THE PORTAL INTO ENTREPRENEURSHIP IN TAMIL NADU

அனைவரும் நகர்ந்து செயல்படுவதற்கான ஓர் கனவு

“பெரியவனா ஆன அப்புறம் நீ என்ன ஆகணும்னு ஆசை படற நைத்ரோ?” என தன்னைக் காண வந்த மற்ற பெரியவர்களைப் போலவே இன்னொருவரும் சிறுவனாகிய நைத்ரோவனிடம் (Naidhrovan) கேட்க அதற்கு அந்த சிறுவனோ “நிலம் நீர் ரெண்டிலையும் போற மாதிரியான பறக்குற கார் ஒன்னு செய்யணும்!” என கண்களில் வியப்பு கலந்த பூரிப்புடன் கூறுகிறான். மற்ற அனைத்து குழந்தைகளும் மருத்துவர்களாகவும் விண்வெளி வீரர்களாகவும் ஆசைப் பட்டு கொண்டிருக்கும் வேளையில் நைத்ரோவனுக்கு கண்டுபிடிப்புகள் மீதே அதீத ஆர்வம் இருந்து வந்தது.

நம்மில் பெரும்பாலானோருக்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்வது என்பது ஓர் பெரிய பொருட்டாக இருக்காது. ஆனால் அன்றாட வாழ்வில் ஒருவர் எவ்வாறு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்நது செயல்படுவது என்பது பற்றி நைத்ரோவன் அதிகம் சிந்திப்பதுண்டு. இந்த இளம் தொழில்முனைவோருக்கு தசை வலுவிழப்பு (muscular dystrophy) இருப்பதாக அவரின் சிறுவயதில் கண்டறியப்பட்டது.

இந்த மருத்துவ ஆய்வுறுதிக்குப் பின்னர் அவரின் பள்ளிக்கூடம் அவருக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தது. அவர் செல்வதற்கு எளிமையாக இருப்பதற்கென தரைத்தளத்தில் இருந்த வகுப்பறைகளுக்கே அவர் நியமிக்கப்பட்டார். எனினும் அவரின் இந்த நிலைமையானது உயர்நிலை வகுப்பில் தனது விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதில் இடையூறாக அமைந்து தனது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்தது. “நான் அறிவியல் துறையில் பணி செய்ய விரும்பி அந்தப் பாடத்தையே தேர்வு செய்தேன்,” என கூறும் அவர் எவ்வாறு மறைந்த தனது தந்தை தன்னுடைய பொறியாளர் கனவுக்கு மேற்கோளாக இருந்தார் என்பதை நினைவுக் கூறுகிறார். அறிவியல் பாடத்தை தேர்வு செய்தால் அடிக்கடி வகுப்பறையில் இருந்து வெவ்வேறு ஆய்வுக் கூடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் மற்றவர்களைப் போல் அவரால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக நகர முடியாது என்பதால் அறிவியல் பாடத்துக்கு பதிலாக வணிகவியல் பாடத்தை அவர் தேர்வு செய்யுமாறு அறிவுரைக்கப்பட்டார்.

தனது கல்லூரி பருவத்தின் போதெல்லாம் அன்றாடம் ஓர் நடைமுறையை அவர் கடைப்பிடித்து வந்தார். தவறாமல் தினமும் காலை ஆறில் இருந்து பத்து மணி வரை உடற்பயிற்சிக்கும் சிகிச்சை அமர்வுகளுக்கும் அவர் சென்று வந்து விடுவார். தனது பியானோ வகுப்புகளுக்கும் மாயா பயிலகத்தில் தான் இணைந்து இருந்த அசைப்பட (animation) பயிற்சி வகுப்புகளுக்கும் நேரம் ஒதுக்கும் வகையில் மாலை நேரக் கல்லூரியில் அவர் சேர்ந்திருந்தார்.

ஒருபுறம் நாளுக்கு நாள் நைத்ரோவனின் திசுக்கள் அதிகமாக செயலிழந்து கொண்டிருந்தாலும் மறுபுறம் அதனை மீறியும் அவரின் கனவுகள் வானளவு வரை பெருகி கொண்டே தான் இருந்தன. கல்லூரி படிப்பு முடிந்த பின்னர் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட நைத்ரோவன் நான்கு மாத கால பதிகணினியியல் பொறியியல் (embedded engineering) படிப்பில் இணைந்தார். இதயத் துடிப்பலை அளவுகளை (ECG) அவரின் தந்தையின் நிறுவனம் உற்பத்தி செய்து வந்தது. அந்நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்து நடைமுறை அனுபவத்தை பெறலாம் என முடிவு செய்தார் நைத்ரோவன். இந்த பணியானது தனது தன்னம்பிக்கையை அதிகரித்ததோடு குறியீடிடலில் (coding) தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் வெளிக் கொண்டு வந்தது.

2011-ஆம் ஆண்டில் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை (TANCET) எதிர்கொண்ட அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை (MBA) படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தார். அவரின் இறுதி ஆண்டு செயல் திட்டத்தில் நிறுவன வளத்தை திட்டமிடுவதற்கான Enterprise Resource Planning (ERP) எனும் ஒருவகை வணிக மேலாண்மை மென்பொருளுடனான அவரது பயணம் துவங்கியது. “நானும் எனது நண்பரும் சாராவினைஞர்களாக (freelancer) பணிகளை எடுத்து செயல்படுவோம்,” என நினைவுக் கூறும் அவர், “எனினும் குறியீடிடலை ஒரு பொழுதுப்போக்காகவே நான் கற்றேன். அதனைப் பணியாக என்னால் மேற்கொள்ள முடியவில்லை,” என்கிறார்.

2013-ஆம் ஆண்டு தனது பட்டமளிப்பு விழா நடக்கவிருக்கும் வேளையில் நைத்ரோவன் கீழே விழுந்ததில் தனது கணுக்காலில் படுகாயமடைந்தார். அவருக்கு ஏற்பட்ட இந்த காயமானது அவரது தன்னம்பிக்கையை சுக்கு நூறாக்கியது. “தசை வலுவிழப்பு உள்ளவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவர்களின் உடலில் கூடுதல் சிக்கல்கள் உருவாகும். அந்த நிகழ்வுக்குப் பின்னர் பல மணி நேரம் உட்கார்ந்த பிறகு நான் நகர வேண்டுமென்றால் கை கால்களை நீட்டி சில பயிற்சிகள் செய்ய வேண்டி இருந்தது,” என தான் எதிர்கொண்ட மன உளைச்சலைப் பற்றி விவரிக்கிறார் நைத்ரோவன்.

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரின் தந்தையும் கீழே விழுந்து அவரைப் போலவே காலில் படுகாயமடைந்தார். எனவே அவரது தந்தை சக்கரநாற்காலிகளுக்கு மாற்று தேடிக் கொண்டு இருக்கும்போது தாமாகவே தமக்கு ஓர் வண்டியை வடிவமைத்துக் கொள்ள முடிவு செய்தார்.  இந்த வண்டியானது கையடக்கமாகவும், உயரத்தை கட்டுப்படுத்தும் ஓர் தானியங்கி பாகத்துடன் இருந்ததோடு (height automation jockey) அதனைப் பயன்படுத்துவோர் எந்த திசையில் வேண்டுமானாலும் ஏறியும் இறங்கியும் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. சக்கரநாற்காலிகளைப் பயன்படுத்துவோருக்கு யாரேனும் ஒருவரின் உதவி தேவைப்படும். ஆனால் இந்த வண்டியைப் பயன்படுத்துபவர்களோ எவர் ஒருவரின் உதவியும் இல்லாமல் சுயமாகவே அதனை இயக்கிக் கொள்ளும் வண்ணம் இருந்தது. இந்த அம்சமானது அதன் பயனர்களுக்கு ஊக்கமளித்ததோடு அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அளித்தது.

“கிட்டத்தட்ட ஓர் விளையாட்டு பொம்மையைப் போலவே அந்த வண்டி இருந்தது! ஓர் சொடுக்கியை (switch) சொடுக்கிவிட்டால் போதும். அந்த வண்டியைக் கொண்டு உல்லாசமாக எனது வீட்டினுள் என்னால் வலம் வர முடியும்,” என சிரிக்கும் நைத்ரோவன் எவ்வாறு அந்த வண்டியைப் பயன்படுத்த ஆரம்பித்தவுடன் தனது கவலைகள் யாவும் நீங்கத் துவங்கின என்பதனை நினைவுக் கூறுகிறார். மிகப்பெரிய பாரம் ஒன்று நீங்கியதைப் போல உணர்ந்தார் அவர். தற்பொழுது அவரால் மறுபடியும் தனது பணியின் மீது கவனம் செலுத்த முடிந்தது.

மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களுக்கான தேசிய அமைப்பான NASSCOM மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பெற்று தரும் ஓர் அமைப்பில் இணைந்தார் நைத்ரோவன். அந்த அமைப்பில் இருந்த ஒருவர் நைத்ரோவனின் தற்குறிப்பைப் (resume) பார்த்து விட்டு, “உங்களைப் பாத்தா எல்லாத்துலயும் திறமைசாலி போல தெரியுதே. நீங்க ஏன் சுயமா தொழில் ஒன்னு ஆரம்பிக்கக் கூடாது?” என்றார்.

என்னதான் தொழில்நுட்பத் துறையில் இருக்கும் பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றும் விதம் ஓர் பெருநிறுவன வேலையில் இடம்பெற வேண்டுமென்பதே நைத்ரோவனின் வாழ்நாள் கனவாக இருந்தாலும் தொழில் ஒன்று துவங்கும் யோசனை என்பது திடீரென அவரை பெரிதும் கவரத் துவங்கியது. “அசைப்படம், இசை மற்றும் குறியீடிடல்,” என தனது விரல்களை விட்டு எண்ணும் அவர், “இவை மூன்றிலும் அவ்வளவாக எனக்கு படைப்பாற்றல் திறன் இல்லை,” என சிரிக்கும் அவர் தொடர்ந்து தனது துளிர் நிறுவனத்தின் பயணத்தைப் பற்றி விவரிக்கத் துவங்குகிறார்.

தனக்கு பரிச்சயமான நிறுவன வளத்தை திட்டமிடுவதற்கான Enterprise Resource Planning (ERP) எனும் மென்பொருளை மென்மேலும் மேம்படுத்த பணியாற்றினார். ஒரு தொழிலை ஆரம்பக் கட்டத்தில் துவங்கி படிப்படியாக வளர்ச்சி பெறச் செய்ய இந்த மென்பொருளானது வழிவகுப்பதோடு அந்த செயல்முறையில் இந்த மென்பொருளும் உடனிணைந்து வளர்ச்சி பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நைத்ரோவனின் இந்த யோசனையானது அவரை 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற கொலிஷன் கான்ஃபரன்ஸுக்கு (Collision Conference) கொண்டு சென்றது. அங்கே அவர் பல்வேறு வழிகாட்டிகளையும் மூதலீடு செய்ய தயாராக இருந்த முதலீட்டாளர்களையும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அவர்களை தொடர்பு கொண்ட அவர் மீண்டும் மீண்டும் ஒருசேர ஒரே பதிலையே அவர்களிடமிருந்து கேட்க நேர்ந்தது—முதலில் உங்கள் நிறுவனத்தின் இயக்கத்தை தீவிரப்படுத்திவிட்டு பின்னர் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று. தொழிலை மேம்படுத்த ஒரு சில உள்ளுறை பணியாளர்களை (intern) அவர் பணியமர்த்தினார். இருப்பினும் அவரின் விடாமுயற்சியானது எவ்வித பயனும் அளிக்கவில்லை.

என்ன செய்வதென்று அறியாத நிலையில் அவர் இருக்க திடீரென தனது தந்தை வடிவமைத்த வண்டியை அவர் கூர்ந்து கவனித்தார். பல நிலப்பரப்புகளில் செல்லும் வண்டி ஒன்றினை தான் உருவாக்க வேண்டுமென்ற அவரது சிறுவயது கனவானது ஏன் கனவாகவே இருந்து காற்றில் கரைந்துப் போவதற்கு பதிலாக நிஜமாகக் கூடாது என்று எண்ணினார்.

உடனடியாக அவர் வங்கிகளில் கடனுதவிகளுக்கு விண்ணப்பிக்கத் துவங்கினார். “மாற்றுத்திறனாளிகளை ஊக்கமளிக்கும் விதமாக பிரதமர் திட்டம் ஒன்றின் (Prime Minister’s Empowerment of Persons with Disabilities) கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கென 25% மானியம் இருந்தது,” என அவர் விவரிக்கிறார். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்னரும் மாவட்ட ஆட்சியரிடம் தனது கடனுதவி விண்ணப்பத்தை முன்வைத்தப் பின்னரும் சரியாக ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் தனது கடனுதவியின் ஒரு பகுதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பல்திறன் படைத்த ஆறு நபர்கள் கொண்ட குழுவுடன் பிப்ரவரி மாதம் 2016-ஆம் ஆண்டு நப்பின்னை (Nappinnai) நிறுவனம் துவங்கப்பட்டது. இந்நிறுவனமானது நைத்ரோவனின் தந்தை உருவாக்கிய வண்டியை மறுகட்டமைப்பு செய்யப் போவதோடு அதனை மின்சாரமயமாக்கி மின்சார வாகனத் துறையினுள் அடியெடுத்து வைக்கவும் முடிவெடுத்தது. ஆறு மாதங்களுக்குள் ஏழு முன்வடிவங்கள் (prototype) தயாராகின. “வெவ்வேறு பெயர்போன கல்வி நிறுவனங்களில் இருந்து பல்வேறு மாணவர்கள் எங்கள் நிறுவனத்தில் உள்ளுறை பணியாளர்களாக வேலை செய்ய ஆர்வம் காட்டினர்,” என கூறும் அவர் எவ்வாறு ஆறு நபர் கொண்ட தனது குழுவானது ஆண்டு இறுதியில் நாற்பது நபர்கள் கொண்ட குழுவாக விரிவாக்கம் அடைந்தது என்பதைப் பற்றி விவரிக்கிறார்.

நிறுவனம் வளர்ச்சி பெற துவங்கியவுடன் தொடர்ந்து புதிய சவால்கள் வரத் துவங்கின. ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த நிறுவனம் ஒன்று நப்பின்னை நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்நிறுவனத்தின் இயக்கங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக துவக்கத்தில் கூறியது. ஆனால் இறுதியில் அந்நிறுவமானது நப்பின்னை நிறுவனத்தின் வடிவமைப்பை நகலெடுத்து உற்பத்தி செய்து தன் பெயரில் விற்பனை செய்யத் துவங்கியது. “குழுவில் பெரும்பாலானோர் அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை நம்பியே இருந்தனர்,” எனக் கூறும் நைத்ரோவன், “ஏனெனில் பெரும்பாலானோர் ஒன்று கல்லூரி முடித்த இளம் பட்டதாரிகள் ஆகவோ அல்லது உள்ளுறை பணியில் இருந்த மாணவர்களாகவோ இருந்தமையால் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் கட்டாயத்தில் இருந்தனர். எனவே ஒருவர் பின் ஒருவராக அவர்கள் பணியில் இருந்து விலகத் துவங்கினர்” என்கிறார்.

இருப்பினும் நப்பின்னை அடுத்த ஆண்டு வரை தாக்குப் பிடித்து இயங்கி வந்தது. ஆனால் நைத்ரோவனின் தந்தை திடீரென இயற்கை எய்திய நிகழ்வானது அவருக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நம் இளம் தொழில்முனைவோர் தனக்கு வழிக்காட்டியாகவும் பக்கபலமாகவும் இருந்த தனது தந்தையை இழந்தார்.

இக்கட்டத்தில் வேறு சில புதிய பொறுப்புகளும் அவரை வந்தடைந்தன. இதயத் துடிப்பலை அளவிகளை (ECG) உற்பத்தி செய்து வந்த அவரின் தந்தையின் நிறுவனத்தை முழுவதுமாக மூடுவதற்கு முன்னதாக அவரின் தந்தையின் இறப்புக்கு முன்னர் அந்நிறுவனம் பெற்றிருந்த தருவிப்புகளை நைத்ரோவன் பொறுப்பெடுத்து முடித்துக் கொடுக்க வேண்டியிருந்தது. என்னதான் இந்த வேலையில் ஈடுபட்டிருந்த போது நைத்ரோவனுக்கு தனது வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்று தோன்றினாலும் தனது தந்தையின் நிறுவனத்தோடு தொடர்பில் இருந்த உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றியது பெரிய வரமாகவே அவருக்கு அமைந்தது.

2019-ஆம் ஆண்டின் பாதியில் தான் நைத்ரோவனின் கூடுதல் பொறுப்புகள் முழுமையடைந்தன. அப்பொழுது தான் அவர் மீண்டும் தனது நிறுவனத்தின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்த முடிந்தது. அவர் ஓர் எரிப்பறவையைப் போல உறுதியாக தனது இன்னல்களில் இருந்து மீண்டெழுந்து களத்தில் மீண்டும் திடமாக இறங்கினார். தனது சிறுவயது கனவானது, நிஜமாக வேண்டுமென்ற முனைப்பில் முன்பை விட அதிகமாக தனக்குள் எதிரொலித்தது.

ஐதராபாத் மற்றும் மும்பையில் இயங்கி வந்த ஸ்விக்கி ஊழியர்களுக்கென நப்பின்னை நிறுவனமானது மின்சார மிதிவண்டிகளையும் மோட்டார் மிதிவண்டிகளையும் (bicycles and mopeds) வடிவமைத்தது. ஆண்டு இறுதியில் ஸ்விக்கி நிறுவனத்துக்கு விற்பனை அதிகமாக இருந்து வந்த வேளையில் இந்த இரண்டு இடங்களுக்கும் இந்நிறுவனம் தயாரித்து விநியோகித்த நாற்பது வண்டிகளும் பெரும் வரவேற்பினைப் பெற்றன. எனினும் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென ஏற்பட்ட பெருந்தொற்று காரணமாக நப்பின்னையின் இந்த வெற்றிகரமான திட்டமானது எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்தது.

அதே காலக் கட்டத்தில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான ஏத்தர் (Ather) மற்றும் அல்ட்ராவயொலெட் (Ultraviolette) பிரபலமாகி வந்தன. “எங்களின் இந்த தயாரிப்பின் மூலம் மாற்றுத் திறனாளிகளை நோக்கிய பாகுபாடு நிறைந்த மக்களின் அணுகுமுறையை அறவே நீக்க வேண்டுமென்று நாங்கள் நினைத்தோம,” என விவரிக்கிறார் நைத்ரோவன். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே இருக்கும் வாகனங்களையே சற்று மாற்றி அமைத்து பயன்படுத்துவதைப் பற்றி நாங்கள் அவரிடம் கேட்க அதற்கு அவர் “மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு ஏற்கனவே இருக்கும் வாகனங்களுக்கு கூடுதல் பாகங்கள் பொருத்த வேண்டுமெனில் இந்தியாவின் தானுந்து ஆராய்ச்சி கழகத்திடமிருந்து (ARAI – Automotive Research Association of India) நாம் அனுமதி பெற வேண்டும்” எனும் நடைமுறையில் இருக்கும் ஓர் செயல்முறையை நமக்கு விளக்குகிறார் அவர்.

 

தொடர் ஆய்வோட்டங்களுக்குப் பின்னர் நப்பின்னை தயாரித்த Scotra CML எனும் வண்டியானது (தற்பொழுது ஸ்காட்ரா சிஎம்எல் எனும் பெயரில் சந்தையில் விற்பனை செய்யப்படும் வண்டியானது) இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஏனெனில் இந்த நகரங்களில் உள்ள திருமணமாகிய பெண்களில் பெரும்பாலானோரிடம் அவர்களுக்கென சொந்தமாக ஓர் இருச்சக்கர வாகனம் இல்லாததால் தினமும் வெளியே சென்று வருவதற்கு தங்கள் கணவர்களை சார்ந்து உள்ளனர். அல்லது அவர்கள் வண்டி ஓட்டத் தெரியாமல் இருக்கின்றனர். இந்த பெண்கள் மட்டுமல்லாமல் வயதானோர், குழந்தைகள் மற்றும் முதுகு வலி உள்ள நபர்கள் அதிலும் குறிப்பாக தினமும் நெடுந்தூரம் வண்டி ஓட்டி முதுகு வலியினால் அவதிப் படும் நபர்கள் யாவரும் இந்த வண்டியின் உதவியினால் எளிமையாகவும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பவும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர முடிகிறது.

நப்பின்னை தயாரித்த ஸ்காட்ரா சிஎம்எல் வண்டியின் பின்புலமாக இருந்த அனைவருக்குமான வடிவமைப்பு நோக்கம் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (NID) இன்குபேஷன் மையத்தின் கவனத்திற்கு  வந்தது. இதன் மூலம் துணை நிறுவனர்களும் வழிக்காட்டிகளும் ஆகிய டாட்டா நேனோ காரினை வடிவமைத்த் குழுவில் இருந்த ஒருவருக்கும் இண்டஸ் தொழில்முனைவோர்கள் என்றழைக்கப்படும் TiE எனும் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவு அளிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பிலும் சென்னை ஏஞ்சல்ஸ் எனும் ஆரம்ப நிலை முதலீட்டாளர்கள் கொண்ட குழுவிலும் உறுப்பினரான மற்றொருவருக்கும் நைத்ரோவன் அறிமுகமானார். தொழிற்துறையில் அனுபவசாலியான R. நாராயணன் நப்பின்னையின் ஆலோசனைக் குழுவில் இணைந்தார்.

“அடுத்ததாக நாங்கள் ஓர் தானியை (auto) வாங்கி அதற்கு மின்சார பாகங்களை இணைத்து அதனை மாற்றியமைத்தோம்,” என நினைவுக் கூறுகிறார் நைத்ரோவன். இருச்சக்கர வாகனங்களான மிதிவண்டிகள் மற்றும் மோட்டார் மிதிவண்டிகளில் துவங்கி மூன்று சக்கர வாகனங்களான தானி முதல் அந்நிறுவனத்தின் சொந்த வடிவமைப்பான ஸ்காட்ரா சிஎம்எல் வரை நப்பின்னையின் மின்சார வாகனத் தயாரிப்புகளின் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கின்றது.

அப்பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பதோ சாதாரண மிதிவண்டியை மின்சார மிதிவண்டியாக மாற்றும் மாற்றுக் கருவியான ஊர்மி (Urmi – an electric bicycle converter kit) ஆகும். வெறும் பத்தே நிமிடங்களில் சாதாரண ஓர் மிதிவண்டியை மின்சார மிதிவண்டியாக இதனால் மாற்ற முடிகிறது. நைத்ரோவன் இந்தக் கண்டுபிடிப்புக்கு பின்புலத்தில் இருக்கும் புள்ளிவிவரம் ஒன்றினை தன் முன்னே இருக்கும் மடிக்கணினியை திறந்து நமக்குக் காட்டுகிறார். அந்த புள்ளிவிவரமானது இன்றளவும் 45 கோடி மக்கள் இந்தியாவில் மிதிவண்டிகள் உபயோகிப்பதாக தெரிவிக்கிறது. “கிராமத்தில் ஐந்தில் நான்கு நபர்கள் விலைக் குறைந்த சூழல் நல மிதிவண்டிகளைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துகின்றனர்,” எனக் கூறுகிறார் நைத்ரோ. இந்த மாற்றுக் கருவியானது அனைவராலும் வாங்குவதற்கு ஏற்ற விலையில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆறாயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதோடு அதற்கான மாதாந்திர தவணையாக முந்நூறு ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாதத் தவணையை வங்கிகள் கண்காணிப்பதற்கு உதவும் வகையில் இந்தக் கருவியானது உணரிகள் (sensor) மூலம் இணையத்தோடு இணைக்கப்பட்டு (IoT-enabled) இருக்கும்.

“ஒருவர் தனது பணி இடத்துக்கு பயணிக்கும் தூரம் அதிகரிக்கும் போது அவரின் வருமானமும் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனமும் நடத்திய ஆய்வானது தெரிவிக்கிறது,” எனும் அவர், பயணிப்பதன் மகத்துவத்தை வலியுறுத்துகிறார். பிறரை சார்ந்து இல்லாமல் சுயமாகவே ஒருவரை பன்னிரெண்டு கிலோமீட்டர் பயணிக்கும் இடத்தில் இருபத்தி ஐந்து கிலோமீட்டர் வரை பயணிக்க வைக்க முடிந்தால் நிச்சயமாக அதனால் அவர்களின் வருமானத்தை குறைந்தபட்சம் முப்பது சதவீதம் வரை தன்னால் உயர்த்த முடியுமென்று நம்புகிறார் நைத்ரோவன். “அதுவே பயணிப்பதன் பலம் ஆகும்,” என நிறைவு செய்யும் நைத்ரோவன் தனது நாற்காலிக்கு அருகாமையில் இருக்கும் தனது கண்டுபிடிப்பான ஸ்காட்ரா சிஎம்எல் வண்டியை செல்லமாகத் தட்டிக் கொடுக்கிறார்.

 

Subscribe to our Newsletter!

Want to hear more?

When this story reaches 1000 views we will cover an exclusive of this business.

58/1000 views
Share
How you can support this business.

Connect with this business​

Related Stories

Puvidham School is an alternate school centered around the child’s innate curiosity and the five elements of nature.
Fullfily is building a comprehensive EV-as-a-service platform to build cost-efficient and eco-friendly delivery solutions for small businesses.
Anuhya Reddy went to London as an Architect and returned as a Pastry Chef driving the dessert realm of Chennai.