க்களின் மனங்களில் சுற்றி வந்த உளச்சிகிச்சை (therapy) குறித்த ஒரு களங்கம் (stigma) மெதுவாக விலகத் தொடங்கி வருகிறது. பெpருந்தொற்று ஆரம்பித்த நாட்களில் இருந்தே இளம்வயதினர், மனநலத்தில் அதிகம் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். எனினும் சென்னையில் வெறும் 21 உளச்சிகிச்சை மையங்களே இருக்கின்றன. ஒட்டுமொத்த 138 கோடி இந்திய மக்கள் தொகைக்கும் வெறும் 5000 மையங்களே இந்தியா முழுவதும் இருக்கின்றன. இந்த மையங்களில் ஒன்றான நிகிதா ரைசிங்கனி (Nikita Raisinghani) என்பவரால் நடத்தப்படும் ஹொரைசன் உளச்சிகிச்சை மையம் (Horizon Therapy Centre) என்பது படைப்பாற்றல் கலைகளான (creative arts) இசை, நாடகம், நடனம் போன்ற கலைகள் மூலம் குழந்தைகள், பதின்ம வயதினர் (adolescents) மற்றும் பெரியோர்களுக்கு, சுய புரிதலில் பெரிதும் உதவி வருகிறது. “படைப்புத்திறன் செயல்களுக்கு ஒரு விரிவான அமைப்புமுறை தேவை என்ற ஒரு தவறான புரிதல் பொதுவாக உள்ளது. படைப்புத்திறனின் எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு இம்மையத்தை நாங்கள் வடிவமைத்தாலும் கூட, மக்கள் உணராதது என்னவென்றால், அசைவுகள் செய்வது (movement), எழுத்துகள் எழுதுவது, ஏன் ஒரு வெற்றுத் தாளில் கிறுக்குவது போன்ற மிக எளிய செயல்களும் படைப்புத்திறன் உளச்சிகிச்சை (creative therapy) தான் என்பதே.”
உளச்சிகிச்சையில் நிகிதா முழுமூச்சாக இறங்க அவரைத் தூண்டியது என்ன? மகளிருக்கான எம். ஓ. பி வைஷ்ணவ் கல்லூரியில் தன் இளங்கலைப் படிப்பில் சமூகவியலை (sociology) அவர் தேர்வு செய்தார். இந்தக் காலக்கட்டத்திலேயே உளவியல் (psychology) என்ற பாடப் பிரிவுக்கு அவர் அறிமுகமானார். “என் மனமானது, இதுவே எனக்கு ஏற்ற வாழ்க்கைப் பணி என்பதனை எனக்கு உணர்த்தியது,” என மிகுந்த ஆர்வத்துடன் கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் (Monash University) உளவியல் ஆலோசனை (counselling) படிப்பில் சேர்ந்து அதில் பட்டம் பெற்றார். இந்த காலக்கட்டத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிக் கல்வி (internship) மேற்கொண்ட அவர், சமூக இன்னல்களுக்கு உள்ளாகும் அப்பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு, இணையவழியில் ஆலோசனைகள் வழங்கினார். விளையாட்டுகள் அல்லது பொம்மைகளை பயன்படுத்தும் விளையாட்டு உளச்சிகிச்சை (play therapy), படைப்புத்திறன் செயல்முறைகளை பயன்படுத்தும் கலை உளச்சிகிச்சை (art therapy) மற்றும் மாறும் நடத்தை, சிந்தனை மற்றும் மனநிலை பாங்குகளை கையாளும் புலனுணர்வு நடத்தை சிகிச்சை (cognitive behavioural therapy) போன்ற நுட்பங்களைப் தன் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொண்டார். அத்துடன் அவற்றைத் தன்னை நாடி வருபவர்களுக்கு உதவும் வகையிலும் மாற்றிக் கொண்டார்.
ஒரு உளச்சிகிச்சையாளர் ஆக வேண்டுமெனில், உளச்சிகிச்சைக்கு நம்மை நாடி வருபவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் அதன் செயல்முறையை புரிந்துக் கொள்ள நாமும் ஒரு உளச்சிகிச்சைக்கு உட்பட வேண்டும். “எனக்கு பயிற்று வித்தவர் ஒரு நடனக்கலை உளச்சிகிச்சையாளர் (dance therapist). அவரின் ஆற்றலை கண்டு நான் மிகவும் வியப்புற்றேன்!” என இன்றும் அதே வியப்புடன் கூறும் நிகிதா, “பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகளை சரியான வார்த்தைகளைக் கொண்டு விவரிக்க தடுமாறுவர். இந்நிலையிலேயே படைப்புத்திறன் இன்றியமையாத ஒன்றாகிறது. பதட்டம் மற்றும் மன உளைச்சலுக்கான காரணிகளை கண்டறிந்து அவற்றைப் போக்க நடனமும் அசைவும் மிகப் பெரிய வழிமுறைகள் ஆகும்,” என படைப்புத்திறன் கலைகளை உளச்சிகிச்சையில் பயன்படுத்தும் நோக்கத்தின் பின்புலத்தை நம்மிடம் விவரிக்கிறார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஹொரைசன் உளச்சிகிச்சை மையமானது 2013-ம் ஆண்டு தரனா கத்ரி (Tarana Khatri) என்ற ஒரு உளச்சிகிச்சையாளரால் நிறுவப்பட்டது. 2018-ம் ஆண்டு நம் இளம் உளச்சிகிச்சையாளர் ஆன நிகிதா மெல்பேர்ணில் (Melbourne) இருந்து புலம்பெயர்ந்து இம்மையத்தில் பணியில் சேர்ந்தார். வெகு சில நாட்களிலேயே இம்மையத்தின் நிறுவனராகிய கத்ரி, திருமணமாகி துபாய்க்கு புலம் பெயர நேர்ந்தது. “நாங்கள் மிகவும் விரும்பிய இந்த மையத்தை விரைவில் மூட நேரிடும் என்பது எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் தள்ளியது,” என நினைவுக் கூறுகிறார் நிகிதா. ஆனால் அவரின் வாழ்க்கைப் பணியினை உருமாற்றப் போகும் பெரும் வாய்ப்பினை அவர் பெறப் போகிறார் என அவர் அன்றைக்கு இம்மி (மிகச் சிறிய) அளவும் நினைக்கவில்லை. “ஒருபுறம் சுயமாக ஒரு உளச்சிகிச்சை மையம் நடத்த வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவாக இருக்கையில் மற்றொரு புறம் ஹொரைசன் உளச்சிகிச்சை மையத்தின் முழுமையான பொறுப்பினை எடுத்துக் கொள்ளும் முக்கியமான ஒரு தருணத்தில் நான் இருந்தேன்.” தரனா கத்ரியின் கீழ் மூன்று ஆண்டுகள் பணியாற்றி கிடைத்த அனுபவத்திற்கு பின்னர் கிடைத்த இந்த வாய்ப்பானது, பழம் நழுவி பாகில் விழுந்தது போல எனக்கு அமைந்தது.
“காலை 11 மணியிலிருந்து மாலை 7 மணி வரை வேலை செய்து வந்த ஒரு சாதாரண ஊழியரில் இருந்து மையத்தின் எல்லா அம்சங்களையும் நிருவகிக்கும் ஒரு மேலாளர் பதவிக்கு மாறுவது என்பது எனக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது,” என சிரிக்கும் நிகிதா கடந்த சில ஆண்டுகளாக ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த தன் வாழ்க்கை பயணத்தைப் பற்றி விவரிக்கிறார். பெருந்தொற்று (Pandemic) ஏற்பட்டதால், அவர் மேலாளர் பதவிக்கு வந்த உடனேயே, காணொளி அழைப்புகள் (video call) மற்றும் ஊடாடும் திறன்பலகை (interactive smartboard) அம்சங்கள் மூலம் உளச்சிகிச்சை அமர்வுகளை மேலும் நெருக்கமாக நடத்தும் வழிகளை கண்டறியும் சவால்கள் அவர் முன் இருந்தன. “எல்லா அமர்வுகளும் அண்மையில் இணையத்திலேயே நடைப்பெறுவதால் என் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருக்கின்றனர்.” தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அனுப்ப முன் வந்துவிட்டனர். எனவே, ஹொரைசன் உளச்சிகிச்சை மையத்தின் கதவுகளை மீண்டும் திறக்க நிகிதா ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறார். அத்துடன் பொது முடக்கக் காலத்துக்கு முன்னால் சனிக்கிழமைகளில் நடைப்பெற்ற கூட்டு உளச்சிகிச்சை அமர்வுகளையும் நினைவுக் கூறுகிறார்.
முற்றிலும் வாடிக்கையாளர்கள் மூலம் ஏற்பட்ட விளம்பரங்கள் கொண்டே ஒரு வாடிக்கையாளர் குழுமத்தை (client base) ஹொரைசன் உளச்சிகிச்சை மையம் உருவாக்கி உள்ளது. “விளம்பரம் செய்வதற்கென தனித்துவமாக நாங்கள் எவ்வித முயற்சிகளையும் இதுவரை எடுக்கவில்லை,” எனக் கூறுகிறார் நம் இளம் மேலாளர். “எங்களை அணுகுவோரை புரிந்துக் கொள்ள முதலில் ஒரு கலந்தாய்வுடன் (consultation) உளச்சிகிச்சையை தொடங்குவோம். அமர்வுகள் தொடர தொடர, எந்த வகையான அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் சரியாக இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை நாங்கள் பெறுவோம்,” என்று விவரிக்கிறார் அவர். “உளச்சிகிச்சை அல்லது உளவியல் ஆலோசனை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வல்ல; அது மீண்டெழும் ஆற்றலை (resilience) அடைவதற்கான ஒரு பயணம். எங்களை அணுகும் ஒரு சிலருக்கு குறுகிய கால உளச்சிகிச்சையே போதுமானது. மாறாக நோய் ஆய்வுறுதி (diagnosis) மேற்கொள்ளும் மற்ற சிலருக்கு, ஆய்வுறுதியின் அடிப்படையில் அவர்களின் வாழ்நாள் முழுக்க உளச்சிகிச்சை தேவையாக இருக்கலாம்.” உளவியல் ஆலோசனை, பேச்சு சிகிச்சை (speech therapy) , சிறப்பு கல்வி (special education), படைப்புத்திறன் கற்றல் (creative learning) மற்றும் படைப்புத்திறன் அசைவுகள் (creative movement) போன்றவற்றிலேயே ஹொரைசன் உளச்சிகிச்சை மையம் கவனம் செலுத்தி வருகிறது.
சமீபக் காலக்கட்டத்தில் உளவியலை வாழ்க்கைப் பணியாக தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. “மனநலம் குறித்த முக்கியத்துவத்தை பெருந்தொற்றானது புரிய வைத்துள்ளது. இந்நாள் வரை நாம் அனைவருமே அவரவரின் உலகுகளில் வாழ்ந்து வந்தோம். நம்மை சுற்றி இருந்த கவனச் சிதறலுக்கான தூண்டுகோல்கள் அனைத்தும் தற்போது குறைந்துள்ளன,” என சொல்லும் அவர், ‘இளம் தலைமுறையினர் இடையே மனநலத்தைப் பற்றிய ஏதோ ஒரு ஆவல் இருக்கிறது” என்கிறார். அவரின் வாடிக்கையாளர்களில் சிலர் அவரிடம் உளவியலில் ஆர்வம் வெளிப்படுத்துவதும் அதில் இருக்கும் பணி வாய்ப்புகளைப் பற்றி அவருடன் கலந்துரையாடுவதும் அவருக்கு பேரின்பத்தை அளிக்கிறது.
எனினும், மக்கள் தொகையில் பெருவாரியானோர் இன்னமும் மனநலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய முழுமையான விழிப்புணர்வு இல்லாமலும் அவற்றை ஏற்றுக் கொள்ளாமலுமே உள்ளனர்—சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா எங்கிலும் இதுவே கசப்பான நிலவரமாக உள்ளது. “இளைஞர்களும் குழந்தைகளும் பெருமளவில் இந்த உளச்சிகிச்சை அணுகுமுறைகளை ஏற்றுக் கொண்டாலும் இதனைப் பற்றிய மனக் களங்கம் நிலவவே செய்கிறது,” என அதிருப்தி பெருமூச்சு விடுகிறார்.
மனநலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை குறியாகக் கொண்டு ஹொரைசன் உளச்சிகிச்சை மையம் பயிலரங்குகள் (workshop) அமைக்க திட்டமிட்டு வருகிறது. “என் இளம் வயதில் பெரிதாக யாருமே மனநலத்தினை பற்றி பேசியதே இல்லை,” என நிகிதா நினைவுக் கூறுகிறார். “வளர வளர பதின்ம வயதினர் நிறைய விஷயங்களை எதிர்கொள்வர். இந்த பெருந்தொற்று ஆனது மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விரிவுரைகள் (lecture) மூலம் ஏற்படும் கற்றலில் எனக்கு ஈடுபாடு இல்லை எனினும் பயிலரங்குகள் ஈடுபடுத்துவதாக இருக்கும்” என்கிறார்.
தொழில்முனைவையும் (entrepreneurship) உளச்சிகிச்சையையும் சரி நிகராக கையாள்வது என்பது எளிய செயல் அல்ல. கீழ்பாக்கத்தில் உள்ள இந்த மையத்தை கடந்த சில ஆண்டுகளாக தனி நபராக நிர்வகித்து அவ்வப்போது தன் பயிற்றுனர்களின் உதவியுடன் கையாண்டு வந்திருக்கிறார் நிகிதா. அண்மையில் மையத்தின் மற்ற செயல்பாடுகளை கையாள்வதைத் தவிர, நாள் ஒன்றுக்கு ஐந்து நபர்களுடன் உளச்சிகிச்சை செயல்முறையில் தன்னை ஈடுப்படுத்திக் கொள்கிறார். கூடிய விரைவில் இன்னும் நிறைய உளச்சிகிச்சையாளர்களை பணியமர்த்தி இம்மையத்தை விரிவாக்க திட்டமிடுவதுடன் நகரைச் சுற்றிலும் இன்னும் சில மையங்கள் தொடங்க முடிவு செய்துள்ளார். “அருகாமையில் உளச்சிகிச்சை மையம் இருந்தாலே நிறைய மக்கள் உளச்சிகிச்சை பெற செல்வர்” என சிரித்துக் கொண்டே கூறுகிறார் நிகிதா.
உளவியல் என்பது ஒரு தொடர்ச்சியான கற்றலையும் வளர்ச்சியையும் தழுவி உள்ளது. உளவியலாளர்களும் உளவியல் மாணவர்களும் ஒன்றாக இணைந்து பயிலரங்குகளில் பங்கேற்று, ஒருவருக்கொருவரிடம் இருந்து கற்றுக் கொண்டு, ஒன்றிணைந்து பணியாற்றும் வீதம் ஒரு இடத்தை உருவாக்க நிகிதா விழைகிறார். “கலாச்சார கற்றல் (cultural learning) என்பது மிகவும் முக்கியமானது,” என அறிவுரைக் கூறும் அவர், “திறந்த மனதுடன் கற்றலை ஏற்றுக் கொள்ளுங்கள். சுயமாக ஒரு உளச்சிகிச்சை மையம் தொடங்கப் போகிறீர்கள் என்றால் இளம் உளச்சிகிச்சையாளராகிய நீங்கள் பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்” என்கிறார். இளம் வயது வரம்பினருக்கே போதுமானளவு உளச்சிகிச்சையாளர்கள் இல்லை என்பது தான் இங்கு கவலைக்கிடமான நிலையாக உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையையும் கருத்தில் எடுத்துக் கொண்டால், உளச்சிகிச்சையாளர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் உயர்ந்துக் கொண்டே தான் செல்கிறது.