THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

உணவு வீணாவதை குறைப்பதற்கான ஓர் வளங்குன்றா தீர்வு

உலகத்திலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் போக்குவரத்து செய்யப்படும் போது, உற்பத்தியில் நாற்பது சதவீதம் வீணாக நேர்கிறது. “செயல்முறைல கோளாறு இருக்க மாதிரி தெரில. ஆனா அதற்காக இருக்க கட்டமைப்புல இருந்து தான் பிரச்சனை உருவாகுற மாதிரி இருந்துச்சு,” என சுட்டிக் காட்டும் தீபக் ராஜ்மோகன் (Deepak Rajmohan), எவ்வாறு கிரீன்பாட் லேப்ஸ் (GreenPod Labs) எனும் தன் துளிர் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை (R&D), நிலவி வரும் இந்த இடைவெளியை சார்ந்து இயங்கி வருகிறது என விவரிக்கிறார்.

2009-ஆம் ஆண்டு தீபக் கல்லூரியில் சேரவிருந்தார். வழக்கத்துக்கு மாறான படிப்பை அவர் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்—கணினி அறிவியல் (computer science) அல்லது இயந்திரப் பொறியியலே (mechanical engineering) அப்பொழுது வழக்கமான படிப்புகளாக இருந்தன. எனவே, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில், வேளாண் பொறியியல் (agricultural engineering) பாடப்பிரிவில் அவருக்கு இடம் கிடைத்தவுடன் அந்த வாய்ப்பினை பற்றிக் கொண்டார் தீபக். “என்னோட பெற்றோர்களும் சரி, என்னோட தாத்தா பாட்டியும் சரி யாருமே உழவுத் தொழில் செய்யல,” எனக் கூறும் நம் இளம் தொழில்முனைவோர், “எனக்கு இந்தத் துறையில எந்த ஒரு பின்புலமும் கிடையாது. அதுனால தான் இந்தப் பாடத்தோட மதிப்பு எனக்கு அதிகமா புரிஞ்சுது!”

அவரின் நான்கு ஆண்டுகால கல்லூரி படிப்பின் போது வேளாண் அறிவியலின் மீது அவருக்கு ஓர் தீரா ஆர்வம் ஏற்பட, உணவு அறிவியலில் (food science) முதுகலை பட்டம் பெறுவதற்கென ஓக்லஹோமா மாநிலப் பல்கலைக்கழகத்துக்குச் (Oklahoma State University) சென்றார். மதுவடிப்பாலை மற்றும் வடிப்பாலைகளில் (wineries & breweries) துவங்கி தயிர் வரைக்கும் உள்ள பலதரப்பட்ட உணவு பிரிவுகளின் உற்பத்தி சார்ந்த தொழிற்சாலை அனுபவம் இவருக்கு கிடைத்த பின்பு, அவரின் ஆர்வமானது உணவு விரயத்தின் (food waste) மீதும் துணை உற்பத்திப் பொருட்களின் (by-products) மீதும் திரும்பியது.

என்னதான் தீபக், சென்னையில் இருக்கும் புத்தொழில் மையத்தில் (Startup Center) ஓர் அங்கமாக இருந்து, நிதி உதவிக்காக புத்தொழில் யோசனைகளை முன்வைக்கும் நிகழ்வுகளில் (pitchfests) கலந்துக் கொண்டும் சக நண்பர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டும் இருந்தாலும், அவர் அமெரிக்காவுக்கு சென்றது தொழில்முனைவு உலகத்தோடு தான் மென்மேலும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. வெகு விரைவிலேயே தொழில்முனைவுக்கான ஓர் மன்றத்தில் அவர் முனைப்பாக இணைந்ததோடு அங்கு நடைபெற்ற போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டும், துளிர் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடியும், தான் சொந்தமாக ஓர் துளிர் நிறுவனத்தை எவ்வாறு துவங்குவது என்பதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும் துவங்கினார்.

2019-ஆம் ஆண்டை ஒட்டி, தனது தாய்நாட்டில் நிலவும் உணவு விரய பிரச்சனைக்குத் தீர்வு அளிக்கும் செயல்முறையில், தனது பங்கினை செய்வதற்கென தனது சொந்த ஊருக்குத் திரும்ப முடிவு செய்தார் தீபக். உற்சாகத்துடன் தனது சொந்த நிறுவனத்தைத் துவங்குவதற்கான பணியில் இறங்கினார். புதிதாக ஓர் நிறுவனம் துவங்க வேண்டுமெனில் தனது திறன்களையும் விரிவாக்கம் செய்ய வேண்டிருக்கும் என பணிகள் துவங்கி இரண்டு மாதங்களிலேயே உணர்ந்தார் அவர். “டானன் யோகர்ட் (Dannon Yogurt) நிறுவனத்துல உற்பத்திப் பொருள் வளர்ச்சி (product development) அப்புறம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில தான் ஒரு சிறியக் குழுவோட நான் முதன்மையா வேலை செஞ்சேன்,” என நினைவுக் கூறும் அவர், “சொந்தமா நான் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கணும் அப்படிங்கற அப்போ எப்படி ஒரு குழுவ துவக்கத்துல இருந்து அமைக்கணும், எப்படி நிதி மேலாண்மை செய்யணும், எப்படி தகுந்த வாடிக்கையாளர்கள்ட பேசணும், எப்படி ஆலோசகர்கள ஈடுபடுத்தணும், எப்படி முதலீட்டாளர்கள்ட யோசைனைகள முன்வைக்கணும் இப்படி பல விஷயங்கள கத்துக்க வேண்டி இருந்துச்சு. எல்லாமே எனக்கு புதுசா இருந்துச்சு!” அவருக்கு மிகவும் பரிச்சயமான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த பணியென்பது ஒட்டுமொத்த செயல்முறையை ஒப்பிடும் போது அதில் ஓர் மிகச்சிறிய பங்கையே வகித்தது. இருப்பினும் நம் இளம் தொழில்முனைவோரான தீபக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் தனக்கு பரிச்சயம் ஆகாத களத்தினுள் துணிச்சலாக காலெடுத்து வைத்தார்.

தனது பதினைந்து ஆண்டுகால நண்பரான விஜய் ஆனந்த் (Vijay Anand) என்பவருடன் கூட்டிணைந்து செயல்படத் துவங்கினார் தீபக். விஜய், நிறுவனத்தின் இயக்கங்களுக்குப் பொறுப்பு எடுத்துக் கொள்ள தீபக் நிறுவனத்திற்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். தொடர் உரையாடல்களின் முடிவில் இருவரும் இணைந்து குழுவுடன் நீண்டகாலம் செயல்புரியத் தயாராக இருந்த முனைப்பான இளம் திறன்களை கண்டறிந்தனர். இவ்வாறு கிரீன்பாட் லேப்ஸ் நிறுவனமானது, நிறுவன பங்குதாரர்கள் (founding partners), ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் செயல்பாட்டு பொறியாளர்கள் (operations engineer) என பத்து நபர்கள் கொண்ட ஒரு சிறியக் கூடாக வளர்ச்சி பெற்றது.

இந்தக் குழுவினர் முதலில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையில் தங்களது பணிகளைத் துவங்கினர். ஒவ்வொரு பயிருக்கும் பிரத்யேகமான தீர்வை கண்டறிந்து பரிந்துரைக்க, இந்த செயல்முறையில் ஒவ்வொரு பயிரையும் முழுமையாக—அதாவது அதன் தேக்க ஆயுள் (shelf life), தேவைகள் மற்றும் அதன் அமைப்பையும்—புரிந்துக் கொண்டனர். இயற்கையான செடி வடிசாறை (natural plant extract) கொண்டு ஒரு பயிரின் உள்ளார்ந்த தற்காப்பு இயக்க அமைப்பை (in-built defence mechanism) செயல்படுத்தி அதன்மூலம் அதன் தேக்க ஆயுளை அதிகப்படுத்துவதே அவர்கள் கண்டுபிடித்த உத்தியாக இருந்தது. புதிய தோல் பையிலோ அல்லது புதிய ஷூக்களில் இருக்கும் சிலிக்கா ஜெல் கொண்ட ஓர் சிறிய பையினைப் (silica gel sachet) போலவே இவர்களின் தயாரிப்பும் இருக்கும்.     

ஆராய்ச்சிக்கென மற்ற நிறுவனங்களுடன் கூட்டிணைவது இந்த துளிர் நிறுவனத்துக்கு சவாலாக இருந்தது. “நாங்க எங்க தரப்புல இருந்து முடிஞ்ச அளவுக்கு முயற்சி செஞ்சோம்,” எனக் கூறும் அவர், ஏற்கனவே இருக்கும் தொழில் கட்டமைப்பை புரிந்துக் கொள்வதில் இருந்த கஷ்டங்களையும் அவை எவ்வாறு தங்களை தங்களுக்கு பழக்கமான ஓர் சூழலுக்குள்ளேயே முடக்கியது என்பதையும் விவரிக்கிறார். “ஆனா கிரீன்பாட் லேப்ஸ் ஓட மொத்த குழுவினரும் அவ்வளவு ஆதரவா இருந்தாங்க. நாங்க எல்லாரும் சேந்து எங்க யோசனைய மூன்றாம் தரப்பு ஆய்வுக் கூடங்கள் (third-party lab) உதவியோட செயற்படுத்தினோம்.”

சில அரசு உதவித் தொகைகள் உதவியுடன் கிரீன்பாட் லேப்ஸ் அதன் செயற்பாடுகளை துவங்கியது. “சில அரசு கொள்கைகள் எங்க துளிர் நிறுவனத்தோட ஆரம்பக் கால வளர்ச்சிக்கு ரொம்பவும் பயனுள்ளதா இருந்துச்சு. ஆனா தொழில்முனைவுக்கான ஆதரவு அமைப்பு இன்னமும் நிறையவே வளரணும்,” என விவரிக்கிறார் நிறுவனர் தீபக். இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இருந்த, புத்தாக்கம், வளர்ச்சி, நிதி, முதலீட்டாளர்கள் மற்றும் மேற்கோள்களை வழங்கும் வணிக ஆதரவு திட்டங்களான எக்சலரேட்டர்கள் மற்றும் இன்குபேட்டர்களை (accelerator & incubator) தீபக் அணுகத் துவங்கினார். “ராக்ஸ்டார்ட் (Rockstart) அப்படிங்கற ஐரோப்பா நாட சார்ந்த ஓர் வணிக எக்சலரேட்டர்ல நான் ஓர் அங்கமா இருந்தேன். அங்க இருந்த வழிக்காட்டிகள் கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்,” என விவரிக்கும் அவர், தொழில்முனைவு மற்றும் வேளாண் தொழில்நுட்பத்தில் (agri-tech – இவர் துளிர் நிறுவனம் துவங்கியதில் இருந்து இந்த துறையானது பன்மடங்கு வளர்ந்துள்ளது) தனக்கு இருக்கும் ஆர்வத்தை தொடர்ந்து தணிக்கும் விதமான ஓர் வளத்தை தற்செயலாக தற்பொழுது கண்டறிந்துள்ளார்.

“தமிழ்நாட்டுல வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள் கண்டுபிடிக்குறது வைக்கப்போர்ல ஊசி தேடற மாதிரி தான். அதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு தான். அதுலயும் எங்கள மாதிரி வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனம் நம்ம மாநிலத்துல முதலீட்டாளர்கள் கண்டுபிடிக்குறதுக்கான வாய்ப்புகள் அத விடக் குறைவு,” எனக் கூறும் நிறுவனர் தீபக், இதனால் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் முதலீட்டாளர்களை அணுக வேண்டியிருந்தது என்கிறார்.

2020 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில், ராக்ஸ்டார்ட் மற்றும் ஆரம்ப நிலை முதலீட்டாளர்களின் அமைப்பான இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்கிடமிருந்து (Indian Angel Network) அதன் முதல் சுற்று உதவித் தொகையைப் பெற்ற இந்நிறுவனம், ஒட்டுமொத்தமாக நான்கு கோடி ரூபாயை துவக்க முதலீடாக பெற்றது. அத்திப்பழங்கள் (fig), செம்புற்றுப் பழங்கள் (strawberry), தக்காளிகள் மற்றும் மாம்பழங்கள் விரைவில் வீணாகாமல் இருப்பதற்கு தீர்வுகள் கொண்டுள்ளது கிரீன்பாட் லேப்ஸ். தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான வணிகத்தில் (B2B) ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் விவசாயிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மின் வணிகத் தளங்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. “முடிஞ்ச அளவுக்கு எங்களோடப் பொருளோட விலைய மலிவாக்கி இருக்கோம். இருபது கிலோ விளைபொருளுக்கு தேவையான ஓர் சராசரியான சிறிய பையோட விலை இருபது ரூபாய். இருந்தாலும் செம்புற்றுப் பழங்கள் மற்றும் அத்திப்பழங்களோட மதிப்ப எங்க தயாரிப்பு கொஞ்சம் அதிகப்படுத்துறதுனால இந்தப் பழங்களுக்குத் தேவையான பைகளோட விலை கொஞ்சம் அதிகம்.” என அவர் விவரிக்கிறார்.

தனது வளர்ச்சிப் பாதையில் செங்குத்தான வளர்ச்சிக்காக (vertical expansion), ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற காண்டங்களில் இருக்கும் மற்ற வளரும் நாடுகளுக்கு தனது வணிகத்தை விரிவுப்படுத்தும் நோக்கத்தோடும், கிடைமட்ட வளர்ச்சிக்காக (horizontal expansion) தனது உற்பத்திப் பொருட்கள் வரிசையை மற்ற பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால் மற்றும் இறைச்சிப் போன்ற உணவுப் பொருட்களுக்கு விரிவுப்படுத்தும் நோக்கத்தோடும் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. நிலவும் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கென வளர்ந்து வந்த ஆர்வமும், முனைப்பான ஓர் குழுவும், தகுந்த ஓர் வாடிக்கையாளர் பிணையமும் நிறுவனத்தின் முதல் மூன்று ஆண்டுகளில் அதற்குத் தேவையான வரவேற்பையும் ஊக்கத்தையும் பெற்றுத் தந்தன. 2030-ஆம் ஆண்டுக்கு முன்னர், உணவு விரயத்தை பாதியாக குறைக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகளின் வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோளுக்கு (sustainable development goal) இந்நிறுவனம் பங்களிப்பதோடு, அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்படும் உணவு விரயம் மற்றும் உணவு இழப்பை ஐம்பது சதவீத அளவு குறைக்க வேண்டுமென்ற தன்னுடைய கனவுப் பாதையின் துவக்கத்திலேயே கிரீன்பாட் லேப்ஸ் தற்பொழுது உள்ளது.

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

206/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.