“ஒரு நாள் நான் சின்ன பையனா இருக்க அப்போ—ஏழாம் வகுப்புல இருந்துருப்பேனு நினைக்குறேன், என் அம்மாவோட நண்பரின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன்,” என நினைவுக் கூறும் யுவன் ஏவ்ஸ் (Yuvan Aves), “நான் பெரியவனா ஆன அப்புறம் என்னவாக ஆசைபட்றேனு அங்க இருந்த யாரோ என்கிட்ட கேட்டாங்க.”
“இயற்கையியலர் (naturalist) ஆகப் போறேன்!” என ஆர்வத்துடன் பதில் கூறிய அந்த சிறுவனைப் பார்த்து அனைவரும் ஏளனமாகச் சிரிக்கத் துவங்கினர். காரணம்—அது போன்ற பணிகளில் போதுமான சம்பளம் கிடைக்காது என்ற பொதுவான பிம்பத்தினால். ஒருபுறம் இந்த சிரிப்பு சத்தம் தனது காதுகளை துளைக்குமாறு இருக்க, மறுபுறம் சிறுவனாக இருந்த யுவன் ஆழ்ந்த சிந்தனையில் தொலைந்துப் போனார். “இயற்கையியலர் ஆகனும்ங்கற என் ஆசையில சிரிக்குறதுக்கு என்ன இருக்கு?” என சிந்திக்கலானார் யுவன்.
தனது பதினாறு வயதில், வழக்கம் போல பள்ளி சென்று கற்கும் முறையானது தனக்கு ஒத்து வராது என்பதை முடிவு செய்தார் யுவன். தனது பள்ளியை விட்டு நின்ற அவர், செங்கல்பட்டில் உறைவிடப் பள்ளி (residential school) ஒன்றில் பணியில் இருந்தவாறு, தொலைதூரக் கல்வி பயிலும் முறையின் மூலம் A-லெவல் (A-levels) தகுதி சான்றிதழையும் (A-லெவல் தகுதி சான்றிதழ் என்பது விருப்பப் பாடங்களை தேர்வு செய்து படித்து பள்ளிக்கல்வி முடித்ததற்கான தகுதி சான்றிதழாக ஐக்கிய பேரரசின் கல்வி குழுமங்களால் வழங்கப்படுவது) கல்லூரிப் படிப்பையும் மேற்கொண்டார். தான் வேலைப் பார்க்கும் இடத்தின் அருகாமையில் இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கென, ஓர் ஆலோசனை வகுத்து வைத்திருந்தார். “நெல் மணிகள் வளரும் வயல்களைச் சுற்றி கற்றலை வளர்க்கும் விதமாக உங்கள் மாணவர்களை நடைப்பயணம் அழைத்து செல்லப் போகிறேன்,” என தன்னம்பிக்கையுடன் அந்த ஆசிரியர்களிடம் முன்மொழிந்தார் அவர்.
இளம் இயற்கையியலர் ஆன நம் யுவன், தனது மாற்றுக் கல்வி முறையின் மூலம் மாணவர்கள் நிச்சயமாக முன்பை விட அதிக மதிப்பெண்கள் எடுப்பர் என்று ஆசிரியர்களிடம் உறுதியளித்தார். “குழந்தைகள் அதிகப்படியாக படிப்பில் கவனம் செலுத்துவதற்கு உற்சாகம் அளிக்கும் கருவியாக வெளிப்புற சூழல் இருக்கும் என நான் நம்பினேன்,” என புன்முறுவல் செய்கிறார் அவர். அன்றாட வாழ்வின் செயல்கள் மூலம் கற்பிக்கும் முறையானது வரமாக வந்து அமைந்தது. அனைவரின் ஆச்சரியத்துக்கு இணங்க யுவனின் நடைபயணங்கள் யாவும் மாணவர்களின் மீது ஏதோ ஒருவித விளைவை ஏற்படுத்தின.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்பது பயிலரங்குகள் முடிவடைந்த நிலையில் இருக்க, பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குனர் யுவனை தொடர்பு கொண்டு பள்ளியை விட்டு நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளதாகவும் மாணவர்களின் சராசரியான மதிப்பெண்கள் உய்ரந்துள்ளதாகவும் கூறினார். இந்த செய்தியானது, கூகுள் நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் யுவன் முன்னெடுத்து இருந்த முயற்சிக்கு ஆதரவாக உதவித் தொகையையும், ஓர் பேருந்தையும், ஓர் ஒளிவீச்சியையும் (projector) கூகுள் நிறுவனத்தின் சில பலகை தனிப்பயன் கணினிகளையும் (Tablets) அந்நிறுவனத்திடமிருந்து பெற்று தந்தது. “பயம் ஏதும் இல்லாமல் குழந்தைகளிடம் கற்பதற்கு இருந்த உள்ளார்ந்த ஆர்வமும் உற்சாகமுமே என்னை மென்மேலும் ஊக்குவித்தன,” எனக் கூறுகிறார் யுவன்.
இளம்பருவத்திலேயே தனது வாழ்க்கைப் பணியை நோக்கிய ஓர் தேடலும் இயற்கை மற்றும் கல்வி மீதான ஓர் தீரா ஆர்வமும் பல்லுயிர் அறக்கட்டளை (Palluyir Trust) எனும் அமைப்பை நிறுவுவதற்கு யுவனுக்கு தூண்டுகோலாய் இருந்தன. “ஓர் இயற்கையியலர் என்றும், இயற்கை எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் என்றும் பெருமையாக என்னை நானே அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு சில ஆண்டுகள் ஆகின,” என கூறுகிறார் அவர். இந்த அமைப்பானது, இளம் இயற்கை ஆர்வலர்களுள் தன்னம்பிக்கை விதைக்கவும், சமூகத்திடமிருந்து திறன்களைப் பெற்று தத்தம் கனவுப் பாதையில் அவர்கள் சிறகுகளை விரித்து சிறகடித்து பறக்கவும் ஓர் உந்துதலாகவும் தூண்டுகோலாகவும் செயல்பட விழைகிறது.
இயற்கை சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான மெட்ராஸ் இயற்கையியலர் சங்கத்தின் (Madras Naturalist Society) மூலம் முதன்முறையாக இந்த இளம் இயற்கையியலர்களும் காட்டுயிர் ஆர்வலர்களும் சந்தித்தனர். அஸ்வதி அசோகன், ரோஹித் ஸ்ரீனிவாசன், நந்திதா ராம், சாரா மோகன், பியன்கா, நிக்கித்தா தெரேசா, சார்லட்ட் த்ரிஷிகா ஜெஃப்பிரீஸ் மற்றும் பாலகிருஷ்ணன் ராம் (Aswathi Asokan, Rohit Srinivasan, Nanditha Ram, Sara Mohan, Bianca, Nikkitha Terasa, Charlotte Trishika Jeffries and Balakrishnan Ram) ஆகிய இளைஞர்களை யுவன் சந்திக்க நேரிட, அவர்களே பின்னர் பல்லுயிரின் முக்கியக் குழுவினராக உருவாகினர். இவர்கள் பழவேற்காடு ஏரியை பாதுகாப்பதற்கென பரப்புரைகள் உருவாக்க, சென்னையின் கடலோரக்கரையை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்
கடலின் பல்லுயிர்மத்தைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கையில், அவற்றைப் பற்றி கற்பதற்கு போதுமான அளவு மூலங்களும் ஆதாரங்களும் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். கற்றலுக்கான பொருட்கள் இல்லாமல் இருக்கும் இந்த இடைவெளியானது அவர்கள் நடத்தும் ஆய்வைப் பயன்படுத்தி கற்றலுக்குத் தேவையான பொருட்களை உருவாக்க அவர்களை வித்திட்டது. இதற்கிடையில், மக்களின் மத்தியில் இருக்கும் விழிப்பின்மையை கையாளவும், அவர்களை சுற்றியுள்ள சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்களில் அவர்களை ஈடுபட வைக்கும் பகட்டு வாழ்க்கையையும், உரிமைகளின் பெயரில் இயற்கை வளங்களை சுரண்ட வைக்கும் தவறான புரிதலையும் கையாள, குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கும் இந்தக் குழுவானது கடலோர நடைபயணங்களை (shore walks) ஒருங்கிணைத்தது.
2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒட்டி—“கிட்டத்தட்ட இரண்டு மாதக் காலம் விதிமுறை ஒழுங்குகளுடனான போராட்டத்திற்கு பிறகு,” எனக் கூறுகிறார் அஸ்வதி—பல்லுயிர் அறக்கட்டளையானது சட்டம் மற்றும் நிதி சார்ந்த ஓர் நிலைப்பாட்டை அடைவதற்கென அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. தாங்கள் ஏற்கனவே செய்து வந்த செயல்பாடுகளுக்கென ஓர் கட்டமைப்பு வகுப்பதே இந்தக் குழுவின் நோக்கமாக இருந்தது.
ஒருமுறை பெசன்ட் நகர் கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தின் (Urur Olcott Kuppam) வழியே நடைபயணம் சென்றிருந்த பொழுது, அங்குள்ள மீனவ கிராமத்தின் குழந்தைகள் தங்களைப் பின்தொடர்ந்து வந்து தங்களுக்கு அருகில் மணலில் விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்தனர். இந்த நடைபயணமானது அந்த குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டியது போலும். நடைபயணம் மேலும் தொடர அந்த குழந்தைகளும் தாங்கள் நடத்திய செயல்பாடுகளில் பங்குக் கொண்டனர். “அப்பொழுது தான் அந்தக் குழந்தைகளிடம் ததும்பும் ஆர்வத்தையும் அவர்களுக்கு வரைவதில் இருக்கும் விருப்பத்தையும் நாங்கள் கண்டு உணர்ந்தோம்!” என விவரிக்கிறார் அஸ்வதி.
இந்த நிகழ்வானது பல்லுயிர் குழுவினரை பழகு பருவத் திட்டம் (apprenticeship program) ஒன்றினை உருவாக்கத் தூண்டியது. ஊரூர் ஆல்காட் குப்பத்தின் மீனவ சமூகத்தில் இருக்கும் சில ஆசிரியர்கள் இணைந்து நடத்தும் ஓர் அமைப்பான புதியதோர் எனும் அமைப்புடன் பல்லுயிர் குழுவினர் இந்த முயற்சியில் கரம் கோர்த்து செயல்படத் துவங்கினர். இந்த பழகு பருவத் திட்டமானது மீனவ கிராம குழந்தைகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட நிலவெளியான கடலோரத்தில் ஏற்படும் அனுபவங்கள் மற்றும் செயல்பாடுகளின் வழியே அவர்களின் கற்றலை வழிவகுக்கும். “ஏதேனும் ஓர் புதிய வகை கடல் உயிரினத்தை அவர்கள் பார்க்க நேரிட்டால் அது என்னவென்று அறிய முற்படுகிறார்கள். பின்னர் அதன் பெயரை எழுதவோ அல்லது அதனைப் படமாக வரையவோ நினைக்கிறார்கள்,” என்று இந்த செயல்பாடுகளின் மூலம் ஏற்படும் கற்றலை விவரிக்கிறார் யுவன்.
இத்திட்டத்தின் கிளையாக முளைத்ததே சீஷெல்ஸ் (Seashells – கடற்சிப்பிகள்) எனும் ஓர் செயல்பாட்டு புத்தகம் (activity book). நீண்ட கால பழக்கவழக்கங்களை இன்றளவும் கடைபிடிக்கும் ஊரூர் ஆல்காட் குப்பத்தின் மக்களுடனான பல்வேறு உரையாடல்கள் மூலம் எவ்வாறு அந்த நிலவெளியில் இருந்து பலவற்றைக் கற்கலாம் என்ற புரிதலுக்கு வந்தனர் பல்லுயிர் குழுவினர். “எடுத்துக்காட்டாக நீங்க ஏதோ ஒரு இடத்துல இருக்கீங்க எது வட திசைனு எப்படி கண்டுபிடிப்பீங்க?” என கேள்வி எழுப்புகிறார் யுவன். உற்சாகமூட்டும் கடலோர செயல்பாடுகளில் குழந்தைகள் ஈடுபடுவதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிக்காட்டிகளாக இருப்பதற்கு உதவும் விதமாக சீஷெல்ஸ் (கடற்சிப்பிகள்) நூலானது வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலில் உள்ள ஒவ்வொரு கடலோர செயல்பாடும் ஓர் தனித்திறனையோ அல்லது ஓர் உணர்திறனையோ வளர்க்க உதவும்.
எவ்வாறு நமது குழந்தைப்பருவத்தில் போக்கிமான் (Pokémon) எனப்படும் கற்பனை உயிரினங்கள் நிறைந்த உலகமானது, நம் ஒட்டுமொத்த கவனத்தையும் தன்வசம் ஈர்த்திருந்ததோ, அவ்வாறே நம் கவனம் முழுவதையும் ஈர்க்கும் வகையில் ஓர் அட்டை விளையாட்டினை (card game) இந்த ஆண்டின் துவக்கத்தில் பல்லுயிர்கள் பற்றிய தங்களின் ஆய்வு மொத்தத்தையும் திரட்டி இந்தக் குழுவினர் உருவாக்கினர். “நீங்க கவனிச்சு பாத்தா நம்மள சுத்தி இருக்க எல்லா உயிரினங்களும் போக்கிமான் தொடர்ல வர உயிரினங்கள் மாதிரியே திகைப்பூட்டுவதாகவும் புதிர்கள் நிறைந்ததாகவும் இருக்கும்,” என வியப்புக் கலந்த பூரிப்புடன் கூறுகிறார் யுவன்.
காட்டுயிரியலாளராக (wildlife biologist) ஆக வேண்டுமென கனவுக் காணும் ரோஹித், தி வைல்டர்நெஸ் (The Wilderness) எனப்படும் இந்த அட்டை விளையாட்டை ஆணிவேரில் இருந்து உருவாக்கியப் பயணத்தில் தான் எதிர்கொண்ட சவால்களை நம்முடன் பகிர்கிறார். இந்த விளையாட்டானது கடல், கடலோரம், சதுப்புநிலம் மற்றும் கடற்கரை ஆகிய சூழல் அமைப்புகளைத் தழுவியவாறும், சென்னையிலோ அல்லது இந்திய கடற்கரை நகரங்களில் ஏதோ ஒன்றிலோ மக்கள் தற்செயலாகக் காண நேரிடும் உயிரின வகைகளைக் கொண்டவாறும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எவ்வாறு இந்த விளையாட்டு இயங்கும் என்பதற்கு விவரங்களையும் யோசனைகளையும் சேகரிப்பதில் துவங்கி, இது குழந்தைகளுக்கு உகந்ததாக இருக்குமா என்பதற்கு இதனை ஒரு சில சுற்றுகள் விளையாடி பார்த்து, இறுதியில் அட்டைகளில் வரப்போகும் தகவல்களை வடிவமைத்தது வரை, இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் இந்தக் குழுவினருக்கு ஓர் மகிழ்விக்கும் அனுபவமாக இருந்திருக்கிறது. இந்த விளையாட்டு வெளிவந்தவுடன் குழந்தைகள் இந்த அட்டைகளை வைத்து புது புது முறைகளில் விளையாடத் துவங்கினர். “இந்த செயல்முறை உற்சாகமூட்டுவதாக இருந்தது,” எனக் கூறுகிறார் நந்திதா. “ரொம்ப ஆண்டுகளுக்கு அப்புறம் நான் நிகழ்தகவு (probability) பத்தி கத்துக்கிட்டேன்,” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் யுவன்.
மேலும் பலர் பயன்படுத்தும் விதமாக தி வைல்டர்நெஸ் அட்டை விளையாட்டானது கூடிய விரைவில் தமிழிலும் வெளிவரப் போகிறது என பல்லுயிர் குழுவினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் இந்த அமைப்பானது தனது பயணத்தில் முன்னோக்கி நகர்கையில், தனது கிளைகளை விரிவுப்படுத்துவதற்கு பதிலாக தனது வேர்களை ஆழப்படுத்துவதை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கல்வி கற்பிக்கும் முறைகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒருபுறம் இருக்க, அதனை அடிப்படையாகக் கொண்டு பல்லுயிர்களைக் கொண்ட உலகோடு பிணைந்த கற்றலின் வலிமையை திடமாக நம்புகிறது பல்லுயிர் அறக்கட்டளை.
“நான்கு சுவர்களுக்குள் அடங்கும் ஓர் வகுப்பறையானது நமது திறன்களை வெளிக்கொணர்வதில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்க முடியும்?” என வினவிக் கொண்டு தன் தோள்களை உயர்த்தி “தெரியவில்லை”, என்பது போல சைகை செய்து நம்முடனான உரையாடலை நிறைவு செய்கிறார் இயற்கையியலர் யுவன்.