ஒரு மதிய வேளையில் அருண் குமார் (Arun Kumar) என்பவரும் அவரின் தங்கை SP பொன்மணியும் (SP Ponmani) மதுரையில் சிறுவயதில் அவர்கள் வாழ்ந்து வளர்ந்த வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது ஒரு பெட்டகத்தை அங்கு கண்டனர். அந்த பெட்டகமானது, அவர்கள் சிறுவயதில் அணிந்து இருந்த முற்றிலும் பருத்தியால் ஆன ஆடைகளால் நிரம்பி இருந்தது. “அந்த துணியானது மிகவும் மென்மையாகவும், 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் இருந்தது,” என தங்கள் வாழ்க்கைப் பணியினை மாற்றி அமைத்த அந்த சுவையான நிகழ்வினை பூரிப்புடன் நினைவுக் கூறுகிறார் பொன்மணி. கல்லூரிப் படிப்பை கோயம்புத்தூரில் நிறைவு செய்த பொன்மணி, ஆடை அலங்காரப் படிப்பில் (Fashion designing) பட்டம் பெற்று இருந்தார். அருண் வலைத்தள வடிவமைப்பு (website designing) மற்றும் உட்புற வடிவமைப்புத் (interior designing) திட்டங்கள் சிலவற்றில் சென்னை மற்றும் பெங்களூருவில் பணியாற்றியப் பின்னர் மதுரைக்கு திரும்பி இருந்தார். இவர்களின் வீட்டில், திருமண பேச்சுகள் வலம் வர துவங்கின. எனவே, இருவரும் தாங்கள் பெற்று இருக்கும் திறன்களை கொண்டு இந்த சமூகத்தில் ஒரு பயனுள்ள தாக்கத்தை ஏற்படுத்தும் முனைப்போடு தொழில் முனைவில் அடி எடுத்து வைத்தனர்.
2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை ஒட்டி அண்ணன்-தங்கை இருவரும் பத்து வகையான ஆடைகளை பிறந்த குழந்தைகளுக்கு வடிவமைப்பதற்காக கைத்தறியால் நூர்க்கப்பட்ட பருத்தியைத் (hand-spun cotton) தேடி அலைந்தனர். நீடிப்பு திறன் மற்றும் இதமான தன்மை ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு பொன்மணி இந்த ஆடைகளை வடிவமைக்கத் துவங்கினார். இவர்கள் துவங்கிய இந்நிறுவனத்துக்கு அம்பரம் (Ambaram – அம்பரம் என்றால் சங்கத் தமிழில் இதமான துணி என்று பொருள்படும்) எனும் அடையாளம் கொடுத்தனர். இவர்கள் விற்பனை செய்து வந்த இதமான ஆடைகளுக்கு இந்தப் பெயர் ஏற்ற அடையாளமாக இருக்கிறது. “நாங்கள் ஆடைகளை பற்பிணைகள் (zipper), பொத்தான்கள் (button) மற்றும் விரிசிரிகள் (elastic) இல்லாமல் வடிவமைக்க வேண்டுமென நினைத்தோம். ஏனெனில் அவை குழந்தையின் மிருதுவான தோலுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்,” என விவரிக்கிறார். இந்த பழைய மாதிரியான குழந்தைகள் அணியும் ஆடை வகையினை மீள் உருவாக்கம் செய்யும் தங்கள் வணிகத்தைப் பற்றி பலரும் தெரிந்துக் கொள்ளும் விதமாக, ஆரம்பத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஆடைகளை பரிசாக அவர்கள் வழங்கி வந்தனர்.
மறைந்த கோ.நம்மாழ்வார் (G. Nammazhvar) என்ற புகழ்பெற்ற இயற்கை அறிவியலாளரின் கோட்பாடுகளால் பொன்மணியும் அருணும் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இதன் விளைவாக ஒரே மாதிரியான கொள்கைகளை இருவரும் பகிர்ந்துக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளினை திருவண்ணாமலையில் இருக்கும் குக்கூ காட்டுப் பள்ளியில் செலவிட்டனர். “சிறுவயதில் திருவிழாக்களுக்கும் பண்டிகைகளுக்கும் கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு செல்வது வழக்கம். பல ஆண்டுகள் கழித்து குக்கூவிற்கு சென்று கிடைத்த அனுபவமே சிறுவயதுக்கு பின்னர் எங்களுக்கு கிராம சூழலோடு ஏற்பட்ட ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. ஒத்த கருத்து உடைய பல மக்களை நாங்கள் அங்கு சந்தித்தோம். அவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர்” என நினைவுக் கூறுகிறார் பொன்மணி. இந்த சந்திப்பின் போது பொன்மணியும் அருணும் குக்கூ இயக்கத்தை நிறுவியவரான சிவராஜ் என்பவரை சந்தித்தனர். சிவராஜ் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், வளங்குன்றா ஆடைகள் (sustainable clothing) தயாரிக்கும் அவர்களின் கனவுத் திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கூறி அவர்களைப் பெரிதும் ஊக்குவித்தார். அத்துடன், மூலப் பொருட்கள் வழங்குவதிலிருந்து வளங்குன்றா முறையில் பொதியிடுவது (sustainable packaging) வரை அவர்கள் தொழிலுக்கு வளங்கள் கொடுத்து உதவக் கூடிய ஒரு குழுவிற்கு இளம் தொழில் முனைவோர்களான பொன்மணியையும் அருணையும் அறிமுகம் செய்து வைத்தார் சிவராஜ்.
திருவண்ணாமலையில் அவர்கள் தங்கி இருந்த காலத்தில் அதன் அருகில் இருந்த புளியானூர் (Puliyanur) கிராமத்தில் மேம்பாட்டிற்கான தேவை இருப்பதை பொன்மணியும் அருணும் கண்டறிந்தனர். அந்த கிராமத்தில் இருந்த பெண் குழந்தைகள் பதின்ம வயதிலேயே (teenage) திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அவர்கள் இருபது வயதை எட்டும் முன்பே தாய்மை அடைந்தனர். இதனால் இளம் வயதே ஆன தாய் தந்தை இருவரும் குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, பச்சிளம் குழந்தைகளை கிராமத்தில் இருக்கும் பெரியோர்களிடம் விட்டுவிட்டு கிராமத்துக்கு அருகாமையில் இருக்கும் மாவட்டங்களுக்கு வேலை தேடி செல்வது வாடிக்கையாகி இருந்தது. எனவே, பொன்மணியும் அருணும், அம்பரம் ஆடை தயாரிக்கும் நிறுவனத்துக்கான ஒரு தையல் பள்ளியை பெண்களுக்கென அந்த கிராமத்திலேயே தோற்றுவிக்க முடிவு செய்தனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வாய்ப்பாக இது இருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் தாய்மார்களின் கவனிப்பில் பச்சிளம் குழந்தைகள் வளரக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் இது உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பள்ளியானது துவங்கப்பட்டது.
கிராமத்தில் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதே முதல் குறிக்கோளாக இருந்தது. “கிராமவாசிகளுக்கு உதவுவதாக சொல்லிக் கொண்டு கிராமத்துக்கு புதிதாய் வருபவர்களை எளிதில் அவர்கள் நம்பிவிடுவதில்லை. கிராமவாசிகளை குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் பல நிகழ்வுகளில் கிராமங்களும் அதன் மக்களும் மேம்பாடு என்றப் பெயரில் வணிக இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரும் நபர்களால் சுரண்டப்பட்டுள்ளன” என கூறுகிறார் பொன்மணி. கிராமவாசிகளின் நட்பினைப் பெறுவதற்காக அந்த கிராமத்திலேயே தங்கிய பொன்மணி, அவர் தங்கிய இடத்துக்கு வெளியே தன் தையல் இயந்திரத்தை அமைத்து விருப்பம் உள்ள எவருக்கும் தையல் கலையினை தான் கற்றுத் தர விரும்புவதாக அங்குள்ள அனைவருக்கும் தெரிவித்தார்.
கிராமத்தில் இருந்த பெண்கள் பலரும் ஆர்வத்துடன் இருந்த பொன்மணியை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர். பெரு நகரத்தில் இருந்து வந்திருக்கும் ஏதோ ஒரு பெண் ஏன் சம்பந்தமே இல்லாமல் நம் குக்கிராமத்தில் வந்து தன்னுடைய தையல் இயந்திரத்தை வைத்து பயிற்சிகள் அளிப்பதாக சொல்ல வேண்டும்? என்பதே அனைவரின் ஆழ் மனதில் உலா வந்து கொண்டு இருந்த கேள்வியாக இருந்தது. “எவரும் முன் வராத நிலையில் இறுதியாக ஒரு பெண் தனக்கு தையல் கலையில் ஆர்வம் இருப்பதாகவும் அதனைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகவும் கூறி முன்வந்தார்,” என புன்முறுவலுடன் விவரிக்கிறார் பொன்மணி. “தனது குடும்பத்தின் இக்கட்டான பொருளாதார நிலையைப் பற்றி என்னிடம் பகிர்ந்த அந்த பெண் அந்த நிலையை சமாளிக்க, தான் ஏதேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் எனவும் கூறினார்” என கூறுகிறார் பொன்மணி.
மிக விரைவிலேயே அவரை பின்தொடர்ந்து மேலும் ஐந்து பெண்கள் தையல் கற்றுக் கொள்ளும் பயிற்சியில் சேர்ந்தனர். பயிற்சிப் பள்ளியாக இருந்த இடமானது காலப்போக்கில் அம்பரத்துக்கான உற்பத்தி அலகாக (production unit) உருமாறியது. “கைத்தறியால் நூர்க்கப்பட்ட பருத்தியை ஈரோடு மற்றும் காந்திகிராமத்திலிருந்து புளியானூருக்கு நாங்கள் வரவழைப்போம். அங்குள்ள தையல் பள்ளிப் பெண்கள் அதனைக் கொண்டு குழந்தைகளுக்கான ஒட்டு உடுப்புத் துணிகளும் (jabla), அரைக் கால் சட்டைகளும் (shorts), அணையாடைகளையும் (nappy) தைப்பர்,” எனக் கூறுகிறார் அருண். வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் பற்பிணை மற்றும் பொத்தான் கொண்டு மூடப்படும் ஆடைகளுக்கு மாற்றாக, கட்டும் வகையில் உள்ள ஆடைகளை (tie-ups) உருவாக்குவது மட்டுமல்லாமல் இருபாலருக்கும் தூய வெண்மை அல்லாத (off-white), பொதுவான அளவுக் கொண்ட (free-sized) கைத்தறி ஆடைகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு (customized) வெளிர் கரைகள் (pastel border) மற்றும் தையல் வேலைபாடு வடிவங்கள் (embroidery pattern) கொண்டும் வடிவமைத்துத் தருகிறார் பொன்மணி.
காலங்கள் உருண்டோட அருண் தன் குடும்பத்துடன் மதுரைக்கு புலம் பெயர்ந்தார். பொன்மணியோ திருமணமாகியப் பின்னர் தன் கணவருடன் புளியானூர் கிராமத்துக்கு மிக அருகிலேயே புலம் பெயர்ந்தார். கிராமவாசிகள் அனைவரும் பொன்மணியுடன் தற்போது இணக்கமாக இருக்கத் துவங்கியது மட்டுமல்லாமல் அவரின் யோசனைகளிலும் நம்பிக்கை வைக்கத் துவங்கினர். அதே சமயம் மதுரைக்கு புலம் பெயர்ந்த அருண், அம்பரத்துக்கான தையல் வேலையை செய்வதற்காக அங்கேயே இரண்டு பெண்கள் கொண்ட ஒரு குழுவினை கண்டறிந்து, ஐந்து வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியருக்கும் ஆடைகள் தயாரிக்கும் விதமாக அம்பரத்தின் செயலாக்கங்களை விரிவாக்கம் செய்தார்.
கிராமவாசிகள் மீது அதீத அன்புக் கொள்ள துவங்கிய பொன்மணி, பெண்களுக்கு கிடைக்க வேண்டிய தன்னாளுமையை (autonomy) வெறும் திறனாக்கம் (upskilling) வழியாக மட்டும் பெற்றுத தர முடியாது என்பதனை உணர்ந்தார். அந்த புரிதல் ஆனது பொன்மணியின் தனித்துவ அடையாளமான துவம் (Thuvam) 2018-ல் தோன்றுவதற்கு வித்தாக அமைந்தது. கிராமப் பெண்களை செறிவூட்டி வலிமையாக்குவதும் (empowering), சமூகத் தடைகளை (taboo) உடைத்தெறிவதுமே துவம் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. “கைத்தறியால் ஆன பெண்களுக்கான உள்ளாடைகளை (undergarment) நாங்கள் தயாரிக்கத் துவங்கினோம். நீடிக்கும் தன்மை பொருட்டு அம்பரத்திற்காக பயன்படுத்திய அதே கைத்தறி துணியை எங்களால் துவம் நிறுவனத்தில் தயாரிக்கும் ஆடைகளுக்கும் பயன்படுத்த முடியவில்லை. எனினும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வரும் நெசவுத் துணிக்கு மாற்றாக பருத்தியால் ஆன ஓர் இலகுவான துணியினை நாங்கள் கண்டறிந்தோம்,” என விவரிக்கிறார் பொன்மணி.
பொன்மணி உருவாக்கிய துவம் எனும் துளிர் நிறுவனமானது புது வகையான பருத்தி ஆடைகளை உருவாக்குவதை தாண்டி சமூக மேம்பாட்டிற்கான ஒரு தொலைநோக்குப் பார்வைக் கொண்டதாக உள்ளது. கிராமப் பெண்களைத் திரட்டி மாதவிடாய் சுகாதாரம் (menstrual hygiene) அல்லது வளங்குன்றா வாழ்க்கைமுறை (sustainable living) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர்களிடம் வாடிக்கையாக உரையாடி வருகிறார் பொன்மணி. “பெரும்பாலான உரையாடல்கள் சமூகத் தடைகளைத் தழுவியும் அவற்றைத் தகர்ப்பதற்கான உடனடித் தேவையைப் பற்றியும் இருக்கும். இந்த வகையான தடைகளை தகர்ப்பதற்கு நகர்ப்புறங்களில் பலரும் முயன்று வரும் வேளையில் கிராமங்கள் யாவும் இன்றளவும் சமூகத் தடைகளால் இருட்டிலேயே உள்ளன” என கூறுகிறார் பொன்மணி.
கிராமத்தின் பெண்களோடு மட்டும் அல்லாமல் அங்கு உள்ள குழந்தைகளோடும் பொன்மணி வாடிக்கையாக உரையாடல்கள் நிகழ்த்துவதுண்டு. காலநிலை மாற்றத்தினைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் முனைப்பில் அதனை கதைகளாக அவர்களுக்கு தொகுத்து வழங்குகிறார் அவர். “குழந்தைகளுக்கு துணியால் ஆன பொம்மைகளை செய்வதற்காக ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் எஞ்சி இருக்கும் துணிகளை நாங்கள் சேகரிக்கத் துவங்கினோம்,” என, எவ்வாறு துவம் நிறுவனம் ஆனது ஆடை தயாரிக்கும் தொழிலோடு துணியாலான பொம்மைகள் தயாரிக்கும் தொழிலையும் துவங்கியது என விவரிக்கிறார். “துவம் நிறுவனத்தில் செய்யப்படும் பொம்மைகள் ஆந்தை மற்றும் நீலத் திமிங்கிலம் போன்ற அருகிவரும் உயிரினங்களை (endangered species) கருப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. வேகமாக பரவி வரும் நுகர்வோரியல் (consumerism), மாசுப்பாட்டிற்கும் அரிய வகை உயிரினங்களின் அழிவிற்கும் வித்திடுகிறது. இந்த அச்சுறுத்தும் அபாயத்தினைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே துவம் உருவாக்கும் பொம்மைகளின் நோக்கமாகும்” என கூறுகிறார் சூழல்நல விரும்பியான பொன்மணி.
பெண்களுக்காக துணியாலான தோள்பட்டைப் பைகள் (messenger bag), கைப்பைகள் (clutch) மற்றும் கைபேசி உறைகள் (phone case) போன்ற பல்வகைப்பட்டப் விலைப்பொருட்களைத் தயாரிக்கும் முனைப்போடு தற்பொழுது செயல்பட்டு வருகிறார் பொன்மணி. “ஒரு சாரார் சார்ந்த சந்தை (niche brand) கொண்ட எங்களைப் போன்ற நிறுவனத்தை பல்வகைப்பட்டப் பொருட்களை தயாரிக்குமாறு விரிவாக்கம் செய்வது மிகவும் முக்கியமானது ஆகும். ஏனெனில் எங்களிடம் வேலை செய்யும் பெண்களுக்கு அப்பொழுது தான் வருமானத்திற்கான நிரந்தரமான ஒரு மூலாதாரம் இருக்கும்,” என அவர் விவரிக்கிறார். எதிர்காலத்தில் வளங்குன்றா வாழ்க்கைமுறையைப் பற்றி பயிலரங்குகள் (workshop) நடத்தவும் கிராமத்தை சாராத மக்களை பிறப் பகுதிகளில் இருந்து வரவழைத்து திறன் பரிமாற்ற அமர்வுகள் (skill exchange program) நடத்தவும் ஒரு பொது வெளியை உருவாக்க ஆசைப்படுகிறார் பொன்மணி.
என்னத்தான் அருணும் பொன்மணியும் அவர்கள் முன்னெடுத்துள்ள முயற்சிகளை இருவேறு நிறுவனங்களாக அடையாளப்படுத்திக் கொண்டாலும், அம்பரமும் துவமும் ஒரு நாணயத்தின் இருப்பக்கங்கள் போல ஒரே சூழல் அமைப்பாகவே (ecosystem) செயலாற்றி வருகின்றன. “துவத்தில் ஆடைகள் வாங்கும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கென அம்பரத்தில் இருந்து ஆடைகள் வாங்குகின்றனர்,” என கூறுகிறார் அருண். ஒத்தக் கொள்கைகள் கொண்ட உடன்பிறந்தோரை, தொழிலில் கூட்டாளியாக கொண்டால் தொழிலின் செயல்கள் யாவும் சீராக நடைபெறும் என்பதற்கு இந்த அண்ணன் – தங்கை நிறுவனர்களே சிறந்த சான்று. “புளியானூரில் இருந்து ஆடைகளை பிற பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கும், அவற்றின் விற்பனைக்கும் சில நேரங்களில் அருண் உதவுவார். நானோ அம்பரத்துக்கு புதிய ஆடைகளை வடிவமைப்பதில் அவருக்கு உதவி புரிவேன்,’ என சிரிக்கிறார் பொன்மணி. ஒரே துறையில் இருந்தாலும் கூட இந்நாள் வரை தொழில் ரீதியாக இருவருக்கும் எவ்வித கருத்து வேறுபாடோ சண்டையோ வந்தது இல்லை. “வளங்குன்றா வாழ்க்கைக்கான ஒரு சூழல் அமைப்பினை ஏற்படுத்துவதே நோக்கமாக இருப்பதால், எங்களுடைய தொழில்களில்—அது மூலப் பொருளோ அல்லது வேலையாட்களோ—ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்கு அது காரணமாக இருக்கிறது,” என சிரிக்கிறார் பொன்மணி.
கைத்தறி விலைப்பொருட்கள் மெதுவாக மீண்டும் மௌசு பெற துவங்கியுள்ளன. தற்பொழுது அம்பரம் மற்றும் துவம் ஆகிய இரு நிறுவனங்களின் விலைப் பொருட்களும் இணையத்திலும் கோயம்பத்தூர் மற்றும் சென்னையின் சில இயற்கை அங்காடிகளில் (organic store) மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றன. நடப்புச் சூழலின் ஆடைகள் சந்தையானது, இன்றளவும் தனது அங்காடிகளில் கைத்தறி விலைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாரிப்பவர்களிடம் இருந்து அதிகளவு பணத்தைக் கோரினாலும், அருணும் பொன்மணியும் அண்ணன்-தங்கையாக வாழ்வில் கை கோர்த்து பயணிப்பது மட்டுமல்லாமல் ஆடைத் துறையை, மென்மேலும் இதமான, வளங்குன்றா வெளியாக மாற்றுதலுக்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கை கோர்த்து செயலாற்றி வருகின்றனர்.