கோடிட்ட தாளில் பென்சில்கள் ஏற்படுத்திய சத்தம் அறையை நிரப்பியது. பம்பாய் வெல்ஃபேர் சொசைட்டி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் மீனாக்ஷி (Meenakshi) படித்துக் கொண்டிருந்தார். ‘எனது பள்ளிக்கூடம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதுமாறு ஆங்கில வகுப்பில் ஆசிரியர் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

“என்னோட பள்ளிக்கூடத்துல ஆசிரியர்கள் இருக்க மாட்டங்க. பாடப் புத்தகங்கள் இருக்காது. பள்ளிக்கூட மணியும் இருக்காது. அதுல நிறைய மரங்களும், ஒவ்வொருத்தவங்க விருப்பப்பட்டத படிக்குறத்துக்கான நூலகமும், ஒரு பெரிய விளையாட்டு மைதானமும் இருக்கும்.”

இதுவே மீனாக்ஷி எழுதிய கட்டுரையின் முன்னுரையாக இருந்தது. அன்றுதான் பள்ளியில் அளிக்கப்பட்ட செயல்பணி ஒன்று அவரின் வாழ்க்கையில் முதல் முறையாக எழுத்து வரம்பினை தாண்டி தான் எழுதுவதற்கு அவரை கவர்ந்தது எனலாம்.

தான் மனதார எழுதிய ஐந்து பக்க கட்டுரையை ஆசிரியரிடம் கொடுக்க தன்னம்பிக்கையுடன் எழுந்தார் மீனாக்ஷி. ஆனால் ஆசிரியரோ தன்னை ஏமாற்றத்துடன் பார்த்தார். அந்த தருணம் தனது கனவுகளை வெளிப்படுத்துவதற்கான தளமாக ஆசிரியர் அளித்த கட்டுரை இல்லை என்பதை உணர்ந்தார் மீனாக்ஷி. “என்ன எழுதி இருக்க மீனாக்ஷி!” என அதிர்ச்சியடைந்து கேட்ட ஆசிரியர், அவரின் கட்டுரையை துண்டு துண்டாக கிழித்துவிட்டு மீண்டும் அதனை எழுதுமாறு கூறி விலகினார்.

தான் செய்யாத தவறை எண்ணி குழம்பிய மீனாக்ஷி வீட்டுக்குச் சென்றார். “நீ பள்ளிக்கூடத்துல எழுதின கட்டுரைய திரும்ப எழுதுமா,” என பொறுமையாக கூறினார் அவரின் தந்தை. மீனாக்ஷி  கட்டுரையை  எழுதி முடிக்க, அதனை வாசித்த அடுத்த நொடி பள்ளியில் என்ன நடந்திருக்கும் என்பதையும் தற்பொழுது தனது மகளின் குழப்பமான மனநிலைக்கான காரணத்தையும் கண்டறிந்தார் அவரின் தந்தை. “உனக்கு ஒரு கனவு இருக்கு. நீ கடினமா முயற்சி செஞ்சா அத எப்படியும் நடத்திக் காண்பிக்கலாம்,” என புன்முறுவலுடன் கூறினார். “ஆனா இப்போ நான் சொல்ற மாதிரி நீ எழுது.”

அந்த ஆண்டு வில் டூரன்ட் (Will Durant) என்பவர் எழுதிய ‘தி ஸ்டோரி ஆப் ஃபிலாசஃப்பி (The Story of Philosophy)’ எனும் புத்தகத்தை மீனாக்ஷியின் தந்தை அவருக்கு பரிசாக வழங்கினார். அந்தப் புத்தகத்தை எடுத்து, ஓர் பக்கத்தினை திறந்து, பிளாட்டோவின் கனவுலகம் (Plato’s Utopia) எனும் தலைப்பில் இருந்து ஓர் பிரிவினை வாசித்தார். “உங்களோட கொள்கைகள் ஒரே மாதிரி இருக்கு. பள்ளிக்கூடத்துல உன்ன நடத்துற விதத்த நெனைச்சு நீ கவலைப்படாத. உன்ன இன்னும் அவங்க புரிஞ்சுக்கல,” என மறுஉறுதி செய்யும் விதமாக அவர் கூறினார்.

பதினெட்டு வயதில் தான் வாழும் நகர்ப்புற சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்பினை முழுமையாக பெற்று இருந்தார் மீனாக்ஷி. IDBI வங்கியின் இதழில் கல்வி முறையைப் பற்றி கட்டுரைகள் எழுதினார். மும்பையில் இருக்கும் கட்டுமான தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் மாசினை கண்டவாறே அவரின் இளம்பருவம் நகர்ந்தது. அவரின் கனவு இன்னமும் உயிர்ப்புடன் இருந்தது—ஓர் மேம்பட்ட உலகினை அவர் கட்டமைக்க விரும்பினார். எனவே, புகழ்பெற்ற கட்டடக்கலை கல்லூரியான சர் ஜெ. ஜெ. கட்டடக்கலை கல்லூரியில் கட்டடக்கலையில் தனது இளங்கலைப் படிப்பை மேற்கொண்டார் மீனாக்ஷி.

1988-ஆம் ஆண்டு பணிக் கல்விக்காகவும் (internship) சுத்தமான காற்று, நீர் மற்றும் உணவினை தேடியும் ஆரோவில் சென்றார் அவர். “நான் சாப்பிட்ற உணவு, மருந்து மீது கூட எனக்கு ஓர் கட்டுப்பாடு இல்லன்னா நான் ஓர் சுதந்திரமான குடிமகள் இல்லங்கறத நான் திடமா நம்புறேன்,” எனக் கூறுகிறார் அவர்.

அவர் அங்கு இருந்தபோது முன்னாள் இயந்திரப் பொறியாளரும் தனது வருங்கால துணைவரும் ஆகிய உமேஷ் (Umesh) என்பவரை சந்திக்க நேர்ந்தார். ஆரோவிலின் இயற்கைவழி விவசாய உலகில் தானும் ஈடுபடுவதற்கென மும்பையில் இருக்கும் தனது நகர்ப்புற வாழ்வினை (மீனாக்ஷிக்கு வெகு முன்னரே) விட்டுவிட்டு ஆரோவிலுக்கு வந்திருந்தார் உமேஷ்.

ஆரோவிலில் இருக்கும் வாழ்க்கை முறையானது, சூழல் நல கட்டுமான முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற மீனாக்ஷியின் கனவிற்கு உரமாக இருந்தது. பணிக் கல்வியைத் தொடர்ந்து தில்லி மற்றும் பெங்களூரில் இருக்கும் டெவலப்மென்ட் ஆல்டர்நேடிவ்ஸ் (Development Alternatives) எனும் நிறுவனத்தில் அவர் பணிபுரிந்தார். பின்னர் பழங்குடியினருடன் இணைந்து பணியாற்றும் கடலூரில் இருக்கும் ஓர் அமைப்புடன் இணைந்து பணியாற்றினார். “இந்திரா ஆவாஸ் யோஜனா கிராமிய குடியிருப்பு திட்டத்தில்’ வீடுகள் கான்க்ரீட்டில் கட்டப்படக் கூடாது என மாவட்ட ஆட்சியரை அந்த அமைப்பினர் சம்மதிக்க வைத்தனர். மண் கொண்டு கட்டும் நாட்டார் கட்டடக்கலையை (vernacular architecture) எவ்வாறு இந்த சூழ்நிலைக்கு பயன்படுத்துவது என்பதை யோசிப்பது ஓர் கட்டடக்கலைஞராக என்னுடைய பணியாக இருந்தது.” செயல்முறையின் மூலம், கட்டட வடிவமைப்பில் எந்தவித முன்பயிற்சியும் இல்லாத போதிலும் நன்றாக திட்டமிட்ட, எளிதான மற்றும் நுணுக்கமான வடிவமைப்புகளைக் கொண்ட, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் 50 சதுர அடி வீடுகளை பழங்குடியினரால் வடிவமைக்க முடியுமென்பதை மீனாக்ஷி உணர்ந்தார். “அவங்களுக்கான வீடுகள் வடிவமைக்குற அனுபவமோ பயிற்சியோ எனக்கு இல்லை. ஆனா அவங்களோட வடிவமைப்புகளை வரைப்படங்களா மாத்த நான் உதவி செய்யலாம்,” என முடிவெடுத்தார் அவர்.   

மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இதன் மூலம் கிடைத்த அனுபவம் புலப்படுத்திய புரிதலே மீனாக்ஷியின் எதிர்கால பள்ளியின் அடித்தளமாக அமைந்தது எனலாம்.

1992-ஆம் ஆண்டு மீனாக்ஷியும் உமேஷும் தர்மபுரி அருகேயுள்ள நாகர்கூடல் எனும் ஊரில் இருந்த பன்னிரெண்டு ஏக்கர் பயனிலா நிலத்தை சிறிதளவு பணத்தைக் கொண்டு வாங்கினர். அந்த கிராமத்துக்கு புலம்பெயர்ந்த அவர்கள் அந்த நிலத்தினை மீட்டெடுப்பதில் பணிபுரிய துவங்கினர். “நிலத்துல நீர் ஊடுருவி போகணும்னு கருங்கற்கள் வெச்சு பள்ளங்கள் அமைச்சோம். வரப்புகள்ல பயிர்  செஞ்சோம்,” என எட்டு ஆண்டுகாலமாக கடினமாக உழைத்து, நிலத்தில் தழைக்கூளம் இட்டதையும் (mulching the land), செடிகளுக்கு நீர் பாய்ச்சியதையும், ஆடுகளை விரட்டியதையும் நினைவுக் கூறுகிறார் அவர்.

1995-ஆம் ஆண்டு தங்களின் முதல் மகளினை மீனாக்ஷி உமேஷ் தம்பதியினர் பெற்றெடுத்தனர். அவர்கள் அந்தக் குக்கிராமத்தில் நன்றாக வாழத் துவங்கினர். எனினும் தன் மகளுக்கு எவ்வாறு கல்வி அளிப்பது என்ற கேள்வி மீனாக்ஷியின் மனதில் வளம் வரவே செய்தது.

அப்பொழுது தனது உடைமைகளை அலசி ஆராய்ந்து இறுதியாக தான் உயர்நிலைப் பள்ளியில் எழுதிய கட்டுரையை எடுத்தார் அவர். தனது கனவு பள்ளியின் எண்ணமும் தனது தந்தையின் ஊக்கமான வார்த்தைகளும் அலைபோல தனது நினைவுகளை மீண்டும் வந்து தழுவின. பல்வேறு கல்வி முறைகளை ஆராய துவங்கிய அவர் மான்ட்டசரி (Montessori) கல்வி முறையோடு தனது எண்ணங்களும் கொள்கைகளும் இணங்குவதை கண்டறிந்தார். மான்ட்டசரி கல்வி முறையானது ஒவ்வொரு குழந்தையும் திறமையுள்ள ஓர் மனிதராவர் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டது.

2000-ஆம் ஆண்டு ஐந்து வயதில் ஒரு மகளும் மூன்றரை வயதில் இன்னொரு மகளும் அவர்களுக்கு இருந்தனர். “இந்த அனுபவம் ஏதோ இலகுவாகவும் நம்மள கட்டுக்கோப்புகள்ல இருந்து விடுவிக்குற மாதிரியும் இருந்துச்சு. அவங்க ரெண்டு பேரும் அவங்களாகவே கத்துக்கிட்டு இருந்தாங்க. நான் அவங்களுக்கு எந்த மாதிரியான பயிற்றுவிப்பு கொடுத்து இருந்தாலும் அது அவங்களோட இயல்பான கற்றல் செயல்முறைய நிச்சயம் பாதிச்சிருக்கும்.” தன் மகள்களுக்கு தன்னிச்சையாக இருந்த ஆர்வமானது அவர்களின் அறிவாற்றலை அழகாக வளரச் செய்ததை அவர் தூர நின்று கவனித்தும் ரசித்தும் வந்தார்.

“நான் உத்தரப் பிரதேசத்திலும் மும்பையிலும் வளர்ந்தேன். என்னதான் என்னோட தாய்மொழி தமிழா இருந்தாலும் எனக்கு அவ்வளவோ தமிழ் தெரில.” தன்னுடைய மகள்கள் வளர வளர ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழ் கற்க வேண்டுமென அவர் நினைத்தார். எனவே, தனக்கும் தனது இரு மகள்களுக்கும் நடிப்பு, பாடல் மற்றும் கதைகள் மூலம் நாள்தோறும் தமிழ் சொல்லி கொடுப்பதற்கென உள்ளூரில் இருந்த ஓர் நபரினை அவர் அழைத்தார். வளங்களை அள்ளி வழங்கும் உலகிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விடியற்காலையில் எழுந்து ஆடு மாடுகளை பராமரிக்கும் வேலைகளையும் நில வேலைகளையும் அவர்கள் செய்யத் துவங்குவர். பின்னர் நண்பகல் துவங்கி பிற்பகல் மூன்று மணி வரை—தாய்மொழிகளில் பாடம் பயின்றால் குழந்தைகளின் புரிதல் மேம்பட்டு இருக்கும் என்பதற்காக—தமிழில்  மொழிபெயர்த்து வைத்திருந்த பஞ்சதந்திர புத்தகத்தைத் தழுவிய பாட வகுப்புகளில் ஈடுபடுவர். 

நாட்கள் உருண்டோட கிராமத்தில் இருக்கும் நிறைய குழந்தைகள் வகுப்புகள் நடைபெறும் மரத்தடியை நோக்கி ஆர்வத்துடன் வர ஆரம்பித்தனர். பெற்றோர் ஆச்சரியம் அடையத் துவங்கினர். பள்ளிக்கூடம் செல்ல மறுத்த தங்களுடைய குழந்தைகள் திடீரென ‘மரத்தடியில் நடைபெறும் வகுப்புகளுக்கு’ செல்ல ஆர்வம் காட்டினர். 

“என்னோட புள்ள இங்கிலீஷ் பேச கத்துக்குமா?” என தயக்கத்துடன் இருந்த பெற்றோர்கள் மீனாக்ஷியிடம் கேட்க, “கண்டிப்பா அவங்க கத்துப்பாங்க,” என அவர் பதிலளிப்பார்.

 

இந்த வகுப்புகள் தாமாகவே புவிதம் (Puvidham) பள்ளிக்கூடமாக. “இப்போ மற்றவர்களோட குழந்தைகளுக்கும் நான் பொறுப்பாகிட்டேன்,” என்கிறார் மீனாக்ஷி. “நீங்க யோசிச்சு பாத்தீங்கனா கணிதம் இல்லாம அறிவியல் இயங்காது, அதே மாதிரி ஆங்கிலம் இல்லாம கணிதம் இயங்காது,” என சிரிக்கும் அவர், எவ்வாறு புவிதம் பள்ளி வகுப்புகள் இனியும் பஞ்சதந்திர கதைகளை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல் இயற்கையின் பஞ்ச பூதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கத் துவங்கின என்று விவரிக்கிறார். 

ஆண்டுகள் நகர்ந்தோட புவிதம் பற்றிய செய்தி ஊரெங்கும் பரவத் துவங்கியது. கற்றல் மையம் ஒன்றினை கட்டமைக்க ரோட்டரி அமைப்பில் இருந்து உதவித் தொகையையும் அரசு நிதிநல்கையையும் புவிதம் பெற்றது. இன்று இப்பள்ளியானது பயிலரங்குகள் நடத்தி வருவதோடு, வளங்குன்றா வாழ்க்கைமுறை மற்றும் தொழில்முனைவு பற்றி கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவ்ர்கள் அதன் வளாகத்தில் தங்கி அவற்றைப் புரிந்துக் கொள்வதற்கான ஓர் வாய்ப்பினை வழங்கியும் வருகிறது.

மீனாக்ஷியின் ஒன்பதாம் வகுப்பு கட்டுரையை மேற்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட புவிதம், பாடப் புத்தகங்கள், தேர்வுகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் வழிநடத்துபவர்கள் (facilitator) மட்டுமே இருப்பதை உறுதி செய்தது. இங்குள்ள குழந்தைகள் கண்டறிவதிலும் கற்றலிலும் உற்சாகம் அடைந்தனர். உலகத்திற்கும் அதில் உள்ள மக்களுக்கும் அன்பும் அக்கறையும் காட்டும் விதமாக தங்கள் குழந்தைகள் வளர்வதைக் கண்ட பெற்றோர்கள் மகிழ்ச்சி கலந்த வியப்பில் ஆழ்ந்தனர்.

 

    Be the first to receive the most updated stories from GOTN