“ஃபிரண்ட்ஸ் கூட சேர்ந்து பிஸ்னஸ் பண்ண வேண்டாம்னு தான் எல்லாரும் எப்போதும் சொல்வாங்க. ஆனா நான் அதை ஒத்துக்க மாட்டேன்,” என புன்முறுவல் செய்கிறார் ஃபுல்ஃபிலியின் தலைமை செயற்குழு அதிகாரியும் இணை நிறுவனருமான அசோக் விஸ்வநாத். ஃபுல்ஃபிலி என்பது சேவைத்துறைக்கென விரிவான மின்சார வாகனத் (EV-as-a-service) தளம் ஒன்றினை கட்டமைக்கும், சென்னையை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமாகும். ஒருமுறை வார இறுதியில் நண்பர்களுடன் விடுதி ஒன்றில் நிலவொளியில் நிறைவு (fulfilment) என்றால் என்ன என்று விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்த உரையாடலை நினைவுக் கூறுகிறார் அசோக். அந்த இரவு, பத்து ஆண்டுக்கால நண்பர்களாகிய அசோக், பாலாஜி, பிரவீன் குமார், ரஞ்சித் மற்றும் பிரேம்குமார் காசிநாதன் ஆகிய நால்வரும் ஒன்றாக சேர்ந்து ஏதேனும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தவதே தங்களின் எதிர்கால கனவென உணர்ந்தனர்.

2017-ஆம் ஆண்டு. ஒன்பது முதல் ஐந்து மணி வரையிலான தனது அன்றாட பணி வாழ்வில் விவசாயிகளிடமிருந்தும் கூட்டுறவுப் பண்ணைகளில் இருந்தும் புதிய விளைச்சலைப் பெற்று ஊரகங்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் உணவகங்களுக்கும்  விடுதிகளுக்கும் வழங்கி வந்தார் அசோக். “ஒரு மாதிரி பொழுதுபோக்கு வேலையா தான் நான் அத செஞ்சுட்டு வந்தேனே தவிர துளிர் நிறுவனம் அளவுக்கு அது இல்ல,” எனக் கூறுகிறார் அவர். ஆனால் ஏற்பாட்டியல் (logistics) சார்ந்து அதிகப்படியான பிரச்சனைகள் எழுந்தமையால் அந்தப் பணியானது திடீரென நிறுத்தப்பட்டது. “ஒருபக்கம் விநியோகம் செய்றவங்க வேலை அவ்ளோ இல்லன்னு சொல்லி வேலை செய்ய ஒத்துக்கல. அவங்க ஒத்துக்கிட்டாலும் இன்னொரு பக்கம் போக்குவரத்துக்கான செலவுகள் ரொம்ப அதிகமாகி இருந்துச்சு,” என விவரிக்கிறார்.

தற்செயலாக அசோக்கின் நண்பர்கள் ஏற்பாட்டியல் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இந்த நிலைமையை சீர் செய்ய வேண்டுமென்பதில் அனைவரும் ஒத்த கருத்துக் கொண்டிருந்தனர். 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நான்கு நண்பர்களும் இணை நிறுவனர்கள் ஆகினர். நிலவொளியில் நிறைவாக இருத்தல் (fulfilment) பற்றி தங்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை நினைவு கூறினர். சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குமான (SMBs and MSMEs) ஏற்பாட்டியல் தேவைகளை நிறைவு (ஃபுல்ஃபில்) செய்ய வேண்டுமென்ற உரையாடல்களைத் தழுவியே ஃபுல்ஃபிலி (Fullfily) பிறந்தது.

“எளிமையான முறையில நாங்க செயல்பட துவங்கிட்டோம். முதல அலுவலகத்துக்கு ஏதுவான ஓர் இடத்தை முடிவு பண்ணோம். அப்புறம் நிருவனத்த பதிவு செஞ்சு முடிச்சுட்டு அதிகாரப்பூர்வமா எங்க நிறுவனத்த ஆரம்பிச்சுட்டோம்—இது எல்லாம் மொத்தம் மூணே வாரத்துல,” என கூறுகிறார் ஃபுல்ஃபிலியின் நிறுவனர். 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தை ஒட்டி நிறுவனத்துக்கென ஓர் அடையாளம் இருந்ததோடு இரு வாடிக்கையாளர்களும் இந்நிறுவனத்துடன் தொழில் செய்ய காத்திருந்தனர். ஓட்டுனர்களை அடையாளம் கண்டு பணியமர்த்துவதே அடுத்தக் கட்டப் பணியாக இருந்தது.

“ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்துல வேலை செஞ்ச அப்போ நான் ஒரு ஊழியரா மேற்கொண்ட உரையாடல்களும் ஃபுல்ஃபிலி நிறுவனத்துல ஓர் நிறுவனரா நான் மேற்கொள்ள வேண்டி இருந்த உரையாடல்களும் ஒன்னுக்கு ஒன்னு ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு,” என நினைவு கூறுகிறார் அசோக். வெவ்வேறு பங்குதாரர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கென வெவ்வேறு விதமான உரையாடல்களுக்கு பழகிக் கொள்ள வேண்டிய தேவையானது எவ்வாறு தான் முதன் முதலில் எதிர்கொண்ட மாறுதல்களுள் ஒன்றாக இருந்தது என விவரிக்கிறார்.   

ஃபுல்ஃபிலி பதினைந்து ஓட்டுனர்களுடன் துவங்கி அக்டோபர் மாத இறுதிக்குள் எழுநூறு ஓட்டுனர்களை பணியமர்த்தியுள்ளது. “ஒவ்வொரு மாதமும் நிறுவனத்தோட வண்டிகள் மற்றும் ஓட்டுனர்கள், எண்ணிக்கைல இருபது சதவீதம் அதிகரிக்கணும்ங்கறது நோக்கி நாங்க வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம்,” என கூறுகிறார் இதன் நிறுவனர்.

வேகூல் ஃபுட்ஸ் (WayCool Foods), லிஷியஸ் (Licious) மற்றும் பிக் பாஸ்கட் (Big Basket) ஆகிய நிறுவனங்கள் இந்நிறுவனத்தின் இயக்கத்தை துவங்கி வைத்ததில் குறிப்பிடத்தக்க சில வாடிக்கையாளர்கள் எனலாம். விநியோக சேவைகள் பெரியளவில் கார்பன் அடித்தடத்தை (carbon footprint) ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் இந்த பிரச்சனையை பொறுப்பாக கையாள வேண்டுமென்பதை உணர்ந்தனர். மின்வாகனங்களை சேவைத் துறைக்கு அறிமுகப்படுத்துவதே (EV-as-a-service) இதற்கான உடனடி பதிலாக இருந்தது. ஏனெனில் அவை செலவுகளை குறைப்பதோடு உமிழ்வுகளையும் (emission) குறைக்கும். 

மின்வாகனத் துறையானது நடைமுறையில் புதிதாகவே இருந்தமையால் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் கிட்டத்தட்ட இல்லாமலே இருந்தன. ஆனால் இந்த துளிர் நிறுவனத்திற்கான வாய்ப்புகள் அங்கிருந்தே வளர்ந்தன. ஃபுல்பிலி நிறுவனமானது மின்வாகனங்களை குத்தகைக்கு விடும் பங்குதாரர்களான MBSI (யமஹா நிறுவனத்தின் துணை நிறுவனம்), OTO கேபிட்டல் மற்றும் Log9 மெடீரியல்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டிணைந்தது. முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் இருசக்கர வாகனங்களும், தானிகளும் (auto-rickshaw) அடங்கிய வாகன திரள் ஒன்று தயாரானது. “அடுத்த ஆண்டு நடுவுல நாங்க நான்கு சக்கர வாகனங்களிலும் முதலீடு செஞ்சு நிறுவனத்த விரிவாக்கம் செய்யலாம்னு இருக்கோம்,” என குறிப்பிடுகிறார் அசோக்.

பிற வணிகங்களுடன் தொழில் புரியும் சிறிய B2B நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுடன் தொழில் புரியும் சிறிய B2C நிறுவனங்களுக்கும் விநியோக சேவைகளில் ஆதரிக்கும் வகையில் இக்குழுவினர் தங்கள் முழு கட்டுப்பாடும் இருக்கும் வண்ணம் ஓர் கட்டமைப்பை (captive infrastructure) உருவாக்கத் துவங்கினர். குறிப்பாக பெருந்தொற்று காலத்துக்குப் பின்னர் கிடுகிடுவென முளைத்த மின்வணிகத்தினாலும் (e-commerce) மின் வணிகத்திற்கென பிரத்தியேகமாக இயங்குகின்ற/மாற்றப்பட்ட சில்லறை கடைகள்/விநியோக மையங்களாலும் (dark store) வியாபாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறு சிறு மளிகை கடைகளுக்கும் குடும்பங்களுக்கு சொந்தமான கடைகளுக்கும் ஃபுல்ஃபிலி நிறுவனம் கரம் கொடுத்து உதவியது. “எங்களோட தொழில்நுட்ப தயாரிப்பான செயலியானது பலரோட பயன்பாட்டுக்கு கிட்டத்தட்ட தயாராகிடுச்சு,” என கூறுகிறார் அசோக். பரிசோதனை நிலையின் இறுதி கட்டத்தில் தங்கள் தயாரிப்பு இருப்பதாக கூறுகிறார் அவர்.   

என்னதான் அசோக் சிங்கப்பூரில் வளர்ந்து இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றி நன்னம்பிக்கையுடனே (optimistically) பேசுகிறார். குறிப்பாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் (tier-2 and tier-3 cities) இருக்கும் வாய்ப்புகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களையும் நேரத்துக்கு உட்பட்ட ஏற்பாட்டியல் (on-time logistics) மூலமும் உயர்தர தொழில்நுட்பத்துடனான கட்டமைப்பு வசதிகள் மூலமும் ஆதரிக்கும் என அவர் எதிர்பார்க்கிறார். ஃபுல்ஃபிலி நிறுவனமானது, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தாண்டி திருச்சி, புதுச்சேரி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு தனது இயக்கங்களை விரிவாக்குகிறது. இந்தியா எங்கிலும் இருநூறு ஊர்களுக்கு தனது சேவைகளை விரிவுபடுத்த வேண்டுமென்பதே இந்நிறுவனத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இலக்காக உள்ளது.    

“அமைப்பு சாரா பணியாளர்கள் (Gig workers) அவங்களுக்கென ஈசியா ஒரு மின்வாகனம் வாங்கிடலாம். ஆனா அவங்க கிட்ட தங்களோட வாகனத்த சார்ஜ் பண்ணறத்துக்கும் நிறுத்தி வைக்கறதுக்கும் சரியான கட்டமைப்பு இல்ல,” எனும் நம் தொழில்முனைவோர், “இது மாதிரி இருக்குற பல இடைவெளிகள நாங்க சீர் செய்யணும்னு நினைக்கிறோம்.” என்கிறார். வரும் ஆண்டுகளில் இந்நிறுவனமானது, மின்வாகனங்கள் மூலம் ஏற்பாட்டியல் துறையில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து சேவைகளையும் வழங்கும் வகையில் (full-stack product) ஓர் தயாரிப்பினை கட்டமைக்க திட்டமிடுகிறது. இந்த தயாரிப்பானது மின்வாகன சீராக்கத்திற்கான தீர்வுகளை உள்ளடக்கியவாறும் தவணைக் கட்டண முறையில் ஏற்பாட்டியலை அறிமுகம் செய்யும் வகையிலும் அமையும் (subscription-based logistics – இதுவரை வணிகங்களுக்கு இடையேயான தொழில்துறையில் கேள்விப்படாத யோசனை இதுவாகும்). 

சமீபத்தில் சென்னையை சார்ந்த துணிகர முதலீட்டாளர்களை (Venture Capitalists) வரவேற்றுள்ள இந்நிறுவனம், விதை நிதிக்கான முதலீடுகள் பெறுவதை இன்னும் ஓரிரு வாரங்களில் நிறுத்தப் போகிறது. “பெங்களூரு நகரத்துல ஒரு தலைமை அலுவலகம் இருந்து இருந்தா எங்களோட செயல்கள் நிச்சயம் ஒன்றரை மடங்கு வேகமா நடந்துருக்கும். ஆனா நாங்க சென்னைல ஏற்படுத்தின தொடர்புகளும் எங்களோட நிதானமான வளர்ச்சியும், எங்க நோக்கத்த நம்புற துணிகர முதலீட்டாளர்கள கண்டுபிடிக்குறதுக்கும் அவங்ககூட தொடர்பு ஏற்படுத்திக்கறதுக்கும் வாய்ப்புகளா அமைஞ்சுது.” 

பாதுகாப்பு நிறைந்த வேலை சூழல்; நியாயமான ஊதியம் பெறும் அமைப்பு சாரா பணியாளர்கள்; சிறு தொழில்களுக்கு நியாயமான விலையில் ஆதரவு அமைப்பு—இவை அனைத்தும் கூடிய சூழல் கொண்ட ஓர் வளங்குன்றா (sustainable) நிறுவனத்தை உருவாக்குவதே இந்நிறுவனர்களின் கனவாக உள்ளது. இதன் விளைவாக இவர்களின் பத்து ஆண்டுகால நட்பானது ஒளிமயமான பல வாய்ப்புகளுக்கு இவர்களை வழிவகுக்கவும் செய்கிறது என்றால் மிகையில்லை. 

    Be the first to receive the most updated stories from GOTN