மிதமான குளிர் கொண்ட அமைதியான குன்னூர் மலைச் சரிவுகளில் — ராதிகா சாஸ்திரி என்பவரின் கொல்லைப்புறத்தில் — சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளை தன்வசம் ஈர்த்தவாறு, கதகதப்பான பழைய பாணியில் இருக்கும் செங்கல் சுவர்களுடன், வரவேற்கும் மஞ்சள் நிற விளக்குகளையும் மிக அழகான உட்புற கலைப் பொருட்களையும் கொண்டு இயங்கி வருகிறது – நம் கதையின் கருவான கஃபே டீயம் (Cafe Diem) எனும் உணவகம்.

“மலைபிரதேசத்தில் தான் வசிப்பேன் என்பதை நான் எப்பொழுதும் நன்கு அறிவேன்,” என திடமாக கூறுகிறார் நம் உணவகத்தின் நிறுவனர். “நான் டேராடூனில் வளர்ந்தமையால் நகர வாழ்க்கை எனக்கானதாக இல்லை” என்று கூறும் இவர், பெங்களூரில், தான் வேலைப் பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து விலகினார். குன்னூரில் இருந்த நண்பர்களை காண ஒரு முறை அவர் அங்கு சென்ற போது, ஓட்டுனர், யாரோ ஒருவர் வீட்டின் வாகன பாதையில் மகிழுந்தினை (car) நிறுத்த, அதற்காக அவ்வீட்டின் பாதுகாவலரிடம் ராதிகா மன்னிப்புக் கேட்க சென்றார். அப்பொழுது தான் அவ்வீடானது விற்பனைக்கு உள்ளது என்பதை அவர் கவனித்தார். அந்த வீடானது அவர் மனதினைக் கவர அதனை வாங்கினார் ராதிகா. வாங்கிய வீட்டினை புதுபிக்கத் தொடங்கிய அவர், அந்த வேலைகளுக்காக இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பெங்களூருவுக்கும் மலைகள் மேல் இருக்கும் அந்த எழில்மிகு வீட்டுக்கும் இடையே அங்கும் இங்குமாக பயணம் செய்து வந்தார். “இறுதியாக 2016-ல் ஒட்டுமொத்தமாக நான் குன்னூருக்கு புலம்பெயர முடிவு செய்தேன்.” ஊட்டி, கொடைக்கானல், கூர்க் மற்றும் ஏற்காடு ஆகியவை தேர்வுகளாக இருந்தாலும் கூட குன்னூரிலேயே அவர் மனம் குடியேற விரும்பியது. ஏனெனில் அதுவே மற்றதைக் காட்டிலும் எழில்மிகு இயற்கைக் காட்சிகள் உடையதாகவும், பலதரப்பட்ட மக்கள் உடைய இடமாகவும் இருந்தது. “மாறுபட்ட கோட்பாடுகள் கொண்ட மக்கள் கூட்டத்தை குன்னூர் தன்வசம் கொண்டுள்ளது. இராணுவ படைகளில் இருக்கும் நபர்கள், எழுத்தாளர்கள், ஏன் ஓய்வுபெற்ற விண்வெளி வீரர்கள் கூட இங்கு வசிக்கின்றனர்!”

    Be the first to receive the most updated stories from GOTN