ஈரோடு பகுதியின் புறநகரில், நெசவு நகரம் (weaving town) என பெயர்பெற்ற சென்னிமலை (Chennimalai) எனும் குக்கிராமத்தில், நெசவு இயந்திர சத்தத்தின் மத்தியில் C. சிவகுருநாதன் (C. Sivagurunathan) எனும் நெசவாளர் காதி ஆடை அணிந்து மற்ற நெசவாளர்களுடன் கைத்தறி வேலையில் ஈடுபட்டு உள்ளார். தலைமுறை தலைமுறையாக இங்கு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்கள், உலகமயமாக்கலால் எண்ணிக்கையில் பெருவாரியாக குறைந்து உள்ளனர்.
நெசவுத் தொழிலை குடும்பத் தொழிலாகக் கொண்ட குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவர் சிவகுருநாதன். மில்லீனியல்ஸ் (millennials) எனப்படும் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்து புறநகரில் வசித்து வந்த பெரும்பாலான மற்ற இளைஞர்கள் போலவே, சிவகுருநாதனின் குடும்பமும் அவரை சென்னைக்குச் சென்று, நெசவுத் தொழிலைக் காட்டிலும் நிலையான வருமானம் ஈட்டும் தொழில்நுட்ப பணி ஒன்றில் சேருமாறு வலியுறுத்தியது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், பெங்களூருவுக்கும் சென்னைக்கும் இடையே பயணம் செய்தவாறு வங்கித் துறைச் சார்ந்த பல்வேறு வகையான வன்பொருள் மற்றும் மென்பொருட்கள் தொடர்பான வேலை செய்து, ஒரு குடும்ப வாழ்க்கைத் துவங்குவதற்கு ஏற்றவாறு பணம் சம்பாதித்து, படிப் படியாக தனது பெருநிறுவனப் பணி வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு இருந்தார் சிவகுருநாதன்.
வாழ்க்கை நேர்த்தியாக இருப்பினும் முழுமையாக இருப்பதாக சிவகுருநாதன் உணரவில்லை. எப்பொழுதும் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே அவருக்குத் தோன்றியது. “எனது பொழுதுபோக்கு நேரத்தின் பெருவாரியான பகுதியை நான் நூல் வாசிப்பிலேயே செலவிடுவேன். குக்கூ இயக்கத்தால் (Cuckoo movement) வெளியிடப்பட்ட ‘மண் புழு’ எனும் நூலினை நண்பர் ஒருவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுவே என் வாழ்க்கையை மாற்றியது!” நீர் நிலைகள் மாசடைதல் பற்றி அந்நூல் பேசியது. ஒரு புதிய பரிமாணத்தை திறந்து வைத்ததோடு வாழ்க்கைப் பற்றிய அவரின் கண்ணோட்டத்தையும் அந்நூல் மாற்றியது.
“குக்கூ இயக்கம் திருவண்ணாமலையில் நடத்திய நெல் திருவிழாவில் நான் பங்கேற்றேன். அப்பொழுது தான் வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டும் என்ற என்னுடைய தேடல் துளிர்விட்டது.” இளைஞரான சிவகுருநாதன், நம்மாழ்வார், (Nammazhvar) அனைவராலும் அன்பாக அண்ணா என்றழைக்கப்படும் குக்கூ இயக்கத்தின் முன்னோடிகளான சிவராஜ் (Sivaraj) மற்றும் பீட்டர் (Peter) ஆகியோருடன் திருவிழாவில் அறிமுகமானார். வாழ்வை மாற்றி அமைக்கப் போகும் தன் பயணத்தில் இவர்கள் இருவரும் தன்னிச்சையாக தன் வழிகாட்டிகளாக மாறினர்.
இந்த இயக்கமானது காந்திய நெறிகளைத் தழுவிய ஓர் வாழ்க்கைமுறையை அறவுரைத்து வந்தது. இதுவே இளம் தொழில்நுட்ப பணியாளரான சிவகுருநாதன் மற்றும் அவரைப் போன்ற பலரையும் பெரிதும் ஈர்த்தது. நாளடைவில் சிவகுருநாதன், திருவண்ணாமலையில் உள்ள குக்கூ இயக்கத்தின் பணிகளில் ஈடுபட்டும் அங்குள்ளவர்களுடன் உரையாடியும் தனது வார விடுமுறை நாட்களை செலவிட்டார். “அலுப்பான நகர வாழ்க்கையில் இருந்து தப்பிக்கும் முனைப்பில் நான் விவசாயம் செய்யலாம் என்றெல்லாம் யோசித்தேன்,” என சிரிக்கும் சிவகுருநாதன், “ஆனால் சிவராஜ் அண்ணாவோ மாற்றம் விளைவிக்க நிறைய வழிகள் உள்ளன என்றும் அவற்றில் எனக்கு எதில் தீராப் பற்று உள்ளது என்பதை அறியும் பயணத்தில் நான் அவசரப்படக் கூடாது என்றும் எனக்கு அறிவுரை வழங்கினார்” என்கிறார்.
2015-ஆம் ஆண்டை ஒட்டி, குக்கூ இயக்கமானது திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தில், பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கான ஓர் மாறுபட்ட பள்ளியாக உருமாறுவதை கண்கூடாக கண்டார் சிவகுருநாதன். மாற்றம் நிகழ்த்தப்படுவதைக் கண்டார். “பக்தர்களால் மட்டுமே நிறைந்து இருந்த ஒரு குக்கிராமமானது ஒரு எழுச்சிமிகு சமூகமாக மாற்றம் அடைந்தது. குக்கூ காட்டுப்பள்ளியின் தற்போதைய வளர்ச்சிக்கு பல்வேறு பின்புலங்களில் இருந்து வந்த பலரும் பெருமளவில் பங்களித்தனர்,” என அவர் சிரிக்கிறார். “என்னாலும் ஒரு மாற்றம் உணர்த்தும் சமூகத்தை ஏற்படுத்த முடியும் என்ற தன்னம்பிக்கையை இதுவே உணர்த்தியது” என நினைவுக்கூறுகிறார் சிவகுருநாதன்.
தனது பூர்விகத் தொழிலான நெசவினை மீட்டெடுக்க முடிவு செய்தார். நூற்பு (Nurpu) எனப்படும் தனது கைத்தறி நிறுவனத்தை நிறுவுவதற்கு ஏதுவாக நெசவு தொழில் நடைபெற்று வந்த சென்னிமலை எனும் கிராமத்தை கண்டறிந்தார். நலிவடைந்து வரும் கலை வடிவமான நெசவினை மீட்டெடுக்க ஒரு திறன்மிகு அமைப்புமுறையை உருவாக்குவதே அவரின் குறிக்கோளாக இருந்தது. விசைத்தறிகள் (powerloom) வந்தமையால், கைத்தறி நெசவாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியவும் நெசவுத் தொழிலை விட லாபம் ஈட்டும் மற்றத் தொழில்களில் ஈடுபடவும் துவங்கினர். ஒருகாலத்தில் நெசவுத் தொழிலின் முடிச் சூடா மன்னர்களாக திகழ்ந்த இந்த நெசவாளர்களின் நிலையோ தற்போது அவ்வாறு இல்லை. ஆறு நெசவாளர்களைக் கொண்டு கைத்தறி செய்து வந்த ஒரு சிறு குழுவினைக் கண்டறிந்து எளிய கைத்தறி ஆடைகளை செய்யத் துவங்கினார் சிவகுருநாதன்.
நல்லெண்ணங்களுடன் மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பினும் இளம் தொழில்முனைவோரான சிவகுருநாதனுக்கு பெருமளவில் ஊக்கமோ வரவேற்போ எதிர்பார்த்த அளவில் மக்களிடமிருந்து கிடைக்கவில்லை. “இதுவே கிராமப்புற தொழில் நிறுவனம் துவங்குவதில் உள்ள சிக்கலாகும். பயன் ஏதும் அளிக்காத பொய்யான வாக்குறுதிகளுடன் பலரும் காலங்காலமாக இந்த மக்களை அணுகியுள்ளனர். எனவே, கிராம மக்களின் நம்பிக்கையின்மை புரிந்துக் கொள்ளத்தக்கதே,” என அவரே அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
2017-ஆம் ஆண்டை ஒட்டி நிறுவனத்தில் தனது பதவி விலகல் கடித்தத்தை ஒப்படைத்து விட்டு முழுநேர தொழில்முனைவோர் ஆனார் அவர். தனது தலைமை செயலிடத்தை சென்னையில் இருந்து நெசவு கிராமமான சென்னிமலைக்கு மாற்றினார். இவை அனைத்தும் ஒருபுறம் நிகழ்ந்துக் கொண்டு இருக்க மற்றொரு புறம் அதே சமயம் தங்கள் முதல் குழந்தையை அவரும் அவரின் மனைவியும் பெற்றெடுத்தனர். “உடனடியாக லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியாது என்பதை நான் அறிந்து இருந்தேன். இருப்பினும் எனக்கு பின்னர் வரப்போகும் தலைமுறையினர் இடையே ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனக்கு முக்கியமாக இருந்தது.”
அவரின் குடும்பம் பெரும் வாழ்க்கைமுறை மாறுதலுக்கு உள்ளாகியது. “இயற்கை மற்றும் மக்கள் சூழ்ந்த கிராமத்தில் நீங்கள் வாழத் துவங்கும் அந்தத் தருணம், வாழ்க்கையின் முக்கிய விஷயங்களை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். கிராம வாழ்க்கைக்கு மாற எங்களுக்கு சிறிது காலம் தேவைப்பட்டாலும், நாளடைவில் வளங்குன்றா வாழ்க்கைமுறைக்கு நாங்கள் பழகிக் கொண்டோம்.” நாட்கள் நகர, சென்னிமலை கிராமமும் அதன் மக்களும் புதிய தொழில்முனைவோரான சிவகுருநாதனை மெதுவாக ஏற்றுக் கொள்ளத் துவங்கின. இதன் விளைவாக அவரிடம் இருந்த நெசவாளர்கள் எண்ணிக்கை ஆறில் இருந்து முப்பதாக உயர்ந்தது. சிவகுருநாதனின் துளிர் நிறுவனம் ஒருபுறம் வளர்ச்சிப் பெற, மறுபுறம் அவரின் தளிர் மகள் தன் ஆடைகள் தயாரிப்பின் பின் இருக்கும் ஒவ்வொரு வியர்வைத் துளியையும் தினசரி கண்கூடாக கண்டு வந்ததால், தன்னைச் சுற்றி இருக்கும் சிறு சிறு விஷயத்தின் மதிப்பினையும் உணர்ந்தாள்.
ஆடை சாயமிடலே (textile dying) நீர்நிலைகள் மாசடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதால், ஆரம்பத்தில் நூற்பு நிறுவனமானது சாயம் பூசாத வெள்ளைத் துணையினை மட்டுமே நெய்து வந்தது. “நெசவாளர்களின் வளங்குன்றா சுற்றுச்சூழல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் கொள்கைகள் அனைத்தும் இந்த யோசனையால் வெறும் காற்றில் வரைந்த ஓவியம் போல ஆகிற்று. எண்ணிக்கையில் வெறும் ஐந்து துணிகள் மற்றுமே விற்பனை ஆகின,” என்கிறார் சிவகுருநாதன். “ஒரே நாளில் வளங்குன்றா வாழ்க்கைமுறைக்கு மாற முடியாது என்றும் அதற்கான செயல்முறையில் படிப் படியாகவே எனது கொள்கைகளை அடைய முடியும் என்பதயும் உணரவே எனக்கு சிறிது காலம் ஆகிற்று.” எனவே, ஒரு நடுநிலைக்கு வந்த அவர் தனது கைத்தறி ஆடைகளுக்கு இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார்.
சில ஆண்டுகள் கழித்து நூற்பு கைத்தறி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு நெசவாளர்கள் மறைந்துவிட, மிகவும் தனித்துவ நெசவு நுட்பங்களுள் ஒன்றான குறுக்கு பின்னலும் (cross weave) அவர்களுடன் மறைந்து போயிற்று. தான் அறிந்து இருந்த எல்லா நெசவாளர்களும் ஐம்பது முதல் அறுபது வயது வரம்பில் உள்ளவர்களே என்பதை அப்பொழுது தான் சிவகுருநாதன் உணர்ந்தார். கிராமத்துக்கு புலம்பெயர்ந்த பின்னரே நெசவினை சிவகுருநாதன் கற்க நேர்ந்தது. ஏனெனில் சிறு வயதில் நெசவு நடைபெறும் இடத்தினுள் தன்னை நுழையவே விடமாட்டார் தனது தாத்தா. “கூர்மையாக இருக்கும் ஓடத்தில் (shuttle) நான் எதிர்பாராமல் குத்திக் கொள்வேன் என அவர் அஞ்சுவார்,” என தாத்தா நெசவு செய்ததை தொலைவில் இருந்து தான் கண்டதை நினைவுக்கூறுகிறார். “எனினும் எனது பள்ளியில் நெசவு வகுப்புக்கென பிரத்தியேகமாக வரையறுக்கப்பட்ட சில மணி நேரங்களில் நெசவுத் தொழிலின் ஆரம்ப செயல்முறைகளுக்கு நான் அறிமுகமானேன். இப்பொழுது உள்ள பள்ளிகளில் அவ்வாறு ஒரு வகுப்பே இல்லை.” இதன் விளைவாக இந்த ஆண்டின் துவக்கத்தில் நூற்பு நிறுவனமானது நெசவுக்கான பள்ளி ஒன்றினை ஆரம்பித்தது. நெசவு சமூகத்தில் இருக்கும் வல்லமைப் பெற்ற நெசவாளர்களிடம் இருந்து மாணவர்கள் இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளலாம்.
பெருந்தொற்று காலத்தில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை தாக்குப் பிடிக்க அரசு மருத்துவமனைகளுக்கென தொட்டில் துணியினை தயாரித்துத் தர ஆரம்பித்தது நூற்பு கைத்தறி நிறுவனம். இது மட்டுமல்லாமல் தொழில்முனைவோர் ஆன சிவகுருநாதன் இந்தியா முழுவதும் பயணம் செய்து, வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் நெசவாளர்களைக் கண்டறிந்து, அவர்களுடன் இணைந்துப் பணியாற்றி புதிய நெசவு பாணிகளைக் கற்றுக் கொள்ளும் செயலில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளார். “இந்த தீபாவளி முதலே எங்களின் பின்னல் பாணிகள் மூலம் புதிய வடிவமைப்புகள் உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஏனெனில் அவ்வாறு செய்தால் மட்டுமே நாங்கள் தயாரிக்கும் ஆடைகளின் உற்பத்தி விலையைக் காட்டிலும் விற்பனை விலையை சற்று உயர்வாக நிர்ணயித்து அதன் மூலம் வரும் வருமானத்தில் நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வினை அளிக்க முடியும்,” என எவ்வாறு வேலைப்பாடுகள் உடைய வடிவமைப்புகளுக்கு ஆகும் நேரம் என்பது அவற்றின் விற்பனை விலையை நிர்ணயிக்கிறது என்பதனை விவரிக்கிறார் சிவகுருநாதன். “எடுத்துக்காட்டாக கலைவேலைப்பாடுகளை உடைய ஒரு புடவையை ஜகாட் (jacquard) இயந்திரத்தை பயன்படுத்தி நெய்வதற்கு நான்கு நாட்கள் ஆகும் எனில் வேலைப்பாடுகள் இல்லாத சாதாரண புடவை நெய்வதற்கு ஒன்றரை நாள் மட்டுமே ஆகும்.”
நூற்பு அதன் பெயரின் கீழ் சட்டைகள், வேட்டிகள், துண்டுகள், புடவைகள் மட்டும் துணிகள் ஆகியவற்றை அதன் இணையத்தள அங்காடி மூலமும், கோயம்புத்தூரில் உள்ள தேர்ந்தெடுத்த சில இயற்கை அங்காடிகள் மூலமும் விற்பனை செய்து வருகிறது. சிவகுருநாதனின் இந்த துளிர் நிறுவனத்தின் குறிக்கோள் என்பது கைத்தறி கலையை மீட்டு எடுப்பது மட்டுமல்லாமல் ஒரு தொலைநோக்கு பார்வையையும் தன்வசம் கொண்டுள்ளது. பருத்தி எடுப்பவர்கள், நூல் நூற்பவர்கள், நெசவாளர்கள், ஆடைகளுக்கு சாயம் பூசுபவர்கள், தையற்காரர்கள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள்—இவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வெவ்வேறு சமூகங்கள், இணைந்து இயங்கும் வண்ணம் ஒரு வளங்குன்றா சமூகத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த ஆடை சமூகத்திற்கும் உதவும் நோக்கில் நம் இளம் தொழில்முனைவோரான சிவகுருநாதன் தனது துளிர் நிறுவனத்தின் தொலைநோக்கு குறிக்கோள் மூலம் அயராமல் உழைத்து வருகிறார்.