THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

குப்பையைப் பயனுள்ளதாக்கும் சென்னை துளிர் நிறுவனம்

உயர்நிலைப் பள்ளியில் வேதியியல் (chemistry) பாடத்தில் வரும் சமன்பாடுகளையும் குறியீடுகளையும் (equations and symbols) எவ்வாறு மனதில் நிறுத்துவது என அவற்றைக் கண்டு பலரும் அஞ்சுவதுண்டு. ஆனால் கேஷவ் விஜய் (Keshav Vijay) என்பவருக்கு அதுவே கை வந்த கலையாக இருந்தது. வேதியியல் துறையிலேயே தான் பணி செய்ய வேண்டும் என்பதை வெகு முன்பாகவே அவர் உணர்ந்தார். தனது பத்தாம் வகுப்பில் எல்லாம் தான் ஒரு வேதிப் பொறியாளர் (Chemical Engineer) ஆக வேண்டும் என்பதை முடிவு செய்தார் கேஷவ். “நான் எனது உயர்நிலைப் பள்ளித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தேன். பொறியியல் கலந்தாய்வில் வேதிப் பொறியியலை (Chemical Engineering) தேர்வு செய்தேன். எனினும், நான் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அங்கு வந்திருந்த பலரும் அந்தத் துறையை மிகவும் குறைவாகவே மதிப்பிட்டனர். அதற்கு என்ன செய்வது? வேதியியலே என் பாணியில் குறியீடிடல் (coding)!” என சிரிக்கிறார் அவர்.

கல்லூரி இறுதியாண்டுக்கு முந்தைய கோடை விடுமுறையில், ‘துளிர் நிறுவனங்கள் (startups)’ துளிர்விட்டு வந்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், பல துறைகளை பதம் பார்க்க விரும்பினார் கேஷவ். ஆரம்பத்தில் ஒரு தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவரில்லை. “முனைவர் பட்டம் பெற்ற ஆய்வாளர் ஒருவர், முனைவர் பட்டம் பெற்ற இரண்டு அறிஞர்கள், தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பயின்று வந்த மாணவி ஒருவர் என பலதரப்பட்ட நபர்களைக் கொண்ட குழுவோடு கோடைக் கால பயிற்சி ஆய்வாளராக நான் ஐஐடியில் பணிபுரிந்து வந்தேன்.” ஆராய்ச்சிக் குழுவில் இருந்த முனைவர். K. சிவகாமி (Dr. K. Sivagami), G. திவ்யப்ரியா (G. Divyapriya), ரம்யா செல்வராஜ் (Ramya Selvaraj), அரவிந்த் E.S (Aravind E.S.) மற்றும் கேஷவ் — இவர்கள் யாவரும் இணைந்தே பின்னர் டீம் என்விரோ (Team Enviro) என்றப் பெயரில் ஒரு துளிர் நிறுவனம் துவங்கினர்.

2017-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மாசு மற்றும் புவி வெப்பமயமாதல் (pollution and global warming) பற்றிய அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வந்ததால், நிறுவனங்கள் யாவும் மாசற்ற தொழில்நுட்பத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. அமெரிக்க தூதரகமானது விர்ச்சுஸா போலாரிஸ் (Virtusa Polaris) என்ற நிறுவனத்துடன் இணைந்து ஜீரோ கார்பன் சேலஞ் (Zero Carbon Challenge) அதாவது கரியமில சமநிலைப்படுத்துதலுக்கான போட்டி ஒன்றை நடத்தினர். கரியமில வாயுவின் அளவைக் குறைப்பதற்கான யோசனைகளைத் தருமாறு போட்டியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நெகிழியினால் (plastic) ஏற்படும் மாசு என்பது பெருமளவில் அதிகரித்து பல சிக்கல்களை ஏற்படுத்தி வந்ததால் அந்த சிக்கல்களுக்கு தீர்வுக் காண முயன்றனர் டீம் என்விரோ நிறுவனத்தினர். “எதிர்காலத்துக்கு ஏற்ற ஒரு அமைப்பு முறையாக பன்முகப்படுத்துதலே (decentralization) இருக்கும் என எங்கள் ஒட்டுமொத்த குழுவும் நம்பினோம்,” என விவரிக்கும் கேஷவ், “அதிகாரம் அளிக்கப்பட்ட சமூகங்கள் பெரியளவிலான ஆற்றல் திறன் வாய்ந்த அமைப்புகளை உருவாக்கும்.”

மாசு ஏற்படுத்தும் பிறப் பொருட்களையும் தன்வசம் கொண்டதே பல்லடுக்கு நெகிழியாகும் (மல்டி லேயர் பிளாஸ்டிக் – multi-layer plastic a.k.a MLPs). அலுமினியத்தை மெல்லிய தாளாக அதன் உட்புறத்தில் கொண்டு சீவல் மற்றும் மாச்சில்களை (chips and biscuit) அடைத்து வைக்க பயன்பட்டு, எங்கும் நிரம்பி வழியும் பொட்டலங்களான இவையே, நெகிழியால் ஏற்படும் மாசுவில் அறுபது சதவீத பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்றன. மீதமுள்ள நாற்பது சதவீத மாசானது இயந்திர முறைகளால் சுலபமாக மறுசுழற்சி (recycle) செய்யப்படுகின்றது. “நீங்கள் கூர்ந்து கவனித்தால் வீட்டில் குப்பை மற்றும் பழைய தாள்களை எடுக்க வரும் நபர்கள் கூட இரண்டாவது வகையான குறைந்த மாசு ஏற்படுத்தும் நெகிழியினையே எடுப்பர். ஏனெனில் அவற்றையே சுலபமாக சூடாக்கி, துகள்களாக மாற்றி மறுபடியும் நெகிழியாக மாற்ற முடியும்,” என கூறுகிறார்.

பல்லடுக்கு நெகிழிகளின் நிலை? இங்கு தான் வெப்பச்சிதைவு (pyrolysis) எனும் வேதியியல் செயல்முறை பயனுக்கு வருகிறது. பெரும்பாலானோரைப் போல் அல்லாமல் நீங்கள் உங்கள் உயர்நிலைப் பள்ளி வேதியியல் பாடத்தை கூர்ந்து கவனித்து இருந்து இருந்தால் உங்களுக்குத் தெரியும். வெப்பச்சிதைவு என்பது மிக அதிக வெப்பம் கொண்டு நெகிழிகளை துகள்களாக்கி அதன் மூலம் எண்ணெய் போன்ற வடிவத்தில் ஆற்றல் உருவாக்கும் செயல்முறை ஆகும். “குப்பை மறுசுழற்சித் துறைக்கு நெகிழி வெப்பச்சிதைவு எனும் செயல்முறை ஒன்றும் புதுசு அல்ல. எனினும் ஒரு தவறான கண்ணோட்டத்தை அது பெற்றது மட்டுமல்லாமல் ஐநூறுக்கும் மேற்பட்ட அதன் ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தினால் மூடப்பட்டன,” என விவரிக்கிறார் கேஷவ். எஞ்சி இருந்த ஆலைகளும் திறனாக செயல்படாமலும், மாசு ஏற்படுத்தியும் நிறைய இடத்தை ஆக்கிரமித்து மட்டுமே வந்தன. எனவே, வேறு வழியில்லாமல் இந்த பல்லடுக்கு நெகிழிகள் குப்பைக்கூளங்களில் குவிந்தும், நீர்நிலைகளில் நீரோட்டத்தை அடைக்கும் வண்ணம் தேங்கியும் கிடக்கின்றன. எனவே, தங்களுக்கு நன்கு பரிச்சயமான இடமான ஆய்வகத்தில் இந்த மோசமான நெகிழி ஏற்படுத்தும் அச்சுறுத்தும் பிரச்சனைக்கு தீர்வுக் காண முடிவு செய்தனர் டீம் என்விரோ ஆராய்ச்சிக் குழுவினர்.

நடுவர்கள் முன் யோசனைகளை முன்வைப்பது, மூலப்படிவங்கள் செய்துக் காண்பிப்பது (prototyping) போன்ற போட்டியின் பல்வேறு கட்டங்களை டீம் என்விரோ கடந்துச் சென்று இறுதியில் தலா ஆறு மாதங்கள் நீடித்த இரண்டு சுற்றுகளையும் கடந்து போட்டியின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதன் விளைவாக டீம் என்விரோ குழுவிற்கு நிதிநல்கையாக (funding) ரூபாய் ஐந்து லட்சமும் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் (IIT Madras Research Park) ஒரு இடமும் கிடைத்தது. “அது வரை ஆய்வகத்தின் நான்கு சுவர்களைத் தாண்டி என்ன நடக்கும் என்ற எந்த ஒரு சிந்தனையுமே இல்லாத வெறுமனே ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபடும் மாணவர்களாக நாங்கள் வலம் வந்துக் கொண்டிருந்தோம்,” என சிரிக்கும் கேஷவ், ”இந்தப் போட்டியில் நாங்கள் கண்ட வெற்றியே தொழில்முனைவோர்களாக நாங்கள் செய்ய வேண்டிய வேலையைப் பற்றி எங்களை சிந்திக்க வைத்தது” என்கிறார்.

டீம் என்விரோ, சமுத்யோகா வேஸ்ட் சக்ரா (Samudhyoga Waste Chakra) என்று தன்னை மறு அடையாளம் செய்துக் கொண்டது—அதாவது ஒரு சுழற்சி பொருளாதாரத்தை (circular economy) ஏற்படுத்தும் தன்னுடைய இறுதிகட்ட குறிக்கோளை சுட்டிக் காட்டும் விதமாக இந்தப் பெயரை வைத்துள்ளது இந்த குழு. வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ள புதிய நிறுவனத்தின் துவக்கக் காலத்தில் கேஷவ், அஷோகா பல்கலைக்கழகத்தின் ஓராண்டு கால இளைய பாரதம் ஆதரவூதியத் திட்டத்தின் (Young India Fellowship) கீழ் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். “நெகிழிகளின் நுட்பத்தைப் பற்றி நான் ஏற்கனவே கற்று இருந்தேன். எனவே, ஆதரவூதியம் பெற்றக் காலத்தில் நெகிழிகளை நோக்கிய திட்டமிட்ட அணுகுமுறையிலும் சமூக, அரசியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது அவை ஏற்படுத்தும் தாக்கங்களை திட்டமிட்ட முறையில் அணுகுவதிலும் நான் கவனம் செலுத்தி வந்தேன்.” ஓராண்டு காலத்துக்குப் பின்னர், நிறுவனத்தின் வணிகத் தலைவராக (Business Head) கேஷவும் முதன்மை தொழில்நுட்ப அலுவலராக (Chief Technology Officer – CTO) முனைவர் K. சிவகாமியும் பொறுப்பேற்றனர். மெட்ராஸ் ஐஐடியின் கட்டடப் பொறியியல் துறையின் பேராசிரியர் இந்துமதி நம்பியும் (Prof. Indumathi Nambi) ஹரிதா-என்டிஐ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் (Haritha-NTI Ltd.) முன்னாள் தலைவரான N.ஸ்ரீராம் (N. Sriram) ஆகிய இருவரும் இந்தக் குழுவிற்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

“ஐஐடி அல்லது மற்ற பல்கலைக்கழக தொழில் முனைவு இளம்பருவக்காப்பு மையங்களில் (incubation cell) இருந்து முளைக்கும் பல துளிர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன,” என கூறும் இணை நிறுவனர் கேஷவ், “ஐஐடி தொழில் முனைவு இளம்பருவக்காப்பு மையத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நாங்கள் ஒரு பெரும் வரமாக கருதுகிறோம். ஏனெனில் இந்த மையத்தில் இருப்பவர்கள் எங்களின் ஆராய்ச்சிப் பயணத்தில் தகுந்த நேரத்தில் தகுந்த இடத்தில் எங்களை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல், இந்நாள் வரையில் எங்களுக்கு நிதிநல்கை மற்றும் அங்கீகாரம் கிடைப்பதிலும் உதவி உள்ளனர்” என நன்றி உணர்வுடன் கூறுகிறார். ஒன்றோடு ஒன்று இணக்கமாக செயல்பட்டு வரும் இந்த வட்டங்களைத் தாண்டி வெளியே அதாவது கல்வித்துறைகளில் இருக்கும் தொழில் முனைவு இளம்பருவக்காப்பு மையங்களை சாராத தொழில்முனைவோர்கள் சென்னையில் நிதிநல்கை பெறுவது என்பது ஏணி வைத்தாலும் எட்டாத ஒரு சவாலான காரியமாகவே உள்ளது என கேஷவ் நம்புகிறார். “இன்னும் சென்னை, பெங்களூருவை போல் ஆகவில்லை. ஏனெனில் அங்கு தடுக்கி விழுந்தால் ஒருவர் தன் வணிக ஆலோசனைகளுக்கு ஒரு முதலீட்டாளரைப் பெற முடியும்,” என சிரிக்கும் கேஷவ், “ஆனால் சென்னையில் கடல் போன்ற திறன்களின் திரளும், வளங்களும், கண்டுபிடிப்புகளை மேலும் மேலும் ஊக்குவித்து வரும் ஒரு அரசும் உள்ளது. இதனாலேயே குர்கான் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இணையாக துளிர் நிறுவனங்களுக்கு உகந்த ஒரு நகரமாக சென்னை வளர்ச்சி அடைந்து வருகிறது” என்கிறார் பெரும் நம்பிக்கையுடன்.

நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின்னர் இந்நிறுவனமானது களத்தில் பொருத்தக் கூடிய வகையில் (plug-in plant) 100 சதுர அடி அளவில் ஒரு வெப்பச்சிதைவு இயந்திரத்தை உருவாக்கி உள்ளது. இதனை தற்பொழுது பெருங்குடி குப்பை மேட்டில் பொருத்தி வருகின்றனர். “இந்த தொழில்நுட்பமானது தற்பொழுது மாசு எதுவும் ஏற்படுத்தாமலும் ஆற்றல் திறன் வாய்ந்ததாகவும் உள்ளது. குப்பையை மறுசுழற்சி செய்வது என்பது மிகப்பெரிய கடினமான வேலை என்ற மக்களின் பார்வையை மாற்ற வேண்டும். அதனாலேயே சரக்குந்தில் (truck) இயந்திரத்தை ஏற்றி சென்று குப்பை இருக்கும் இடத்திலேயே நெகிழியை மறுசுழற்சி செய்யும் வகையில் இந்த யோசனையை நாங்கள் உருவாக்கினோம்,’ என விவரிக்கும் அவர், “1000 கிலோ நெகிழியில் இருந்து பெறப்படும் சுமார் 800 லிட்டர் வாகன எண்ணெயை உலைகள் (furnaces) மற்றும் கொதிகலன்களுக்கு (boilers) எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.”

ஒவ்வொரு வகை கழிவையும் பயனுள்ளதாக்கும் குறிக்கோளில் வேஸ்ட் சக்ரா நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. நெகிழி வெப்பச்சிதைவு அமைப்புமுறையனது பரிசோதிக்கப்பட்டு சென்னை மாநகராட்சிக்கும் பல்வேறு பெருநிருவனங்களுக்கும் விற்கப்பட்டு வரும் நிலையில், இந்த துளிர் நிறுவனமானது நெகிழியை அடுத்து மாசுபாட்டுக்கு மிகப்பெரிய காரணமாக நீர்நிலைகளில் கலக்கும் சிறுநீரை கருத்தில் எடுத்துக் கொள்ள துவங்கி உள்ளது. நீர்நிலைகளில் கலக்கும் சிறுநீரானது மிகை ஊட்ட நிலைக்கு (Eutrophication – நீர்நிலையில் மிகையாக ஊட்டச்சத்துகள் இருப்பதன் விளைவாக அடர்த்தியாக படலம் போல பாசி வளர நேரிடும். இதுவே மிகை ஊட்ட நிலையாகும்) வித்திடுகிறது. “பெரும்பாலான பொது கழிப்பிடங்கள் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன,” என கூறும் கேஷவ், தங்கள் நிறுவனம் ஈகோஃபெர்ட் (Ecofert) எனும் இரண்டாவது விலைப்பொருளை உருவாக்க எவ்வாறு இந்த சூழலானது ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதனை விவரிக்கிறார். “எங்கள் தொழில்நுட்பமானது கலப்புறாத (undiluted) சிறுநீரை ஸ்டுருவைட் (Struvite – பொடி நிலையில் உள்ள ஒரு உரம்), அம்மோனியா (ammonia) மற்றும் உப்பற்ற நல்ல நீராக (freshwater) மாற்றும் திறன் கொண்டுள்ளது. எனவே, இந்த கலப்புறாத சிறுநீரை சேகரிக்க எங்கள் துறையின் கட்டடத்தில் உள்ள சிறுநீர்க் கழிப்பிடங்களில் ஒரு சிலிக்கான் அடைப்பிதழை (silicon valve) நாங்கள் பொருத்தி உள்ளோம். ”1000 லிட்டர் சிறுநீரானது கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கோ அல்லது தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்கோ தேவையான 850 லிட்டர் நீரினையும், 100 லிட்டர் அமோனியாவையும், ஒரு கிலோ ஸ்டுருவைட்டையும் தரவல்லது. நெகிழி வெப்பச்சிதைவு தொழில்நுட்பத்தைப் போலவே ஈகோஃபெர்ட் இயந்திரமும் மாசு ஏற்படுத்தாத, குறைந்த ஆற்றலே பயன்படுத்தும், பொருத்தக் கூடிய வகையில் (plug-in) உள்ள ஒரு அடக்கமான எளிதில் இயக்கக்கூடிய தொழில்நுட்பம் ஆகும்.

தங்கள் தொழில்நுட்பத்தின் ஆற்றல் திறனை தொடர்ந்து மேம்படுத்துவதற்கென செயலாற்றி வரும் வலுவான நுட்பவியல் (technical) குழு ஒன்றினை இந்நிறுவனம் தன் வசம் கொண்டுள்ளது. தற்பொழுது அதன் முக்கியமான வேலை என்பதோ மக்களின் மத்தியில் இருக்கும் இரசாயன மறுசுழற்சி செயல்முறைகளோடு தொடர்புடைய தவறான கருத்துகளை உடைத்தெறிவதே ஆகும். “நெகிழி மறுசுழற்சி செயல்முறை, வெப்பச்சிதைவு போன்ற தலைப்புகளை சார்ந்த உரையாடல்களில் நாங்கள் ஈடுபடுவது மட்டுமல்லாமல் எங்களின் இரு கண்டுபிடிப்புகளுக்கும் தேவைப்படும் இடங்களுக்கே சென்று செயல் விளக்கங்களை (demonstration) நாங்கள் வழங்குகிறோம்,” என சுழற்சி பொருளாதாரத்திற்கான அணுகுமுறையே வேஸ்ட் சக்ரா தொழில்நுட்பத்தினை மென்மேலும் ஈர்ப்புடையாதாக ஆக்கி அதன் தேவையினை உணர்த்துகிறது என்கிறார் கேஷவ்.

இந்நிறுவனமானது அண்மையில் அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இடையேயான (B2B – Business to business) வர்த்தக சந்தையின் பலதரப்பட்ட பங்குதாரர்களுடன் (stakeholder) செயலாற்றி வருகிறது. சமுத்யோகா வேஸ்ட் சக்ரா நிறுவனமானது தனது கண்டுபிடிப்புகளை இந்திய அரசின் சீர்மிகு நகரங்கள் திட்டத்தோடு (Smart Cities India) இணைப்பதையே இறுதிகட்ட குறிக்கோளாக கொண்டுள்ளது.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

160/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.