THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

உடை சொல்லும் கதை

டை அலங்காரத் துறையின் முன்னோடி அடையாளங்களில் ஒருவரான ஐரிஸ் ஆப்ஃபெல் (Iris Apfel) முன்னொரு முறை, “என் ஆடை அலங்கார பாணியே (style) உங்களின் ஆடை அலங்கார பாணியாக இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும் ஆடை அலங்கார பாணி என்பது வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில்லை. பாணி என்பது ஒருவர் யார் என்பதை அவருக்கென இருக்கும் தனித்துவ வழியில் வெளிப்படுத்துவதே ஆகும்” எனக் கூறினார். மக்கள் அவரவர்களின் உடல்களை அரவணைக்கக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இவ்வுலகம் சுய வெளிப்பாடு (self-expression) மற்றும் தனித்துவத்தை நோக்கி நகர முற்படும் தருவாயில் பெரும்பாலான அதிக லாபம் ஈட்டும் முன்னணி ஆடை அலங்கார நிறுவனங்கள் (fast fashion brands) யாவும் மீளாய்வில் (scrutiny) ஈடுப்பட்டுள்ளன. சா (SAA) எனும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் படைப்பாற்றல் மிக்க மேலாளர் மற்றும் நிறுவனர் ஆன ஆஷா விகாஷினி (Ashaa Vigashini) வலுவாக நம்புவது என்னவென்றால்—ஒரே உருவளவு (one-size) என்பது எல்லாருக்கும் பொருந்தாது என்பதையே.

ஐரிஸ் ஆப்ஃபெலை போலவே ஆடை அலங்காரத் துறையில் ஆஷாவின் நுழைவும் தற்செயலாகவே நடந்தது. “எனது பள்ளிப்பருவத்தில் சதுரங்க விளையாட்டும், தமிழ்நாட்டின் பாரம்பரிய நடன வகைகளில் ஒன்றான பரதநாட்டியமுமே எனது வாழ்வின் மிகப் பெரிய பகுதிகளாக இருந்தன!” என புன்னகை கலந்த பூரிப்புடன் கூறுகிறார். பெரும்பாலான உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மனக் குழப்பத்தைப் போலவே ஆஷாவும் கலைகளுக்கான தனது பெரும் ஆர்வத்தை பின்தொடர்வதா இல்லை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பயிலும் பாதுகாப்பான பாதையை தேர்வு செய்வதா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தார்.

“என் பெற்றோர் என்னை ஒரு பணி ஆலோசகரிடம் (career counsellor) கூட்டிச் சென்றனர். அவர் என்னை வரையச் சொன்னார்,” என சற்று பொறுத்து பின்னர் உரக்க சிரிக்கும் அவர், “இந்நாள் வரை நான் மனிதர்களை குறிக்கும் குச்சி உருவங்களையே (stick figures) என் வடிவமைப்பு வரைப்படங்களில் பயன்படுத்தி வருகிறேன். என் வாடிக்கையாளர்கள் அதையே அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு செயல்முறையில் என்னை நம்புவார்கள் என்றும் நினைக்கிறேன்.” என்னத்தான் அவரின் பெற்றோர் அவருக்கு பரதநாட்டியம் மீது இருந்த தீரா ஆர்வத்தைப் பின்தொடர தூண்டினாலும்—பெரும்பாலான இந்திய குடும்பங்களில் அரங்கேறாத நிகழ்வு இது—ஆஷா பாதுகாப்பான பாதையையே தேர்வு செய்ய முடிவு செய்தார். “அண்ணா பல்கலைக்கழகத்தில் தோல் தொழில்நுட்பத்தில் (Leather Technology) பயின்று பட்டம் பெற்ற என் தந்தை ஒவ்வொரு முறையும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் பெயர்பெற்ற அந்த பல்கலைகழகத்தின் மிகப் பெரிய வளாகத்தை எனக்கு சுற்றிக் காண்பிப்பார்,” என விவரித்துக் கூறும் அவர், “எனவே தரப்பட்டியலில் முதலில் இருக்கும் பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக மாறியது” என்கிறார். அதற்கான கடின உழைப்பும் முயற்சியும் பலன் அளித்தன. அண்ணா பல்கலைக்கழகத்தின் புவி தகவலியல் (Geo-Informatics) துறையில் ஆஷா சேர்ந்தார்.

“உண்மையில் சொல்லப் போனால் எனக்கு இன்றளவும் புவி தகவலியல் என்றால் முழுமையாக என்ன என்று ஒரு விவரமும் தெரியாது. எனினும் எனது விவரக்குறிப்புக்கு (resume) மென்மேலும் மதிப்பு சேர்க்கும் எண்ணத்தில் என் பட்டப்படிப்பைத் தழுவிய ஓரிரு பணிக் கல்விகளுக்கு (internship) நான் விண்ணப்பித்து இருந்தேன்,” என குறுநகை புரிகிறார். இருப்பினும் ஆஷாவின் படைப்பாற்றல் பொறியானது சுடர்விட்டு எரிந்துக் கொண்டே இருந்தது. பல்கலைக்கழகத்தில் தன் நடனக் குழுவான கெட் ரெடி ஃபோக்ஸ் (Get Ready Folks) உடன் நடனப்பயிற்சி மற்றும் நடன இயக்கத்திலேயே (Choreography) தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். அவரின் மூன்றாம் ஆண்டில் நடைப்பெற்ற கருத்தரங்கின் (symposium) போதே (பெரும்பாலான கல்லூரிகளில் ஆண்டுக்கு ஒருமுறை நடைப்பெறும் இந்நிகழ்விற்கு கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவ மாணவியரும் மிகச் சிறந்த வகையில் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வருவது வழக்கம்) ஆடை வடிவமைப்புக் கலையானது (Fashion design) அவர் வாழ்வில் ஊடுருவத் துவங்கியது. “மிகவும் பிடிவாதம் குணம் கொண்ட மூன்று வயது சிறுமியாகிய என்னை என் அம்மா நடன வகுப்புகளுக்கு வலுக் கட்டாயமாக இழுத்து செல்வார். அந்தக் காலக்கட்டத்தில் இருந்தே என் அம்மா எனக்கென தனித்துவமாக வடிவமைத்த ஆடைகளையே என் நடன நிகழ்ச்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் நான் அணிந்து சென்று இருக்கிறேன்,” என நினைவுக் கூறும் அவர், “நாளடைவில் என் அம்மா வடிவமைத்த ஆடைகளை மட்டுமே அணிவது என்பது எங்கள் வீட்டின் ஒரு நெறிமுறை ஆகிவிட்டது. ஆனால் புதிய ஆடைகள் வேண்டுமெனில் ஒருவர் தையற்காரரிடம் செல்வது என்பது அவ்வளவு இயல்பானது அல்ல என்பதனை நான் கல்லூரிக்கு சென்ற பிறகே உணர்ந்தேன்” என்கிறார் ஆஷா.

தன் பட்டப்படிப்புக்குப் (graduation) பின்னர் ஆஷா ஒரு ஆண்டு விடுப்பு எடுத்துக் கொள்ள முடிவு செய்தார். ஒரு பொழுதுபோக்குப் பயிற்சியாக தன் நண்பர்களுக்கு ஆடைகளை வடிவமைக்கத் துவங்கினார். இதுவே சா நிறுவனத் துவக்கத்தின் வேராக அமைந்தது. “என் நண்பர்கள் என்னை ‘ஆசா’ (‘Asaa’) என்று கேலியாக அழைப்பதுண்டு. எனவே என்னுடைய அந்த அடையாளத்தின் ஒரு பகுதியான “சா” என்பதையே நிறுவனத்தின் பெயராகவும் வைக்க முடிவு செய்தேன். ஏனெனில், என் உண்மையான பெயரை விட இந்தப் பெயரே மிகவும் பிரபலமாக இருந்தது,” என சிரிக்கும் அவர், “தற்செயலாக என் அம்மாவின் பெயரான சாரதா என்ற பெயரும் நிறுவனத்தின் பெயரோடு நன்றாக ஒன்றியது. எல்லாம் கைக் கூடி வந்ததால் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து வடிவமைக்க வேண்டும் என்று இந்த பிரபஞ்சமே ஆசைப்படுவது போல தோன்றியது! என் அம்மா முதலில் சற்று தயங்கினார். எனினும் என் நண்பர்களுக்கு பிடிக்கவில்லை எனில் நான் அந்த பழியை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் நான் உறுதி அளித்தேன்.” அம்மா மகள் கூட்டணி ஆன இவர்கள் இருவரும் ஆஷாவின் ஆறு நண்பர்களுக்கு ஆடைகளை வடிவமைத்துத் தருவது மூலம் தங்களின் ஆடை வடிவமைப்புப் பயணத்தை துவங்கினர்.

“பி.முரளி (P.Murali) எனும் என் தந்தை ஒரு தொழில்முனைவோர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக விரலி நிறுவனங்கள் (Viralli Enterprises) எனும் தோல் ஆடைகளை உற்பத்தி செய்யும் (leather garments manufacturing) நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் என் தந்தையின் மேற்பார்வையில் உற்பத்தி மேலாளராக (Production manager) பணிபுரிவதில் பெரும்பாலான என் நேரத்தை செலவிடுவேன். இவ்வாறே ஒரு வணிகத்தை எவ்வாறு நடத்துவது என்று நான் புரிந்துக் கொண்டேன். எனினும் என் வயதில் இருக்கும் இளைஞர்கள் பலர் தொழில்முனைவை (entrepreneurship) நோக்கிய பாதையை தேர்வு செய்வது என்பது அவ்வளவு இயல்பாக நடக்கும் நிகழ்வல்ல.” மீண்டும் அவர் பணி வாழ்வில் முக்கிய முடிவு எடுத்தாக வேண்டிய தருணத்தில் அவர் இருந்தார். தீரா ஆர்வத்துடன் தான் உருவாக்கிய சா எனும் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் பங்காற்றுவதை முழு நேரப் பணியாக எடுத்துக் கொள்வதா அல்லது பாதுகாப்பான பெருநிறுவன (corporate) வாழ்க்கைமுறையை தேர்வு செய்வதா என்ற குழப்பத்தில் அவர் இருந்தார். “உண்மையில் ஒரு ஊழியராக என்றுமே என்னை நான் கற்பனை செய்து பார்த்தது இல்லை” எனக் கூறுகிறார். அவரின் தீரா ஆர்வம் அவரைப் பற்றிக் கொள்ள தொழில்முனைவில் தடம் பதிக்க எண்ணி அதில் காலடி எடுத்து வைத்தார்.

மிக விரைவிலேயே, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்றவாறு வடிவமைத்துக் (custom-designed) கொடுக்கப்பட்ட சா நிறுவனத்தின் ஆடைகள் பற்றிய செய்தி தீயாய் பரவத் தொடங்கியது. ஆஷாவின் நட்பு பாராட்டும் ஆளுமையானது (outgoing personality) சா நிறுவனத்துக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சொல்லப் போனால் சா எனும் அடையாளம் தனித்து நிற்பதற்கு அதுவே காரணம் எனலாம். “என் வாடிக்கையாளர்களுடன் பேசுவதில் நான் நிறைய நேரம் செலவிடுவேன். அவ்வாறு பேசும்போது அவர்களைப் புரிந்துக் கொள்ள முயல்வேன். அத்துடன் அவர்கள் பகிர்ந்துக் கொள்ள விரும்பினால் அவர்களின் பயங்கள் மற்றும் பலவீனங்களையும் (insecurities) தெரிந்துக் கொள்ள முயல்வேன்,” என தான் வடிவமைத்த ஒவ்வொரு ஆடைக்கு பின்னணியில் இருக்கும் செயல்முறையையும் அவர் விவரிக்கிறார். “ஆடை அணிபவர் யார் என்பதை புரிந்துக் கொள்வதும் அவர்களின் கதையை அவர்கள் அணியும் ஆடை மூலம் சொல்வதும் வடிவமைப்பு செயல்முறையின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். எனவே, ஒவ்வொரு ஆடையையும் – அது ஒரு சாதாரண தளருடை (Kurta – தெற்கு ஆசியாவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியும் ஒரு ஆடை வகை) ஆக இருந்தாலும் கூட அதனை வடிவமைக்க பொதுவாகவே 25 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம்” என கூறுகிறார் ஆஷா.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒட்டி தன் நிறுவனத்துக்கு ஒரு பெரிய வாடிக்கையாளர் தளம் தேவை என்பதனை ஆஷா உணர்ந்தார். படவரியில் (Instagram) சா உடன் வடிவமையுங்கள் – ஆண்/பெண் மற்றும் அனைவருக்குமான ஆடைகள் என்றப் பெயரில் (@designwithsaa – Clothing for He/She/They) ஒரு பக்கம் துவங்கி, தன் வடிவமைப்பு மற்றும் அதன் செயல்முறையைப் பற்றி விளம்பரம் செய்யத் துவங்கினார். “என் வடிவமைப்புக்கு உடைமை எடுத்துக் கொண்டு அதனை அனைவரும் பார்க்குமாறு நான் வெளிப்படுத்தியது அதுவே முதல் முறையாகும்,” என கூறும் அவர், “என் ஆடைகளை வடிவமைப்பவர்கள் யார் என தெரிந்துக் கொள்ள எப்பொழுதும் நான் ஆசைப் பட்டுள்ளேன். எனவே, என் வடிவமைப்பு நிறுவனத்தை முடிந்த வரை அணுகத்தக்க (approachable) முறையில் அமைக்க என் முகத்தை நான் பொது தளங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆய்ந்து அறிந்தேன். ஆனால் அது சற்று பயமுறுத்துவதாகவே இருந்தது.” தனிப்பட்ட தொடர்பினைக் கூட்டுவதற்கான அவரின் இந்த துணிவான முயற்சி ஆனது இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து அவருக்கு அதிகளவில் வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரவே செய்தது.

சில நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு வாடிக்கையாளர்கள் உற்சாகம் அளிக்கும் வடிவமைப்புத் தேவைகளுடன் வருவார்கள். “சார்பின்மையை (detachment) வெளிப்படுத்தும் ஒரு ஆடை எனக்கு வேண்டும்,” என்பது அவருக்கு சமீபத்தில் கிடைத்த கோரிக்கைகளில் ஒன்று. “தொள தொளவென ஆடை அணிந்த (loosely fitted) தோற்றம் ஒன்றே எனக்கு உடனடியாக மனதில் தோன்றியது.” இதனை மனதில் கொண்டு, தான் வழக்கமாக வாடிக்கையாளர்களிடம் பேசுவதைப் போலவே இந்த வாடிக்கையாளரிடமும் பேசி அவரின் வாழ்வினைப் பற்றி கேட்டறிந்தார். அத்துடன் வெறுமனே ஆடைகளின் அடிப்படையில் மட்டும் அல்லாமல் முடிந்த வரை எல்லாக் கூறுகளின் அடிப்படையிலும் சார்ப்பின்மையைப் பற்றிய தன் வாடிக்கையாளரின் புரிதலை அவருடன் பேசித் தெரிந்துக் கொண்டார். “எங்கள் கலந்துரையாடல்கள், சமூக வலைத்தளங்களைப் பற்றி துவங்கி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் வரை நீடித்தது. பின்னர் அந்த கலந்துரையாடல்களை கூறிட்டு வடிவமைப்பு கூறுகளாக மாற்றினோம். அந்த கூறுகளே ஆடையாக மாறின.” ஆரம்பத்தில் தோன்றிய தொள தொளவென ஆடை அணிந்த கற்பனை தோற்றத்திலிருந்து இறுதியில் கிடைத்த இந்த ஆடையானது முற்றிலும் மாறுபட்டு இருந்தது. “ஒரு ஆடையையும் அதற்கு மேல் மற்றொரு பிரிக்கக்கூடிய துணியையும் நாங்கள் வடிவமைத்தோம். அவற்றை ஒன்றாக சேர்த்தும் அணியலாம் அல்லது தனித் தனியாக இருவேறு ஆடைகளாகவும் அணியலாம்” என்கிறார் ஆஷா.

கதைசொல்லுதல் என்பது நடனமாடுபரவான ஆஷாவின் வாழ்வில் எப்பொழுதும் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாகவே இருந்து வருகிறது. “பரதநாட்டியத்தைப் பற்றிய ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாங்கள் அதில் கூற முற்படும் பெரும்பாலான கதைகள் பொறாமை குணம் கொண்ட நண்பர்கள் அல்லது ஒருதலைக் காதல் (unrequited love) பற்றிய கதைகளாகவே இருக்கும். புத்தாயிரத் தலைமுறையில் (millennial) பிறந்த எவராலும் இந்த கதைகளோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடியும்,” என சிரித்துக் கொண்டே கூறுகிறார். “இந்த கலை வடிவம் பாரம்பரியமானது என்பதால் இதனை பலர் அணுகமுடியாதது போல் உள்ளது. எனவே, எனது நடன நிகழ்ச்சியில் நடனத்திற்கு முன்னர் ஒரு பெருவாரியான நேரத்தை அனைவரும் தொடர்புப் படுத்திக் கொள்ளும் வகையில் கதையை சொல்வதில் செலவிடுவேன்.” இதையே சற்று பெரியளவில் செயல்படுத்தும் நோக்கத்துடன் இயங்கும் தி ரூட்டெட் ஃபொளன்டேஷனின் (The Rooted Foundation) இணை நிறுவனர்களான அபூர்வா ஜெயராமனையும் (Apoorva Jayaraman) சுமதி விக்ரமையும் (Sumathi Vikram) ஆஷா இந்த முயற்சி பாதையில் சந்திக்க நேர்ந்தது. “இந்த நிறுவனத்தில் சமூக வலைத்தள உத்தியாளராக (social media strategist) சேர்ந்த எனக்கு என் நிறுவனத்தை எவ்வாறு வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வது என்பது பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டம் கிடைத்தது.”

வடிவமைப்பு செயல்முறையில் செலவிடும் நேரமானது வீண் போகாமல், பலன் அளிக்கவே செய்யும் என்பதை பல நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. இந்த சா ஆடை வடிவமைப்பு நிறுவனமானது படவரியில் 2000-க்கும் அதிகமான பின்பற்றிகளுடனும் (Followers), ஒரு உள்ளக (In-house) தையற்காரர், ஆடை வடிவமைப்பாளர் உடனும் மற்றும் ஒரு பெரிய வாடிக்கையாளர் குழுவுடனும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. “இந்த வளர்ச்சியானது ஆடை அணிவரிசை ஒன்றினை அறிமுகம் செய்ய எங்களைத் தூண்டியது. வெறுமனே லாபம் ஈட்டும் ஆடை அலங்கார வகையாகப் போகாமல் எவ்வாறு நாங்கள் அறிமுகப் படுத்தப் போகும் ஆடைகளை எங்களின் கதை சொல்லும் கொள்கைகளுக்குள் பொருத்துவது என்பதிலேயே உண்மையான சவால் இருக்கிறது.”

வடிவமைப்புக்கு இணையாக ஆடை அலங்கார ஆலோசனைகள் வழங்கும் பணியையும் (wardrobe styling services) செய்து வருகிறார் ஆஷா. “ஆடைகள் அணிந்து அலங்கரித்துக் கொள்வது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சித் தரக் கூடிய செயலாகும். எனவே, பெருந்தொற்று (Pandemic) ஏற்பட்ட போது ஆடை அலங்காரத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மகிழ்ச்சியை பரப்ப முடிவு செய்தேன்” என்கிறார் ஆஷா புன்முறுவலுடன். இதற்கும் தான் பின்பற்றும் ஆடை வடிவமைப்பு செயல்முறையைப் போலவே, தன் வாடிக்கையாளருடன் அமர்ந்து அவரின் வாழ்க்கைக் கதையை கேட்டறிவார். பின்னர் அவர்களின் ஆடை அலமாரியைத் திறந்து அதில் இருக்கும் ஆடைகள் மூலம் கிடைக்கும் எண்ணற்ற உற்சாகமான சாத்தியக் கூறுகளை வெவ்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு கண்டறிந்து அவற்றை அவர்களுக்கு பரிந்துரைப்பார். “செயல்முறையின் இறுதியில் என் வாடிக்கையாளர்கள் எனக்கு மிகச் சிறந்த நண்பர்களாக ஆகிவிடுவர். அத்துடன் சில மாதங்கள் கழித்து என்னிடம் திரும்பி வந்து அவர்களுக்கு அணிவதற்கு வசதியாகவும் மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிவதற்கான தன்னம்பிக்கையை நான் அவர்களுக்கு தந்தமைக்கும் என்னிடம் நன்றி கூறுவர்” என பெருமிதத்துடன் கூறுகிறார்.

வாழ்க்கை என்பது முழுக்க பாடங்கள் நிறைந்ததே. “சதுரங்க போட்டிகளில் உத்திகளை கையாள்வதில் இருந்து என் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் விரலியில் பணி புரிவது வரை நான் தினமும் ஏதேனும் புதிதாக கற்றுக் கொண்டு அதனை என் வணிகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறேன்,” எனக் கூறுகிறார். சா நிறுவனம் வளர்ச்சி அடைய அடைய மக்கள் ஒவ்வொருவரும் அவரவரின் நிறம் மற்றும் உடல் ஆகியவற்றை அரவணைத்து அதிக தன்னம்பிக்கையோடு வளம் வருவதற்கு உதவுவதுடன் அவர்களை ஆடை அலங்கார சாம்ராஜ்யத்தில் இருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆஷா ஆசைப்படுகிறார்.

 

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

137/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.