தமிழ்நாட்டின் தென்முனையை அடுத்துள்ள ஓர் கடற்கரை நகரமான நாகர்கோவிலைச் சார்ந்த இளைஞரே சந்தோஷ் குமார். நாகர்கோவிலை பூர்விகமாக கொண்ட இவர் குடும்பத்தில், இவர் தந்தை பிரம்பு (cane) மற்றும் நெகிழ் கம்பியால் (wire) அறைகலன் பின்னும் கைவினைக் கலையை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். தன் இளம் பருவம் முழுவதும் தன் தந்தை அறைகலன் செய்வதை பார்த்து வளர்ந்த சந்தோஷுக்கு தன் பன்னிராண்டாம் வகுப்பில், “ஏன் நான் இந்தக் கலையை அப்பாவிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கூடாது?” என தோன்றியது. “அவ்வாறு கற்றால் அப்பாவுக்கு உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் நாமும் ஏதும் பணம் சம்பாதிக்கலாம்” என அவர் நினைத்தார். அறைகலன் செய்வதில் சிறிது நாட்கள் தன் தந்தைக்கு உதவியாக இருந்த சந்தோஷ், பின்னர் அவரே தானாக ஒரு கட்டிலை மொத்தமாக சீர் செய்து கயிற்றைக் கொண்டு அதனைப் பின்னினார். “மொத்த வேலையையும் நானே எடுத்து செய்ததால் இந்த திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு புது தன்னம்பிக்கை எனக்குள் உருவாகியது,” என புன்னகைக்கிறார் சந்தோஷ்.
சந்தோஷின் பின்னல் தொழில் ஆரம்பமாகி சில நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. ஏனெனில் மற்றவர்களைப் போலவே, அவரும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, 2015-இல் ஒரு தொழில்நுட்ப வேலையில் சேர சென்னைக்கு புலம் பெயர்ந்தார். “அப்பொழுது எனக்கு அவ்வளவு பெரிய சம்பளம் ஒன்றும் இல்லை. எனவே, பகுதி நேர வேலையாக நாற்காலி மற்றும் கட்டில் பின்னும் வேலையை செய்து அதன் மூலம் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனையில் வலைபதிவு (blog) ஒன்றில் எனது பின்னல் திறன்களைப் பற்றி பதிவிட்டேன்” என்கிறார் சந்தோஷ். காலங்கள் உருண்டோட அவர் அந்த பதிவினை பற்றி மறந்தே போய்விட்டார். பல்வேறு வழிகளில் கூடுதல் பணம் சம்பாதிக்க அவர் முயற்சித்துக் கொண்டு இருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், சந்தோஷும் அவர் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த அவரின் ஐந்து நண்பர்களும் புடவை வியாபாரம் செய்ய முடிவு செய்தனர். அந்த ஆண்டின் இறுதியில், இந்த புடவை வியாபாரத்தை விரிவுப்படுத்த சந்தோஷ் தன் வேலையை விட்டுவிட்டு மீண்டும் நாகர்கோவிலுக்கே திரும்பினார்.
We don’t spam! Read our privacy policy for more info.