அனுயா ரெட்டி (Anuhya Reddy) என்பவர் உலகளவில் காப்பி விற்பனையில் பெயர்போன ஸ்டார்பக்ஸின், லண்டனில் இருக்கும் கடைகளில் ஒன்றில் காப்பி தயாரிப்பவராக (barista) வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அமைதியான முனுமுனுப்புகளுக்கும், மேசைகளில் இருந்து வரும் தட்டச்சின் (keyboard) மென்மையான சத்தத்துக்கும் இடையே, புதிய காப்பிக் கொட்டைகளின் நறுமணம் க்ராய்சண்ட் (croissant) எனப்படும் பிறை வடிவ ரொட்டியின் மணத்துடன் காற்றில் பரவி மூக்கை துளைத்தது. கடல் தாண்டி பயணப்பட்டு, தான் இருக்கும் இவ்வூரில், என்னதான் இது ஓர் பகுதி நேர வேலை என்றாலும் கொஞ்ச நாட்களாக தான் உணர்ந்திராத ஓர் இதமான உணர்வை அவர் இப்பொழுது உணர்ந்தார்.
இருபத்து மூன்று வயதான அனுயா சென்னையை சார்ந்த ஓர் கட்டடக்கலை பட்டதாரி ஆவார். முதுகலை பட்டப்படிப்பிற்காக லண்டனில் உள்ள ராயல் கலைக் கல்லூரியில் (Royal College of Arts) பதினைந்து மாதக் கால நகர வடிவமைப்புப் பாடத்தைத் தேர்வு செய்திருந்தார். “எங்க பாடத்துக்காக நாங்க நிறையா பயணிக்க வேண்டி இருந்துச்சு,” என நினைவுக் கூறும் அவர், “எங்களோட ஆராய்ச்சிக்காக எப்போலாம் வெளியே போறோமோ அப்போலாம் என்னோட கைச் செலவுக்காக இருந்த பணத்துல உள்ளூர் உணவு வகைகள ருசிச்சு பார்ப்பேன்!”
லண்டனில் உள்ள லா கார்டன் ப்ளூ (Le Cordon Bleu) எனும் சமையல் பயிற்சிப் பள்ளியில் அனைவரும் வந்து பார்வையிடும் வண்ணம் கண்காட்சிப் போன்ற நிகழ்வான ஓபன் ஹவுஸ் (open house) நடக்கவிருப்பதாக ஓர் துண்டுப் பிரசுரத்தில் (flyer) குறிப்பிட்டு இருப்பதை அனுயா ஒரு நாள் கண்டார். சமையல் துறையில் அவ்வளவு ஆர்வம் இல்லாதவரா நீங்கள்? உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், சமையல் கலைக்குப் பெயர்போன இந்த பெருமைமிகு மையமானது இந்தியாவில் இருக்கும் பொறியாளர்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT’s) எவ்வளவு முக்கியமோ அதைப் போன்றே சமையல் கலையில் வல்லுநர்களாக விரும்புவர்களுக்கும் இந்த மையம். சமையல் துறையில் ஏற்கனவே இருக்கும் வல்லுநர்களுக்கு மத்தியில், பல்லடுக்குகள் கொண்ட அணிச்சல் போன்ற மாவு பண்டங்களை அழகாக அலங்கரித்து காட்சிப்படுத்த வேண்டுமென்ற கனவுடன், ஒரு ஓபன் ஹவுஸ் நிகழ்வின் பொழுது துண்டு பிரசுரங்களை ஆர்வமாக சேகரித்துக் கொண்டே அனுயா கார்டன் ப்ளூ வளாகத்தினுள் செல்லலானார்.
“உணவக மேலாண்மை எல்லாருக்கும் தெரிஞ்ச பட்டப்படிப்பு இல்லையே,” என்பதே, இந்தியாவில் இருக்கும் பொழுது, சமையல் கலையில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை இளம் வயதான அனுயா உற்சாகம் பொங்க ஒவ்வொரு முறை தெரிவிக்கும் பொழுதும், பலரும் அவரிடம் சொல்லும் பதிலாக இருக்கும். எனவே, அனுயா தான் சேகரித்த துண்டுப் பிரசுரங்களை தனது மெத்தைக்குக் அடியில் வைத்து விட்டு தனது கனவுகளையும் அத்தோடு சேர்த்து ஓரங்கட்டினார்.
அப்பொழுது ஸ்டார்பக்ஸ் கடையில் கிடைத்த ஓர் தற்காலிக வேலையின் மூலம் நம் இளம் கட்டடக்கலைஞர், வீட்டில் இருந்தவாறு அணிச்சல்கள் செய்து விற்பனை செய்யும் ஜார்டன் நாட்டினைச் சேர்ந்த அணிச்சல் செய்பவருடன் மற்றுமொரு தற்காலிக பகுதி நேரப் பணியில் உடனிணைந்து வேலை செய்யலானார். “அந்த சமையலறையானது இடையில் சுவர்கள் ஏதும் இல்லாமல் மற்ற அறைகளுக்கு திறந்திருக்கும் வகையில் அழகாக இருந்தது,” எனக் கூறும் அனுயா, அந்த இடத்தின் திட்டமானது எவ்வாறு உரையாடல்களுக்கு வழிவகுத்தது எனவும் விவரிக்கிறார். அனுயா வேலை செய்யத் துவங்கி ஒரு வாரத்திலேயே அவருடன் இணைந்து வேலை செய்த அணிச்சல் செய்பவர் பத்து நாட்களுக்கு ஜார்டன் நாட்டுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அனுயா பதற்றம் ஆகத் துவங்கினார். “எனக்கு அணிச்சல் செய்றது தெரியாதே!” என அனுயா தனக்குத் தானே புலம்பிக் கொண்டார். எனினும், அவர் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து பயிற்சி எடுத்து, அடுத்தப் பத்து நாட்களுக்கு தாமாகவே எந்த குளறுபடியும் ஆகாமல் எளிதாக அடுமனையை நடத்தினார்.
“அந்தப் பத்து நாட்கள் தான் நான் மேலும் ஆழமா இந்த வேலையில ஈடுபடுறதுக்கான தன்னம்பிக்கைய எனக்குத் தந்துச்சு,” என மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், சென்னையில் இருக்கும் திறந்தநிலை திட்டம் கொண்ட தனது அடுமனையின் கல்லாவுக்குப் பின்னே இருந்து கூறுகிறார் அனுயா. இந்த உரையாடல் நடந்த நாள் அன்றே உணவுத் துறையில் ஃபினாலே (Finale) எனும் அவரின் முதன்முதல் முயற்சியானது ஒரு மாத நிறைவை அடைந்திருந்தது. நம்மிடம் அவரது பயணத்தை பகிர்ந்துக் கொண்டவாறு, இனிப்புகளும் அணிச்சல்களும் செய்து விற்பனை செய்யப்படும், புதிதாக துவங்கப்பட்ட தனது விற்பனையகத்தில் இருக்கும் காட்சி அடுக்கை, புதிதாக சுடப்பட்ட பாலாடை நிரப்பப்பட்ட வட்ட வடிவ மாவு தின்பண்டமான டோனட்ஸ்களை (donut) கொண்டும், மிருதுவான மாவு பண்டங்களான ஷூ பேஸ்ட்ரீஸ்களைக் (choux pastry) கொண்டும், வெளிர் நிற மக்ரூன்களைக் (macaroon) கொண்டும் அலங்கரிக்கிறார்.
லண்டனில் அனுயா, தனது பதினைந்து மாதகால பட்டப்படிப்பில் பன்னிரெண்டு மாதங்களை நிறைவு செய்திருந்தார். அப்பொழுது ஒரு வழியாக துணிச்சல் கொண்டு தனது படுக்கையின் கீழ் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களை எடுத்து சமையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்தார். அவரின் முயற்சி வீண் போகவில்லை. லா கார்டன் ப்ளூ அவரின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டது. பெயர்போன மையத்தில் அணிச்சல் மற்றும் மாவு பண்டங்கள் செய்வதற்கான ஒன்பது மாதகால பட்டயப் படிப்பை (diploma) மேற்கொள்வதற்கென, ராயல் கலைக் கல்லூரியில் இருந்து தனது கல்விக் கட்டணத்தை சமையல் கலைப் பள்ளிக்கு உடனடியாக மாற்றினார் அனுயா. இளம் கட்டடக்கலைஞரான அனுயா, பெரியக் கனவுகளுடன் பேரார்வம் கொண்ட ஓர் அணிச்சல் நிபுணராகத் திரும்புவார் என எவரும் சிறிது கூட நினைத்துப் பார்க்கவில்லை.
சமையல் பள்ளியில் பயிற்சியானது கடுமையாக இருந்தது. எனினும் அங்குக் கிடைத்த அனுபவமும் திறன்களை வெளிக்கொணரும் செயல்முறையும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது. “தலைசிறந்த சமையலுக்கென மிஷலன் (Michelin) நிறுவனம் உணவகங்களுக்கு நட்சத்திர சான்றிதழ் அளிக்கும். அப்படியொரு மிஷலன் நட்சத்திரம் வாங்கிய லண்டனின் மையத்தில் இருந்த ஓர் உணவகத்தில நான் பயிற்சியாளராக வேலை செஞ்சேன்,” என நினைவுக் கூறும் அவர், “என்னோட பணி நேரம் காலைல ஆறு மணில இருந்து இரவு பதினொரு மணி வரைக்கும் இருந்துச்சு! வேலை கடுமையா இருந்துச்சு. அங்க இவங்க மேல, இவங்க கீழ அப்படின்னு இல்லாம, எல்லாரும் எல்லாத்துலயும் வேலை செஞ்சாங்க. நாங்க எல்லாரும் ஒரு குடும்பம் மாறி இருந்தோம்!” என உணர்ச்சிப் பொங்கக் கூறுகிறார் அனுயா. தொடர்ந்து, இந்த அனுபவமானது ஃபினாலேவில் ஒரு சிறிய குழு அமைப்பதற்கு தனக்கு எவ்வளவு உதவியாக இருந்தது என விவரிக்கிறார் அவர்.
2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றினால், திட்டமிட்டத்தை விட மேலும் சில மாதங்கள் அவர் லண்டனில் தொடர்ந்து தங்க நேர்ந்தது. பெருமளவில் இல்லையெனினும் அப்பொழுதும் மக்கள் உணவகங்களுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தனர். நம் இளம் சமையல் கலைஞர் அந்த ஆண்டின் இறுதியில் இந்தியா திரும்புவதற்கு முன்னர், இந்த நிலைமையின் விளைவாக நிகழ்ந்த நல்ல விஷயங்களை முடிந்தவரை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். “தாராளமாக கிடைச்ச டிப்ஸ் தான் நடந்ததுலேயே சிறந்த விஷயம்,’ எனக் கூறி கொல்லென்று சிரிக்கிறார் அனுயா.
சென்னை திரும்பியவுடன் சாண்டீஸ் (Sandy’s) எனும் சிற்றுண்டி உணவகத்தில் இரண்டு சமையல் கலைஞர்கள் கொண்டு பரிசோதனை செய்யும் விதமாக ஓர் சமையலறையை (test kitchen) நிர்வகித்தார் அனுயா. அங்கே சென்னையை சார்ந்த உணவக உரிமையாளரான சந்தேஷ் ரெட்டி (Sandesh Reddy) என்பவரை அவர் சந்திக்கலானார். பின் வரும் நாட்களில் இவரே அனுயாவின் வழிக்காட்டியாகவும் முதலீட்டாளராகவும் ஆனார். பரிசோதனை கூடமாக விளங்கிய அவர் துவங்கிய இந்த சமையல் கூடத்தில், சாண்டீஸ் உட்பட சேஜ் அண்ட் லாவண்டர், ஃபிரெஞ் லோஃப் மற்றும் பீச்வில் கஃபே (Sage and Lavender, French Loaf and Beachville Cafe) போன்ற மற்ற உணவகங்களுக்கென பல்வேறு விதமான புதிய உணவு வகைகளை அவர் இங்கே பரிசோதனையாக முயற்சி செய்துப் பார்த்து சமைக்க வேண்டியிருந்தது.
“ஒரு ஆண்டுக்கு அப்புறம் எனக்கு கொரோனா வந்ததுனால நான் என்னோட பணியில இருந்து ஓய்வு எடுக்க வேண்டி இருந்துச்சு,” எனக் கூறுகிறார் அவர். “நீங்க தனியாவே ஒரு சமையல் கூடத்த துவங்க தயாராகிட்டீங்க,” என அனுயா கொரோனாவில் இருந்து மீண்டவுடன் வேலைத் தேட ஆரம்பித்த போது சந்தேஷ் அவரிடம் தெரிவித்தார். அனுயா எதிர்பார்த்து இருந்த தருணம் வந்தது. வெகு விரைவிலேயே அவர் தனது சொந்த அணிச்சல் மற்றும் மற்ற இனிப்பு தின்பண்டங்கள் விற்பனையகத்தை (dessert bar) துவங்கத் தயாரானார்.
அடுத்து வந்த மாதங்கள் விற்பனையகம் துவங்குவதற்கான யோசனைகளை வகுத்தலிலும், திட்ட அறிக்கைகள் உருவாக்குவதிலும், நகரின் மூளை முடுக்குகளுக்குச் சென்று வாடகைக்காக இருந்த கண்ணுக்குத் தெரிகின்ற ஒவ்வொரு இடத்தின் உரிமையாளரை தொடர்புக் கொள்வதிலும் நகர்ந்தது. “நான் வாங்கின கட்டடக்கலை பட்டம் ஒரு வழியா எனக்கு அப்போ உதவுச்சு,” எனக் கூறும் அவர் தனது கடை மற்றும் தான் உருவாக்க நினைத்த வணிக அடையாளத்தின் திட்டவமைப்பு மற்றும் வடிவமைப்பின் பின்புலத்தில் இருந்த செயல்முறையை நினைவுக் கூறுகிறார்.
நாற்பத்து ஐந்து நாட்களுக்குள்ளாகவே ஃபினாலே துவங்கப்பட்டு இயங்கி வந்தது. இதமான உணர்வைத் தரும் ஸ்காண்டினேவியன் பாணி (Scandinavian-style) உட்புற அமைப்புகளுடனும், ஆர்வமும் சுறுசுறுப்பும் உடைய இளம் வயதான அணிச்சல் செய்யும் கலைஞர்களுடனும் காலத்திற்கேற்ப மாறும் உணவுப் பட்டியல் கொண்ட நவீன வசதிகளை உடைய அணிச்சல் செய்யும் சமையல் கூடத்துடனும் ஃபினாலே இயங்கத் துவங்கியது.
சென்னை மக்கள் ஒரு வழக்கமான உணவுப் பட்டியலுக்கு பழகிப்போய் உள்ளனர். “பொதுவா சென்னைல எங்கேயும் கிடைக்காத பலதரப்பட்ட அணிச்சல் மற்றும் மாவு பண்டங்கள் வகைகள நான் விற்பனை செய்றேன்,” என விவரிக்கும் அனுயா, “வாடிக்கையாளர்களுக்கும் சரி, பணியாளர்களுக்கும் சரி ஒரே மாதிரி இல்லாம எப்போதும் மாறிட்டே இருக்கும் உணவுப் பட்டியல் உற்சாகத்தை கொடுக்குது.” ஒரு மாதத்தின் சுவைகளை, பருவ கால பழங்கள் நிர்ணயிக்க, வார இறுதிகளில் புதிய உணவுப் பொருட்கள் மற்றும் சுவைகள் முயற்சி செய்யப்பட்டு உருவாக்கப்படும். “மாம்பழம் மற்றும் செம்புற்று பழ (strawberry) சுவையைப் பயன்படுத்தி கடந்த மாசம் நாங்க கிட்டத்தட்ட முப்பது வெவ்வேறு உணவு வகைகள செஞ்சோம்,” எனப் பூரிப்பாகக் கூறுகிறார் அனுயா.
“யாரும் பாக்காத அப்போ சாப்பிட பிடிக்காம உணவ படுக்கைக்கு அடியில ஒளிச்சு வெக்குற குழந்தைங்கள பாத்திருக்கீங்களா? நான் அப்படியொரு குழந்தையா தான் இருந்தேன்,” என அனுயா வாய்விட்டுச் சிரித்தவாறே, எவ்வாறு உணவு மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வம் என்பது முற்றிலும் எதற்ச்சியாக நடந்த ஓர் நிகழ்வு என விவரிக்கிறார். “எதுக்குனுலாம் தெரில, உலகப்புகழ் சமையல் போட்டி நிகழ்ச்சியான மாஸ்டர்செஃப் (Masterchef) எப்போதும் எங்க வீட்டு தொலைக்காட்சில ஓடிட்டே இருக்கும்,’ என நினைவுக் கூறுகிறார் அவர். அந்த நிகழ்ச்சியின் 2020-ஆம் ஆண்டு பதிப்பில் இறுதி சுற்று வரை வந்த சமையல் வல்லுநர் ரெனால்ட் போயர்னோமோ (Reynold Poernomo) என்பவர் அனுயாவின் முன்மாதிரி ஆனார். அவர் உணவுகளை தட்டில் வைப்பதிலும் காட்சிப்படுத்துவதிலும் ஏதோ ஓர் தனித்துவம் இருந்தது. அனுயாவின் வயதில் மற்ற குழந்தைகள் அனைவரும், தங்களைப் பற்றியக் குறிப்புகளைக் கொண்ட ஸ்லாம் புத்தகங்களையும் ஸ்கிராப் புத்தகங்களையும் நினைவுகளாலும் வாழ்வின் முக்கியக் கட்டங்களாலும் நிரப்பிக் கொண்டு இருக்கையில், அனுயாவோ தன்னுடைய புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களையும் போயர்னோமோவின் உணவுக் குறிப்புகளாலும் அவரின் படங்களாலும் நிரப்பினார். “சோகமா இருக்க நேரத்துல இந்தப் பக்கங்கள திருப்பி பாக்கலாம்,” என அப்பொழுது தனக்குள்ளே நினைத்துக் கொண்டார் அனுயா.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதியாக ஃபினாலே(வில்) அனுயா உள்ளார்—சென்னை கலை மன்றம் எனப்படும் மியூசிக் அகாடமிக்கு அருகாமையில், முன்னர் அவ்வளவாக வெளியே அறியப்படாதவாறு இருந்த வீடுகள் நிறைந்த ஓர் தெருவினுள், பலரையும் ஃபினாலே மூலம் தற்பொழுது ஈர்க்கும் அனுயா, இளம் சமையல் கலைஞர்கள் தங்கள் கனவுப் பாதையை பின்தொடரவும் சென்னையின் இனிப்பு வகை உணவு உலகத்தை வழிநடத்தவும் முன்மாதிரியாகவும் ஊக்கமாகவும் இருந்து வருகிறார்.