான உயிர்ப்பொருட்கள் கழிவுநீர் குழாயில் கழுவித் தள்ளப்படும் போது, குழாயில் இருக்கும் கெட்ட நுண்ணுயிரிகளையும் (bacteria) ரசாயனங்களையும் (chemicals) உடைப்பது மூலம் நீர்ப் போக்கினை ஒழுங்கு செய்ய உதவுகின்றன.”
வளங்குன்றா வாழ்க்கை முறை வாழ்வதற்கான விழிப்புணர்வில் ஓர் உயர்வையும், ஒரு புதிய ஆர்வத்தையும் பெருந்தொற்று காலத்தில் காண முடிந்தது. படவரியில் (Instagram) 10 லட்சத்துக்கும் மேல் பின்பற்றாளர்கள் கொண்ட செல்வாக்கு மிக்கவர்கள் யாவரும் இயற்கையான வளங்குன்றா பொருட்களை அவர்களின் பின்பற்றாளர்களுக்குப் பரிந்துரைத்து வந்தனர். “மக்கள், அவரவரின் வீடுகளில் அதிக நேரம் செலவு செய்ய நேரிட்டதால், மீள்பயன் (reuse) செய்யக் கூடிய குப்பைகள் அனைத்தையும் கவனித்தும், சமையலில் என்ன உபயோகிக்கிறார்கள் என்று மிகுந்த விழிப்புடனும் இருந்தனர்.” எப்பொழுதை விடவும் இப்பொழுது கோலி சோடா நிறுவனமானது அதிகளவு ஈர்ப்பினைப் பெற்று வந்தது. “இந்த வளர்ச்சிப் பயணத்தில் ஏற்பட்ட சவால்களே இப்பயணத்தை மேலும் குதூகலமாக்கியது,” என நிறுத்தும் ஸ்ருதி, “யானை சாணத்தால் (elephant dung) ஆன கையால் செய்யப்பட்ட புத்தகத்தை, அது யானை சாணத்தால் ஆனது என்று அறிந்தவுடன் புத்தகத்தை கையில் வைத்திருந்த எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவர் அதை சடாரென்று கீழே வைத்தார். விழுப்புணர்வின்மை, மனத்தடை (mind block) ஆகிய இரண்டையுமே நாங்கள் தொடர்ச்சியாக உடைக்க முயல்கிறோம். துணியால் ஆன மாதவிடாய் அணையாடைகளையும் (menstrual pads), வீட்டில் உரப்படுத்துதலையும் நாங்கள் ஊக்குவிக்கும் போது, ஏற்பின்மையை வெளிப்படுத்தும் சில முகச்சுளிப்புகளை இன்றளவும் நாங்கள் காண்கிறோம். இதையே நாங்கள் கல்வியின் மூலம் மாற்ற முயல்கிறோம்.” கோலி சோடா விழிப்புணர்வு திட்டத்தை (Goli Soda Awareness Program) ஒரு மேம்பட்ட எதிர்காலத்திற்கான முதலீடாக செய்யத் தயாராக உள்ளார் ஸ்ருதி.
வளங்குன்றாமையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு வணிகம் என்றால் அதில் இருக்கும் சாதக பாதகங்களை ஆய்வு செய்யும் தேவை தொடர்ச்சியாக இருக்கும். “சிலவற்றை அடைய சிலவற்றை இழக்கத் தான் வேண்டும்,” என்பதை நம்பும் இந்த நிறுவனர், “எங்களின் உற்பத்தி பொருட்களை விற்க அமேசான் போன்ற தளங்களைப் பயன்படுத்துகையில் அவற்றின் கரியமில தடத்தின் (carbon footprint) அளவினையும், அவற்றின் பொதி கட்டும் (packaging) முறைகளையும் எங்களால் சீராக்க முடியாது. எனினும், எங்களின் பொருட்களைப் பயன்படுத்தி மக்கள் வளங்குன்றா வாழ்க்கை வாழ இந்த தளங்கள் வித்திட்டுள்ளன.”
ஓயாத கற்றலும் மறுவளர்ச்சியும் இதில் அடங்கும்.”சமீபத்தில் எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவர், அட்டையால் ஆன எங்கள் நுரைமக் கழுவியின் பொதியில், அச்சடிப்பதற்காக ஒரு மெல்லிய நெகிழித் தாள் இருப்பதனை சுட்டிக் காட்டினார். நாங்கள் அதனை கவனிக்கத் தவறிவிட்டோம். நீர் சார்ந்த (aqueous based) அச்சடிப்புக்கு நாங்கள் மாறினோம். இது எங்களின் லாபத்தை குறைப்பதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருப்பினும் எங்களின் உற்பத்தி பொருட்களை முற்றிலுமாக சுழியக் கழிவு (zero waste) பொருட்களாக மாற்றுகிறது,” என தெளிவாகக் கூறுகிறார் இந்த இளம் தொழில்முனைவோர்.
இந்நிறுவனமானது மாற்றத்திற்கான தேவைப் பற்றிய உரத்த குரல் எழுப்ப ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் வளர்ச்சி மெதுவாக இருந்தாலும் கூட நிதானமாக இருந்துள்ளது — மிகச் சிறிய அங்காடியாக ஆரம்பித்த இந்நிறுவனம், இந்தியா எங்கிலும் ஆயிரக்கணக்கான மக்களை சென்றடைந்த ஒரு அடையாளமாக மாறிவிட்டது.
இந்த வணிக அடையாளத்தோடு ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் ஸ்ருதியின் பணி தழைத் தோங்கத் துவங்கியது — விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களான எ ஃபார் ஆஃப்டர்னூன் – எ பெயிண்டட் சாகா (A Far Afternoon – A Painted Saga) என்ற இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியரான க்ரிஷென் கண்ணாவைப் (Krishen Khanna) பற்றிய ஆவணப்படத்திற்கும் (Documentary) ஹார்மொனி வித் ஏ.ஆர்.ரகுமான் (Harmony with A.R. Rahman) என்ற இணையத் தொடருக்கும் (web series) தேசிய விருதுப் பெற்று ஒரு முன்னோடித் தயாரிப்பாளராக முன்னேறினார். “என் திரைப்படத் தொழிலே என் வணிகத்தை நடத்துவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது. என் குழு இயக்கம் மொத்தத்தையும் கவனித்துக் கொள்ள, நானோ அவர்களுக்கு திசையமைத்து வழிக்காட்டியாக செயல்படுகிறேன்,” என ஒப்புக் கொள்கிறார் அவர். எவ்வித நிதி வரவும் இல்லாத தொடக்கநிலை நிறுவனமான இது தற்போது வளர்வதற்காக நிதி திரட்ட முயன்று வருகிறது.”நான் சமீபத்தில் பெண்கள் தொழில்முனைவோர் குழு ஒன்றில் அங்கமாக இருந்தேன். அதில் உள்ளவர்களில் வெறும் இரண்டே நபர்கள் மட்டுமே சென்னையை சார்ந்தவர்களாக இருந்தோம்,” என சிரிக்கிறார் ஸ்ருதி. “மிகுந்த வளர்ச்சியுடன் தொடக்கநிலை நிறுவனங்களைக் (start-up) கொண்ட பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்தால், எங்களின் நிறுவனம் போன்ற ஒன்று மிக சுலபமாக நிதியளிக்கப்பட்டிருக்கும் என்பதை நான் உணரத் துவங்கி விட்டேன்.” மனதளவில் ‘சென்னைவாசி’யான அவர் உடனே முந்திக் கொண்டு, “எனினும் சென்னையே எனக்கு வீடு. அதன் பண்புகளும், அது வளர்ந்து வரும் வேகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதி தீவிரமாகவும் இல்லாமல் பெரும் பின்னடைவும் சந்திக்காமல் ஒரு நிதானமான போக்கில் வளர்கிறது” என கூறுகிறார்.
கோலி சோடா நிறுவனம் நிறைய உற்பத்தி பொருட்களை அதன் வசம் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதன் எதிர்கால பயணத்தில் இன்னும் நிறைய ஊரக வணிக நடுவங்களை (rural enterprise) ஆதரிக்க முற்படுகின்றது. “உள்ளூர் கைத்தொழில்களை ஊக்குவிப்பதே ஒரு மேம்பட்ட வளங்குன்றா எதிர்காலத்திற்கான முக்கியமான படியாகும். எனவே, அதிலேயே நாங்கள் தற்போது கவனம் செலுத்துகிறோம்.”
ஸ்ருதியின் வாழ்க்கை முறையாக ஆரம்பித்த கோலி சோடா நிறுவனமானது, தற்போது தீவிரமாக, இந்தியாவின் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வளங்குன்றா வாழ்க்கை முறைக்கு மாற்றி வருகின்றது. “ஒரே நாளில் உங்கள் வீட்டில் உங்களால் சுழியக் கழிவை அடைய முடியாது. உங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் ஒரு சிறிய மாற்றத்தை தினமும் கொண்டு வருவது அதற்கு மிகவும் தேவையாகும். அதைப் போலவே உங்கள் வணிகமும் ஒரே நாளில் வளர்ந்து விடாது. வாடிக்கையாளர் பற்றுறவில் (customer loyalty) கவனம் செலுத்துங்கள். இவற்றிற்கு மிகுந்த ஆர்வமும் பொறுமையும் தேவை,” என ஒரு மிகச் சிறந்த ஒப்புமையுடன் திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ருதி நிறைவு செய்கிறார்.