கட்டடக்கலை மற்றும் கட்டடப் பொறியியல் துறைகளைப் பின்புலமாய் கொண்ட தமிழகத்தைச் சார்ந்த முன் பின் தெரியாத ஒன்பது இளைஞர்கள் அத்துறைகளை உள்ளூர் மக்களுக்கு சென்று சேர்க்க வேண்டுமென கொரோனா பெருந்தொற்றின் பொது முடக்கத்தின் போது ஒரு கூட்டுமுயற்சியில் இறங்கினர். “முன்னேற்றம் என்பது உள்ளூர் பகுதிகளையும், மக்களையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற எங்கள் அனைவரின் கூட்டு நம்பிக்கையில் இருந்தே மாவிலை/MAAVILAI (முன்பு அகழி/Agazhi என்றப் பெயர் கொண்டு இருந்தது – பெயர் மாற்றத்திற்கான காரணத்தை சிறிது நேரத்தில் காண்போம்) துளிர்விட்டது,” என மனம் திறக்கிறார் மாவிலை குழுவின் நிறுவனர் ஆகிய கௌஷிக் ஸ்ரீநிவாஸ் (Kaushik Shrinivas).
சென்னையில் தன் கட்டடக்கலைப் படிப்பினை முடித்த கௌஷிக், கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் COSTFORD (ஊரக வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) நிறுவனத்தில் தன் பணிவாழ்க்கையை மேற்கொண்டார். வளங்குன்றா கட்டடக்கலையின் (sustainable architecture) மீது அவருக்கு இருந்த தீரா பற்றும், அவருக்கு இருந்த சமூக அக்கறையும் அங்கு பணிபுரிந்த அனுபவத்தினால் மேலும் அதிகரிக்கவே செய்தன.
2020-இல் ஏற்பட்ட பெருந்தொற்றால் சென்னையில் இருக்கும் வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட போதும் அவரிடம் இருந்த தீரா வேட்கை சற்றும் குறையவில்லை. அது சற்று அதிகமாகவே செய்தது. பையில் இருந்த மடிக்கணினியை வெளியே எடுத்த அவர் ஒரு புது உரை ஆவணத்தை (word document) உருவாக்கினார். அறையின் அமைதியை தட்டச்சு பலகையில் இருந்து எழும் ஒலியானது அரவணைக்க, திரையில் இருக்கும் வெற்று வெள்ளைத் தாளானது கட்டடக்கலையையும் வளங்குன்றா கட்டடங்களையும் அனைவருக்கானதாக்கும் அவரின் ஆழ்ந்த கருத்துகளாலும் யோசனைகளாலும் நிறைந்தது.
“புதிதாக உருவாகப் போகும் நிறுவனத்தின் குறிக்கோள்களை உடைய ஒரு சுருக்கமான விளக்கத்தினை ஓரிரு தினங்களில் நான் உருவாக்கினேன்“ என நினைவுக் கூறுகிறார் கௌஷிக். “என்னுடைய குறிக்கோளுக்கு ஒத்த கருத்துகளை உடையவர்களில் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நபர்களுக்கும் அதனை பகிர்வதே என்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இருந்தது.
பரஸ்பர நண்பர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கண்ட முகங்கள் என கிட்டத்தட்ட எண்பது நபர்களை இப்பயணத்தில் நான் தொடர்பு கொண்டேன்!” என சிரிக்கும் அவர், “சொல்லப் போனால் நான் சமூக வலைத்தளத்தில் தான், அறிவுக்கரசி மணிவண்ணன் (Arivukkarasi Manivannan – இவர் வேறு யாரும் இல்லை நம் GoTN குழுவில் உள்ள மொழிபெயர்ப்பாளரே) என்பவரையும் அவருக்கு இருக்கும் தமிழ் ஆர்வத்தையும் கண்டேன்” என்கிறார். “தமிழ்நாட்டின் பிரபலமான கட்டடக்கலை கல்லூரிகளில் ஒன்றில் தான் நான் பயின்றேன். எனது திட்டப்பணிகளுக்காக நான் நூலகத்திற்கு செல்வது வழக்கம். ஆனால் வருத்தம் தரும் வகையில் அங்கு நூல்களோ, ஆய்விதழ்களோ அல்லது இதழ்களோ தமிழில் இல்லை.” அவருக்குள் ஏற்பட்ட இந்த ஏமாற்றமானது கட்டடக்கலைத் துறைக்கென ஒரு தமிழ் மன்றத்தை தோற்றுவிக்கவும், எழுத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் சமூக வலைத்தளத்தில் கவிதை பக்கம் ஒன்றை துவங்கவும் அவரை வித்திட்டது. இந்த தமிழ் ஆர்வமே துளிரும் தொழில் முனைவோரான கௌஷிக் உடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினையும் அவருக்குக் கொடுத்தது.

ஆகஸ்ட் மாத இறுதியில் கிட்டத்தட்ட இருபது நபர்களை இணைத்து இணையவழியில் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அதிலிருந்து எட்டு நபர்கள் மாவிலை நிறுவனத்தின் மையக் குழுவில் இடம்பெற்றனர். கட்டுமான தொழில்நுட்பங்களில் கைத்தேர்ந்தவரான கட்டடப் பொறியாளர் அரவிந் மனோகரன் (Aravind Manoharan), கட்டடப் பொறியாளரும் மரபு கட்டுமான ஆர்வலரும் ஆன பரத் ராஜு (Bharath Raju), கட்டடக்கலைஞரும் வரைகலை வடிவமைப்பாளரும் ஆன P. சாரு ஹாசன் (P. Charuhassan), வளங்குன்றா கட்டடக்கலை ஆர்வலர் முகமது ரிஸ்வான் கான் (Mohamed Riswan Khan) மற்றும் கட்டடக்கலைஞர்களும், கவிதாயினிகளும் ஆகிய நிஷா சத்தியசீலன் (Nisha Sathiyaseelan) மற்றும் அறிவுக்கரசி மணிவண்ணன்—ஆகியோரை கொண்டதாக இந்த துளிரும் குழு உள்ளது.
COSTFORD நிறுவனத்தின் முன்னாள் ஊழியராக கௌஷிக் இருந்தமையால் வளங்குன்றா கட்டடக்கலைப் பற்றிய லாரி பேக்கரின் (Laurie Baker) நூல்களை மொழிபெயர்ப்பதே இக்குழுவின் முதல் குறிக்கோளாக இருந்தது. “கட்டமைப்பு வடிவமைப்பு (structural design) மற்றும் திட்டமிடல் போன்ற கட்டடக்கலை தலைப்புகளையும் கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு போன்ற கட்டடக்கலை சார்ந்து இருக்கும் தலைப்புகளையும் இந்நூல்கள் உள்ளடக்கியுள்ளன,” என விவரிக்கிறார் கௌஷிக். லாரி பேக்கரின் நூல்களுக்கு எவ்வித பதிப்புரிமையும் இல்லை என்பதால் பதிப்பு வேலை மிகவும் எளிமையாக இருக்கும் என்பதே, இந்த குழுவானது முதலில் இந்நூல்களை மொழிபெயர்க்க தேர்ந்தெடுத்தமைக்கு முக்கியமான காரணம் எனலாம். “பலருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே அவருடைய நூல்கள் உருவாக்கப்பட்டன,” என புன்னகை மிளிர கூறுகிறார் கௌஷிக்.
“தீவிர கட்டுப்பாடுகள் உடனான பொது முடக்கக் காலத்தில் எவரும் நேரில் சந்திக்க முடியாது என்பதால் முதலில் நடைபெற்ற இணையவழி சந்திப்பு வரை, குழுவில் இருக்கும் நபர்களில் ஒருவரைக் கூட நான் அறிந்திருக்கவில்லை,” என மென்மையான சிரிப்புடன் விவரிக்கிறார் கௌஷிக். ஒரு செயலை செய்து முடிப்பதற்கென முன் பின் தெரியாத நபர்களை இணையவழியில் ஒருங்கிணைத்து சந்திப்புகள் நடத்துவது என்பது மலையை நகர்த்துவது போன்ற செயலாகும் (இவ்வேளையில் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், சூம் மற்றும் கூகுள் மீட் போன்ற காணொளி தகவல் தொடர்பு தளங்கள் மூலம் பெருந்தொற்று காலத்தின் போது பணிகளை செய்து முடித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் பாராட்டுகள்). சவால்கள் தங்கள் பக்கம் குவிந்துக் கொண்டே இருப்பினும் தாய்மொழியான தமிழில் கட்டடக்கலை அறிவு பகிரப்பட வேண்டும் என்ற தங்களின் சமூக சிந்தனையால் ஒன்றுபட்ட இந்த திறன்மிகு குழுவானது, 2021-ஆம் ஆண்டு துவக்கத்தில் எல்லாம் பதின்மூன்று நூல்களில் ஆறு நூல்களை மொழிபெயர்த்து இருந்தது. “அப்பொழுது தான் குழுவினர் அனைவரும் நேரில் சந்தித்தோம்!” என கூறுகிறார் கௌஷிக்.
ஆங்கிலத்தில் உள்ள கட்டடக்கலை வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு தமிழில் கட்டடக்கலைக்கென பிரத்தியேகமாக ஒரு அகராதியை உருவாக்குவதில் எங்கள் மொழிபெயர்ப்புப் பணி துவங்கியது. “மூலத்துடன், ஆங்கில சொற்களுக்கு நேர் நிகராக தமிழ் சொற்களை உடைய ஒரு அட்டவணைச் செயலியை (spreadsheet) உருவாக்க, அகராதிகள், இணையம் போன்ற வெவ்வேறு சாதனங்களில் இருந்து வார்த்தைகளைத் திரட்டுவதற்கு நாங்கள் பல மாதங்கள் செலவிட்டோம்,” என அந்த செயல்முறையை நினைவுக் கூறுகிறார் அறிவுக்கரசி. அது முடிந்தப் பின்னர் அறிவுக்கரசியும் நிஷாவும் லாரி பேக்கரின் கட்டுமான நுட்பங்கள் உள்ளடங்காத (non-technical) நூல்களை மொழிபெயர்க்க துவங்க, அரவிந்தும் பரத்தும் நுட்பங்கள் உள்ளடங்கிய நூல்களை (technical) மொழிபெயர்க்கத் துவங்கினர். சாரு நூல்களின் வடிவமைப்பில் கவனம் செலுத்த கௌஷிக் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பிலும், மாவிலை நிறுவனத்திற்கென ஓர் வலுவான அடையாளத்தை உருவாக்கும் பணியிலும் அதற்கு தேவையான விளம்பரப்படுத்துதலிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
எதிர்காலத்தில் தங்கள் நிறுவனமானது பன்மடங்கு வளர்வதற்கான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும் என்று நினைத்திருந்த கௌஷிக், தங்கள் மொழிபெயர்ப்புகளை தாங்களே பதிப்பித்து வெளியிட வேண்டுமென்று முடிவெடுத்தார். ஒரு அச்சகத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து, பின்னர் சமூக வலைத்தளங்களின் மூலம் நூல்களைப் பற்றிய தகல்வகளை பகிர்ந்து, இறுதியாக வாழ்க்கையின் பல்வேறு பின்புலங்களிலும் துறைகளிலும் இருக்கும் கிட்டத்தட்ட ஆறு நபர்களிடம் இருந்து நூல்களைப் பற்றிய கருத்துகளை பெறுவதற்கு நூல்களின் சில முன்வரைவு பதிப்புகளை (draft version) அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர் இந்த குழுவினர். “என் அம்மாவிலிருந்து என்னுடன் இணைந்து வேலை செய்யும் எனது கொத்தனார் வரை, நூல்களின் எளிமை நடையை சோதிக்கும் பொருட்டு முடிந்தவரை பலதரப்பட்ட நபர்களிடம் இருந்து கருத்துகளை பெற முடிவு செய்தோம்,” என கூறுகிறார் கௌஷிக். தமிழுக்கான தனது தீரா ஆர்வத்தினால் ஒரு சில தமிழ் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளரும், அறிவுக்கரசியின் தந்தையும் ஆகிய ஓய்வுபெற்ற பொறியாளர் திரு. ச.மணிவண்ணன் (S. Manivannan) நூல்களின் இறுதி வரைவுகளை மெய்ப்புப் பார்த்தார்.
நூல்களின் வேலை இறுதிகட்ட நிலையை நோக்கி ஒருபுறம் நகர்ந்து கொண்டு இருக்க மறுபுறம் துளிர் நிறுவனமான மாவிலையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யும் வேலையும் இருந்தது. அங்கு தான் இந்த குழுவுக்கான சவால்கள் துவங்கின. “அகழி என்ற அடையாளத்துக்கு கீழேயே நாங்கள் எங்கள் பதிவுகள் அனைத்தையும் பதிவு செய்து வந்தோம். ஆனால் நிறுவனமாக பதிவு செய்யும்போது தான் அந்தப் பெயரானது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை கண்டறிந்தோம். அதன் பின்னர் எங்களுக்கென ஒரு புதிய அடையாளத்துடன் நாங்கள் மீண்டு வந்தோம்” என பெருமூச்சு கலந்த பூரிப்புடன் நினைவுக் கூறுகிறார் கௌஷிக். புது அடையாளத்துக்கான தேடலில் நிறையப் பெயர்கள் குழுவினரால் முன்வைக்கப் பட்டன. இறுதியில் ‘மாவிலை’ என்றப் பெயரையே தேர்வு செய்தனர். “களஞ்சியம் என்ற பொருள் கொண்டு எங்கள் குழுவுக்கு பொருத்தமான வகையில் சங்கத் தமிழ் வார்த்தையாக அகழி இருந்தாலும், மாவிலை என்பது அனைவருக்குமானதாக இருப்பது போல தெரிந்தது,” என கூறியவாறே புதிராக சிரிக்கிறார் அறிவுக்கரசி. படவரி பக்கத்தின் பெயரினை அதில் ஒரு பதிவின் வழியாக @maavilai என மாற்றி தங்களை மறு அடையாளம் செய்து கொண்ட இந்த குழுவினர், மாவிலை என்ற புதிய பெயருக்கான காரணத்தை தங்களை பின்தொடர்பர்வகளே கண்டுபிடிக்கட்டும் என்று அதனை இன்றுவரை ஒரு புதிராகவே வைத்துள்ளனர். புதிய துவக்கத்திற்கான குறியீடாக வீடுகளின் வாயில்களில் அழகாக தொங்கவிடப்பட்டு இருக்கும் விசேஷமான மாவிலை இலையை ஒருவேளை இவர்கள் குழுவின் பெயர் குறிக்கின்றதோ?
வலைப்பதிவு இடுவது, பயிலரங்குகள் நடத்துவது, வலையொளி (youtube) பக்கம் துவங்குவது, கட்டக்கலைக்கென பிரத்தியேகமாக ஒரு இதழ் துவங்குவது போன்ற குறிக்கோள்கள் மாவிலையின் அடுத்தக் கட்ட செயல் பட்டியலில் இருந்தாலும் அனைவருக்குமான ஒரு செயற்களம் ஆக அது உருபெற பலதரப்பட்ட பின்புலங்களில் இருந்து வரும் நபர்களை பணியில் அமர்த்துவதே அதன் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது. “ஓரளவுக்கு வசதி வாய்ப்புள்ளவர்களால் தான் ஒன்றன் மேல் தீரா ஆர்வம் கொண்டு அதனை ஒரு கூட்டுமுயற்சியாக மாற்றி அதில் இடைவிடாமல் பணியாற்றுவது என்பது முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக வசதி வாய்ப்பில்லாதவர்களால் தங்கள் கனவுகளைப் பின்தொடர முடியாமலே போகிறது. இந்த ஏற்றத் தாழ்வினை கருத்தில் கொண்டே எங்கள் வணிகத் திட்டத்திலும் எங்கள் நூல்களை அச்சிடுவதற்கு ஆகும் செலவுகளை கணக்கிடுவதிலும் நாங்கள் கவனமாக செயல்பட்டு வருகிறோம்,” என கூறுகிறார் மாவிலையின் நிறுவனர் கௌஷிக். “ஒதுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து பலரையும் ஆதரிக்கும் நோக்கத்தில் அவர்களை எங்கள் குழுவில் இணைத்து எங்களின் குழுவினை விரிவாக்கம் செய்வது மட்டுமல்லாமல் எங்களின் செயல்பாடுகளைப் பற்றிய ஒரு பரந்த கண்ணோட்டத்தைப் பெறும் நோக்கத்திலும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.”
இதற்கிடையில் மாவிலையின் முயற்சியானது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைந்து பெரும் வரவேற்பினைப் பெற துவங்கியுள்ளது. குஜராத் மற்றும் ஹைதராபாத் மாநிலங்களின் வட்டார மொழிகளில் கட்டடக்கலை நூல்களை எவ்வாறு மொழிபெயர்ப்பது போன்ற கேள்விகளை அம்மாநிலங்களில் உள்ளவர்கள் இந்த குழுவினரைத் தொடர்பு கொண்டு கேட்ட வண்ணம் உள்ளனர். எனவே, இதுப் போன்ற கேள்விகள் பெருகி வருவதால் இதனையே ஒரு புதிய சேவையாக துவங்குவதைப் பற்றி இந்த துளிர் நிறுவனமானது சிந்தித்து வருகிறது. இந்த வகை சேவையில், கட்டடக்கலை மற்றும் கட்டுமான தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு இந்தியா எங்கிலும் இருந்து செயல்படும் மற்ற குழுக்களை ஒருங்கிணைத்து ஆதரிக்க மாவிலை குழு ஆலோசித்து வருகிறது.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 850 பக்கங்கள் தகவல்களை உள்ளடக்கிய, ஒன்பது நூல்கள் கொண்ட தொகுப்பினை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து கல்வி நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் ரூ.1200/- என்ற விலையில் மாவிலை நிறுவனம் ஆனது விற்பனை செய்யும். மாணவ சமூகத்தினர், கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் போன்ற பாமர மக்களையும் இந்நூல்கள் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்ய இவர்களுக்கென சலுகை விலையிலும் இந்நூல்கள் விற்பனை செய்யப்படும். “நல்லது செய்ய வேண்டும் என்ற கூட்டு நம்பிக்கையும் குறிக்கோளும் இருந்தால் எதுவும் சாத்தியமே,” என கௌஷிக்கும் அறிவுக்கரசியும் ஒருசேர கூறி உரையாடலை இனிதே நிறைவு செய்தனர்.