சங்கக் காலத்தின் மறந்துப் போன இசைக்கருவியான யாழை, சென்ற ஆண்டு புதுபிக்கப்பட்ட நிலையில் உயிர்பித்து அதற்கு உரு கொடுத்தவரே, இளம் இசைக் கலைஞரும் நரம்பு இசைக் கருவிகள் செய்வதில் கைத்தேர்ந்தவருமான தருண் சேகர் (Tharun Sekar) என்பவர். மயில் வடிவத்தில் தலைப் பகுதி. அதிலிருந்து இசைவாக வளைந்து செல்லும் மென்மையான கழுத்துப் பகுதி. இரண்டு சிறிய இறக்கைகளால் சூழப்பட்டு இருக்கும் மரத்தால் ஆன கிண்ணம் வடிவில் பரந்து விரிந்த ஒரு அடிப்பகுதி. அதன் மேலே ஒலிப்பலகையாக செயல்படுவதற்கென போர்த்தப்பட்டிருக்கும் போர்வைத்தோல் எனப்படும் ஒரு வகையான தோல். மெருகேற்றப்பட்ட சிவப்பு நிற தேவதாரு மரத்தின் மரத்தைக் கொண்டு செதுக்கி வடிவமைக்கப்பட்டு, அலங்காரமான பித்தளை தாங்கியின் உதவியுடன் உயிர் பெற்று நிற்கும் இந்த அழகான கருவியே தருண் சேகர் வடிவமைத்த யாழ் ஆகும்.
அந்த யாழின் கழுத்துப் பகுதிக்கும் இறுக்கமான போர்வைத் தோலுக்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும் நரம்புகளை மீட்டி, சில மாதங்களுக்குப் பிறகு அழகான இயற்கைக் சூழலில் ஓர் மென்மையான பாட்டினை மீட்டுகிறார் தருண். பின்னர் இந்த பாட்டே இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த இசைக்கருவியைக் கொண்டு உலகிலேயே முதல் முறையாக ஆவணப்படுத்தப்பட்ட யாழிசை எனும் பெயர் பெறுகிறது. அழகி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாட்டினை தருண், ராப் இசைக் கலைஞர் சயான் சாஹீர் (Syan Saheer) மற்றும் தி நோமாட் கல்ச்சர் (The Nomad Culture) எனப்படும் சிவசுப்பிரமணியன் (Sivasubramanian) எனும் கலைஞர் ஆகிய மூவரும் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளனர். பழைய நினைவுகளை நினைவுக்கூறும் வகையில் ஒரு மெல்லிய இசை பின்னிசையாக நம் காதுகளை வருட, சங்கக் காலத்தைச் சார்ந்த ‘அழகி’ என்ற ஒரு அழகான, வலிமையான பெண்மணியின் மீட்சியைப் பற்றி இவர்கள் மூவரும் பாடுகின்றனர். யாழ் எனும் கருவி புதுப்பிக்கப்பட்டு மீண்டும் உருவெடுத்திருப்பதற்கு உவமையாகயும் இவர்கள் பாடலின் கரு திகழ்கிறது.
புதுப்பிக்கப்பட்ட இந்த யாழின் செயல்முறை ஆனது அறிஞர்களிடம் உரையாடுவது, தமிழ் இலக்கியங்களில் இருந்து யாழ் பற்றிய குறிப்புகளை தேடி எடுப்பது, அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த மாதிரிகளை ஆய்வது போன்ற பல செயல்களை உள்ளடக்கிய தீவிர ஆராய்ச்சி நிறைந்த ஒன்றாக இருந்தது.
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்” என்று திருக்குறளில் இனிமைக்கு உவமையாக யாழிசை கூறப்பட்டுள்ளது போலவே பல இலக்கியங்களும் யாழே இனிமையான இசைக் கொண்ட கருவி என யாழிசையைப் பறைசாற்றியுள்ளன. தற்பொழுது தருண் சேகர் ஆவணப்படுத்தியுள்ள யாழிசை ஆனது இலக்கியங்கள் கூறிய யாழிசையின் பெருமைகள் அனைத்தையும் உண்மையாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
“பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழு, எரிக் க்ளாப்டன் (Eric Clapton) மற்றும் ஜிம் மோரிஸன் (Jim Morrison) போன்றவர்களின் இசையைக் கேட்டே நான் வளர்ந்தேன்,” என ஆரம்பக் காலத்தில், மதுரையில் தனது உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் பயிலும் போது இசை மீது தனக்கு ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தவற்றை நினைவுக் கூறுகிறார் தருண். வெவ்வேறு கிதார்களை (Guitar) பதம் பார்த்த தருணுக்கு ஒரு வகையான கிதாரை வாசிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவே இல்லை. அதுவே ஹவாயன் லாப் ஸ்டீல் கிதார் (Hawaiian Lap Steel Guitar). “அந்தக் காலத்தில் அது இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை. இணையத்திலும் அது விற்கப்படவில்லை!” எனக் கூருகிறார் அவர். எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை என்பதால் அவர் மனம் தளரவில்லை. மாறாக கூடுதலாக ஆர்வமடையவே செய்தார். வலையொளியில் (YouTube) ஒரு காணொளியைக் கண்டு, உள்ளூர் கடைகளில் தேடி அலைந்து, ஒரு சில இணையத்தள விற்பனையாளர்களை தொடர்புக் கொண்டு மூலப் பொருட்களைத் திரட்டி தானே ஒரு தனித்துவமான லாப் ஸ்டீல் கிதாரை உருவாக்கினார். “நீங்களே தேடி அலைந்து ஒரு மரத்தினை வாங்கி, அதற்கு வடிவம் கொடுத்து, அதனை இழைத்து ஒரு கருவி உருவாக்கிய பின்னர் அதில் இருந்து உருவாகும் இசையைக் கேட்பது என்பது ஒரு தனி மாதிரியான விலை மதிக்க முடியாத உணர்வாகும்” எனப் புன்னகைக்கிறார் தருண்.
பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்ததன் விளைவாகக் கிடைத்த செயல் சார்ந்த வடிவமைப்பு அனுபவமானது ஓசூரில் இவரை கட்டடக்கலை இளங்கலைப் படிப்பை தேர்வு செய்ய வழிவகுத்தது. ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் அவர் மதுரை வருவதுண்டு. அவ்வாறு வரும்போது எல்லாம் ஒரு புதிய இசைக்கருவியை அவர் செய்வார். இந்த செயல்முறையில் அவர் ஊறிப் போய் இருந்தார். ஆரோவில்லில் (Auroville) அவர் மேற்கொண்ட கட்டடக்கலைக்கான பணிக் கல்வியே (Internship) அவரின் இசைப் பணிவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. தனக்கு இருக்கும் தீரா ஆர்வத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லுவதற்கு சரியான இடத்தில் தான் இருப்பதாக எண்ணினார், தற்கல்வி முறையில் இசைக் கருவிகள் செய்யக் கற்றுக் கொண்ட நம் இசைக்கருவி வடிவமைப்பாளர் தருண். “சேக்ரட் க்ரோவ்ஸில் (Sacred Groves) பணிக் கல்வி பயிற்சியில் இருக்கும்போது நாங்கள் வழக்கமாகவே சீக்கிரம் வேலை செய்யத் துவங்கி மதியம் இரண்டு மணிக்கே வேலை செய்து முடித்து விடுவோம்,” என விவரிக்கும் தருண், “நான் வேலை செய்து முடித்தப் பின் ஆரோவில்லின் பிரபலமான ஒரு இசைக் குழுவான ஸ்வரம் (Svaram) இசைக் குழுவின் நிறுவனரான ஆரீலியோ (Aurelio) என்பவரிடம் சென்று உரையாடுவேன். அதன் விளைவாக வாரந்தோறும் அங்கு நடக்கும் ஆரோவில்லின் சமூக கூட்டம் ஒன்றில் நரம்பு இசைக்கருவிகளின் மீது இருக்கும் எனது தீராப் பற்றினைப் பற்றியும் அவற்றை எப்படி செய்யத் துவங்கினேன் என்பது பற்றியும் விரிவுரைக் கொடுக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. நானே உருவாக்கிய பான்ஜோ (Banjo) மற்றும் உக்குலேலே (Ukulele) இசைக் கருவிகளையும் அவர்கள் முன் வாசித்துக் காண்பித்தேன்,” என உற்சாகம் பொங்க கூறுகிறார். அப்பொழுது தான் பல விதமான கிதார்களை செய்வதில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் அனுபவம் கொண்ட எறிசா நியோஜி (Erisa Neogy) என்பவருக்கு ஆரீலியோ, தருணை அறிமுகம் செய்து வைத்தார். திகைப்பும் பூரிப்பும் கலந்த ஒரு உற்சாகத்துடன் இந்த ஆசானின் பட்டறையில் இசைக்கருவி வடிவமைக்கும் திறனைக் கற்றுக் கொள்ள ஆறு மாதங்கள் அவரிடம் பணிப் பயிற்சியில் (apprenticeship) ஈடுபட்டார் தருண்.
2019-இல் கட்டடக்கலையில் பட்டம் பெற்று கல்லூரி படிப்பை முடித்த தருண் ஒத்தசெவுரு என்றப் பெயரில் தன் இசைக் குழு நண்பரான பிரவேக்கா ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து இசை அமைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வந்த வண்ணம் இருந்தார். தான் படித்தப் படிப்புக்கு ஏற்றவாறு ஒரு கட்டடக்கலை நிறுவனத்தில் வேலைக்குச் சேராமல் சென்னைக்கு புலம் பெயர்ந்த தருண் உரு (உருவம் என்ற சொல்லில் இருந்து பெறப்பெற்றது) கஸ்டம் இன்ஸ்டிருமென்ட்ஸ் (Uru Custom Instruments) என்றப் பெயரில் இசைக்கருவிகள் செய்யும் நிறுவனம் ஒன்றைத் துவங்கினார். இந்த துளிர் நிறுவனமானது இந்தியாவின் இசைக் கருவிகளை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் (custom-designing) கொடுக்கும் முனைப்புடன் இயங்கி வருகிறது. “கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கிதார்கள் செய்து வந்த அனுபவத்தில் நான் ஒன்றை தெரிந்துக் கொண்டேன். இந்திய இசைக்கருவிகள் அவ்வளவு பிரபலமாகவில்லை. ஏனெனில் அவற்றின் எதிரிணையான மேற்கத்திய இசைக் கருவிகளைப் போல இவை காலத்திற்கேற்ப மாற்றம் அடையவில்லை,” என விவரிக்கிறார் தருண். பல நபர்களிடம் இதனைப் பற்றி உரையாடிய போதே யாழ் என்ற ஒரு இசைக்கருவியைப் பற்றி அவர் தெரிந்துக் கொள்ள நேர்ந்தது. அந்த இசைக் கருவியைப் பற்றிய நிறைய தகவல்கள் புதிர் போல இருக்க அது அவரை மேலும் ஆர்வமூட்டியது. “நான் செய்யப் போகும் யாழ் ஆனது முடிந்தவரை சங்கக் கால யாழ் எவ்வாறு ஒலித்து இருக்குமோ அதனைப் போலவே ஒலிக்க வேண்டும் என்பதிலும் எளிதாக பராமரிக்கும் விதம் அதன் வடிவமைப்பில் சில நவீன அம்சங்கள் இருக்க வேண்டும் எனவும் திடமாக இருந்தேன். “
சங்க இலக்கியங்களில் யாழ் செய்வதற்கென படங்கள் கொண்டு இருக்கும் பிரத்தியேகமான பயனர் கையேடு எதுவும் இல்லை. “சபையில் எவ்வாறு யாழ் வாசிக்கப்பட்டது என்பதைப் பற்றி விவரமாக சில பத்திகள் இருக்கும். அல்லது யாழ் இசைக்கும் போட்டி ஒன்றினைப் பற்றி விவரிக்கும் ஒரு படலமானது எவ்வகையான பொருட்களைக் கொண்டு யாழ் செய்யக் கூடாது என்பதனைப் பற்றிய குறிப்புகளை கொண்டு இருக்கும்,” என்று சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியில் யாழ் பற்றி இருக்கும் பாடல்களை சுட்டிக் காண்பித்து நமக்கு விவரிக்கிறார். தருண், யாழின் வடிவமைப்பில் தற்காலத்துக்கென சிறு மாற்றங்களை தானே கொண்டு வந்துள்ளார். “ஒலியின் தரத்தை நிலைநிறுத்த, யாழின் கிண்ணம் போன்ற பகுதியின் மேல் இருக்கும் போர்வைத்தோலை அடிக்கடி அகற்றி சூடாக்க வேண்டும். நாங்கள் நவீன பயனுக்கு ஏற்றவாறு எளிமைப்படுத்திய நுட்பங்களுள் இதுவும் ஒன்று. நாங்கள் செய்யும் ஒலிப்பலகையை திருகியைக் (spanner) கொண்டே இறுக்கி விடலாம். ஒவ்வொரு முறையும் அகற்றி சூடாக்க வேண்டும் என்பதில்லை.”
தன் கனவுத் திட்டம் பெறப்போகும் அளாவிய வரவேற்பினை நம் இளம் இசைக்கருவி வடிவமைப்பாளர் அறிந்திருக்கவில்லை. “பல நபர்களுக்கு யாழ் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்பதனை நான் உணரவே இல்லை!” என திகைப்புடன் விவரிக்கிறார் தருண். அவர் இந்த உண்மையை உணர்வதற்கு வெகு முன்பே சர்வதேசிய அளவிலான ஊடகம் அவரின் திறமையை மக்களுக்கு வெளிக்கொணர ஆரம்பித்தது. இணைந்து செயலாற்றுவதற்கு கோரிக்கைகளும் உலகெங்கிலும் இருந்து யாழ் செய்வதற்கான கோரிக்கைகளும் அவருக்கு வந்த வண்ணம் இருந்தன. சாம்பலில் இருந்து மீண்டு எழும் எரிப்பறவையைப் போல மீண்டு எழுந்திருக்கும் ஹார்ப் (Harp) இசைக்கருவியைப் போல இருக்கும் இந்த யாழினை வாங்க கிராமி விருது பெற்ற இசைக்கலைஞர்களில் இருந்து தமிழ் அறிஞர்கள் மற்றும் கலை நிபுணர்கள் வரை பெரும் ஆர்வம் காட்டி வந்த விதம் இருந்தனர்.
இணையம் கைக் கொடுக்க இளம் தொழில் முனைவோரான தருணுக்கு வானமே எல்லையாக இருந்தது. ஆனால், கட்டுக்கு அடங்காத பிரபலமும் புகழும் அதற்கே உரிய சவால்களுடனே வந்தன. புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தருண் செய்த யாழினை தான் செய்தது என தருணின் இந்த பல மாதங்கள் உழைப்புக்கு உரிமை எடுத்துக் கொள்ள, அப்பொழுது தான் தருண் வடிவமைப்பு காப்பு சட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். இந்நிகழ்வினை பாடமாக எடுத்துக் கொண்ட தருண், தனது வடிவமைப்பினை உரு நிறுவனத்தின் கீழ் பதிவு செய்தார்.
“ஒரு இசைக்கருவியை செய்வது மட்டும் போதாது. அது தழைத்து இருப்பதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் ஒரு சூழல் அமைவு தேவை,” என கூறும் தருண், “அதனாலேயே நாங்கள் வகுப்புகள் எடுக்கவும் முடிவு செய்துள்ளோம். துவங்குனர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு வகை யாழினை நாங்கள் வடிவமைத்து வருகிறோம். இதனால் பலரும் யாழ் வாசிக்கக் கற்றுக் கொள்ள முன்வருவர்.” இது மட்டுமல்லாமல் யாழின் இசையினை எட்டுத் திக்கும் பரப்பும் செயல்களில் தனக்கு உதவி செய்ய ஒட்டுமொத்த தயாரிப்பு குழு ஒன்றினை தருண் தன் வசம் வைத்துள்ளார். “யாழினை உருவாக்கும் செயல்முறையை பற்றிய ஆவணப்படம் (documentary) ஒன்றினை இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் வெளியிட உள்ளோம். மேலும் யாழினை மீட்டி பன்னிரண்டு பாடல்கள் அமைத்து அதனை ஒரு தொகுப்பாக (album) நாங்கள் மேற்கூறிய ஆவணப்படத்தோடு வெளியிட உள்ளோம்.”
உரு நிறுவனத்தில் இசைக்கருவிகளை வடிவமைப்பதற்கென தருணுக்கு உதவியாளர்களாக இரண்டு இளைய வடிவமைப்பாளர்கள் உள்ளனர். மூணார், அந்தமான், பாண்டிச்சேரி, ஜெர்மனி மற்றும் பல்வேறு உள்ளூர் சந்தைகளில் இருந்தும் யாழ் உருவாக்குவதற்கு தேவையான மூலப் பொருட்கள் பெறப்படுகின்றன. “ஒரு இடத்தில் கிடைக்கும் பொருள் அதே இடத்தில் மீண்டும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இது இயல்பான ஒரு விஷயமே,” என சிரிக்கும் தருண், அரிதான பொருட்கள் மற்றும் பாகங்களை தேடி அலைவதில் இருக்கும் சுவாரஸ்யத்தை அழகாக விவரிக்கிறார்.
முதல் யாழினை உருவாக்குவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்ட உரு நிறுவனமானது தற்பொழுது அதே ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட நான்கு யாழ்களை வாடிக்கையாளர்களின் விருப்பிற்கேற்ற வகையில் உருவாக்கி விடுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட பன்னிரெண்டு தருவிப்புகளை (order) ஏற்றுள்ளது உரு நிறுவனம். அதில் வாடிக்கையாளர் ஒருவரின் விருப்பிற்கேற்ற வகையில், ஏழு அடி உயர பேரி யாழ் என்ற 29 நரம்புகளை உடைய ஒரு யாழும் அடங்கும். “அடுத்தக் கட்டமாக இசைக்கருவிகளை பெருமளவில் தயாரிக்கும் (mass manufacture) திட்டம் இருப்பினும் நாங்கள் ஆழம் பார்த்து பின்னரே இந்நிறுவனத்தை விரிவாக்க முனைகிறோம்,” எனக் கூறும் இதன் நிறுவனர், கோடம்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உரு வடிவமைப்பு பட்டறையை, இனிவரும் காலங்களில் உற்பத்தியின் அளவினைப் பொருத்து மதுரை அல்லது தேனிக்கு மாற்றலாம் என்கிறார்.
வடிவம் மற்றும் நரம்புகளின் எண்ணிக்கையைப் பொருத்து வகைமைப்படுத்தப்பட்டுள்ள வெவ்வேறு வகையான யாழ்களை வாடிக்கையாளரின் விருப்பிற்கேற்ப வடிவமைத்து உருவாக்கிக் கொடுக்க முயன்று வருகிறது உரு இசைக்கருவி நிறுவனம். “நாங்கள் இன்றளவும் ஆராய்ச்சி செய்தும் வளர்ச்சி அடைந்து கொண்டும் வருகிறோம். நிறைய இசைக்கருவிகள் செய்யும் பணியில் இறங்கும் முன்னர் முதலில் ஒரு இசைக்கருவியை பெருமளவில் தயாரிப்பதில் வல்லமைப் பெற வேண்டும் என நினைக்கிறோம்,” என கூறுகிறார். “எனினும் பஞ்சமுக வாத்தியம் எனப்படும் ஐந்து முகங்கள் கொண்ட ஒரு வகையான பழமை வாய்ந்த தாளக் கருவியை நாங்கள் மீண்டும் உருவாக்க செயல்பட்டு வருகிறோம்,” என உற்சாகத்துடன் கூறும் அவர், அதன் முதல் மூலப்படிமம் (prototype) இந்த ஆண்டு இறுதியில் தயாராகிவிடும் என்கிறார். உருவின் பாதையில் இது ஒரு ஆரம்பமே. தொடக்கக்காரர்களுக்கு உகந்த இந்திய இசைக்கருவிகளை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, அரிதான இந்திய இசைக்கருவிகளை மீட்டெடுத்து இந்தியாவில் இசைக்கென இருக்கும் சூழல் அமைவினை மாற்றுவதே உருவின் கனவாகும்.