சன்னிபீ என துவங்கி பின்னர் தொழிலகங்களுக்கு இடையேயான வணிகத்தில் தடம் பதித்து வரும் வே கூல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பயணம்
கார்த்திக் ஜெயராமன் (Karthik Jayaraman), சஞ்சய் தசாரி (Sanjay Dasari) மற்றும் கார்த்திக் உடன் தானியங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள் சிலர் வார இறுதிகளில் கோயம்பேடு சந்தை அல்லது பாரிமுனையின் தானிய சந்தைப் போன்ற இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சில மாதங்கள் செலவு செய்து அந்த சந்தைகளின் விநியோகச் சங்கிலியை (supply chain) கண்டறிவர். இவ்வாறே வே கூல் ஃபுட்ஸின் (WayCool Foods) பயணம் துவங்கியது. தானியங்கி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் ஏன் சம்பந்தமே இல்லாமல் உணவு விநியோகச் சங்கிலியில் ஆர்வம் காட்டுகின்றனர் என யோசிக்குறீர்களா?
“ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தானியங்கித் துறையானது சரிவினைக் கண்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது வழக்கம்,” என கூறுகிறார் கார்த்திக். இதற்கிடையில் இந்த துறையில் நிலவும் நெருக்கடியான போட்டியில் பெரும்பாலான நிறுவனங்களின் கவனமும் விநியோகச் சங்கிலியின் மீதே இருக்கும். மீண்டும் மீண்டும் நிகழும் இந்த நெருக்கடியான நிலைமையால் பெரிதும் நொந்துப் போன இத்துறையில் அனுபவசாலியான கார்த்திக், இன்னும் பேரளவு மக்கள் மீது பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நபர்கள் கொண்ட ஓர் குழுவை உருவாக்க முடிவு செய்தார். அதற்கான திறமையும் மனிதவளமும் தன் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளது என அவர் நம்பினார்.
இதற்கிடையில் கார்த்திக்கின் சக ஊழியரும் குடும்ப நண்பருமான சஞ்சய் (Sanjay) அமெரிக்காவில் தனது வணிகப் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்ப, இருவரும் சேர்ந்து ஓர் துளிர் நிறுவனத்தைத் (start-up) துவங்கினர். இதற்கு முன்னரே இருவரும் இணைந்து துளிர் நிறுவனம் துவங்குவதற்கான முயற்சியில் பலமுறை ஈடுபட்டு உள்ளனர். “சுகாதாரத் துறையில் ஓர் துளிர் நிறுவனம் துவங்கும் எண்ணத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் முனைப்போடு இருந்தோம்,” என அந்த நினைவுகளை சற்று அலசுகிறார் துணை நிறுவனரான கார்த்திக். இதற்கான கருத்து பரிமாற்றத்தின் போதே உணவுத் துறையில் ஓர் இடைவெளி நிலவுவதற்கான வாய்ப்புகளை முன்னெடுத்து வைத்தார் சஞ்சய். இந்த துறையில் கிட்டத்தட்ட அனைவரும் நுகர்வோரே என்றும், இந்தியாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி மக்கள்தொகை உணவு உற்பத்தியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பிரச்சனையைப் பற்றி தீவிரமாக இருவரும் சிந்திக்க ஆரம்பிக்கும்போது, இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு கழிவுகளையும் கொண்டு பிரேசில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் உணவுத் தேவையையும் பூர்த்தி செய்யலாம் என்று உணர்ந்தனர். திறனற்ற விநியோகச் சங்கிலியே இந்தப் பிரச்சனையின் மூலக் காரணம் ஆகும். “முன்னர் எல்லாம் உணவு உற்பத்தியிலும் உணவு பாதுகாப்பிலும் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி அடிக்கடி கலந்துரையாடுவர். சமீபக் காலக் கட்டத்தில் தான் விநியோகச் சங்கிலியில் ஓர் இடைவெளி ஏற்படும் சூழ்நிலையை இந்த கலந்துரையாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன” என விவரிக்கிறார் அவர்.
வார இறுதிகளில் பொழுதுபோக்காக உலாவி வரும் வேளையிலேயே இந்த தானியங்கித் துறை ஊழியர் குழுவினர் இரு விஷயங்களை உணர்ந்தனர். தமிழ்நாட்டின் விளைச்சல் நிலங்கள் சிறிதாக இருந்தன. எனவே, விநியோகத்திற்கென போதுமான அளவு விளைச்சலை சேமித்து வைக்க வெவ்வேறு வயல்களில் இருந்தும் விளைச்சலை சேகரிக்க ஓர் இடைநிலை நிறுவனம் தேவை என்பதை உணர்ந்தனர். மேலும் போக்குவரத்து, உற்பத்தி, பெருமளவில் பொட்டலம் கட்டுதல், சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து கட்டுதல் போன்ற செயல்கள் திறன்மிகு வகையில் கையாளப் படாததால் மக்களிடம் சென்று சேரும் உணவுப் பொருட்களின் அளவு பெருமளவில் குறைந்தது. “போக்குவரத்து செய்யப்படும் போது பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களில் உள்ள நீரானது வெளியேறுகிறது. அத்துடன் இது மாதிரி உணவுப் பொருட்கள் விரைவில் அழுகிப் போகும் தன்மையும் கொண்டது. விளைச்சல் ஆனது ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் கை மாறுகிறது. ஆனால் எவரும் பெரியளவில் இதிலிருந்து லாபம் ஈட்டுவதாகவும் தெரியவில்லை. இந்த வணிகத்தில் இருந்து பயன்பெறுவதாகவும் தெரியவில்லை. இந்த செயல்முறையில் உணவு கழிவுகள் மட்டுமே உற்பத்தி ஆகி கொண்டு இருந்தன.”
2015-ஆம் ஆண்டு இருவரும் தங்களின் சொந்த பணத்தை முதலீடு செய்து ஒரு விற்பனையாளரும் ஒரு சரக்குந்து ஓட்டுனரும் கொண்ட ஒரு குழுவினை கட்டமைத்தனர். நண்பர் ஒருவரிடம் இருந்து போரூரில் ஒரு சிறிய வீட்டினை வாடகை எடுத்தனர். இதனை ஓர் கிடங்காக மாற்றினர். உழவரிடம் இருந்து நுகர்வோருக்கு உணவுப் பொருட்கள் சென்றடையும் விநியோகச் சங்கிலியை மாற்றி அமைக்கும் முனைப்பில் வே கூல் நிறுவனம் அமைத்த முதல் கிடங்கு அமைப்புமுறை இதுவாகும்.
வே கூல் ஃபுட்ஸ் நிறுவுவதற்கான தகுந்த இடமாக தமிழ்நாடு இருந்தது. “இங்குள்ள சாலை அமைப்புகள் வெகுச் சிறப்பாக இருந்து வந்ததால் சரியான நேரத்திற்கு வயல்களுக்கும் பண்ணைகளுக்கும் எங்களின் போக்குவரத்து சென்றடையும். இதுவரை அதிகபட்சம் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஆனதில்லை,” என கூறும் அவர் தமிழ்நாட்டின் திறன்மிகு உள்கட்டமைப்பானது தங்கள் துளிர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்தது என்கிறார். “அந்த கட்டமைப்பே நாங்கள் சொந்தமாக ஓர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான நம்பிக்கையை எங்களுக்குத் தந்தது,” எனவும் கூறுகிறார் கார்த்திக்.
அத்துடன் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் திறன்பேசியைப் (smartphone) பயன்படுத்தத் துவங்கினர். இதன் மூலம் எவ்வளவு விளைச்சல் விநியோகம் செய்யப்படுகின்றது என்றும் தேவை எவ்வளவு உள்ளது என்றும் இந்நிறுவனம் திறன்பேசியைப் பயன்படுத்தி விவசாயிகளுக்குத் தெரியபடுத்துவதற்கான வசதி பிறந்தது. இந்த தகவல் மூலம் விவசாயிகள் பயிர்களை நடுவதில் திறன்மிகு முடிவுகள் எடுத்து அதிகம் தேவை உள்ள பயிர்களை நட முடியும். “முன்னொரு காலக்கட்டத்தில் தக்காளி விலை கிலோவிற்கு எழுபதாக அதிகரித்துள்ளது என்றெல்லாம் தலைப்புச் செய்திகள் உலா வரும். தக்காளி அதிகம் பயன்படுத்தப்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று பலரும் இதனை தவறாகப் புரிந்துக் கொண்டனர். ஆனால் உண்மையில் இந்த விலை உயர்வானது பருவகால நோய்கள் பயிர்களை தாக்கியதாலேயே ஏற்பட்டது.” தென்னிந்தியா எங்கிலும் உள்ள விவசாயம் சார்ந்த மக்களும் சில்லறை வணிகம் சார்ந்த மக்களும் எண்ம நாணயப் (digital currency) பயன்பாட்டுக்கு பழகிப் போய் இருந்ததால் விநியோகச் சங்கிலியின் பண பரிவர்த்தனைகள் யாவும் விரைவாகவும் எவ்வித இடைஞ்சல் இன்றியும் நடைபெற இது உதவியது.
காலம் கை கூடி வர, இருவரும் அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து வைத்து இருந்தனர். ஆனால் அவை அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வருவது என்பது பெரும் சவாலாகவே இருந்தது. என்னதான் மளிகைக் கடை வியாபாரிகள் இந்த புதிய அமைப்பு முறையை ஆவலாக எதிர்நோக்கி இருந்து இருந்தாலும் நடைமுறைக்கு வரும் வரை அதில் எவ்வித முதலீடுகளும் செய்ய விருப்பமின்றியே இருந்தனர். இதன் விளைவாக வே கூல் தங்களது சொந்த கடைகளை துவங்க முடிவு செய்தனர். ஆனால் குழுவில் உள்ள ஒருவருக்குக் கூட சில்லறை விற்பனையில் எந்த வித அனுபவமும் இல்லை. தற்பொழுது ஒரு கேள்வி எழுந்தது—நமது கடைகளுக்கான சரியான இடங்களை எவ்வாறு தேர்வு செய்வது?
குழுவினர் துரிதமாக ஓர் யோசனை செய்து அதனை செயல்படுத்தவும் செய்தனர். தங்களிடம் இருந்த வளங்களைப் பயன்படுத்தி ஐம்பது வகையான பழம் மற்றும் காய்கறிகளை தங்கள் சரக்குந்துகளில் ஏற்றினர். வெவ்வேறு பகுதிகளில் இருந்த தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்கு வெளியே இந்த சரக்குந்துகளை நிறுத்தி வைத்தனர். “இந்த செயலானது சென்னையின் வாடிக்கையாளர்கள் நவீனப் பண்புகளுக்கு ஏற்றவாறு மாறிக் கொள்கிறவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது,” என கூறுகிறார் இந்த இளம் தொழில்முனைவோர். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் பல்வேறு கூறுகளை ஆராய்வது என்பது high involvement purchase ஆகும். இதில் பொருளின் தரம் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு இந்த தரத்தைப் பெற வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்யவும் தயாராக இருப்பர். இந்த கள ஆய்வானது சன்னி பீ (SunnyBee) எனும் சில்லறை விற்பனை கடைகளைத் துவங்க பெரிதும் உதவியது. இதில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் வயல்களில் இருந்து நேரடியாக நுகர்வோரை வந்தடைகின்றன.
விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறுவது அடுத்தக் கட்ட சவாலாக இருந்தது. இந்த சவாலானது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் வணிகக் கலாச்சாரத்தையும் உணவுப் பொருட்களை இடம்பெயர்க்கும் செயல்முறையான பெயர்ச்சியியலும் (logistics) உள்ளடக்கியதாக இருந்தது. தரமணியில் உள்ள தேசிய வேளாண் நிறுவனமும் (National Agro Foundation) திண்டிவனம் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளுடன் பணியாற்றி வந்த டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் சமுதாய பொறுப்புத் துறையும் (CSR – Corporate Social Responsibility) ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் கொண்ட குழுக்கள் (இந்த குழுக்களில் ஆயிரம் விவசாயிகள் இணைந்தப் பின்னர் இவை farmer producer company அதாவது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாக பதிவு செய்யப்படுகின்றன) உடைய விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளை தொடர்பு கொள்ள வே கூல் நிறுவனத்துக்கு உதவியாக இருந்தன.
நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆறு ஆரம்பநிலை முதலீட்டாளர்களின் ஆதரவுடன் இந்நிறுவனமானது ஓர் நிலையான வளர்ச்சிப் பெற்று வந்தது. 2017-ஆம் ஆண்டு impact investment செய்யும் அதாவது நிதி வருவாயோடு சமூகம் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் பயனளிக்கும் வகையில் முதலீடு செய்யும் அஸ்படா முதலீட்டு நிறுவனத்திடமிருந்து (Aspada Investment Company) 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிறுவன நிதி உதவியாக இந்நிறுவனம் பெற்றது.
சன்னிபீ என்ற அடையாளத்தில் இருந்து வே கூல் நிறுவனம் ஆனது தொழிலகங்களுக்கு இடையேயான வணிகத் துறைக்கு (B2B sector) ஏற்றவாறு தனது அடிப்படை சேவைகளை சற்று மாற்றி அமைத்தது. இது இந்நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை அளித்தத்தோடு உணவுப் பொருட்களின் தரத்தை நிர்வகிப்பதில் இருந்த பிரச்சனைக்கும் தீர்வாக இருந்தது. “விவசாயிகள் சுரைக்காய்களை இரண்டு அடி நீளம் வளரும் வரை விட்டு வைப்பர். ஆனால் ஒரு சாதாரண வீட்டில் அது பெரிதென கருதப்படும். எனவே சிறிதான சுரைக்காய்கள் தரத்தில் மேம்பட்டவை எனக் கருதப்படுவதால் சிறப்பு அங்காடிகளில் அவை அதிக விலைக்கு விற்கப்படும். ஆனால் பேரளவு உணவு உற்பத்தியாளர்களும் தயாரிப்பாளர்களும் பெரிதான சுரைக்காய்களையே பயன்தருபவையாக கருதுவர்” என எடுத்துக்காட்டாக ஓர் சூழலை விவரிக்கிறார்.
2017-ஆம் ஆண்டு முதல் வே கூல் நிறுவனமானது நான்கு முறை நிதி உதவிகளை பெற்றுள்ளது. சமீபத்தில் அதாவது கடந்த டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 117 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக இந்நிறுவனம் பெற்றது. நிலம், கட்டடம், தொழிற்சாலை, இயந்திரம் போன்ற முதலீட்டு சொத்திருப்புகள் குறைவாக இருக்கும் asset-light முதலீட்டு அமைப்புமுறையை தழுவி, கிடங்குகள் மற்றும் பெயர்ச்சியியல் நிறுவனங்களுடன் ஒப்பந்த முறையில் கூட்டாண்மை வகித்து இந்நிறுவனமானது மறுபடியும் அதன் அடிப்படை சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் நுகர்வோருடன் மேம்பட்ட தொடர்புகள் ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பங்களான கையடக்க வானிலை ஆய்வு கருவிகள் (portable weather station) மற்றும் குறைந்த இழப்புகளுடன் திறன்மிகு வகையில் வயலில் இருந்து வீடுகளுக்கு விளைச்சலை கொண்டு வருவதற்கென இணையத்துடன் இணைக்கப்பட்டு தானே இயங்கும் விநியோகச் சங்கிலி அமைப்பு முறைகள் (IoT-enabled supply chain automation) போன்ற வசதிகளைக் கொண்ட வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்களை இதன் நிறுவனர்கள் கைப்பற்றி வருகின்றனர்.
வே கூல் ஃபுட்ஸ் பெருவாரியாக தென்னிந்தியாவிலேயே அதன் இயக்கங்களுக்கான அடித்தளத்தை அமைத்து இயங்கி வருகிறது. மகாராஷ்டிராவில் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் விற்பனைகளில் ஐம்பது சதவீதம் தமிழ்நாட்டிலேயே இடம்பெறுகிறது. “தென்னிந்தியா மற்றும் மேற்கிந்தியா முழுவதிலும் விரிவாக்கம் செய்து பின்னர் வெளிநாட்டு வாழ் தென்னிந்திய மக்களுக்கும் எங்கள் சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் ஆகும்,” என்கிறார் இதன் துணை நிறுவனர். இதற்கிடையில் வே கூல் ஃபுட்ஸ் நிறுவனத்தின் விநியோகத்தையும் விவசாயத்தையும் ஆதரித்து வரும் தொழில்நுட்பமானது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற சர்வதேசிய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எங்கள் தொழில்நுட்பத்தை மற்றவர்கள் பயன்படுத்தும் விதமாக மென்பொருள் சேவை மாதிரியான (SaaS – Software as a service) ஓர் அமைப்புமுறையை வரும் நாட்களில் உருவாக்குவதற்கான வழிகளையும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்,” என கூறுகிறார் கார்த்திக்.
வணிகங்கள் வளங்குன்றா (sustainable) வளர்ச்சியிலும் இலாபம் ஈட்டுவதிலும் சரி சமமாக கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் கார்த்திக். வே கூல் நிறுவனத்தின் பெரும்பாலான கிடங்குகள் எவ்வித கழிவுகளை உற்பத்தி செய்யாமலும், நீரினை வீணாக்காமல் மறுபயன் செய்தும், சூரிய ஒளி ஆற்றலில் இயங்கியும் வருகின்றன. அத்துடன் இவர்களிடம் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள் மின் வாகனங்களாகவே இருக்கின்றன. இது எல்லாம் ஒரு புறம் இருக்க இந்த நிறுவனமானது பெருமளவில் விவசாயத்தில் ஈடுபட்டு இருகிறது என்றால் மறுபுறம் இதன் தலைமைப் பணியிடம் இருக்கும் நகரமோ வெகு விரைவில் காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் நகரமாக உள்ளது. கூடுதலாக இந்த நிறுவனமானது அதன் கார்பன் தடத்தை (carbon footprint) போக்கும் நோக்கத்துடன் காடுகள் உருவாக்கம், சதுப்பு நில மரங்களை இடம்பெயர்த்து நடுதல், மண் வளத்தை மீட்டெடுத்தல் போன்ற முயற்சிகளில் அரசு நிறுவனங்களுடன் இணைந்து அதன் ஒட்டுமொத்த வேளாண் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறது. “நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிறைய விலைமதிப்பற்ற வளங்கள் நம்மைச் சுற்றி உள்ளன. அவை மிக வேகமாக அளவில் குறைந்தும் வருகின்றன. அவற்றை மீட்டெடுத்து மிகைப்படுத்த நம்மால் இயன்றதை நாம் அவசியம் செய்ய வேண்டும்,” என நிறைவு செய்கிறார் கார்த்திக்.