THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் நிலயான்

சாலையின் நடுவில் ஓர் பசு மாடு நின்றுக் கொண்டு இருந்தது. நகர சூழலுக்கு முற்றிலும் ஒத்துப் போகாத வகையில்  மேய்ந்துக் கொண்டிருக்கும் பல மாடுகளைப் போல இது இல்லை. இது ஏதோ சிரமத்தில் இருப்பது போல தெரிந்தது. அந்த மாட்டிற்கு இருக்கும் பிரச்சனையை சற்று கூர்ந்து கவனிக்க தீபேஷ் பாஸ்கர் (Deepesh Bhaskar) தான் அமர்ந்து இருந்த வாடகைச் சீருந்தினை (cab) நிறுத்தச் சொல்லி அதன் ஓட்டுநரை கேட்டுக் கொண்டார். வண்டிகள் அங்கும் இங்கும் அந்த மாட்டினை சுற்றி செல்ல அந்த மாடோ மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுக் கொண்டு செய்வதறியாது தவித்துக் கொண்டு இருந்தது. தீபேஷ் உடனடியாக அங்கிருக்கும் கடைகளில் அந்த மாட்டின் உரிமையாளரைப் பற்றி விசாரித்தார்.

அப்பொழுது மாட்டுச் சாணம் கரைத்த தண்ணீரைக் கொண்ட ஓர் வாளியை கையில் எடுத்துக் கொண்டு ஓர் பெண்மணி அங்கு வந்தார். அதனைக் குடித்த அந்த மாடு வாந்தி எடுக்க அதன் வயிற்றில் இருந்து ஓர் மீட்டர் நீள அளவிலான நெகிழி (plastic) வெளியே வந்தது. “அந்த மாடு உயிரிழந்தது. அதனை எங்களால் காப்பாற்ற முடியவில்லை,” என வருத்தத்துடன் கூறுகிறார் தீபேஷ். இந்த நிகழ்வே தனது பெருநிறுவன வேலையை விட்டுவிட்டு கழிவினை குறைக்கும் நோக்கம் கொண்ட நிலயான் (Nilayaan) எனும் விலைபொருள் நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்கு தீபேஷுக்கு தூண்டுகோலாக இருந்தது.

“சென்னை சமூகப் பணி பள்ளியில் (MSSW – Madras School of Social Work) நான் பயின்றேன்,” என்கிறார் தீபேஷ். கல்லூரி முடிந்த உடனேயே வெளிநாட்டில் பயில்வதற்கான திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்யும் பணியில் சேர்ந்து அப்பணியில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்தும் அறிவுரைகள் வழங்கியும் வந்தார் அவர். “அப்பொழுது இளம் திறன்களை இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் நானும் ஓர் அங்கம் வகித்தேன் என்பதை சிந்தித்து பார்த்தால் தற்பொழுது நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை முறைக்கு என்னவோ அது முரணாகவே உள்ளது,” என புன்முறுவல் பூக்கிறார்.

2018-ஆம் ஆண்டில் பெருநிருவனப் பணியை தேர்வு செய்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கும் பைஜூஸ் (Byju’s) நிறுவனத்தில் நன்கு வருமானம் வரும் ஓர் பணியிலமர்ந்தார் தீபேஷ். பெருந்தொற்று காலமானது இவருக்கு ஓர் வரமாக வந்து அமைந்தது. அனைத்து விதமான சத்தத்தில் இருந்தும் பரப்பரப்பான பெருநிறுவன நடைமுறையில் இருந்தும் விடுபட்டு தனிமையில் அவர் தனது வீட்டில் இருக்க நேர்ந்தது. நெகிழியால் பசு மாடு இறந்த நிகழ்வினைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்த தீபேஷ் நெகிழிகள் பற்றியும் அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றியும் அதிகமாக படிக்கத் துவங்கினார். 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒட்டி தனது பெருநிறுவன பணியில் இருந்து நீங்க வேண்டுமென தெள்ளத் தெளிவாக முடிவெடுத்தார் தீபேஷ்.

புது தில்லியில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தில் (Centre for Science and Environment) நடைபெறும் காலநிலை மாற்றம் பற்றிய பயிலரங்குகளில் பங்கேற்கத் துவங்கினார் அவர். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு மிகச் சிறிய முயற்சிகளும் பெரியளவு வழிவகுக்கும் என்பதற்கு பயிலரங்கின் பாட்டம் அப் அணுகுமுறையானது (bottom-up approach – பயனர்களின் கருத்துகளை உள்வாங்கி செயல்படும் அணுகுமுறை) சான்றாக இருந்தது.

மற்றுமொரு முதுகலைப் படிப்பை (இம்முறை காலநிலை மாற்றத்தில்) மேற்கொள்ளலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க அவரின் பேராசிரியர்களும் முனைவர்களுமான சாரா கருணாகரன் (Dr. Sarah Karunakaran) அவர்களும் மோசஸ் (Dr. Moses) அவர்களும் தனது ஆராய்ச்சியையும் பெருநிறுவனத்தில் தான் பெற்ற விற்பனை மற்றும் விளம்பரம் செய்யும் அனுபவத்தையும் பயன்படுத்தி பயனுள்ள துளிர் நிறுவனம் ஒன்றினை துவங்கச் சொல்லி அறிவுரைத்தனர். இதன் விளைவாக முளைத்தது நிலயான்.

சமூகத் தொழிலகப் படிமத்தைப் (social enterprise model) புரிந்துக் கொள்வதே முதல் படியாக இருந்தது. அரசு சாரா நிறுவனங்களுக்கும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் (MSMEs) சென்று அங்கு பணியாற்றுபவர்களுடன் இணைந்து பணியாற்றினார் தீபேஷ். அவ்வாறு பணியாற்றும்போது பல்வேறு சமூக நல தொழில்முனைவோர்களுடன் அவர் உரையாடினார்.

“ஓர் தனி நபர் தனது வாழ்நாளில் முன்னூறில் இருந்து நானூறு பல்துலக்கிகளை (toothbrush) பயன்படுத்துகிறார். உலகத்தில் ஒட்டுமொத்தமாக எட்டு பில்லியன் மக்கள் வசிக்கின்றனர்” என சுட்டிக் காட்டும் அவர், “நெகிழியால் செய்யப்படும் பல்துலக்கிகள் மக்குவதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் ஆகும்” என்கிறார். கற்பனை செய்து பார்க்க முடியாத வண்ணம் இருக்கும் இந்த அளவினை கொண்டு கணக்கிட்டு வெறுமனே நெகிழி பல்துலக்கிகளால் மட்டும் குப்பை மேடுகளில் ஏற்படக் கூடிய உலகளவிலான நெகிழி மாசுபாட்டினை நம்மிடம் முன்னிறுத்துகிறார். சிறிய அளவில் நெகிழி மாசுபாட்டினைக் குறைக்க மூங்கிலால் ஆன பல்துலக்கிகள் சிறந்த யோசனையாக இருந்தன. இருப்பினும் பேரளவில் செய்யப்படும் அளவுக்கு அவை மக்களின் மத்தியில் வரவேற்பினை பெறவில்லை.

தனக்குக் கல்லூரியில் இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி கிழக்கு இந்தியாவில் இருந்த மூங்கில் பல்துலக்கி உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டார் தீபேஷ். “அவை இன்றளவும் விலைக் குறைவாக இல்லை எனினும் அவற்றை விளம்பரம் செய்வதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு எதிரான முதல் அடிகளை நான் எடுத்து வைத்து வருகிறேன்,” என விவரிக்கிறார் அவர். மூங்கில் பல்துலக்கிகளை பேரளவில் உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றின் எதிரிணைகளான நெகிழி பல்துலக்கிகளைக் காட்டிலும் அவை விலைக் குறைவாகி விடும்.

ஒரு நாள் சமூக தொழில்முனைவோர்களை தொடர்பு கொண்டு இருக்கும்போது ஹோம் எக்ஸ்னோரா யோகா (Home Exnora Yoga) எனும் நிறுவனத்தின் தலைவருமான திரு. இந்திரகுமாருக்கு (Indrakumar) தீபேஷ் அறிமுகமானார். “திரு. இந்திரகுமார் என்னைத் தனது கொல்லைப்புறத்துக்கு அழைத்து சென்றார். அங்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அவர் உரமாக்கி வரும் கரிமக் கழிவுகளை கொண்ட ஓர் உரக் குழியை நான் கண்டேன்,” என நினைவுக் கூறுகிறார் அவர். அவர் அங்கு சென்று வந்த பிறகு உரமாக்குதலைப் பற்றி மட்டும் கற்றுக் கொள்ளாமல் வீடுகளில் உருவாகும் கழிவுகளை குறைப்பதற்கு சில எளிமையான வளங்குன்றா அமைப்பு முறைகளையும் நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொண்டார். “திரு. இந்திரகுமார் தனது வீட்டில் உள்ள மலக்குழியில் இருக்கும் நீரினையும் அதிலுள்ள இரசாயன பொருட்களை ஒரு வகை பாசியினைக் கொண்டு நீக்கி சுத்திகரித்துவிட்டு மறுபயன் செய்து வருகிறார்,” என அதனை இன்றளவும் வியப்போடு கூறுகிறார் தீபேஷ்.

அடுத்த நான்கு மாதங்களில் எவ்வாறு கரிம கழிவுகளை உரமாக்குவது என்பதைக் கற்றுக் கொண்டார் தீபேஷ். உரக்குழியில் இருந்து வரும் துர்நாற்றமும் அதனுள் சுற்றித் திரிந்து வந்த புழுக்களுமே பெரிய கொல்லைப்புறம் இல்லாமல் உரமாக்குவதில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது என்பதை இந்த செயல்முறையின் மூலம் உணர்ந்தார் அவர். என்னதான் இந்த புழுக்கள் கரிம பொருட்களை சிதைக்கும் செயலில் உதவினாலும் வீடுகளில் அவை நோய் பரப்பும் பூச்சிகளாகவே கருதப்படுகின்றன.

கார்பன் மற்றும் நைட்ரஜன் அளவுகளை சமநிலை ஆக்கினால் துர்நாற்ற பிரச்சனைத் தீரும் என்பதை அவரின் ஆராய்ச்சியில் அவர் உணர்ந்தார். “பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சனையை தவிர்க்க மின்சார உரமாக்கும் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதுவோ காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கிறது. எனவே நான் இந்த பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு காண விரும்பினேன்,” என்கிறார் உறுதி உள்ளம் படைத்த இந்த இளம் தொழில்முனைவோர். அடுத்த ஆறு மாதங்களில் தீபேஷ் பல்வேறு கரிம பொருட்களைக் கொண்டு பரிசோதனைகள் செய்தார். தென்னை நார்களை தேடி அலைந்தார். மதியத்தில் இளைப்பாற நடக்கும் போது காய்ந்த இலைகளை சேகரிக்கத் துவங்கினார். அத்துடன் கூடுதலாக தயிரினை உருவாக்கி உரத்தில் சேர்த்து அது எவ்வாறு செயல்முறையை வேகப்படுத்துகிறது என்பதை கவனித்தார்.

மிகவும் எளிதான மற்றும் திறனான உரமாக்கும் முறையை கண்டறிந்தவுடன் பேரளவில் நெகிழி வாளிகளைப் பெற்று அவற்றில் துளைகளை உருவாக்கினார் தீபேஷ். ஒரு நபர் தாமாகவே தமது வீட்டில் உருவாகும் கரிம கழிவுகளை உரமாக்கிக் கொள்வதற்கென (DIY composting product) உருவாக்கப்பட்ட நிலயானின் விலைப்பொருள் இதுவாகும். இதனை அவர் வாடிக்கையாளரிடம் விற்பனை செய்யத் துவங்கியப் பின்னரே ஒரு சில பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை என்பதை அவர் உணர்ந்தார்.

எனினும் காலம் அவருக்குக் கை கொடுத்து உதவியது. குறுகிய நாட்கள் பயணமாக தீபேஷ் பெங்களூரு செல்ல திடீரென விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் அவர் அங்கேயே தங்கிட நேர்ந்தது. அங்கே முடக்கப்பட்ட அவர் அங்கிருக்கும் டெய்லி டம்ப் (Daily Dump) எனும் அமைப்பைப் பற்றி அறியலானார். அந்நிறுவனத்தை ஓர் வாடிக்கையாளராக அணுகினார் தீபேஷ். அப்பொழுது தனி நபர்கள் தாங்களாகவே தங்கள் வீடுகளில் உரம் தயாரிப்பதற்கான விலைப்பொருட்களில் மட்டும் அந்நிறுவனத்தினர் வல்லுநர்களாக இல்லாமல் தான் தீர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் அவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து இருந்தனர் என்பதை கண்டறிந்தார் அவர்.

“சமூக தொழில்முனைவோர்களாக இருக்கும் பட்சத்தில் வளர்ச்சி பெறுவதற்கும் மாற்றத்தை விளைவிப்பதற்கும் ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவது என்பது எப்பொழுதும் மிகவும் முக்கியமாகும்,” என கூறும் அவர் அனிந்தோ கோஷ் (Anindo Ghosh) மற்றும் டெய்லி டம்ப் நிறுவனத்தின் நிறுவனரான பூனம் பிர் கஸ்தூரி (Poonam Bir Kasturi) என்பவர்களுடனான தனது உரையாடலை இத்தருணத்தில் நினைவுக் கூறுகிறார். இதன் விளைவாக நிலயான் நிறுவனம் டெய்லி டம்ப் நிறுவனத்தில் பங்குதாரராகவும் சென்னையில் அந்நிறுவனத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்ட விற்பனையாளராகவும் மாறியது.

சென்னையில் கழிவு மேலாண்மை என்பது மூன்று பங்குதாரர்களால் தனியுரிமையாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு முறையால் வணிகங்களுக்கு இடையே நடக்கும் பேரளவிலான வணிகத்துக்குள் தீபேஷின் நிறுவனம் நுழைவது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. உடனடியாக தனது நிறுவனத்தின் அடிப்படைக் கூறுகளை சற்று மாற்றியமைத்து தனது நுட்பத்தை மறு கட்டமைத்தார் அவர். இம்முறை நிறுவனங்களுடன் பணிபுரியாமல் மாறாக கட்டமைப்பின் இறுதியில் இருக்கும் பயனர்களான வாடிக்கையாளர்களை அவ்வப்போது நிகழும் தற்காலிக பொருட்காட்சிகளில் இடம்பெறும் நிலயானின் அரங்கிலும் இளம் தலைமுறையினரை பள்ளிகளிலும் கழிவு மேலாண்மைப் பற்றி கற்பித்து அவர்களுடன் பணியாற்றத் துவங்கினார்.

இந்த இளம் தொழில்முனைவோர் இதுவரை முப்பது உரமாக்கும் கருவிகளை விற்பனை செய்துள்ளார். கடந்த மாதம் ஒலிம்பியா பனாஷ் எனும் வசதி மிகுந்த குடியிருப்பு வளாகத்துடன் தனது முதல் பெரிய ஒப்பந்தத்தையும் நிறைவேற்றியுள்ளார் இந்நிறுவனர். நிலயானின் கூட்டு உரமாக்கும் கருவியைக் (community composter) கொண்டு அந்த வளாகத்தில் உள்ள 120 குடும்பங்களும் தங்கள் வீடுகளில் பெறப்படும் கரிம கழிவுகளை எளிமையாக ஓர் சமூகமாக சேர்ந்து உரமாக்கலாம். அத்துடன் தன் நிறுவனத்தின் விலைப்பொருட்கள் பட்டியலை விரிவாக்கும் நோக்கத்துடன் உரமாக்க முடியாத தேங்காய் ஓடுகளை சூப் அருந்துவதற்கான கிண்ணங்களாகவும் உணவுப் பொருட்களை நறுக்கப் பயன்படும் கருவிகளாகவும் மாற்ற உள்ளூர் தென்னை விவசாயிகளுடனும் கன்னியாகுமரியில் இருக்கும் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார் தீபேஷ்.

“நான் பெருநிறுவன வேலையை விட்டுவிட்டு முட்டாள்தனமாக சமூகப் பணியை மேற்கொண்டுள்ளேன் என இன்றளவிலும் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர்,” என சிறிதும் வருத்தமின்றி கூறுகிறார் அவர். சுழியக் கழிவு (zero-waste) வாழ்க்கைமுறை என்பது ஓரிரவில் நிகழக் கூடியது அல்ல. அத்தகைய வாழ்க்கைமுறைக்கான தேவையை ஒருவர் உண்மையிலேயே உணரும் போதே அதனை அவர் தழுவ வேண்டுமென நம் சமூக தொழில்முனைவோரான தீபேஷ் திடமாக நம்புகிறார். “அது மட்டுமே இந்த புதிய வாழக்கைமுறையை தக்க வைப்பதற்கான ஒரே வழியாகும்,” எனக் கூறும் அவர், “அதுவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான முதல் அடிகள் என்றும் சொல்லலாம்!” என மீண்டும் ஒருமுறை அதனை அழுத்தமாக வலியுறித்திக் கூறுகிறார்.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

188/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.