கவேந்தர் பாலசுப்ரமணியம் எனும் ராகவ் சென்னையின் பரப்பரப்பான தி.நகரில் தனது இளம் பருவத்தை கழித்தார். தமிழ்நாட்டின் பழம்பெரும் ஆடை மற்றும் நகை கடைகளின் சங்கமமான தி.நகரில் அங்கும் இங்கும் செல்லும் வாகனங்களும் மக்கள் கூட்டமும் அப்பகுதிக்கு வாடிக்கையாக சென்று வருபவர்களுக்கு பரிச்சயமான ஒன்றே. பல்லடுக்கு உயர இந்த கடைகளின் வாசல்களிலும் நடைபாதைகளிலும் சிறு கடை வியாபாரிகள் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருப்பர். இது மாதிரியான சுற்றுச்சூழலில் வளர்ந்த ஒருவருக்கு ஆடையலங்காரத் துறையில் ஆர்வம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்று தானே?
பொறியியல் படிப்பில் ஆர்வம் இல்லாமல் மும்பையில் இருக்கும் தேசிய ஆடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் (NIFT – National Institute of Fashion Technology) இருந்து ஆடையலங்கார மேலாண்மையில் 2012-ஆம் ஆண்டில் பட்டம் பெற்று சென்னை திரும்பினார் ராகவ். கணினி பொறியியலில் பட்டம் பெற்ற தன்னுடைய குழந்தைப் பருவ நண்பராகிய D. குமார் என்பவர் சினிமாவின் மேல் தனக்கு இருந்த தீரா ஆர்வத்தால் படத் தயாரிப்பிலும் படத் தொகுப்பிலும் ஈடுபட்டு இருந்தார். இவர்கள் இருவரும் இயல்பாக ஒரு நாள் உரையாடி கொண்டிருக்கும் போது இருவரும் இணைந்து ஓர் துளிர் நிறுவனம் துவங்க முடிவு செய்தனர்.
வரைகலைகள் கொண்ட டி-சர்ட் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றினை துவங்குவதே உடனடியாக அவர்களுக்கு தோன்றிய யோசனையாக இருந்தது. அவர்களின் குழந்தைப் பருவ நாட்களை சூழ்ந்த தி.நகரின் பரப்பரப்பான வணிக சூழல் கூட இதற்கான காரணமாக இருக்கலாம். எனினும் அவர்கள் பத்தோடு பதினொன்றாக இருக்க விரும்பவில்லை. டி-சர்ட் வடிவமைப்பு நிறுவனத்தில் அவர்கள் இருவரும் ஓர் மாற்றத்தினை விதைக்க நினைத்தனர். “சே குவேரா மற்றும் பாப் மார்லி போன்ற பிரபலங்களின் உருவப் படங்கள் அச்சிடப்பட்ட டி-சர்ட்களை வழக்கமாக பலரும் அணிந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அந்த பிரபலங்களின் வாழக்கை வரலாறும் அவர்கள் விட்டுச் சென்ற மரபும் தெரியாமலேயே பெரும்பாலானோர் அவற்றை அணிந்திருப்பர். “ராகவ்வும் குமாரும் தமிழ்நாட்டு மக்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதமாக தங்களின் வடிவமைப்புகள் இருக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்தனர்.
ஆடை உற்பத்தியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் வரைகலைஞர்களை தேடி கண்டறிந்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகின. “எங்கள் இருவருக்குமே வரைய தெரியாது,” என அங்கி ஆடை நிறுவனத்தின் (Angi Clothing) ஆரம்பக் காலக்கட்டத்தில் தொழில்முனைவில் எவ்வாறு இருவரும் கத்துக்குட்டிளாக விளங்கினர் என்பதை சிரித்துக் கொண்டே நினைவு கூறுகிறார் ராகவ். “திருவள்ளுவர் மற்றும் பாரதியார் போன்றவர்களின் உருவப்படங்களை டி-சர்ட்களின் வடிவமைப்பில் ஒருங்கிணைக்க நாங்கள் முடிவு செய்தோம்.” அப்போதைய காலக்கட்டத்தில் முற்போக்கு யோசனைகளாகவே இவை பார்க்கப்பட்டன. வடிவமைப்பாளர்கள் உட்பட பல்வேறு உற்பத்தியாளர்களும் தயக்கம் கலந்த ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தியதோடு இவர்கள் வடிவமைத்த ஆடைகளை உற்பத்தி செய்யவும் முன்வரவில்லை. ஏனெனில் இந்த இளம் தொழில்முனைவோர்கள் இருவரும் தங்கள் யோசனையானது நன்கு விற்பனை ஆகும் என்ற அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர்கள் எண்ணினர்.
எனினும் தளராத இவர்கள் இருவரும் சாரா வினைஞர்களால் (freelancer) ஆன ஓர் குழுவினை அடையாளம் கண்டு கொண்டனர். திருப்பூரில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் ஓர் ஆடை உற்பத்தியாளரையும் கண்டு கொண்டனர். ஜாக் அண்ட் ஜோன்ஸ் என்ற ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராகவ்வின் கல்லூரியில் அவருக்கு முந்தைய ஆண்டில் பயின்ற ஒருவர் அங்கி ஆடை நிறுவனத்துக்கு ஓர் இலச்சினையை வடிவமைத்துக் கொடுத்தார். டி-சர்ட்களின் அளவு மற்றும் வண்ணங்களின் தகவல்களை கொண்ட ஓர் விளக்கக் குறிப்பீட்டையும் அவர் உருவாக்கிக் கொடுத்தார். டி-சர்ட்களின் முதல் தொகுதியானது 2013-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டு வெளிவந்தது. “அச்சிடப்பட்டு வந்த டி-சர்ட்களில் ஒன்றினை எடுத்து அதன் தரத்தை ஆய்வு செய்ய வீட்டில் துவைத்துப் பார்த்த போது அதில் இருந்த அச்சானது மறைய துவங்கியது,” என சிரித்துக் கொண்டே தாங்கள் தரத்தை மேற்பார்வையிட தவற விட்டதை இயல்பாக ஒப்புக் கொள்கிறார் ராகவ். “அவ்வாறே அங்கி ஆடை நிறுவனத்தின் பயணமானது துவங்கியது!” இந்த செயல்முறை முழுவதும் கண்டுபிடிப்புகளும் இடர் மேலாண்மையும் நிறைந்ததாக இருந்தது.
ஒரு புறம் தர மேலாண்மை முதல் சவாலாக இருக்க சரியான வடிவமைப்பாளரை அடையாளம் கண்டுக் கொள்வது என்பது அதை விட மிகப்பெரிய சவாலாக இருந்தது என்பதை விவரிக்க ராகவ் தனது நினைவலைகளில் இருந்து மற்றுமொரு நிகழ்வினை நம்மிடம் பூரிப்புடன் பகிர்கிறார். “எங்களின் நண்பர் ஒருவர் ஜகதீஷ் என்ற ஓர் வரைகலைஞருக்கு எங்களை அறிமுகப்படுத்தி வைத்தார்,” எனக் கூறி இந்த வரைகலைஞராகிய ஜகதீஷ் தற்பொழுது ஒரு மிகச் சிறந்த நண்பர் என்றும் வாடிக்கையாக அவருடன் தாங்கள் இணைந்து பணியாற்றுவதுண்டு என்பதையும் விவரிக்கிறார். “நாங்கள் முதல் முறை அவரை அவரின் அலுவலகத்தில் சந்தித்த போது குங் ஃபூ பாண்டா என்ற இயங்குபடத்தில் (அனிமேஷன்) மாஸ்டர் கிரேன் என்ற கதாபாத்திரத்தில் வரும் கொக்கின் சித்தரிப்பை போல தமிழ் கடவுளான முருகர், மயில் மீது அமர்ந்து இருப்பது போன்ற ஓர் சித்தரிப்பை உருவாக்கும்படி அவரிடம் கேட்டோம்.” தங்களின் தனித்துவமான யோசனையை நினைத்து இருவரும் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பெரும்பாலான தமிழ் வீடுகளின் தவிர்க்க முடியா அங்கமான ராணி முத்து நாட்காட்டியில் இருக்கும் முருகரைப் போன்ற ஓர் சித்தரிப்பை ஜகதீஷ் உருவாக்கி அனுப்பி இருந்தார். “நாங்கள் இருவரும் அதனைக் கண்டு பலமாக சிரிக்கத் துவங்க, ஜகதீஷோ இது மாதிரியான ஓர் பாணியையே தனது நிறுவனம் தன்னைப் பயன்படுத்துமாறு அறிவுரைத்ததாக கூறினார்.” என்னதான் அவர்கள் எதிர்பார்ப்பினை அந்த சித்தரிப்பு நிறைவேற்றவில்லை எனினும் இந்த நிகழ்வானது ஜகதீஷுக்கும் அங்கி நிறுவனத்துக்கும் இடையே ஓர் நெடுங்கால பந்தத்தை ஏற்படுத்தியது. கோபமாக இருக்கும் திருவள்ளுவர் தலை முடி பறக்க ஒரு கையில் அச்சாணி பெற்று இருப்பது போலும் மறு கையில் ஓலைச்சுவடி பெற்று நம்மை சுட்டிக் காட்டுவது போலும் இருக்கும் சித்தரிப்பானது அங்கி நிறுவனத்துக்கு இவர் உருவாக்கிக் கொடுத்த தலைசிறந்த படைப்புகளில் ஒன்று எனலாம்.
மெட்ராஸ் மார்க்கெட் (Madras Market) என்றப் பெயரில் சென்னையில் வாடிக்கையாக நடந்து வந்த கண்காட்சி நிகழ்விலும் சோல் சண்டே (Soul Sunday) என்ற பெயரில் பெங்களூரில் வாடிக்கையாக நடந்து வரும் கண்காட்சி நிகழ்விலும் அங்கி நிறுவனத்தின் ஆடைகளானது வாடிக்கையாக மக்களை சென்றடைய துவங்கியது. குறைந்த செலவில் இது மாதிரியான விற்பனை தளங்களில் வணிகம் செய்ய முடியும் என்பதால் இந்த தளங்கள் அங்கி நிறுவனத்தின் சில்லறை விற்பனையை துவங்குவதற்கான சிறந்த இடமாக அமைந்தன.
இந்த இளம் தொழில்முனைவோர்களுக்கு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இருப்புகளை கணக்கெடுத்து நிர்வகிப்பது (stock and inventory management) என்பது அடுத்த சவாலாக இருந்தது. சந்தையில் போட்டியாளர்களுக்கு நிகரான விலையை நிர்ணயிக்க ஒவ்வொரு வடிவமைப்பிலும் குறைந்தபட்சமாக முன்னூறில் இருந்து ஐநூறு டி-சர்ட்கள் வரை உற்பத்தி செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகுப்பில் (Collection) ஐந்தில் இருந்து எட்டு வடிவமைப்புகள் இருக்குமாறு மொத்தம் நான்கு ஆடை தொகுப்புகள் வெளியிடப்பட்டன. ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பு அவ்வளவாக விற்பனை ஆகவில்லை எனில் அது விலைபோகாத இருப்பாக மாறி விடும். “ஒரு சமயம் எங்களிடம் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு டி-சர்ட்கள் விலைபோகாமல் முடங்கி விட்டன. அப்பொழுது தான் எங்கள் வணிக உத்தியை மாற்ற வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். உள்ளூரான சென்னையில் உள்ள டி-சர்ட் தயாரிப்பாளர்களை கொண்டே முழுவதும் ஒரே வண்ணத்துடன் அதிகமான அச்சுகள் இல்லாமல் நெஞ்சு பகுதியில் மட்டும் எளிய அச்சு வடிவங்கள் கொண்டவாறு டி-சர்ட்களை உருவாக்க முடிவு செய்தோம்.” ஒவ்வொரு முறை புதிய ஆடை தொகுப்பு வெளியிடப்படும் போதும் அவர்களின் தலைசிறந்த வடிவமைப்புகளில் ஒன்றான திருவள்ளுவர் மற்றும் பாரதியார் அச்சிடப்பட்ட டி-சர்ட்களின் எண்ணிக்கையை மட்டும் குறைத்து கொண்டே வருவர். இவ்வாறு அவற்றின் இருப்பினை குறைத்து அவற்றிற்கான தேவையினை உயர்த்துவர். பின்வரும் ஆண்டுகளில் அந்த வடிவமைப்புகளை குறுகிய காலத்துக்கு மட்டுமே கிடைக்கும் தொகுப்புகளாக (limited edition collection) வெளியிட்டு அவற்றை விற்பனை செய்வர்.
2014-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த கடையானது இணையத்தள வணிகத்தில் அடியெடுத்து வைத்தது. 2015-ஆம் ஆண்டு தி.நகரில் அங்கி நிறுவனமானது தனது முதல் கடையினை துவங்கியது. அந்நேரம் பார்த்து சென்னை வெள்ளம் வந்ததால் இவர்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. எனினும் பெரும் தடையாக வந்த இந்த வெள்ளத்தையும் மடைப் போல இதன் நிறுவனர்கள் கடந்து வந்தனர். “இணைய வணிகம் மூலம் பேரளவு வாடிக்கையாளர்களை நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நேரில் கடைக்கு வந்து ஆடையை தொட்டு உணர்ந்து அணிந்து பார்த்து வாங்க வேண்டும் என்றே நினைத்தனர்,” என விவரிக்கிறார் அவர்.
அந்த சமயத்தில் தேசிய ஆடையலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆடையலங்கார வடிவமைப்புத் துறையில் ராகவ்விற்கு பிந்தைய ஆண்டில் பயின்ற ஸ்ரீவத்ஸவ் ராஜ் என்பவர் அங்கி நிறுவனத்தில் முழு நேர வடிவமைப்பாளராக இணைந்தார். அங்கி நிறுவனம் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகர்ப்புற இயலுடைகள் (streetwear) நிறுவனமாக இருப்பதை பற்றி பிரபல மலேசிய பாடகரான Yogi B புகழ்ந்து விமர்சித்ததும், 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அங்கி நிறுவனம் வெளியிட்ட ஜல்லிக்கட்டு டி-சர்ட் தொகுப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்ற நேர்த்தியான வரவேற்பும் அந்நிறுவனத்தின் மீது தீரா பற்று கொண்ட ஓர் வாடிக்கையாளர் திரளினை அதற்கு உருவாக்கின. அங்கி நிறுவனமானது தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகர்ப்புற இயலுடைகள் நிறுவனம் என்ற தனது புதிய அடையாளத்துடன் கோவளம் அலைச்சறுக்கு விழாவிலும் (Covelong Surfing Festival) சென்னை புத்தகக் கண்காட்சியிலும் இடம்பெற்றது. “எனினும் தமிழுக்கான ஓர் வெளியும் தமிழில் வடிவமைப்பை ஆதரிக்கும் கலைஞர்களும் சென்னையில் இன்றளவும் மிக குறைவாகவே உள்ளன,” என கூறும் ஸ்ரீவத்ஸவ் இனி வரும் நாட்களில் ஆவது இங்குள்ள வடிவமைப்பாளர்களில் அதிகமானோர் உள்ளூர் கலாச்சாரத்தை தங்கள் வடிவமைப்புகளில் பிரதிபலிப்பர் என நம்புகிறார்.
இத்தனை ஆண்டுகளில் அங்கி நிறுவனமானது பல்வேறு வழங்குநர்களை அடையாளம் கண்டுக்கொண்டுள்ளதால் ஒவ்வொரு வடிவமைப்பிலும் இருநூறு டி-சர்ட்கள் மட்டுமே இருக்குமாறு சிறு சிறு தொகுதிகளாக உற்பத்தி செய்யும் வண்ணம் உற்பத்தியாளர்களிடம் இந்நிறுவனமானது ஒப்பந்தம் பேசியுள்ளது. இது உற்பத்தி கால அளவினை மூன்று மாதங்களில் இருந்து ஒன்றரை மாதங்களாக குறைத்து வணிகத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் புது புது வடிவமைப்புகளை இந்நிறுவனம் பரிசோதனை செய்து பார்க்கவும் வழிவகுத்தது.
“மெய்நிகர் வெளியே (metaverse) எதிர்காலத்தை ஆளப் போகிறது,” என திடமாக நம்பும் ராகவ் மெய்நிகர் வணிகத்தில் அங்கி இயலுடை நிறுவனமானது தடம் பதிக்க வேண்டுவதற்கான தேவையினை சுட்டிக் காட்டுகிறார். இது ஒரு புறம் இருக்க தனது எல்லைகளை விரிவாக்கவும் பரப்பரப்பான நவீன கலாச்சாரத்தினுள் தமிழினை கொண்டு வரவும் தனது பயணத்தை நிற்காமல் தொடரும் இந்த ஆர்வமிக்க குழுவானது அதன்வழி வரும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெறிவதில் உறுதியாக உள்ளது.