தமிழ்நாட்டின் தென்முனையை அடுத்துள்ள ஓர் கடற்கரை நகரமான நாகர்கோவிலைச் சார்ந்த இளைஞரே சந்தோஷ் குமார். நாகர்கோவிலை பூர்விகமாக கொண்ட இவர் குடும்பத்தில், இவர் தந்தை பிரம்பு (cane) மற்றும் நெகிழ் கம்பியால் (wire) அறைகலன் பின்னும் கைவினைக் கலையை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். தன் இளம் பருவம் முழுவதும் தன் தந்தை அறைகலன் செய்வதை பார்த்து வளர்ந்த சந்தோஷுக்கு தன் பன்னிராண்டாம் வகுப்பில், “ஏன் நான் இந்தக் கலையை அப்பாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கூடாது?” என தோன்றியது. “அவ்வாறு கற்றால் அப்பாவுக்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் நாமும் ஏதும் பணம் சம்பாதிக்கலாம்” என அவர் நினைத்தார். அறைகலன் செய்வதில் சிறிது நாட்கள் தன் தந்தைக்கு உதவியாக இருந்த சந்தோஷ், பின்னர் அவரே தானாக ஒரு கட்டிலை மொத்தமாக சீர் செய்து கயிற்றைக் கொண்டு அதனைப் பின்னினார். “மொத்த வேலையையும் நானே எடுத்து செய்ததால் இந்த திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு புது தன்னம்பிக்கை எனக்குள் உருவாகியது,” என புன்னகைக்கிறார் சந்தோஷ்.
சந்தோஷின் பின்னல் தொழில் ஆரம்பமாகி சில நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. ஏனெனில் மற்றவர்களைப் போலவே, அவரும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, 2015-இல் ஒரு தொழில்நுட்ப வேலையில் சேர சென்னைக்கு புலம் பெயர்ந்தார். “அப்பொழுது எனக்கு அவ்வளவு பெரிய சம்பளம் ஒன்றும் இல்லை. எனவே, பகுதி நேர வேலையாக நாற்காலி மற்றும் கட்டில் பின்னும் வேலையை செய்து அதன் மூலம் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையில் வலைபதிவு (blog) ஒன்றில் எனது பின்னல் திறன்களைப் பற்றி பதிவிட்டேன்” என்கிறார் சந்தோஷ். காலங்கள் உருண்டோட அவர் அந்த பதிவினை பற்றி மறந்தே போய்விட்டார். பல்வேறு வழிகளில் கூடுதல் பணம் சம்பாதிக்க அவர் முயற்சித்துக் கொண்டு இருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், சந்தோஷும் அவர் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த அவரின் ஐந்து நண்பர்களும் புடவை வியாபாரம் செய்ய முடிவு செய்தனர். அந்த ஆண்டின் இறுதியில், இந்த புடவை வியாபாரத்தை விரிவுப்படுத்த சந்தோஷ் தன் வேலையை விட்டுவிட்டு மீண்டும் நாகர்கோவிலுக்கே திரும்பினார்.
2017-ஆம் ஆண்டை ஒட்டி சந்தோஷின் புடவை வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக் கொண்டிருக்க பல ஆண்டுகளுக்கு முன்னர் தான் பதிவிட்ட ஒரு வலைப்பதிவுக்கான பதில்கள் இப்பொழுது வரத் தொடங்கின. “நான் பல ஆண்டுகளுக்கு முன்னர் பதிவிட்ட எனது பின்னல் பதிவுக்கு பல பதில்களும், குறுஞ்செய்திகளும் வந்து குவியத் தொடங்கின!” என உற்சாகத்துடன் நினைவுக் கூறுகிறார். “எனது பின்னல் தொழிலில் என்னென்ன வகையான சேவைகள் வழங்கப்படும் என்று பலரும் என்னிடம் விசாரித்தனர்.” அவரின் பதிவு மக்களின் மத்தியில் பிரபலமடைய, அவரின் சேவைகளைப் பற்றி விசாரிக்க பலரும் அவருக்கு அழைப்பு விடுத்ததால், அவரின் அலைப்பேசியின் மணி ஒலியானது எந்நேரமும் அடித்துக் கொண்டே இருந்தது. அவர் அந்த சேவைகள் வழங்குவதை நிறுத்திவிட்டதாக தன்னை தொடர்பு கொண்டவர்களிடம மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து வந்த விதம் இருந்தார். எனினும் அவர்கள் தொடர்பு விவரங்கள் என்றைக்காவது உதவும் என நினைத்து அவற்றை எழுதி வைக்கவும் செய்தார்.
“ஒரு கட்டத்தில் வீடுத் தேடி வரும் வாய்ப்புகளை நாம் ஏன் உதறி புறம்தள்ள வேண்டும் என நான் யோசிக்கத் தொடங்கினேன்,” என சிரிக்கிறார் சந்தோஷ். எனவே, சென்னையில் தொழில்நுட்ப நிறுவனத்திலேயே இன்னமும் வேலை செய்துக் கொண்டிருந்த தன் அதே ஐந்து நண்பர்களைத் தொடர்புக் கொண்டு அவர்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் பின்னல் தொழிலாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் தொடர்புகளைப் பகிரச் சொல்லி கேட்டார். “என் நண்பர்களில் ஒருவர் தன் இரு சக்கர வாகனத்தில் நகர் முழுவதும் வீதி வீதியாக சென்று இந்த தொழிலார்களைக் கண்டறிய முயன்றார்.” சந்தோஷ் இதன் மூலம் கிடைத்த தொடர்புகளைத் திரட்டி கொண்டு தான் வைத்திருந்த வாடிக்கையாளர் பட்டியலைத் தேடி எடுத்தார். அதில் இருந்த ஒவ்வொருவருக்கும் தொடர்புக் கொண்டு தங்கள் அறைகலனைப் பின்னுவதற்கு அவர்களுக்கு ஆட்கள் ஏதும் கிடைத்தனரா என இரவு பகல் பாராமல் கேட்டறிந்தார். அவர்களுக்கு ஆட்கள் ஏதும் கிடைக்கவில்லை எனில் அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் பின்னல் தொழிலாளியைக் கண்டறிந்து அவர்களின் தொடர்பு விவரங்களை அந்த வாடிக்கையாளரிடம் பகிர்வார்.
“வாடிக்கையாளரை நேரடியாக பின்னல் தொழிலாளியுடன் இணைப்பதில் எனக்கு எந்த ஒரு பயமோ மனத்தடையோ இல்லை,” என சிரிக்கும் சந்தோஷ், “ஒருவேளை நான் தொர்புக் கொள்ளும் நபர் ஏற்கனவே ஏதேனும் பின்னல் தொழிலாளியை அடையாளம் கண்டு இருந்தால் அந்த நபரிடமே நான் அந்த பின்னல் தொழிலாளியின் தொடர்பு விவரங்களைக் கேட்பேன். அத்தோடு அந்த பின்னல் தொழிலாளியின் வேலைத் தரம் மற்றும் சேவையைப் பற்றியும் விசாரிப்பேன். ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு பின்னல் தொழிலாளியை நான் பரிந்துரை செய்துவிட்டப் பின்னர் அவர் வேலை செய்து முடித்ததும் அந்த வாடிக்கையாளரின் பின்னூட்டத்தை (feedback) அவசியம் கேட்டு அறிவேன். அந்த பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே வெவ்வேறு இடங்களில் இருக்கும் எங்கள் பின்னல் தொழிலாளர்களின் பெயர் விவரப் பட்டியல் ஒன்றினை நான் உருவாக்க ஆரம்பித்தேன்.” இந்த இளம் தொழில் முனைவோர் கொஞ்சம் கொஞ்சமாக சென்னைக்கு அப்பால் தன் தொழிலை விரிவுப் படுத்தத் துவங்கினார். அடுத்தக் கட்டமாக தமிழ்நாட்டின் எல்லைகளைக் கடந்து தன் சேவைகளை வழங்கத் துவங்கினார்.
“பெருந்தொற்று காலத்தின் போது என்னால் பெரிதும் பயணம் செய்ய முடியவில்லை என்பதால் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்புக் கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கும் பின்னல் தொழிலாளர்களின் தொடர்பு விவரங்களைப் பகிரச் சொல்வேன்,” என்கிறார் அவர். “நான் பயணம் செய்யும்போதெல்லாம் ஒவ்வொரு நிறுத்ததிலும் இறங்கி, ஒரு ஆட்டோவை எடுத்துக் கொண்டு அதன் ஓட்டுநரின் உதவியுடன் அப்பகுதியில் இருக்கும் பின்னல் தொழிலாளர்களை கண்டு அறிவேன். ஏனெனில் பலரும் கவனிக்கத் தவறும் சிறு விவரங்களைக் கூட ஆட்டோ ஓட்டுநர்கள் கவனித்து, அறிந்து வைத்திருப்பர்,” என சிரிக்கிறார் அவர். இவ்வாறு தமிழ்நாட்டின் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பெங்களூரு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் இருந்த கைவினைக் கலைஞர்களிடம் தனிப்பட்ட முறையில் உரையாடி அவர் தயார் செய்யத் துவங்கிய பெயர் விவரப் பட்டியலை மென்மேலும் மெருகேற்றினார்.
அவ்வாறே இருக்கை எனும் துளிர் நிறுவனம் உருப்பெற்றது. “2019-ஆம் ஆண்டில் பெருந்தொற்று துவங்கும் சற்று முன்னரே நான் இருக்கை எனும் பெயரை முறையாக ஒரு தொழில் அடையாளமாக தோற்றுவித்தேன்,” என கூறுகிறார் சந்தோஷ். இந்தியா முழுவதிலும் இருக்கும் பின்னல் தொழிலாளரக்ளை உள்ளடக்கிய தரவுத்தளம் (database) ஒன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை உலகின் எந்த பகுதியிலும் இருக்கும் வாடிக்கையாளர்களோடு இணைப்பதே இந்த துளிர் நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும். “வாடிக்கையாளர் மனநிறைவை உறுதிபடுத்துவது மட்டுமல்லாமல் தொழிலாளர்களும் குறைத்து மதிப்பிடப்படாமல் உறுதிப்படுத்திக் கொள்வதே மிக முக்கியமானது ஆகும். ஏனெனில் குறைத்து மதிப்பிடப்படும் செயலே நிறைய பின்னல் தொழிலாளர்கள் இந்த தொழிலை கைவிடுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.” வாடிக்கையாளர் மனநிறைவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகையில் எவ்வாறு ஒரு அறைகலன் செய்யும் செய்முறையில் அதன் பயனரான வாடிக்கையாளரையும் இருக்கை நிறுவனம் ஈடுபடுத்தும் என்பதனையும் விவரிக்கிறார் சந்தோஷ். “வேலை நடந்துக் கொண்டிருக்கும் போது புகைப்படங்கள் எடுத்து அவற்றை வாடிக்கையாளர்களுக்குப பகிர்வோம். ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை முன்கூட்டியே செய்வதற்கு இது உதவியாக இருக்கும்,” என விவரிக்கிறார் அவர். “அது மட்டுமல்லாமல் அறைகலன் செய்யும் செயல்முறையில் வாடிக்கையாளர் ஒன்றிப் போவதால் அதன் மதிப்பினை அவர்கள் மேலும் நன்றாக புரிந்துக் கொள்ள இது உதவியாக இருக்கும்.” எவ்வளவுக்கு எவ்வளவு வாடிக்கையாளர்கள் இந்த செயல்முறையில் ஆர்வமாக ஈடுபடுகின்றன்ரோ அவ்வளவுக்கு அவ்வளவு உருப்பெற்று வரும் பொருளின் தரம் கண்டு அவர்கள் மனநிறைவு அடைவர் என சந்தோஷ் நம்புகிறார்.
சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், ஊட்டி, கோடைக்கானல், பொள்ளாச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மார்த்தாண்டம், பழனி, திருவனந்தபுரம், ஆலப்புழா, பெங்களூரு, கோவா ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டவாறு ஒரு பிணையத்தை (network) இந்த துளிர் நிறுவனம் ஆனது உருவாக்கியுள்ளது. இதில் 25 பின்னல் தொழிலாளர்கள் உள்ளனர். “தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் எங்கள் சேவைகள் கிடைக்குமாறு நாங்கள் செய்துள்ளோம்,” என கூறும் சந்தோஷ், “ஒவ்வொரு நகரத்திலும், ஊரிலும் பின்னல் தொழிலாளர்களை நான் கண்டறியவில்லை எனினும் ஓரளவுக்கு பெரிய வேலைகள் உள்ள ஊர்களுக்கு பயணம் செய்து அந்த வேலைகளை எடுத்துச் செய்ய என்னிடம் பின்னல் தொழிலாளர்கள் உள்ளனர்” என்கிறார்.
இருக்கையின் பிணையம் விரிவாக, சந்தோஷின் வலைப்பதிவு மூலம் அவரைப் பற்றி தெரிந்துக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், தன் வீட்டில் சற்று சீர்குலைந்து இருந்த பழைய சாய்விருக்கையை (easy chair) சந்தோஷ் தான் பின்னிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தன் தந்தையைப் போல அறைகலன் செய்யும் தொழிற்துறையில் தானும் நுழைய வேண்டும் என்ற முடிவில் அவர் இல்லை எனினும் விடாப்பிடியாகக் கேட்டு கொண்டிருந்த அந்த வாடிக்கையாளரின் கோரிக்கையை ஏற்று அவரின் இருக்கையை பின்னிக் கொடுத்தார் சந்தோஷ். இதன் மூலம் வேறு சில வாடிக்கையாளர்கள் உடனும் உட்புற வடிவமைப்பாளர்கள் (interior designer) உடனும் ஒருங்கிணைந்து பல்வேறு வடிவமைப்புகளில் வேலை செய்யும் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.
“பெண்கள், பார்வையற்றோர், இளைஞர்கள் மற்றும் வேலைத் தேடிக் கொண்டிருந்த பல நபர்களுக்கு எனது ஓய்வு நேரங்களில் இந்தக் கலையைக் கற்றுக் கொடுத்தும் இதனை பரப்பியும் வந்துள்ளேன். இது அவர்களை வளர்ச்சி அடைய செய்வது மட்டுமல்லாமல் இந்த கலை நடைமுறையில் இருந்து அழிந்து விடாமல் நீடித்து இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது” என பெருமையாக கூறுகிறார் சந்தோஷ். அவரின் பட்டறையில் ஏற்கனவே நடந்துக் கொண்டிருக்கும் வேலைகளைக் கொண்டே சிறு சிறு குழுக்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி இந்த கலையானது கற்பிக்கப் பட்டு வந்தாலும், நிறைய நபர்களுக்கு கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு கட்டணமும் அவர்களை ஒருகிணைக்கத் தனியே ஒரு அமைப்பும் தேவை. “நாகர்கோவில் மாநகராட்சியும் சில பள்ளிகளும் எங்கள் திறனாக்க முயற்சியில் ஆர்வம் காட்டியுள்ளனர்,” என அவர் கூறுகிறார். இனி வரும் காலங்களில் மாற்றுப் பாலின சமூகத்தினருக்கும் வாழ்வாதாரம் அளித்து வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர்களைத் திறன்படுத்தி அறைகலன் பின்னும் தொழிலில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் இந்த இளம் தொழில்முனைவோர் திட்டமிட்டு வருகிறார்.
அறைகலன் மட்டுமல்லாமல் நெகிழ் கம்பியால் பின்னப்படும் பைகள் மற்றும் கூடைகள் உருவாக்குவதிலும் இருக்கை நிறுவனம் தனித்திறன் பெற்று விளங்குகிறது. “கோயம்புத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து இயங்கும் பெண்கள் சிலர் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ற வண்ணங்களில் ஒரு வார அவகாசத்தில் பைகள் பின்னி முடிப்பர்.” கைவினைக்கலைஞர்கள் ஒரு பை பின்னுவதற்கு தலா முன்னூறு ரூபாய் வரை பெறுவர். அறைகலன் பின்னலுக்கு இன்னும் அதிக ரூபாய் பெறுவர்.
தமிழ்நாட்டினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதில் பெருமைக் கொள்ளும் இந்த துளிர் நிறுவனமான இருக்கை, 2019-இல் துவங்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஐநூறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. “சொல்லப் போனால் கூகுள் தேடுபொறியில் எங்கள் நிறுவனத்தின் பெயருக்கு தமிழ் எழுத்துருவையே (font) பயன்படுத்த வேண்டும் என உறுதியாக இருந்தோம். ஏனெனில், அவ்வாறு பயன்படுத்தினாலே நாங்கள் தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறோம் என்பது வாடிக்கையாளர்களுக்குத் தெரியும்!” என சிரிக்கிறார் அவர். ஒருபுறம் வாடிக்கையாளர்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதிலும், அவர்களை அறைகலன் செய்யும் செயல்முறையில் ஈடுபடுத்துவதிலும் தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டாலும், மற்றொரு புறம் அறைகலன் பின்னும் கலையை மீட்டெடுத்து அதன் மூலம் அதிகம் பேசப்படாத பின்னல் தொழிலாளர் சமூகத்திற்கென ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக அயராது உழைத்து வருகிறார் நம் இளம் தொழில்முனைவோரான சந்தோஷ்.